Friday, August 12, 2016

மேன்மக்கள் மேன்மக்களே

வாயில புண், தொண்டையில கட்டி, உடம்பெல்லாம் காய்ச்சல்.

வேகமாக போற வாழ்க்கையில யாரோ செங்கல எடுத்து எறியற ஃபீலிங் அடிக்கடி வந்துவிடுகிறது.

'சுடுதண்ணி மட்டும் குடிங்க.

காலையில காக்ள் பண்ணுங்க.

யார்கூடயும் பேசாதீங்க. பேசுனா உங்களுக்கும் வலிக்கும். அடுத்தவங்களுக்கும் பரவும்.'

மருந்துச்சீட்டோடு இந்த அறிவுரைகளையும் சொல்லி முடித்தார் டாக்டர்.

மனம் சோர்வதால் உடல் சோர்கிறதா?

அல்லது

உடல் சோர்வதால் மனம் சோர்கிறதா?

இதுவும் கோழியா? முட்டையா? கேள்விபோலத்தான்.

மூன்று வேகத்தடைகளைப் போட்ட கடவுள் இன்று மூன்று எனர்ஜி புல்டோசர்களையும் அனுப்பி என்னை உந்தித் தள்ளினார்.

'சங்கம் 4 - முதலாம் உலகத் தமிழர் உரையாடல்' தொடக்க விழா இன்று பாத்திமா கல்லூரி யூபிலி ஹாலில் நடந்தேறியது. நிகழ்ச்சி தொடங்கி 20ஆவது நிமிடம் உள்நுழைந்தேன். ஏதோ ஒரு உற்சாகம் என்னைப் பற்றிக் கொண்டது. இதே ஹாலில் 6 ஆண்டுகளுக்கு முன் நானும் உரையாற்றி இருக்கிறேன் என்ற நினைவு வந்து போனது. அன்று நான் நின்று கொண்டிருந்த இடம், அணிந்திருந்த ஆடை, பிடித்திருந்த மைக், பயன்படுத்திய கணிணி என எல்லாம் மின்னலாய் மனத்தில் வந்து போனது.

வாழ்க்கையில் எல்லாமே புள்ளிகள்தாம். ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு நகர்கிறோம். எல்லாப் புள்ளிகளும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி இணைக்கப்படாவிட்டால் கோட்டோவியம் சாத்தியம் அல்லவே.

புல்டோசர் 1: அருட்சகோதரி. முனைவர். பாத்திமா மேரி

பாத்திமா கல்லூரியின் முதல்வர் இவர். நான் அரங்கில் நுழைந்தபோது மேடையில் பேசிக்கொண்டிருந்தார். இந்த இளவலின் பேச்சு அரங்கிலிருந்த அத்தனை இளவல்களையும் உசுப்பேற்றியது. 'எல்லாருக்கும் எல்லாமாய் ஆனேன்' என்று பவுல் சொன்னது இவருக்கும் பொருந்தும். அருட்சகோதரிகளுக்கு அருட்சகோதரியாய், பேராசிரியர்களுக்குப் பேராசிரியராய், மாணவியருக்கு மாணவியாய் - ஐயோ! சான்ஸே இல்லை.

புல்டோசர் 2: திரு. ஆர். பாலகிருஷ்ணன், இஆப

இவர் ஒடிசா மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலர். 'கீழடி மற்றும் சிந்துசமவெளி' என்ற தலைப்பில் இரண்டு அகழ்வாராய்ச்சிகளையும் எடுத்து ஒப்பீடு செய்தார். இரண்டு மூன்று வேலை தொடர்ந்து வந்தால் டென்ஷன் ஆகிவிடும் எனக்கு, தலைமைச் செயலராய் இருந்தாலும் இவர் மிகவும் நேர்த்தியாக தயாரித்து, பவர்பாய்ண்ட் கொண்டு சமர்ப்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. இவரின் கான்ஃபிடன்ஸ். 'ஐஏஎஸ் தவிர வேறு எந்த தேர்வும் எழுத மாட்டேன் என முடிவு எடுத்தேன். ஏனெனில் வேறு எந்த தேர்வு எழுதினாலும் நான் வென்றுவிடுவேன். ஒரே முறைதான் ஐஏஎஸ் எழுதுவேன். அதில் வெற்றி பெறுவேன்' என அவர் சொன்னதுதான் அவரின் கான்ஃபிடன்ஸ் லெவலுக்கு எடுத்துக்காட்டு. 'தமிழன்னை தான் விரும்பியவளை தனக்கென அழைத்துக் கொள்வாள்' என்று அவர் சொன்னது எனக்கு நம் இறையழைத்தலை இப்படிச் சொல்வதை நினைவுபடுத்தியது. தமிழ் ஆர்வம், புன்சிரிப்பு, எளியவரையும் நன்றியுடன் நினைவுகூறும் பெருந்தன்மை.

புல்டோசர் 3: அருட்திரு. ம. ஜெகத் கஸ்பார்

'வாழ்நாளில் இவரைச் சந்திக்க வேண்டும்' என நான் நெடுநாள் காத்திருந்து சந்தித்த சில நன்மக்களில் இவரும் ஒருவர். 'தமிழ் மையம்' நிறுவனர். 'சங்கம் 4' ஒருங்கிணைப்பாளர். இவரின் தமிழ் மற்றும் ஆங்கில உரைகளையும், பாடல்களையும், எழுத்துக்களையும் இரசித்திருக்கிறேன். நேருக்கு நேர் அவர் பேசக் கேட்டது இன்றுதான். எளிய தோற்றம். நேர்முகமான பேச்சு. இவரின் பிரசன்னமே உற்சாகம். பம்பரமாய் சுற்றினாலும் அலட்டிக் கொள்ளாதவர். எல்லாம் நலமே நடந்து கொண்டிருக்க வெளியில் நின்று அரைலிட்டர் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.

மேற்காணும் மூவரையும் நேருக்கு நேர் பார்த்து கைகுலுக்கும் வாய்ப்பு பெற்றேன் அம்மா-அப்பா ஆசியால்!

மேன்மக்கள் மேன்மக்களே!

2 comments:

  1. சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட வேகத்தடைகள் பற்றியும்,அவற்றை முறியடிப்பது போல் நேற்று தான் சந்தித்த 3 ' எனர்ஜி புல்டோசர்கள்' பற்றியும் பதிவு செய்துள்ளார் தந்தை.இந்ந " சங்கம்-4 முதலாம் உலகத் தமிழர் தொடக்க விழா" விற்குச் செல்லும் பேறு எனக்கும் கிட்டியதால் அவரின் உணர்வுகளை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. விழாவின் முக்கியப் புள்ளிகள் ' அந்த' மூவருக்கும் அவர் கொடுத்துள்ள 'எனர்ஜி புல்டோசர்கள்' எனும் பெயர் மிகச்சரியே! உணர்வுள்ள எந்த மனித மனத்தையும் சரித்து விடும் வல்லமை இவர்களுக்கு உண்டு. வெற்று வாய் ஜாலக்கார்ர்கள் அல்ல... செயல் வீர்ர்கள்.இவர்களில் ஃபாத்திமா கல்லூரியின் முதல்வர் எனக்கு நன்கு பரிட்சயமானவர் என்பதாலும்,தந்தை ஜெகத் கஸ்பார் ஓரளவுக்குத் தெரிந்தவர் என்பதாலும் என்னை ஆச்சரியத்தில் உறைய வைத்தவர் திரு.பாலகிருஷ்ணன், இஅப அவர்களே!இவர் மதுரை மண்ணுக்குச் சொந்தக்காரர் என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். நமக்கு மிக அருகே உள்ள ஆனால் நம்மில் பலர் கண்டு கொள்ள மறந்த " கீழடி" எனும் இடம் பற்றிய ஆராய்ச்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டிருப்பவர்.வார்த்தைகளுக்கும்,வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டவர்.உணவு,உடை,உறைவிடம்,சாதி,மதம், குடும்பம் என்பவற்றையும் தாண்டி நாம் சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே உள்ளன என்பதை அனைவரையும் உணரச் செய்தவர்....40 டிகிரி உஷ்ணத்தின் உடல் உபாதைகளையும் தாண்டி தன் பேச்சால் என்னைக் கட்டிப்போட்டவர்.இவர்களைப் போல் ஒரு பத்துப் பேர் இருந்தால் போதும்; இந்தியா எங்கோ சென்று விடும். நேற்றைய மாலையை ஒரு " Evening of enlightenment" ஆக்கிய இவர்களுக்கு என் நன்றிகள்.
    தந்தைக்கு ஒரு வார்த்தை... ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு இயந்திரம் பழுதாவதும், பழுது சரி செய்யப்பட்டவுடன் முன்னைவிட சிறப்பாக இயங்குவதும் இயற்கை நமக்குச் சொல்லும் உண்மை.எந்த நிலையிலும் தங்களின் 'எனர்ஜி லெவல்' குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இறைவன் தங்களுக்குத் தேவையான உடல்,உள்ள சுகம் அருள வேண்டி நிற்கிறேன்.அழகான பதிவிற்கு என் நன்றிகள் ! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous8/15/2016

    Yesu Happy Feast of Our Lady of Assumption. God bless us.

    ReplyDelete