Thursday, August 11, 2016

அவர் தோட்டக்காரர்

36 வருடங்கள் எங்கள் தோட்டத்தில் வேலை பார்த்த ஒருவர் இறந்து விட்டார்.

பகல் முழுவதும் வேலை செய்து மாலையில் தோட்டத்திலேயே இறந்து கிடந்த அவரை அவ்வழியே வாக்கிங் சென்ற ஒருவர் கண்டுபிடித்தார்.

வேலை பார்த்துக் கொண்டே இறந்தார் என்றும், தனக்குப் பிடித்த ஆசிரியப் பணி செய்து கொண்டிருந்தபோது இறந்தார் என நாம் அப்துல் கலாமை பாராட்டுகின்றோம்.

ஆனால், அன்றாடம் நிறையப் பேர் இப்படி இறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஓடுகின்ற இரயிலில் இறக்கும் டிக்கெட் பரிசோதகர்.

பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு வந்து ஓரமாக வண்டியை நிறுத்தி இறந்தவர்.

அலுவலகத்தில் இறந்தவர்.

பயணத்தில் இறந்தவர்.

இப்படி நிறைய உள்ளன சொல்வதற்கு!

இவரும் அப்துல் கலாம்தான்.

ஆனால் இவர் பெயர் கிறிஸ்தவப் பெயர்.

கிறிஸ்தவம் இவர் தழுவிய மதமாகத் தான் இருக்க வேண்டும்.

மெல்லிய தேகம்.

வெயில் பட்டு கறுத்துப் போய் செதில் செதிலாய் மின்னும் தோல்.

சவரம் செய்யாத முகம்.

தன் வாழ்நாள் முழுவதும் எங்கள் தோட்டத்தை மட்டுமே மனத்தில் இருத்தி வாழ்ந்ததால் என்னவோ, தன் வீடு தூசியாய் கிடந்ததை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

இறப்பு செய்தி கேட்டு, எங்கள் இல்ல அருட்தந்தை ஒருவரும், நானும் அவசரமாக ஓடினோம்.

மெல்லிதாய் குண்டு பல்பு மின்னிக்கொண்டிருந்த அந்த வீட்டின் முகப்பில் ஒரு பழைய கட்டிலில் அவரைக் கிடத்தி பழைய துணிகளை அவர் மேல் சுற்றியிருந்தார்கள்.

துணிகளில் பொதிந்து கிடந்ததால் அவரை நான் இயேசு என நினைத்தேன்.

ஆனால் அவர் தோட்டக்காரர்.



2 comments:

  1. Gita - New York

    Dear Fr. YESU:

    A gardener of 36 years.
    I think he is pretty lucky, as he had clothes to cover, a bed to lie on, and two Priest-visitors!

    Instead, how many there are who die each day.
    No gardens to work in.
    No clothes to wear.
    No bed to lie on.
    No priests to visit too..!

    ReplyDelete
  2. நேரில் கண்டதை,மனத்தில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தும் ஒரு அழகான பதிவு. உண்மைதான்...இறப்பு வருகிறது என்று உணர்வதற்குள் இறந்து போகிறவர்கள் ஏராளம்.ஊண் மறந்து,உறக்கம் மறந்து தங்கள் பணித்தளத்தையே உறைவிடமாகக், கோவிலாகக் கொண்டாடுவோர் எண்ணிக்கையில் ஏராளம். இவர்கள் யாரும் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெறுவதில்லை. அதைப்பற்றிய கவலை சிறிதுமின்றி தங்கள் வேலை முடிந்த நிம்மதியிலேயே அவர்கள் மடிந்தும் போகின்றனர். கண்டிப்பாக இவர்களும் ' அப்துல் கலாம்'கள் தான்.துணி பொதிந்து கிடத்தப்பட்ட இந்தத் ' தோட்டக்காரரும்' இன்னொரு ''இயேசு' எனில் அது மிகையில்லை. திரு.பெர்னார்டு அவர்களின் வார்த்தையில் இவர் ஒரு அதிர்ஷ்க்காரர் என்பதும் உண்மைதான்..... இறப்பிற்குப் பின்னரும் தங்களைப் போன்றவர்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றதால்.சாயப்பூச்சில்லாத ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete