Friday, August 26, 2016

யோனா - 10

ஆண்டவர் அவரை நோக்கி, அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை இது, இடக்கை எது என்றுகூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா? என்றார். (யோனா 4:10-11)

யோனாவின் இறைவாக்கு நூல் ஆண்டவரின் வார்த்தைகளாகத் தொடங்கி அவரின் வார்த்தைகளாகவே நிறைவு பெறுகிறது.

உழைக்கவும், வளர்க்கவும் இல்லாத ஓர் ஆமணக்கு செடிக்கு யோனா இரக்கம் காட்டுகிறார்.

இதையே இயேசுவின் வார்த்தைகளில் பார்க்கலாம்.

அதாவது, 'காசுக்கு இரண்டு குருவிகள் விற்பதில்லையா?' எனக் கேட்கின்ற இயேசு, மற்றொரு இடத்தில் 'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?' என்கிறார். 'ஒரு காசுக்கு இரண்டு' என்றால் 'இரு காசுகளுக்கு நான்கு தானே!' - ஐந்தாவது குருவி எங்கிருந்து வந்தது? இயேசுவுக்கு கணிதம் தெரியவில்லையா?

ஐந்தாவது குருவிதான் கொசுறு குருவி. அல்லது இனாம் குருவி. இந்தக் குருவியை மேலே பறக்கவிட்டு குருவியின் தரத்தைப் பார்ப்பார்கள். ஆக, கொசுறாக வந்த குருவியையும் இறைவன் அன்பு செய்கிறார். நாம் விலைகொடுத்து வாங்காத குருவியின் மேலும் இறைவன் அக்கறையாக இருக்கிறார்.

யோனாவுக்கு இந்த அக்கறை இருக்கிறதுதான்.

ஆனால், கடவுளின் இரக்கம் அதனிலும் மேலானது.

இறுதியாக, 'வலக்கை எது, இடக்கை எது என அறியாத மக்கள்' என நினிவே மக்களை அழைக்கின்றார் கடவுள்.

முதல் ஏற்பாட்டில் குழந்தைகள்தாம் இப்படி அழைக்கப்படுவார்கள்.

வேற்று நாட்டு மக்களையும் தன் குழந்தைகளாகப் பார்க்கின்றார் கடவுள்.

கடவுளின் இரக்கத்தை மக்கள் ஏற்றுக்கொண்டனர். யோனாவுக்கு இன்னும் தயக்கமே!


2 comments:

  1. மனிதன் என்னதான் இறைகுணத்தைத் தன்னில் பிரதிபலிக்க நினைத்தாலும் அவனால் இறைவனாக முடியாது என்பதை உணர்த்தும் ஒரு பதிவு. தான் பெற்ற பிள்ளைகளுக்காக மட்டுமே உருகிநிற்கும் பெற்றோருக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறார் யோனா.ஆனால் இந்த அண்ட சராசரங்களையும் தன்னுடைய படைப்பாக,தன்னுடைய வாரிசுகளாக நினைக்கும் ஒரு தந்தைக்கு எடுத்துக்காட்டாய் நிற்கிறார் நம் இறைவன்.அவருக்கு ' இது எனது; அது மற்றது' என்ற வேறுபாடெல்லாம் இல்லை.அவர் கரங்களில் பொதிந்து வைத்துள்ள சிட்டுக்குருவிகளாக நம்மை அன்பு செய்கிறார்.அந்த அளப்பறிய அன்பைத்தான்"அதிசய அன்பு; ஆழம்அகலம் நீளம் எல்லை காணா அன்பு " எனப்பாடுகிறோம். ஆனாலும் இத்தனை பெருமைகள் கொண்ட இறை அன்பு ஒரு புறம் இருப்பினும் இங்கு ' யோனாவின்' வாஞ்சையையும் குறைத்து மதிப்பிட இயலவில்லை என்னால்.தான் பெற்ற பிள்ளைகளைக் குறையின்றி நேசிக்கும் ஒரு பாசமிகு சராசரித் தந்தையாகத்தான் எனக்குத் தெரிகிறார் யோனா. தன்னலம் நிறைந்த இவ்வுலகில் 'தன் நலத்தை' மட்டுமே நேசிக்கும் பல தந்தையர் மத்தியில் தான் பெற்ற பிள்ளைகளை நேசிப்பதும் கூட 'இறை குணம்' தான். நல்லதொரு படைப்பை அழகுறக் கொடுத்த தந்தைக்கு என் பாராட்டுக்கள்.அடுத்து என்ன? என்ற கேள்வி எழுதுகிறது.எதுவானால் என்ன? தயக்கமின்றி பெற்றுக்கொள்ளக் காத்திருக்கிறோம்.அன்புடன்.....

    ReplyDelete
  2. Anonymous8/27/2016

    Yesu very good reflection. Thanks yesu

    ReplyDelete