Saturday, August 20, 2016

யோனா - 4

தூங்கிக் கொண்டிருக்கும் யோனாவிடம் வரும் கப்பல் தலைவன், 'என்ன இது இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே?' எனக் கடிந்து கொள்கின்றான்.
எழுந்து கண்களைக் கசக்கிய யோனா ரொம்ப கூலாக இருக்கிறார்.

கப்பலில் இருந்தவர்கள் இந்தத் தீங்கு யாரால் வந்தது என்று பார்க்க சீட்டு போடுகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் 'கார் பூலிங்' என்ற ஒரு கான்செப்ட் இருக்கிறது. அதாவது, என்னிடம் ஒரு கார் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். தினமும் என் குழந்தையை நான் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என் பக்கத்து வீட்டில் உள்ள இரண்டு குழந்தைகளும் அதே பள்ளியில்தான் படிக்கின்றன. நான் ஒரு கார், அவங்க ஒரு கார் என்று எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, நான் அல்லது அவரே எல்லாக் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது. இப்படிச் செய்வதால் ஒருவருக்கு நேரம், எரிபொருள் மிஞ்சுகிறது. மாசு குறைகிறது.

இது நம்ம ஊர்ல வர வாய்ப்பே இல்லை. ஏன்? கடந்த வாரம் கொடைக்கானல் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு திரும்ப பேருந்து கிடைக்காமல் யார் காரிலாவது லிஃப்ட் கேட்கலாம் என நினைத்தேன். அப்போது ஒரு டிரைவர் சொன்னார்: 'லிஃப்ட் யாரும் கொடுக்க மாட்டாங்க ஃபாதர்! வண்டியில் லிஃப்;ட் கேட்டு ஏறுபவர் இராசி அற்றவராக இருந்தால், அவருக்கு நேரம் சரியில்லை என்றால், எல்லாரையும் அது பாதிக்கும் என்பதால் நிச்சயம் ஏற்ற மாட்டார்கள்.' எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்கள் இப்படியும் நினைப்பார்களா? இது மூட நம்பிக்கை இல்லையா?

யோனாவின் காலத்தில் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால்தான், இவர்கள் அனுபவிக்கும் கொடுமையான காற்றுக்கு யார் காரணம் என்று அறிய சீட்டு போடுகிறார்கள். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுகின்றது.

அதைப் பற்றி யோனா அலட்டிக் கொள்ளவே இல்லை.

'நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணக கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து தான் அவரிடமிருந்து தப்பி வந்ததையும் சொல்கின்றார்.

இவ்வளவு சுய அறிவோடு இருக்கும் அவரைப் பார்த்து வியக்கிறான் தலைவன்.

'உன்னை நான் என்ன செய்யவேண்டும்?' என அவரிடமே கேட்கின்றான்.

'என்னைத் தூக்கி கடலில் போடுங்கள்! எல்லாம் சரியாயிடும்' என்கிறார்.

தன்னை கடலில் அவர்கள் தூக்கி எறிந்தால் தான் காப்பாற்றப்படுவோம் என்று ஏற்கனவே யோனாவுக்கு தெரிந்திருந்ததா? பின் எந்த தைரியத்தில் அப்படிச் சொன்னார்?

தன்னையே மாய்த்துக்கொள்ள அவர் விழைந்தாரா? அப்படி எண்ணியிருந்தால் அவரே தண்ணீரில் குதித்திருக்கலாமே?

ஆனால் கப்பலில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி எறிய மனமில்லாமல் இருக்கின்றனர்.

இது அவர்களின் நல் மனத்தைக் காட்டுகிறது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கியதால் அவரும் பாதுகாப்பான பயணத்திற்கு உரிமையானவர் என்று எண்ணியும், தன்னுடன் இருப்பவர் ஒருவர் கூட அழியக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும் தாங்களே முயன்று தண்டு வலிக்க துடுப்பு போடுகின்றனர். ஆனால் அவர்களால் இயலவில்லை.

ஆண்டவரை நோக்கி மன்றாடிவிட்டு யோனாவைத் தூக்கி கடலில் எறிகின்றனர்.

'ஆண்டவர் ஏற்பாடு செய்தபடியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்'

3 comments:

  1. இடுக்கண் வந்த வேளையில் இறைவனை நோக்கிய அவர்களின் மன்றாட்டும், அவர்களின் சொந்த முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீராகிப் போன காரணத்தால் வேறு வழியின்றி, யோனாவின் வற்புறுத்தலுக்கிணங்க அவரைக் கப்பல் தலைவன் கடலுக்குள் தூக்கி எறிய , " நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக்
    கடவுளாகிய ஆண்டவரை வழிபடும்" அந்த எபிரேயனின் நம்பிக்கைக்கேற்ப அவர் மூன்று நாட்கள் முழுமையாக அந்த மீனின் வயிற்றுக்குள் உலா வருகிறார்.நம்மைச்சார்ந்த ஒருவருக்கு ' நல்லது ' நடக்க வேண்டுமென அனைவரும் ஒருமனப்பட்டு நினைக்கையில் ( wishful thinking) அது கைகூடும் என்பார்கள்.அப்படியொரு அதிசயம் தான் யோனாவுக்கும் நடந்துள்ளதாக நான் உணருகிறேன். ஒரு நாணயத்தின் மறுபக்கம் போல் நம்மால் அடுத்தவருக்கு நல்லது நடக்கவேண்டுமென நினைக்கும் மக்களிருக்கும் அதே ஊரில் தான் அடுத்தவரின் 'கெட்ட நேரம்' நம்மையும் தொத்திக்கொள்ளும் என தூர நிற்பவர்களும் இருக்கிறார்கள்.இதில் நாம் எந்தப்பக்கம்? இறைவனின் வார்த்தையோடு தன் வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்தே படைக்கும் தந்தைக்கு நன்றிகள்! அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. GITA - NEW YORK

    Speaking of the co-passengers with Jonah, you write:"ஆனால் கப்பலில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி எறிய மனமில்லாமல் இருக்கின்றனர்."

    First they pray, "We beseech you, O Lord, let us not perish for taking this man's life; do not charge us with shedding innocent blood.."

    Next, as the sea's raging abate, they offer sacrifice and make vows to the Lord. [Jonah 1:13-16]

    Oftentimes most of us suffer from a complex that all goodness rests with us, "Registered Roman Catholics, Paying Parish Dues".
    We feel we possess a monopoly of righteousness and virtues.

    Jonah's story is a proof that "goodness" abounds everywhere, even beyond the narrow walls of a specific religion and its praxis.

    ReplyDelete
  3. Anonymous8/21/2016

    Yesu'blog and both the comments are rich.

    ReplyDelete