Wednesday, August 31, 2016

கேள்விக்கென்ன பதில் - 2

கேள்வி: 'உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்' (உரோ 16:6)

இந்த மரியா இயேசுவின் தாயாரா? அல்லது வேறு ஏதாவது மரியாவா?


பதில்: இங்கே குறிப்பிடப்படும் மரியா இயேசுவின் தாயார் அல்லர்.

மரியா என்பது யூத மரபில் வழங்கப்பட்ட பொதுவான பெயர். 'மிரியம்' (மோசேயின் சகோதரி) என்ற பெயரைத் தழுவிய பெயரே மரியா. 

இயேசுவின் சமகாலத்தில் நிறைய மரியாக்கள் இருந்ததால்தான், இயேசுவின் தாய் மரியா, மகதலா நாட்டு மரியா, மார்த்தாவின் சகோதரி மரியா என அடைமொழிகளால் அவர்கள் வேறுபடுத்திக்காட்டப்படுகின்றனர்.

பவுலடியார்க்கு இயேசுவின் தாய் மரியாள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் இயேசுவின் தாயைக் கண்டதாக அவரோ, அவருடன் பயணம் செய்த லூக்காவோ பதிவு செய்யவில்லை.

மேலும், இந்த திருமுகம் உரோமையில் இருப்பவர்களுக்கு எழுதப்பட்டது. இயேசுவின் தாய் மரியா உரோமைக்கு பயணம் செய்திருக்கும் வாய்ப்பில்லை.

இந்த திருமுகம் எழுதப்பட்ட ஆண்டு கி.பி. 58-60 முடிய. இவ்வளவு ஆண்டுகள் வரை இயேசுவின் தாய் மரியா வாழ்ந்திருக்கும் வாய்ப்பும் இல்லை. ஏனெனில் இயேசுவின் சமகாலத்தில் மனிதரின் ஆயுள்காலம் 35 முதல் 45 வரைதான் இருந்தது.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, உரோ 16:6ல் குறிப்பிடப்படும் மரியா இயேசுவின் தாய் மரியா அல்ல என்றும், தொடக்க திருஅவையின் முக்கியமான நபர் அல்லது சீடராக அவர் இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

கேள்விக்கென்ன பதில் - 1

இன்று முதல் நம் வலைப்பதிவில் நான் எதிர்கொண்ட கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவோம்.

கேள்வி:

நம் கத்தோலிக்க பழைய மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு பகுதி, புதிய பொதுமொழிபெயர்ப்பில் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இது ஏன்? எப்படி?

பழைய மொழிபெயர்ப்பு:  'ஓடும் தண்ணீரின்மேல் உன் அப்பத்தை விடு. ஏனென்றால், நெடுங்காலத்துக்குப் பின் அதைக் கண்டெடுப்பாய். அதை ஏழு பேருக்கும், எட்டு பேருக்கும் பங்கிட்டுக் கொடு. ஏனென்றால் வருங்காலத்தில் உனக்கு என்ன தீங்கு நேரிடுமோ, உனக்குத் தெரியாது' (சங்கத் திருவுரை 11:1-2)

புதிய பொதுமொழிபெயர்ப்பு: 'உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய். ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும். உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு இடங்களில் முதலாக வை. ஏனெனில், எங்கு எவ்வகையான இடர் நேருமென்பதை நீ அறிய இயலாது' (சபை உரையாளர் 11:1-2)

பதில்:

புதிய மொழிபெயர்ப்பின் நோக்கம் எல்லாத் திருச்சபையினருக்கான ஒரு விவிலியத்தை தமிழில் உருவாக்குவது. ஏற்கனேவே கத்தோலிக்கர்கள் கொண்டிருந்த பழைய மொழிபெயர்ப்பும், பிரிந்த சபையினர் கொண்டிருந்த (இன்றும் கொண்டிருக்கும்) கிங் ஜேம்ஸ் பாடத்தின் மொழிபெயர்ப்பும் இங்கே அருகருகே வைக்கப்பட்டு இரண்டிற்கும் பொதுவான தமிழ்ப் பதங்கள் தேடி அல்லது உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்காணும் இறைவாக்குப் பகுதி பிரிந்த சகோதரர்களின் விவிலியத்தில் பின்வருமாறு உள்ளது:

'உன் ஆகாரத்தை தண்ணீர்கள்மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு. பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.' (பிரசங்கி 11:1-2)

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்.

அதாவது, எந்த ஒரு மொழிபெயர்ப்பும் மூலப்பாடத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். முதல் ஏற்பாட்டின் மூல பாடம் எபிரேயம் (சில பகுதிகள் தவிர). இரண்டாம் ஏற்பாட்டின் மூல பாடம் கிரேக்கம். 

கத்தோலிக்கரின் பழைய மொழிபெயர்ப்பின் நோக்கம் வழிபாட்டில் இறைவார்த்தையை பயன்படுத்துவதற்கு. ஆக, அந்த மொழிபெயர்ப்பு செய்யப்பட்டபோது மூல மொழியோடு உள்ள நெருக்கம் கண்டுகொள்ளப்படவில்லை. மக்களுக்குப் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனத்தில் இருத்தி கூட்டிக் குறைத்து மொழிபெயர்த்தார்கள். ஆனால், பிரிந்த சகோதரர்களின் மொழிபெயர்ப்பு மூல பாடத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில் அது தழுவிய கிங் ஜேம்ஸ் பாடமும் (1604) மூல பாடத்திற்கு நெருக்கமானது.

எபிரேய மூல பாடத்தில் 'தண்ணீர்கள்' என்று உள்ளது. 'தண்ணீர்கள்' என்பதை 'கடல்' என்றும் மொழிபெயர்க்கலாம். 'தண்ணீர்கள்மேல் போடு' என்பதை 'கடலில் போடு' என்றும், 'கடல் வாணிபத்தில் போடு' என்றும் மொழிபெயர்க்கலாம். 'தண்ணீருக்குள் போடு' என்பது இங்கே பொருள் அல்ல. உதாரணத்திற்கு, தென் மாவட்டங்களில், 'பணத்தை உப்புல போட்டேன்' என்று சொல்வார்கள். இங்கே, 'உப்புல போட்டேன்' என்பது 'உப்புச் சாக்கில்' அல்லது 'உப்பளத்தில்' அல்லது 'உப்பு கிட்டங்கியில்' போட்டது என்பது பொருள் அன்று. 'உப்பு வணிகத்தில் போட்டேன்' என்பது பொருள். 

அடுத்ததாக, 'லேகேம்' என்ற வார்த்தை 'அப்பம்' என்று மொழிபெயர்க்கப்படவேண்டியது என்றாலும், 'அப்பம்' என்பதை வேலையின் உருவகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் நாம் உண்ணும் உணவு என்பது நாம் செய்யும் வேலையின் பலனே.

'வட்டி' என்ற வார்த்தை எபிரேயத்தில் இல்லை. இது தமிழில் சேர்க்கப்பட்டுள்ளது.

அடுத்த வசனத்தில் 'ஏழெட்டு' என்பது 'நிறைய' என்ற பொருளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அடுத்து வரும் வார்த்தை 'பங்கிட்டுக்கொடு.' ஆனால், புதிய மொழிபெயர்ப்பில் 'முதலீடு செய்' என்று உள்ளது. முதலில் 'வட்டி' என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்தியதால், 'பங்கிடு' என்பதையும் 'முதலீடு' என மாற்றிவிட்டனர். 'பங்கிட்டுக்' கொடுப்பதும் ஒருவகை 'முதலீடு'தானே!

பின் எதுதான் சரியான பாடம்?

ஏறக்குறைய பின்வருமாறு மொழிபெயர்க்கலாம்:

'உன் உழைப்பை கடல்மேல் போடு. பல ஆண்டுகளுக்குப் பின் அது உன்னிடம் திரும்பும்.
உன்னிடம் இருப்பவற்றை ஏழெட்டாக பங்கிட்டுக்கொடு. ஏனெனில் இப்பூமியில் என்ன துயரம் நேரம் என்பது உனக்குத் தெரியாது!'

புதிய மொழிபெயர்ப்பின் முன்னுரையை வாசியுங்கள். அங்கே இம்மொழிபெயர்ப்பின் நோக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது: 'தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறைக்கு' (dynamic equivalence) முன்னுரிமை வழங்கப்பெற்றுள்ளது.

எந்த மொழிபெயர்ப்பைத்தான் வாசிப்பது?
எபிரேயம் அல்லது கிரேக்கம் வாசித்தலே சால்பு.

ஆனால், மூலமொழியில் இருப்பதை அப்படியே மொழிபெயர்ப்பதும் நலமன்று.

'கிங் ஜேம்ஸ் வேர்ஸன்' (ஆங்கிலம்) மூலமொழிகளுக்கு மிக ஒத்திருக்கிறது. அடுத்ததாக, நாம் பயன்படுத்தும் 'நியு ரிவைஸட் வேர்ஸன்' (ஆங்கிலம்). மற்றவைகளை நாம் கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டும்.

இதுல என்ன விநோதம் என்றால், 'எந்த பைபிள் உண்மையானது?' என்பதே நமக்குத் தெரியாமலிருக்க, அதில் சொல்லப்பட்டதை அப்படியே 'இறைவார்த்தை' எனச் சொல்லி மிரட்டி மோட்சத்துக்கு வழிகாட்டுவதாக வாக்குறுதி கொடுப்பது மடமையாகத் தெரியவில்லையா?

Monday, August 29, 2016

யோனா - 12

இயேசு தன்னைப் பற்றிய உருவகமாக யோனாவைக் கொண்டிருந்தார்.

யோனாவுக்கும், இயேசுவுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன:

அ. இருவரும் புயலடிக்கும்போது கப்பலின் அடித்தட்டில் தூங்குகின்றனர்.

ஆ. இருவரும் 'மனமாற்றம்' பற்றி போதிக்கின்றனர்.

இ. இருவரும் மூன்று நாட்கள் பூமியின் அடியில் இருக்கின்றார்கள் - யோனா மீனின் வயிற்றில், இயேசு பூமியின் வயிற்றில்.

ஈ. யோனா மூன்று நாட்கள் போதிக்கின்றார். இயேசு மூன்று ஆண்டுகள் போதிக்கின்றார்.

உ. யோனாவின் பெயர் 'புறா'. இயேசு 'அன்பார்ந்த மகன்' என பெயர் பெறும் திருமுழுக்கு நிகழ்விலும் இறங்கி வந்தது புறா.

யோனா நூல் நிறைவுபெற்றது.

Saturday, August 27, 2016

யோனா - 11

யோனாவிடம் நாம் கற்றுக்கொள்ளக் கூடாது மூன்று:

1. 'நான் மட்டும் நல்லவன்,' 'நான் மட்டும் வாழ வேண்டும்' என்ற தன்மையமும், கடவுளின் நன்மைத்தனம் கண்டு பொறாமைப் படுதலும்

2. கடவுளின் வார்த்தை வெறும் ... என்றும், ... அல்ல என்றும் நினைப்பது.

3. எதிர்மறையான கண்ணோட்டம். எதற்கெடுத்தாலும், 'நான் சாவதே மேல்' என்று சொல்வது

யோனாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று:

1. ஆமணக்கு செடிக்காக அழும் குழந்தை உள்ளம்

2. தன்னை அறிதல் - தன்னைச் சுற்றி நடப்பவற்றை அறிதல். ஆகையால்தான் யோனாவில் இந்தப் புயல் தன்னால் வந்தது என்று அறிந்து கொள்ள முடிந்தது.

3. நன்றிநிறை உள்ளம். இது அவருடைய பாடலில் காணக்கிடக்கிறது.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில்...

1. நம் கடவுள் பழிதீர்க்கும் கடவுள் இல்லை என்பதையும்
2. அவரின் வழிகள் அவரின் வழிகளே. அவற்றை நாம் கேள்வி கேட்க முடியாது என்பதையும்
3. கடவுள் நமக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்கிறார் என்பதையும் கற்றுக்கொள்ளலாமே!

Friday, August 26, 2016

யோனா - 10

ஆண்டவர் அவரை நோக்கி, அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை இது, இடக்கை எது என்றுகூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா? என்றார். (யோனா 4:10-11)

யோனாவின் இறைவாக்கு நூல் ஆண்டவரின் வார்த்தைகளாகத் தொடங்கி அவரின் வார்த்தைகளாகவே நிறைவு பெறுகிறது.

உழைக்கவும், வளர்க்கவும் இல்லாத ஓர் ஆமணக்கு செடிக்கு யோனா இரக்கம் காட்டுகிறார்.

இதையே இயேசுவின் வார்த்தைகளில் பார்க்கலாம்.

அதாவது, 'காசுக்கு இரண்டு குருவிகள் விற்பதில்லையா?' எனக் கேட்கின்ற இயேசு, மற்றொரு இடத்தில் 'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?' என்கிறார். 'ஒரு காசுக்கு இரண்டு' என்றால் 'இரு காசுகளுக்கு நான்கு தானே!' - ஐந்தாவது குருவி எங்கிருந்து வந்தது? இயேசுவுக்கு கணிதம் தெரியவில்லையா?

ஐந்தாவது குருவிதான் கொசுறு குருவி. அல்லது இனாம் குருவி. இந்தக் குருவியை மேலே பறக்கவிட்டு குருவியின் தரத்தைப் பார்ப்பார்கள். ஆக, கொசுறாக வந்த குருவியையும் இறைவன் அன்பு செய்கிறார். நாம் விலைகொடுத்து வாங்காத குருவியின் மேலும் இறைவன் அக்கறையாக இருக்கிறார்.

யோனாவுக்கு இந்த அக்கறை இருக்கிறதுதான்.

ஆனால், கடவுளின் இரக்கம் அதனிலும் மேலானது.

இறுதியாக, 'வலக்கை எது, இடக்கை எது என அறியாத மக்கள்' என நினிவே மக்களை அழைக்கின்றார் கடவுள்.

முதல் ஏற்பாட்டில் குழந்தைகள்தாம் இப்படி அழைக்கப்படுவார்கள்.

வேற்று நாட்டு மக்களையும் தன் குழந்தைகளாகப் பார்க்கின்றார் கடவுள்.

கடவுளின் இரக்கத்தை மக்கள் ஏற்றுக்கொண்டனர். யோனாவுக்கு இன்னும் தயக்கமே!


Thursday, August 25, 2016

யோனா - 9

நினிவே மக்கள் சீக்கிரம் மனமாற்றம் அடைந்துவிட்டார்கள் என மகிழ்ச்சி அடையாமல், அவர்களின் மனமாற்றம் பற்றி வருத்தப்படுகின்றார் யோனா.

நினிவே நகர் அழிக்கப்பட வேண்டுமென்று நினைக்கிறாரா யோனா?

இதன் வரலாற்றுப் பின்புலத்தைப் பார்ப்போம்.

நினிவே அசீரியாவின் தலைநகர். அசீரியப் படையெடுப்பால் வடக்கு இஸ்ரயேல் அழிந்து போகிறது. அதற்கு முதற்காரணம் நினிவே நகரம். ஆக, நினிவே அழிய வேண்டும் என்பது எல்லா யூதர்களின் கனவாக இருந்தது. இந்தக் கனவு யோனா என்ற இலக்கிய நபர் மேலும் திணிக்கப்பட்டிருக்கலாம்.

இந்தக் காரணத்திற்காகத்தான் யோனாவும் நினிவே நகரம் செல்வதைத் தவிர்க்கிறார். வேகமாக நற்செய்தியை அறிவிக்கிறார். ஊரைவிட்டு வெளியே கூடாரம் அமைத்துக் கொள்கிறார். 'மதியாதார் தலைவாசல் மிதிக்காதே' என்று வாழ்ந்தவரை ஊரின் நடுவே நடக்க வைக்கிறார் கடவுள்.

தன் இரக்கத்தை புரிய வைப்பதற்காக திருவிளையாடல் ஒன்றை நடத்துகிறார் கடவுள்.

யோனா தங்கியிருந்த கூடாரத்திற்கு நிழலாக ஆமணக்கு செடி ஒன்றை வளர வைத்து அந்தச் செடியை அழிக்க புழு ஒன்றையும் அனுப்புகின்றார். யோனாவுக்கு பிஞ்சு மனசு. ஆமணக்கு செடி வாடியதை நினைத்து வாடுகின்றார். மறுபடியும், 'நான் சாகப்போகிறேன்' என்கிறார்.

இறைவனின் இரக்கத்தை யோனா புரிந்து கொண்டாரா, இல்லையா? - இந்தக் கேள்விக்கு விடை நூலில் இல்லை.

Wednesday, August 24, 2016

யோனா - 8

நினிவே மக்களின் மனமாற்றம் கடவுளுக்குப் பிடித்தது.

ஆனால், கடவுளின் மனமாற்றம் யோனாவுக்குப் பிடிக்கவில்லை.

யோனாவின் முறையீடு ஒரு குழந்தையின் முறையீடுபோல இருக்கிறது:

'ஆண்டவரே, நான் ஊரைவிட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்?
இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன்.
நீர் கனிவு மிக்கவர். இரக்கமுள்ளவர்.
மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும்.
அழிக்க நினைப்பீர். பிறகு, உம் மனத்தை மாற்றிக்கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும்!'

... ... ...

யோனா சிறந்த ஆன்மீகம் கொண்டவர்.

வெறும் பக்தி மட்டும் இருந்திருந்தால் கடவுள் சொன்னதையெல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்.

ஆனால், ஆன்மீகம் கொண்டிருந்தால் மட்டுமே கடவுளையும் எதிர்த்துப் பேச முடியும்.

பக்தி இருக்கின்ற இடத்தில் பிளவு இருக்கும். அதாவது, கோவிலுக்குள் ஒரு வாழ்வு, கோவிலுக்கு வெளியே ஒரு வாழ்வு என்று வாழ்வு பிளவுபட்டு இருக்கும்.

ஆன்மீகத்தில் அப்படியில்லை. எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கும் வாழ்க்கை.

ஆன்மீகத்தில் சிறந்தவர் மட்டுமே கடவுளுக்கு தூரமாக நின்று கடவுளையும் கேள்வி கேட்க முடியும்.

யோனாவுக்கு இறை அனுபவம் நிறையவே இருந்திருக்கின்றது.

ஆனால்,

தொடர்ந்து, 'என் உயிரை எடுத்துக் கொள்ளும். வாழ்வதை விட சாவதே எனக்கு நல்லது' என்று யோனா சொல்வதுதான் நமக்கு ஏற்புடையதாக இல்லை.

அருள்பணி நிலையில் இந்த சோதனை அடிக்கடி வரும்.

கிணறு காய்ந்து போகும் போது, ஊற்றுக்கள் சுரக்காத போது இப்படியான ஏக்கம் எழும்.

அருள்பணி நிலையில் ஒரு பணியிடத்திற்குச் செல்லும்போது நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற நிலையில்தான் எதார்த்தம் இருக்கும்.

அந்த நேரங்களில், என் மனநிலை என்ன?

பக்தியிலிருந்து ஆன்மீகத்திற்கு இன்று நம்மை அழைக்கின்றார் யோனா.

Tuesday, August 23, 2016

யோனா - 7

'எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.' (யோனா 3:7-8)

ரோமில் குளிர்காலத்தில் அல்லது மழைக்காலத்தில் நாய்க்குட்டிகளை வாக்கிங் கூட்டி வரும் சீமாட்டிகள் அவைகளுக்கும் ரெயின் கோட் அல்லது ஸ்வெட்டர் அணிவித்திருப்பார்கள். அவைகளைப் பார்க்கின்ற நானும் என் நண்பனும், 'இன்னும் கொஞ்ச நாளில் செருப்புகளும் வந்துவிடும்!' என்பதுண்டு. பின்னொரு நாளில் நாய்க்குட்டிகளுக்கான பிரத்யேக சாக்ஸ் கடை ஒன்றையும் காண நேரிட்டது.

நினிவே நகரத்தின் ஆடு, மாடுகள், கோழி, நாய்க்குட்டிகள் சாக்கு உடை அணிந்திருக்கின்றன என நாம் யோனா நூலில் வாசிக்கின்றோம்.

இலக்கிய நடையில் இதை 'மிகைப்படுத்துதல்' என்று நாம் அழைத்தாலும், இது இப்படி நடந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.

நினிவே நகரத்து அரசன் மிகவும் புத்திசாலி. உடனடியாக ஆணையிட்டு தன் மக்களை கடவுளின் சினத்திலிருந்து காப்பாற்ற விழைகின்றான். இப்படி உடனடியாக முடிவெடுக்கும் அரசர்கள் இன்று நம் நாட்டுக்கும், திருச்சபைக்கும் அதிக தேவை.

மக்களும் நல்லவர்கள். அரசன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

'உணவு மறுப்பு, உடை மறுப்பு' என இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது மனமாற்றம்.

மனிதர்கள் முதலில் பாவம் செய்தது உணவில்தான். விலக்கப்பட்ட கனியை உண்டனர்.

அந்த உண்ணுதலோடு உடை உடுத்துதலும் ஒட்டிக் கொண்டது.

ஆக, பாவத்திலிருந்து மனமாற்றமும் இந்த இரண்டையும் புரட்டிப்போடுகிறது.

இவை வெளிப்புற அடையாளங்கள்தாம்.

ஆனால், அகத்திலும் மாற்றங்கள் நடக்கின்றன.

'கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்'

'தீய வழிகளையும் கொடுஞ்செயல்களையும் விட வேண்டும்'

நினிவே மக்களின் இச்செயல்களைப் பார்த்து கடவுளும், யோனாவும் ஒரே நேரத்தில் ஆச்சர்யப்படுகின்றனர்.

கடவுள் மக்களை மன்னிக்கின்றார்.

யோனா கடவுள்மேல் கோபம் கொள்கின்றார்.

Monday, August 22, 2016

யோனா - 6

மூன்றாம் நாள் மீனின் வாயிலிருந்து கக்கப்படுகின்றார் யோனா.

அவர் விழுந்து கிடந்தது நினிவே நகரின் கரை.

அங்கே இறைவனின் வாக்கு இரண்டாம் முறை அவருக்கு அருளப்படுகின்றது.

'நான் சொல்லும் செய்தியை அவர்களுக்கு அறிவி' என்று சொல்லும் இறைவன் 'என்ன சொன்னார்?' என்று ஒரு குறிப்பும் இல்லை. இறைவனின் செய்தி அடுத்த வசனத்தில் சொல்லப்படுகிறது: 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'

மூன்று நாளில் கடக்க வேண்டிய ஒரு நகரை ஒரே நாளில் கடந்தவராக இந்தச் செய்தியை அறிவிக்கின்றார் யோனா.

இரண்டு விடயங்கள் கவனிக்கத் தக்கவை:

அ. கடவுள் இரண்டாம் வாய்ப்பை தருகின்றார்

நம் வாழ்வில் நாம் முதல் வாய்ப்பை தவறவிட்டாலும், அவர் இரண்டாம் வாய்ப்பை தருகின்றார். அல்லது தன் திருவுளம் நிறைவேறும் வரை அவர் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்.

ஆ. யோனாவின் வேகம்

யோனா எதற்காக இவ்வளவு வேகமாகச் சென்றார்?

'மூன்று நாள் வேலையை ஒரே நாளில் செய்துவிடும் புத்திசாலியா' இவர்?

அல்லது

'மூன்று நாள் செய்ய வேண்டியதை ஒரே நாளில் ஏனோதானோவென்று முடிக்கும் அவசரக்குடுக்கையா' இவர்?

ஆனால்,

யார், எப்படி கொடுத்தார்கள் என்பதை ஆராய்ச்சி செய்யாமல் உடனே ஏற்றுக்கொண்டு மனம் மாறுகின்றனர் நினிவே மக்கள்.

Sunday, August 21, 2016

யோனா - 5

மீனின் வயிற்றுக்குள் இருக்கும் 'புறா' யோனா ஒரு பாடல் பாடுகின்றார்.

அந்தப் பாடலைத் தான் யோனா 2ல் வாசிக்கின்றோம்.

இந்தப் பாடலை எடுத்துவிட்டு உரைநடையைப் பகுதியை வாசித்தாலும் வாசித்தலில் தடை ஏதும் இருப்பதில்லை. ஆக, இந்தப் பாடல் ஒரு இடைச்செருகல் என்பது எளிதாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாதம்.

மீனின் வயிற்றில் இருக்கும் யோனா இறைவனை நோக்கி மன்றாடுகின்றார்.

அவரின் மன்றாட்டில் எந்தவொரு குற்றவுணர்வும் இல்லை.

'நான் கடவுளிடமிருந்து தப்பிவிட்டேன். அவர் என்னைத் தண்டித்துவிட்டார்' என்ற கடிதலும் இல்லை.

இருக்கின்ற எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்.

'கோவில்' என்ற வார்த்தை இங்கே இரண்டுமுறை பயன்படுத்தப்படுகிறது.

யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டு தோரா, கோவில், ஓய்வுநாள் என மூன்று அடையாளங்களும் இல்லாமல் தவித்த காலத்தில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கலாம்.

ஆகையால்தான் இதன் ஆசிரியர் 'கோவில்,' 'கோவில்' என்று ஏங்குகின்றார்.

'உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது' என தன் மன்றாட்டு கேட்கப்பட்டதாக நம்பிக்கையும் தெரிவிக்கிறார் யோனா.

நம் கலக்கத்திலும், ஏக்கத்திலும் இந்தப் பாடல் நாமே எழுதியதுபோல இருப்பதுதான் இந்தப் பாடலின் அழகு!

Saturday, August 20, 2016

யோனா - 4

தூங்கிக் கொண்டிருக்கும் யோனாவிடம் வரும் கப்பல் தலைவன், 'என்ன இது இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே?' எனக் கடிந்து கொள்கின்றான்.
எழுந்து கண்களைக் கசக்கிய யோனா ரொம்ப கூலாக இருக்கிறார்.

கப்பலில் இருந்தவர்கள் இந்தத் தீங்கு யாரால் வந்தது என்று பார்க்க சீட்டு போடுகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் 'கார் பூலிங்' என்ற ஒரு கான்செப்ட் இருக்கிறது. அதாவது, என்னிடம் ஒரு கார் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். தினமும் என் குழந்தையை நான் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என் பக்கத்து வீட்டில் உள்ள இரண்டு குழந்தைகளும் அதே பள்ளியில்தான் படிக்கின்றன. நான் ஒரு கார், அவங்க ஒரு கார் என்று எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, நான் அல்லது அவரே எல்லாக் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது. இப்படிச் செய்வதால் ஒருவருக்கு நேரம், எரிபொருள் மிஞ்சுகிறது. மாசு குறைகிறது.

இது நம்ம ஊர்ல வர வாய்ப்பே இல்லை. ஏன்? கடந்த வாரம் கொடைக்கானல் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு திரும்ப பேருந்து கிடைக்காமல் யார் காரிலாவது லிஃப்ட் கேட்கலாம் என நினைத்தேன். அப்போது ஒரு டிரைவர் சொன்னார்: 'லிஃப்ட் யாரும் கொடுக்க மாட்டாங்க ஃபாதர்! வண்டியில் லிஃப்;ட் கேட்டு ஏறுபவர் இராசி அற்றவராக இருந்தால், அவருக்கு நேரம் சரியில்லை என்றால், எல்லாரையும் அது பாதிக்கும் என்பதால் நிச்சயம் ஏற்ற மாட்டார்கள்.' எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்கள் இப்படியும் நினைப்பார்களா? இது மூட நம்பிக்கை இல்லையா?

யோனாவின் காலத்தில் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால்தான், இவர்கள் அனுபவிக்கும் கொடுமையான காற்றுக்கு யார் காரணம் என்று அறிய சீட்டு போடுகிறார்கள். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுகின்றது.

அதைப் பற்றி யோனா அலட்டிக் கொள்ளவே இல்லை.

'நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணக கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து தான் அவரிடமிருந்து தப்பி வந்ததையும் சொல்கின்றார்.

இவ்வளவு சுய அறிவோடு இருக்கும் அவரைப் பார்த்து வியக்கிறான் தலைவன்.

'உன்னை நான் என்ன செய்யவேண்டும்?' என அவரிடமே கேட்கின்றான்.

'என்னைத் தூக்கி கடலில் போடுங்கள்! எல்லாம் சரியாயிடும்' என்கிறார்.

தன்னை கடலில் அவர்கள் தூக்கி எறிந்தால் தான் காப்பாற்றப்படுவோம் என்று ஏற்கனவே யோனாவுக்கு தெரிந்திருந்ததா? பின் எந்த தைரியத்தில் அப்படிச் சொன்னார்?

தன்னையே மாய்த்துக்கொள்ள அவர் விழைந்தாரா? அப்படி எண்ணியிருந்தால் அவரே தண்ணீரில் குதித்திருக்கலாமே?

ஆனால் கப்பலில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி எறிய மனமில்லாமல் இருக்கின்றனர்.

இது அவர்களின் நல் மனத்தைக் காட்டுகிறது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கியதால் அவரும் பாதுகாப்பான பயணத்திற்கு உரிமையானவர் என்று எண்ணியும், தன்னுடன் இருப்பவர் ஒருவர் கூட அழியக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும் தாங்களே முயன்று தண்டு வலிக்க துடுப்பு போடுகின்றனர். ஆனால் அவர்களால் இயலவில்லை.

ஆண்டவரை நோக்கி மன்றாடிவிட்டு யோனாவைத் தூக்கி கடலில் எறிகின்றனர்.

'ஆண்டவர் ஏற்பாடு செய்தபடியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்'

Friday, August 19, 2016

யோனா - 3

'தூக்கம்' என்பது ஒரு மௌனப் போராட்டம்.

நாம் வாழப் பிடிக்காதபோதும்

வாழ்வு நமக்கேற்றாற்போல அமையாதபோதும்

நம் கோபத்திலும், ஏமாற்றத்திலும், கண்ணீரிலும்

தூக்கம் நம் கண்களைத் தழுவிக் கொள்கிறது!

தன் கடவுள் மேல் யோனாவுக்கு அப்படி என்ன கோபம்?

கப்பலில் ஏறியவுடன் ஓடிப் போய் சுருண்டு படுத்துக் கொண்டார்!

கப்பலில் கீழ் அடுக்கு, மேல் அடுக்கு, மேல் தளம் என மூன்று அமைப்புக்கள் உண்டு.

உணவுகளும், எரிபொருளும், மருந்துகளும் சேமித்து வைக்கப்படும் கீழ் அடுக்கில் போய் உறங்குகிறது இந்தப் புறா.

அதாவது, 'இருக்க வேண்டிய இடத்தில் யோனா இல்லை!'

நினிவேக்கு போக வேண்டிய யோனா நினிவேக்கு போகவில்லை!

மேல்தளத்தில் மற்ற பயணிகளோடு இருக்க வேண்டிய யோனா அங்கு இல்லை.

கடலின் கொந்தளிப்பு கண்டு எல்லாரும் கதறித் தங்கள் தெய்வங்களிடம் வேண்ட,

இவரோ உறங்கிக் கொண்டிருக்கிறார்.

தன் தெய்வத்திடம் வேண்டினால் கடல் கொந்தளிப்பு நிற்கும் என்றும்,

தன்னால் தான் இந்தக் கடல் கொந்தளிப்பு என்றும் தெரிந்தது யோனாவிற்கு.

'டேய். எழுந்திரு! உன் தெய்வத்திடம் வேண்டு.

ஒருவேளை உன் தெய்வம் நம்மைக் காப்பாற்றலாம்!'

கொக்கரிக்கிறான் கப்பல் தலைவன்.

மெதுவாகக் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்காருகிறார் யோனா.

நிற்க.

யோனாவின் காலத்துக் கப்பல் பயணம் மிக ஆபத்தானது. தொழில்நுட்பம் வளர்ந்தபின் வந்த டைட்டானிக் கூட தன் கன்னிப் பயணத்திலேயே அழிவுற்றது.

சேட்டிலைட்டுகளும், ஜிபிஎஸ் கருவிகளும், நேவிகேட்டர்களும் செயல் இழந்தவுடன் மனம் கடவுளைத் தேடுகிறது.

உயிர் போய்விடும் என்ற பயம் திகிலைக் கொடுக்கிறது.

இந்தப் பயமே நம்மை பாதி தின்றுவிடுகிறது.

ஒரு பக்கம் கடவுளை நோக்கி வேண்டினாலும், மறுபக்கம் கப்பலில் இருப்பவர்கள் தங்களால் இயன்றவரை தங்களையே காப்பாற்றிக் கொள்ள விழைகிறார்கள். கப்பலின் பளுவை குறைப்பதற்காக அதிலிருந்த சரக்குகளை கடலில் எறிகின்றனர். 'கடலே, எங்களை விட்டுவிடு! இந்த உணவுப் பொருள்களை உண்டு உன் பசியைப் போக்கிக்கொள்!' என்று சொல்வதுபோல இருக்கிறது இவர்களின் செயல்.

ஒரு பக்கம் கடவுளை நோக்கியும் செபிக்கின்றனர்.

மறு பக்கம் தாங்களாகவே தங்களை காத்துக்கொள்ளவும் நினைக்கின்றனர்.

இதுதான் நம் அன்றாட போரட்டம் கூட. எப்படி?

'கடவுளின் பராமரிப்பையும் நம்புகிறோம். எல்.ஐ.சி. பாலிசியும் கட்டுகிறோம்!'

Thursday, August 18, 2016

யோனா - 2

'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன' (யோனா 1:2)

யோனா நூலில் முதலில் பேசுபவர் ஆண்டவரே.

யோனா ஒரு யூதர் அல்லது எபிரேயர்.

ஆனால் அவர் அனுப்பப்படுவதோ வேற்று இனத்து, வேற்று தெய்வத்தை வணங்கும் மனிதர்கள் வசிக்கும் நினிவே நகருக்கு.

கிறிஸ்தவர்களாக இருக்கும் வத்திக்கானில் கடவுள் தோன்றி (!), கிறிஸ்தவர்களே இல்லாத ஒரு நாட்டிற்கு ஒருவரை அனுப்பி, 'அந்த மக்கள் அழியப்போகிறார்கள் என்று சொல்!' எனச் சொன்னால், அவர் போவாரா?

போகும் வாய்ப்பு இருக்கிறது! இல்லாமலும் இருக்கிறது!

அனுப்பப்படும் அந்த நபருக்கு ஒருவேளை 'மெசியா காம்ப்ளக்ஸ்' இருக்கிறது என்றால் அவர் கண்டிப்பாக போவார். 'மெசியா காம்ப்ளக்ஸ்' உள்ளவர்கள் எப்பொழுதாவது யாரையாவது காப்பாற்ற வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த காம்ப்ளக்ஸ் தவறானது.

யோனாவுக்கு இந்த காம்ப்ளக்ஸ் அறவே கிடையாது.

'அடுத்த வீட்டில் போய் அவர்களைக் குறை சொல்ல நான் யார்?' என்று நினைத்தோ,

அல்லது

'இந்தக் கடவுளே இப்படித்தான்! போ, போ என்று சொல்வார். மனமாறுங்கள் என்று அவர்களிடம் சொல்லுமுன் இவர் மனம் மாறி விடுவார். இவரது கோபம் தணிந்துவிடும்! இதற்கு பேசாமல் இவர் இப்போதே கோபத்தை தணித்துக் கொள்ளலாமே!' என நினைத்தோ

தன் பயணத்திட்டத்தை மாற்றியிருக்கலாம் யோனா.

பயணத்திட்டத்தை மாற்றியதோடல்லாமல், அதை மிக வேகமாக நிறைவேற்றுகிறார் யோனா.

வேகமாக யோப்பா போய் அங்கிருந்து தர்சீசுக்கு புறப்படும் கப்பலைக் காண்கின்றார்.

'எந்த கப்பல் நின்னாலும் ஏறிப்போய்டுவோம்!' என்று இருக்கிற காசு எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு வந்தவர், அம்புட்டயும் கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்.

கடவுளை நோக்கி வருவதை விட கடவுளை விட்டுச் செல்வதற்குத்தான் என் மனமும் சில நேரங்களில் திட்டமிடுகின்றது. அப்படி திட்டமிடும்போதெல்லாம் அவற்றைச் செயல்படுத்த வேகமாக செயலிலும் இயங்குகின்றது.

யோனாவின் மனநிலை என்னிலும்!

யோனா கடவுள் அவிழ்க்க முடியாத கழுதைக்குட்டி என தன்னை நினைக்கிறார்.

ஆனால், மாலுமிகள் நங்கூரத்தை அவிழ்த்து பயணத்தைத் தொடங்கிய அந்த நிமிடம் கடவுள் புன்னகைக்கிறார்.

அவரின் புன்னகையே கடுங்காற்றாய் வீசுகிறது...

Wednesday, August 17, 2016

யோனா - 1

முதல் ஏற்பாட்டின் யோனா இறைவாக்கினர் மீட்பு வரலாற்றில் மிக முக்கியமானவர். இயேசுவே தன்னை இவரோடு ஒப்பிடுவதுதான் இதற்குக் காரணம்.

இந்த நூலையும், இந்த நபரையும் பற்றி கொஞ்சம் தேடுவோம்.

எபிரேய மொழியில் 'யோனா' என்றால் 'புறா' என்பது பொருள்.

இந்த நூலில் 4 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரங்கள் 1, 3, மற்றும் 4 உரைநடை வடிவிலும், 2 மட்டும் பாடல் வடிவிலும் உள்ளன.

இந்த நூலில் நாம் மூன்று கதைமாந்தர்களைப் பார்க்கின்றோம்: யோனா, கடவுள், மற்றவர்கள்.

எதையும் கண்டுகொள்ளாத ஒரு மனிதனுக்கும், எல்லாவற்றையும் கண்டு கொள்ளும் ஒரு கடவுளுக்கும் இடையே உள்ள போராட்டமே கதையின் கரு.

ஒட்டு மொத்த நூலுமே மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. முதல் நாள்: யோனா தப்பிக்கிறார். இரண்டாம் நாள்: யோனா மனமாற்றம் பற்றி போதிக்கின்றார். மூன்றாம் நாள்: யோனா கடவுளோடு கோபித்துக் கொள்கிறார்.

யோனாவை பல நேரங்களில் ஒரு மறைமாவட்ட அருள்பணியாளருக்கு ஒப்பிடுகின்றனர்.

மறைமாவட்ட அருள்பணியாளரை வெகு விரைவில் தழுவிக் கொள்ளும் 'மனச்சோர்வு' இவரையும் அதிகம் பற்றிக் கொள்கிறது. ஆகையால்தான் எதன்மேலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்.

'மனச்சோர்வு' - ஒரு விநோதம்.

கடவுளிடமிருந்தும், மனிதரிடமிருந்தும் நம்மைத் தப்பிக்க வைக்கிறது இந்த உணர்வு.

யோனாவும் இப்படித்தான் தப்பி ஓடுகின்றார்.

நினிவே நகருக்கு அனுப்புகின்றார் அவரை கடவுள்.

ஆனால், அவரோ அதற்கு நேர் எதிராக உள்ள தர்சீசு நோக்கிப் புறப்படுகின்றார்.

சென்னைக்கு அனுப்பினால் கன்னியாகுமரி செல்கின்றார் யோனா.

Tuesday, August 16, 2016

அப்பாக்கள்

'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலை நமக்குத் தந்துவிட்டு, இறைவனின் யாழில் தன்னையே இணைத்துக் கொண்டார் நா. முத்துக்குமார்.

தந்தையின் அன்பை மிக அழகாக தன் கவிதைகளிலும், பாடல்களிலும் பதிவு செய்த பாசக்காரர் இவர்.

'அணிலாடும் முன்றில்' என்ற இவரது நூல் 'அப்பாவின் அன்பு' பற்றிய கிளாசிக்.

ஷேக்ஸ்பியர் ஹேம்லட் நாடகத்தில் மகனுக்கு கூறும் அறிவுரை.

ஆபிரகாம் லிங்கன் தன் மகன் பற்றி அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.

இந்த வரிசையில் நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் அப்பாக்கள் மிக முக்கிய இடம் பிடிப்பவர்கள்.

அம்மாக்களைப் போல அப்பாக்கள் அலட்டிக் கொள்வதில்லை.

உள்ளம் உடைந்தாலும் கண்ணீர் விடுவதில்லை.

கோபம் கொப்பளித்தாலும் கடிந்து கொள்வதில்லை.

சண்டையிட்டு மௌனப் போராட்டம் நடத்துவதில்லை.

ஆனால், அம்மாக்கள் பிடிக்காத இடத்தை அப்பாக்கள் பிள்ளைகளில் பிடித்துவிடுவார்கள்.

Monday, August 15, 2016

லா சலேத்

நேற்று கொடைக்கானல் லா சலேத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன்.

நேற்று மாலை சென்னை பேராயரின் திருவிழா திருப்பலி. இன்று காலை தேரடித் திருப்பலி. தொடர்ந்து புது நன்மை திருப்பலி என முடிந்து சற்று நிமிடங்கள்முன்தான் வீடு திரும்பினேன்.
மனிதன் 'விழாதிரு'க்கவே 'திருவிழா' கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு இந்தத் திருநாள் சான்று.

ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் நேரடியாகவோ, மற்ற மீடியா வழியாகவே இந்த இரண்டு நாட்களில் சலேத் அன்னையை தரிசித்திருக்கிறார்கள்.

நான் 2008ஆம் திருத்தொண்டர்பணி ஆற்றிய காலத்தில் இருந்தே சலேத் அன்னையின் மேல் ஓர் ஈர்ப்பு இருந்ததுண்டு. காலப்போக்கில் இந்த ஈர்ப்பு ஆசையாக மாறி இப்போது பக்தியாக மலர்ந்து நிற்கிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த அன்னை ஒரு லட்சம் பேரை இழுக்கும் சக்தி பெற்றிருக்கின்றார். இந்த ஒரு லட்சம் பேர் வழியாக நம் எவ்வளவு செய்திகளைச் சொல்லி அனுப்புகிறோம்? என்பதும் கேள்விக்குறி.

மடிக்காணிக்கை. நேர்ச்சை. விரதம். முடி எடுத்தல். பொங்கல் வைத்தல்.

இந்த பக்தி முயற்சிகளின் முன் நான் வைக்கும் திருப்பலியும், மறையுரையும் ஏதோ 'சத்தம்' போல அவர்கள் உணர்வதாகவே நினைத்தேன்.

சின்ன வயதில் எங்க ஊரு முளைக்கட்டு திருவிழாவுக்கு சென்று திரும்பிய நினைவு வந்தது.

வீதியெங்கும் கடைகள்.

தங்கள் கைகளுக்கு வளையல்கள் தேர்ந்தெடுக்கும் மகளிர்.

நான் பார்க்கிறேன் என்று தெரிந்தவுடன் தான் பேசிக்கொண்டிருந்த ஐஃபோனின் சிம்பளை மறைத்திருந்த தன் குச்சி விரலை சற்று இறக்கி, 'நானும் ஐஃபோன் வைத்திருக்கிறேன்!' என்று சொல்வது போல சொல்லாமல் சொல்லிய ஒரு கறுப்பு சேலை இளவல்.

மொட்டை தலையில் சந்தனம் தேய்த்து அதைத் தன் அம்மாவின் சேலையில் மறைத்துக் கொண்டே நடந்த சின்னஞ்சிறுசுகள்.

தாய்மாமன் மடியில் வைத்து மொட்டை எடுக்க விடாமல் திமிறிக் கொண்டு எழுந்ததில் கத்தி பட்டு இரத்தம் வந்து கீறிட்ட ஒரு குட்டி மருமகள்!

தீர்த்தம் சேகரித்தவர்கள்.

எண்ணெய் வாங்கியவர்கள்.

இரண்டு விரல்களை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு 'நான் முடிவெட்டப் போகிறேன்' என்ற தொனியில் போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்த பசங்க!

நல்லா இருக்கிற தங்கள் முகங்களை அஷ்டகோணலாக்கி செல்ஃபி எடுத்து, 'இது நல்லா இல்ல!' என தங்கள் ஃபோட்டோக்களை அழித்துக் கொண்ட பொண்ணுங்க!

இவ்வளவு விமரிசையாக கொண்டாடப்பட்ட திருவிழா நேரங்களிலும் மேல் சட்டை இல்லாமல் 'அம்மா, ஏதாவது போடுங்க' என்று பாத்திரம் ஏந்திக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்.

(மற்ற சிறுமியர்-சிறுவர் புத்தாடை அணிந்து திருவிழா கொண்டாடுவதைப் பார்க்கும்போது இந்தப் பிள்ளைகள் மனது என்ன பாடு படும்!

பெரிய நகைக்கடை நிறுவனங்களில் நிறைய நகைகளை வாங்கிக் கொண்டு வெளியேறும் குடும்பத்தாரைப் பார்த்து 'சல்யூட்' அடிக்கும் வாட்ச்மேன்களுக்கு அந்நேரத்தில் தங்கள் மனைவி மற்றும் மகளின் முகம் தங்கள் கண்முன் வந்து போகும்தானே!)

ஒன்று மட்டும் புரிந்தது.

மக்களின் ஆலய வருகை அருள்பணியாளரை மையப்படுத்தியதோ, அவரின் செயல்பாடுகளை மையப்படுத்தியதோ, அல்லது அவரின் இனிய வார்த்தைகளை மையப்படுத்தியோ அல்ல. இவைகள் நன்றாக இருந்தால் அது அருள்பணியாளரின் கேரிசம். அவ்வளவுதான்!

மற்றபடி,

தெய்வங்கள் தாங்களே தங்கள் பக்தர்களை தங்களிடம் அழைத்துக் கொள்கின்றனர்.

Friday, August 12, 2016

மேன்மக்கள் மேன்மக்களே

வாயில புண், தொண்டையில கட்டி, உடம்பெல்லாம் காய்ச்சல்.

வேகமாக போற வாழ்க்கையில யாரோ செங்கல எடுத்து எறியற ஃபீலிங் அடிக்கடி வந்துவிடுகிறது.

'சுடுதண்ணி மட்டும் குடிங்க.

காலையில காக்ள் பண்ணுங்க.

யார்கூடயும் பேசாதீங்க. பேசுனா உங்களுக்கும் வலிக்கும். அடுத்தவங்களுக்கும் பரவும்.'

மருந்துச்சீட்டோடு இந்த அறிவுரைகளையும் சொல்லி முடித்தார் டாக்டர்.

மனம் சோர்வதால் உடல் சோர்கிறதா?

அல்லது

உடல் சோர்வதால் மனம் சோர்கிறதா?

இதுவும் கோழியா? முட்டையா? கேள்விபோலத்தான்.

மூன்று வேகத்தடைகளைப் போட்ட கடவுள் இன்று மூன்று எனர்ஜி புல்டோசர்களையும் அனுப்பி என்னை உந்தித் தள்ளினார்.

'சங்கம் 4 - முதலாம் உலகத் தமிழர் உரையாடல்' தொடக்க விழா இன்று பாத்திமா கல்லூரி யூபிலி ஹாலில் நடந்தேறியது. நிகழ்ச்சி தொடங்கி 20ஆவது நிமிடம் உள்நுழைந்தேன். ஏதோ ஒரு உற்சாகம் என்னைப் பற்றிக் கொண்டது. இதே ஹாலில் 6 ஆண்டுகளுக்கு முன் நானும் உரையாற்றி இருக்கிறேன் என்ற நினைவு வந்து போனது. அன்று நான் நின்று கொண்டிருந்த இடம், அணிந்திருந்த ஆடை, பிடித்திருந்த மைக், பயன்படுத்திய கணிணி என எல்லாம் மின்னலாய் மனத்தில் வந்து போனது.

வாழ்க்கையில் எல்லாமே புள்ளிகள்தாம். ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு நகர்கிறோம். எல்லாப் புள்ளிகளும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி இணைக்கப்படாவிட்டால் கோட்டோவியம் சாத்தியம் அல்லவே.

புல்டோசர் 1: அருட்சகோதரி. முனைவர். பாத்திமா மேரி

பாத்திமா கல்லூரியின் முதல்வர் இவர். நான் அரங்கில் நுழைந்தபோது மேடையில் பேசிக்கொண்டிருந்தார். இந்த இளவலின் பேச்சு அரங்கிலிருந்த அத்தனை இளவல்களையும் உசுப்பேற்றியது. 'எல்லாருக்கும் எல்லாமாய் ஆனேன்' என்று பவுல் சொன்னது இவருக்கும் பொருந்தும். அருட்சகோதரிகளுக்கு அருட்சகோதரியாய், பேராசிரியர்களுக்குப் பேராசிரியராய், மாணவியருக்கு மாணவியாய் - ஐயோ! சான்ஸே இல்லை.

புல்டோசர் 2: திரு. ஆர். பாலகிருஷ்ணன், இஆப

இவர் ஒடிசா மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலர். 'கீழடி மற்றும் சிந்துசமவெளி' என்ற தலைப்பில் இரண்டு அகழ்வாராய்ச்சிகளையும் எடுத்து ஒப்பீடு செய்தார். இரண்டு மூன்று வேலை தொடர்ந்து வந்தால் டென்ஷன் ஆகிவிடும் எனக்கு, தலைமைச் செயலராய் இருந்தாலும் இவர் மிகவும் நேர்த்தியாக தயாரித்து, பவர்பாய்ண்ட் கொண்டு சமர்ப்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. இவரின் கான்ஃபிடன்ஸ். 'ஐஏஎஸ் தவிர வேறு எந்த தேர்வும் எழுத மாட்டேன் என முடிவு எடுத்தேன். ஏனெனில் வேறு எந்த தேர்வு எழுதினாலும் நான் வென்றுவிடுவேன். ஒரே முறைதான் ஐஏஎஸ் எழுதுவேன். அதில் வெற்றி பெறுவேன்' என அவர் சொன்னதுதான் அவரின் கான்ஃபிடன்ஸ் லெவலுக்கு எடுத்துக்காட்டு. 'தமிழன்னை தான் விரும்பியவளை தனக்கென அழைத்துக் கொள்வாள்' என்று அவர் சொன்னது எனக்கு நம் இறையழைத்தலை இப்படிச் சொல்வதை நினைவுபடுத்தியது. தமிழ் ஆர்வம், புன்சிரிப்பு, எளியவரையும் நன்றியுடன் நினைவுகூறும் பெருந்தன்மை.

புல்டோசர் 3: அருட்திரு. ம. ஜெகத் கஸ்பார்

'வாழ்நாளில் இவரைச் சந்திக்க வேண்டும்' என நான் நெடுநாள் காத்திருந்து சந்தித்த சில நன்மக்களில் இவரும் ஒருவர். 'தமிழ் மையம்' நிறுவனர். 'சங்கம் 4' ஒருங்கிணைப்பாளர். இவரின் தமிழ் மற்றும் ஆங்கில உரைகளையும், பாடல்களையும், எழுத்துக்களையும் இரசித்திருக்கிறேன். நேருக்கு நேர் அவர் பேசக் கேட்டது இன்றுதான். எளிய தோற்றம். நேர்முகமான பேச்சு. இவரின் பிரசன்னமே உற்சாகம். பம்பரமாய் சுற்றினாலும் அலட்டிக் கொள்ளாதவர். எல்லாம் நலமே நடந்து கொண்டிருக்க வெளியில் நின்று அரைலிட்டர் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.

மேற்காணும் மூவரையும் நேருக்கு நேர் பார்த்து கைகுலுக்கும் வாய்ப்பு பெற்றேன் அம்மா-அப்பா ஆசியால்!

மேன்மக்கள் மேன்மக்களே!

Thursday, August 11, 2016

அவர் தோட்டக்காரர்

36 வருடங்கள் எங்கள் தோட்டத்தில் வேலை பார்த்த ஒருவர் இறந்து விட்டார்.

பகல் முழுவதும் வேலை செய்து மாலையில் தோட்டத்திலேயே இறந்து கிடந்த அவரை அவ்வழியே வாக்கிங் சென்ற ஒருவர் கண்டுபிடித்தார்.

வேலை பார்த்துக் கொண்டே இறந்தார் என்றும், தனக்குப் பிடித்த ஆசிரியப் பணி செய்து கொண்டிருந்தபோது இறந்தார் என நாம் அப்துல் கலாமை பாராட்டுகின்றோம்.

ஆனால், அன்றாடம் நிறையப் பேர் இப்படி இறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஓடுகின்ற இரயிலில் இறக்கும் டிக்கெட் பரிசோதகர்.

பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு வந்து ஓரமாக வண்டியை நிறுத்தி இறந்தவர்.

அலுவலகத்தில் இறந்தவர்.

பயணத்தில் இறந்தவர்.

இப்படி நிறைய உள்ளன சொல்வதற்கு!

இவரும் அப்துல் கலாம்தான்.

ஆனால் இவர் பெயர் கிறிஸ்தவப் பெயர்.

கிறிஸ்தவம் இவர் தழுவிய மதமாகத் தான் இருக்க வேண்டும்.

மெல்லிய தேகம்.

வெயில் பட்டு கறுத்துப் போய் செதில் செதிலாய் மின்னும் தோல்.

சவரம் செய்யாத முகம்.

தன் வாழ்நாள் முழுவதும் எங்கள் தோட்டத்தை மட்டுமே மனத்தில் இருத்தி வாழ்ந்ததால் என்னவோ, தன் வீடு தூசியாய் கிடந்ததை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

இறப்பு செய்தி கேட்டு, எங்கள் இல்ல அருட்தந்தை ஒருவரும், நானும் அவசரமாக ஓடினோம்.

மெல்லிதாய் குண்டு பல்பு மின்னிக்கொண்டிருந்த அந்த வீட்டின் முகப்பில் ஒரு பழைய கட்டிலில் அவரைக் கிடத்தி பழைய துணிகளை அவர் மேல் சுற்றியிருந்தார்கள்.

துணிகளில் பொதிந்து கிடந்ததால் அவரை நான் இயேசு என நினைத்தேன்.

ஆனால் அவர் தோட்டக்காரர்.



Friday, August 5, 2016

உருமாற்றம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புனேவிற்கு வகுப்பிற்குச் சென்றிருந்தபோது என் நண்பன் ஃபாத்தி, 'ஆறு வருடங்களுக்குப் பின் புனே போயிருக்கிறாய். அங்கே என்ன மாற்றம் இருக்கிறது?' என்று கேட்டான்.

'சாலைகள் எல்லாம் பெரிதாயிருக்கின்றன.
பொண்ணுங்களின் ஆடைகள் எல்லாம் சிறிதாயிருக்கின்றன' என்றேன்.

இன்று காலை திருப்பலிக்காக ஒரு லேடிஸ் ஹாஸ்டலின் உள்ளே சென்றேன்.

வராண்டாவில் மாட்டப்பட்டிருந்த பெரிய கண்ணாடியின் முன் சுடிதார் அணிந்த ஒரு இளவல் சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.

ஆறு வருடங்களுக்கு முன் நான் இதே வராண்டாவில் சென்றபோது அன்று சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண் வெட்கப்பட்டு (!), 'ஐயோ! ஃபாதர் வர்றார்!' என்று சொல்லிக்கொண்டே டார்மிடரிக்குள் ஓடியது நினைவிற்கு வந்தது.

ஆனால் இந்த அதிகாலை இளவல் ஓடவில்லை. அப்படியே சீப்புடன் தலையைச் சாய்த்து ஓரக்கண்ணால் ஒரு பார்வை உதித்துவிட்டு, தன் சிகை அலங்காரத்தைத் தொடர்ந்தார்.

ஆறு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் இங்கே நடந்தேறியிருக்கின்றன என்பதற்கு இந்த ஒரு சான்று போதும்.

நிற்க.

நாளை ஆண்டவரின் உருமாற்ற அல்லது தோற்ற மாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இந்த நாளில் ஆண்டவரின் முகம் அல்லது தோற்றம் மாறவில்லை.

ஒருவேளை மாறியிருக்கலாம்.

தன் முகத்தை அல்லது தோற்றத்தை மாற்றிக் காட்டும் மாயவித்தைக்காரர் அல்ல இயேசு.

இந்த நாளில் சீடர்களின் புரிதல்தான் மாறுகிறது.

ஆக, மாற்றம் என்பது நாம் எப்படி மற்றவர்களைப் பார்க்கிறோம் என்பதிலும் இருக்கிறது.

புனே சாலையின் இளவலோ,

சிகை அலங்கார இளவலோ,

அவர்களில் மாற்றம் இருந்தாலும்

நான் பார்க்கும் பார்வையிலும் மாற்றம் இருக்கிறது.

ஆக, இயேசுவின் தோற்ற மாற்றம் அவரின் மாற்றம் மட்டும் அல்ல. சீடர்களின் மாற்றமும்கூட.

Thursday, August 4, 2016

அவரின் பெண்மை

'நாத்திகம் - மனித மூளையின் ஓர் அங்கம்' என்ற ஒரு கட்டுரையை வாசித்தேன்.

அறிவியலுக்கும், நம்பிக்கைக்கும் உள்ள உரையாடல் மனித மூளையில் தொடங்குகிறது என தன் கட்டுரையை ஆரம்பிக்கும் ஆசிரியர், மனித மூளையின் இரண்டு கூறுகளை விளக்குகின்றார்.

பகுப்பாய்வு செய்யும் மூளை (analytical brain),  பரிவு காட்டும் மூளை (empathetic brain) என நம் மூளை இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

பகுப்பாய்வு செய்யும் மூளைதான் நாத்திகத்தின் ஊற்றுக்கண்.

பரிவு காட்டும் மூளை நம்பிக்கையின் ஊற்றுக்கண்.

பெண்களுக்கு இயல்பாகவே பரிவு காட்டும் மூளையின் செயல்பாடு அதிகம் இருப்பதால் அவர்களால் எளிதில் இறைநம்பிக்கை கொள்ள முடிகிறது. ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

பகுப்பாய்வு செய்யும் மூளைதான் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து குழப்பிக் கொள்கிறது.

நாத்திகம் - நம்பிக்கை என்ற அடிப்படையில் மட்டுமல்ல.

என்னைப் பொறுத்தவரையில் நாம் அடுத்தவரைப் பார்க்கும் பார்வையும் இந்த இரண்டு நிலைகளில் தான் இருக்கிறது.

சிலரை நாம் பகுப்பாய்வு செய்து பார்க்கிறோம். சிலரை நாம் பரிவு கொண்டு பார்க்கிறோம்.

பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது அடுத்தவரை நாம் ஒரு பிரச்சினையாகவும், பரிவு கொண்டு பார்க்கும்போது நாம் அடுத்தவரை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்துகிறோம்.

இயேசுவுக்கு பரிவு கொண்ட பார்வை அதிகம் இருந்தது.

ஆகையால்தான் ஒன்றுக்கும் உதவாமல் கூடி நின்ற மக்களைப் பார்த்து, 'அறுவடை' என்கிறார்.

பகுப்பாய்வு செய்து பார்த்தால் வெறும் 'பதராக' தெரியும் மக்கள் கூட்டம் இயேசுவுக்கு மட்டும் 'அறுவடை' என்று தெரிகின்றது.

இதிலிருந்து மற்றொன்றும் புலப்படுகிறது.

வரலாற்று இயேசுவை வேண்டுமானால் நாம் 'ஆண்' என்று சொல்லலாம்.

ஆனால், கிறிஸ்துவை 'பெண்' என்றும் அழைப்பதில் தவறில்லை. அவரின் பரிவு காட்டும் பார்வையே அவரின் பெண்மை.


Wednesday, August 3, 2016

அதுபோதும் எனக்கு!

நாளை (04 ஆகஸ்ட்) தூய ஜான் மரிய வியான்னியின் திருநாள்.

பங்குத்தந்தையரின் பாதுகாவலராகிய இவரின் திருநாள் கொண்டாட்டத் தயாரிப்பாக இன்று மாலை செப வழிபாடும், சிந்தனைப் பகிர்வும் இருந்தது.

என் சக அருள்பணியாளர், அருள்திரு. பீட்டர் ராய் அவர்கள் மிக அழகான பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றுப் பின்புலத்துடன் வியான்னியைப் பற்றிய ஒரு புதிய பார்வையை முன்வைத்தார்.

'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்னும் முழக்கத்துடன் பிரெஞ்சுப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த முழக்கத்திற்குப் பின்புலமாக இருந்தது 'மனித மையப்படுத்துதலும்,' 'அறிவுக்கொள்கையுமே!'

இந்தப் பின்புலத்தில் ஒரு மாற்றுப் பண்பாட்டுக் கருத்தை விதைக்கிறார் வியான்னி: 'இறை மையப்படுத்துதலும்,' 'ஆன்மீகக்கொள்கையுமே!'

'வியான்னி நரகம் பற்றியும், பாவம் பற்றியும், மோட்சம் பற்றியும் மறையுரையாற்றினார்' என்று பீட்டர் ராய் அவர்கள் சொன்னபோது எனக்கு உதடுகளில் சிரிப்பு தட்டியது. 'இதெல்லாம் இருக்கா என்ன?' என்று என்  மைன்ட் வாய்ஸ் கேட்டது.

ஆனால், இறைத்திட்டத்தைப் பொறுத்தவரையில் வியான்னி ஒரு வரலாற்றுத் தேவை.

'நான் ஒரு குரு!' - இந்த ஒரு அடையாளம் போதும் என்று உறுதியாயிருக்கின்ற வியான்னி, அந்த அடையாளத்தை அப்படியே வாழ்ந்து காட்டுகின்றார்.

நான் உரோமையில் பணியாற்றிய என் பங்கின் உதவிப்பங்குத்தந்தை தன் வாட்ஸ்ஆப் ஸ்டேடசில், 'நான் ஒரு இத்தாலியன். அதுபோதும் எனக்கு!' என்று எழுதியிருப்பார். இது ஒரு ப்ரொவ்ட்(!) ஸ்டேடசாக இருந்தாலும், இதில் ஓர் உண்மை இருக்கிறது என இன்று எனக்குப் புரிகிறது.

'நான் ஒரு குரு. அதுபோதும் எனக்கு!' - இதுதான் வியான்னியின் ஸ்டேடஸ்.

இடத்தாலும், நேரத்தாலும் கட்டப்பட்ட நம் வாழ்வில் நாம் ஒரு மனிதராகத்தான் வாழ முடியும். அந்த மனித அடையாளத்தை நிறைவாக வாழ்தல் போதும் என்கிறார் வியான்னி.

சில ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு நிறைய தனிநபர் இலக்குகள் இருந்ததுண்டு: 'குருவாக இருந்து கொண்டே வழக்கறிஞராக இருப்பது!' 'குருவாக இருந்து கொண்டே ஆசிரியராக இருப்பது,' 'குருவாக இருந்து கொண்டே மருத்துவராக இருப்பது!' அல்லது 'பார்ட் டைம் அருள்பணியாளராக இருப்பது!'

ஆனால், வியான்னி இன்று எனக்கு வைக்கும் சவால் இதுதான்: 'நீ ஒரு குரு! அதுபோதும் உனக்கு.'

இதை வாழ்வதற்கே நிறைய முயற்சிகள் தேவை. இந்த ஒன்றை நான் வாழ நினைத்தாலே போதும் என நினைக்கிறேன்.

அவர் பெரிய காரியங்கள் எதுவும் செய்யவில்லை.

ஆனால் செய்த அனைத்தையும் பெரியதாகச் செய்தார்!

Tuesday, August 2, 2016

புதியதாக

இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டதால்

எழுதுவதில் சோம்பல் வந்துவிட்டது!

மூளையும் புதியதாக ஒன்றும் யோசிக்க மறுக்கிறது.

'இந்த உலகில் புதியது என்று எதுவும் இல்லை!' என

சபை உரையாளர் எங்கோ சத்தமிட்டுப் போவதாகக் கேட்கிறது.