Saturday, January 31, 2015

நாம யார மாதிரி பேசுறோம்?

நாளைக்கு நாம வாசிக்கப் போற நற்செய்திப் பகுதியைப் பத்தி இன்னைக்கு எழுதலாம்.

மாற்கு நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் பணித்தொடக்கத்தைப் பற்றி தான் வாசிக்கிறோம் (காண்க. மாற்கு 1:21-28).

'காலம் நிறைவேறி விட்டது. இறையரசு நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறுங்கள். நற்செய்தியை நம்புங்கள்' (மாற்கு 1:15) என போன வாரம் போதித்த இயேசு இன்று ஒரு செபக்கூடத்தில் போதிக்கிறார். நல்லா வாசிக்கணும். 'செபக்கூட்டத்தில்' அப்படின்னு ஒரு எழுத்து சேர்த்துப் போட்டா நம்ம உமா சங்கர் பிரச்சினைக்கு வந்துடுவோம்.

என்ன போதிச்சார் அப்படிங்கிறத பற்றி மாற்கு நற்செய்தியாளர் ஒன்னும் எழுதல. லூக்கா நற்செய்தியாளர் எசாயா எழுதிய இறைவாக்கை இயேசு போதித்ததாக எழுதுகிறார். மாற்கு நற்செய்தியில என்ன சிறப்புனா செபக்கூடத்துல இருந்த பேய் பிடிச்ச மனிதர் ஒருத்தர், 'நீ யாருன்னு எங்களுக்குத் தெரியும்!' அப்படின்னு சத்தம் போடுது.

நான் எல்லீஸ் நகர்ல இருந்தப்ப பேய் பிடிச்சுருக்கு அப்படின்னு ஒரு பொண்ணைக் கொண்டு வந்தாங்க. அந்த பொண்ணு மாப்பாளையம் மகளிர் மேனிலைப்பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்தது. அது ஒரு செவ்வாய்க்கிழமை. செபஸ்தியார் பேயை ஓட்டுவார் அப்படிங்கிற நம்பிக்கயில தான் கூட்டிட்டு வந்திருந்தாங்க. பெரிய ஃபாதர் இல்லாததுனால நம்மகிட்ட தான் வந்தது கூட்டம். அது என்னமோ நெருக்கடி நேரங்களில் எல்லாம் இந்த பெரிய ஃபாதர்கள் எங்கயாவது போயிடுவாங்க. வேகமாக போய் அங்கியை மாட்டிக் கொண்டு வந்து 'எப்படியாவது இந்தப் பேயை ஓட்டிடனும்!' அப்படின்னு யோசிக்கிட்டே இருந்தேன். அப்ப ஃபாதர் ஆன புதுசா. எல்லாத்தையும் செஞ்சு பாத்துடனும் அப்படின்னு தான் அந்த நேரத்துல தோணும். 'கோவிலுக்குள் கூட்டிட்டு போங்க!' அப்படின்னு சொன்னவுடன், அந்தப் பொண்ணு திடீர்னு ஆம்பள குரலில் பேச ஆரம்பிச்சுடுச்சு. 'எனக்கே பயமாயிடுச்சு!' 'பேய் இருக்கா இல்லையா!' அப்படிங்கிற சந்திரமுகி கேள்விக்கெல்லாம் அங்க இடமில்லை. சம்திங் அப்நார்மல் கண் முன்னா நடக்குது. அந்தப் பொண்ணு ஆம்பள குரலில் பேசினதோட மட்டுமல்லாமல், 'டேய்! கையை விடுடா! நீ ரொம்ப யோக்கியமா! நீ யாருன்னு எனக்குத் தெரியும்!' அப்படின்னு கையைப் பிடிச்ச ஒருவரைப் பார்த்து கத்த ஆரம்பித்து. எனக்கு உள்ளுக்குள் பயம். இந்தப் பேய் நம்மள பத்தின எல்லாத்தையும் சொல்லிப்புடுமோனு! இருந்தாலும் அந்தப் பொண்ணைப் பார்த்து லைட்டா சிரிச்சேன். ஆனா எந்த ரியாக்சனும் இல்ல. 'சரி! இந்தப் பேயும் நல்லவ போலதான்!' அப்படின்னு நினைச்சுகிட்டேன். அந்தக் கொஞ்ச நேரத்துல பெரிய ஃபாதர் வந்துட்டார். கூட்டம் எல்லாம் அவர்கிட்ட போயிடுச்சு. 'அப்பாடா!' அப்படின்னு வந்து ஆதித்யா டிவி பார்த்தேன்.

'நீ யாரை மாதிரினு தெரியுமா?' அப்படின்னு நாளைய நற்செய்தியில பேயும் கேட்குது. கப்பர்நாகூம் மனிதர்களும் கேட்கிறார்கள்.

'நீ கடவுளின் தூயவர்!' அப்படின்னு சொல்லுது பேய்.

'நீ மறைநூல் அறிஞரைவிட பெரியவர்!' அப்படின்னு சொல்றாங்க மக்கள்.

'மேலிருந்து' அடையாளம் சொல்லுது பேய்.

'கீழிருந்து' அடையாளம் சொல்றாங்க மக்கள்.

இரண்டு பேர் பேசுறதையும் இயேசு சீரியசா எடுத்துக்கொள்ளல. ஆனா, பேயை மட்டும் கடிந்து கொள்கிறார்.

'என்ன அழகா பேசுறாரு பாருங்க! இப்படிப் பேசி நான் கேட்டதில்லை!' என்கிறார் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும்.

ஆக. என்ன பேசுறார் அப்படிங்கிறத பத்தி ஒன்னும் இல்ல. ஆனா, எப்படிப் பேசுறார் அப்படிங்கிறத பத்தி தான் பேசுறாங்க.

இன்னைக்கு நம்ம பெருமாள் முருகனுக்கோ, உமா சங்கருக்கோ, தகவல் துறை அமைச்சருக்கோ என்ன பிரச்சனை? அவங்க என்ன பேசுறாங்க அப்படிங்கிறத விட எப்படிப் பேசுறாங்க அப்படிங்கிறத வச்சி தான்.

நம்மிடம் இருக்கும் சொல், செயல், பழக்கம் அனைத்தும் மற்றவரிடமிருந்து நாம கத்துக்கிட்டதுதான்.

இன்னைக்கு நாம யார மாதிரி பேசுறோம்?

இது குரலின் தன்மையை ஆராய்ச்சி செய்யும் கேள்வி அல்ல. மாறாக, நாம யார மாதிரி பேசுறோமோ அவங்கள மாதிரிதான் அந்தப் பேச்சோட உள்பொருளும் இருக்கும்.

'அவன் அங்க அப்பா மாதிரியே கெட்ட வார்த்தை பேசுறான்!' அப்படின்னு யாரையாவது பார்த்துச் சொல்றாங்கன்னா, அந்த மகன் அந்த அப்பாவிடமிருந்து அதை உள்வாங்கி இருக்கிறான் என்று அர்த்தம்.

நாம ஃபோன்ல பேசும்போது கூட நம்ம ஃப்ரண்ட்ஸ் ஒரு சில நேரம் சொல்லியிருப்பாங்க:

'இப்படித்தான் ஃபாதர் எங்க வீட்டுக்காரரும் சொல்வார்!'

அல்லது

'இப்படித்தான் ஃபாதர் எங்க வீட்டுக்காரரும் சொல்வார்!'

ஒரு சில நேரங்களில் நாம் நம்மையறியாமலேயே மற்றவர்கள் போல பேசுகிறோம். அல்லது நாம் பேசும் போது அந்தப் பேச்சில் அவர்கள் அதற்கு முன்னால் தங்கள் வாழ்வில் சந்தித்த ஒருவரை அடையாளப்படுத்திப் பார்க்கின்றனர்.

ஒரு பப்ளிங் மீட்டிங் நடக்குதுன்னு வைங்க. அங்க ஒரு ஆண் பேசுனா, முதலில் மக்கள் அவர் என்ன பேசுறார்னு கேட்பாங்க. அது பிடிச்சதுன்னா தான் அவர் எப்படி இருக்கிறார் அப்படின்னு பார்ப்பாங்க. அதே இடத்துல ஒரு பெண் பேசுனா, முதலில் மக்கள் அவர் எப்படி இருக்கிறார்னு பார்ப்பாங்க. அவங்க பார்க்குறது அவங்களுக்கு பிடிச்சதுன்னா தான் அவர் என்ன பேசுகிறார் அப்படின்னு கேட்பாங்க.

இயேசு பேசுறது ஏன் மக்களுக்குப் பிடிச்சது தெரியுமா?

அவர் சொல்றது மாதிரியே நடந்தது. 'ச்சுப்!' அப்படின்னு அதட்டுறார். பேய் அமைதியாகுது. 'வெளியே போ!' அப்படிங்கிறார் போயிடுது. இதுதான் வார்த்தைக்கு அவசியம்.

'மாற்றத்தை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண்!' அப்படின்னு சொல்வார் சேகுவேரா.

நாம சொல்றது அப்படியே நடக்கனும்னா, நாம முதலில் நடக்குறது மட்டும் சொல்லப் பழகனும்.

'அதிக கோபப்படும்போது முடிவு எடுக்காத! அதிக மகிழ்ச்சியா இருக்கும் போது ப்ராமிஸ் பண்ணாத!' அப்படின்னு சொல்வாங்க.

வருடம் பிறந்து ஒரு மாசம் ஆயிடுச்சு. போன ஒன்னாந் தேதி எடுத்த ஐந்து வாக்குறுதகளில் மூணு தான் நினைவிற்கு வருகிறது. 'உங்க வாழ்க்கையின் கவலைகள் எல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல சீக்கிரம் மறைந்து போகட்டும்' அப்படின்னு இத்தாலியன் ல ஒரு பழமொழி கூட இருக்கு.

நாளைக்கு ஒன்னாந் தேதி.

நடக்குற வார்த்தைய நான் சொல்றேனா? நான் சொல்றபடி நடக்குறேனா?

நாம யார மாதிரி பேசுறோம்?



Friday, January 30, 2015

மதச்சார்பின்மையும். சோஷியலிஸமும்

இந்த ஆண்டு நம் நாட்டின் குடியரசுத் திருநாளன்று நம் நாட்டின் தகவல்துறை அமைச்சகம் சார்பாக நாட்டு மக்களுக்கு குடியரசு வாழ்த்து சொல்லி நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் நம் அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு (ப்ரிஆம்பிள்) புகைப்படமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த முகப்பில் நம் அரசியலமைப்புச் சட்டம் தரும் வாக்குறுதிகளில் 'இந்தியா ஒரு ... மதச்சார்பற்ற (secular) மற்றும் சமுதாயத்துவ (socialist) ...' என்ற இரண்டு வார்த்தைகள் மிஸ்ஸிங். இதை இரண்டு நாட்களுக்குப் பின் கண்டுபிடித்த எதிர்க்கட்சிகள் இந்த இரண்டு வார்த்தைகள் நீக்கப்பட்ட முகப்பை எப்படி வெளியிடலாம் எனக் கேள்விகள் எழுப்பின. அதற்கு நம்ம தகவல்துறை அமைச்சர் நேத்து ரொம்ப கூலா ஒரு பதில் சொன்னார்: 'அந்த இரண்டு வார்த்தைகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில் சேர்க்கப்பட்டது எமெர்ஜன்சி என்ற சொல்லப்படும் இந்திராகாந்தி ஆட்சியின் போதுதான். அதை ஏன் நாம் சேர்த்திருக்கிறோம் என்பதை மறு ஆய்வு செய்து அவைகளை நீக்கிவிட வேண்டும்!' இந்தப் பதிலால் பலர் ரொம்ப அப்செட் ஆகி இருக்கின்றனர்.

ஒரு சில சமூக ஆர்வலர்களின் கருத்து என்னவென்றால் மத்தியில் மோடி தலைமையில் நடக்கும் பாஜக ஆட்சி சமஸ்கிருத வாரம், பகவத் கீதை தேசிய நூல் என்று அடுத்தடுத்து மக்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் படலத்தின் ஒரு பகுதியாக இது இருக்குமோ என்பதுதான்.

செக்யுலர், சோஷியலிஸ்ட் - இந்த இரண்டு வார்த்தைகள் நமக்கு வாக்குறுதியாகத் தருவது என்ன? இந்த இரண்டு வார்த்தைகள் நம் சட்டத்தில் இருப்பதே பலருக்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

முதலில் செக்யுலர். வழக்கமாக செக்யுலர் என்ற வார்த்தையை அதன் எதிர்ப்பதமான 'சேக்ரட்' என்பதை வைத்து அர்த்தம் சொல்வர். நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் செக்யுலரிசம் இரண்டு வகைப்படும். முதல் வகை, நம்ம பிரைவேட் பஸ்களில் பார்த்தா தெரியும். முன்னால ஓடிக்கிட்டு இருக்கும் எல்.சி.டி டிவிக்குக் கீழே நீளமா ஒரு ஃபோட்டோ வச்சி மாலை போட்டிருப்பாங்க. அந்த ஃபோட்டோவுல பிள்ளையார், இயேசுநாதர், மெக்கா மசூதி அல்லது முருகன், வேளாங்கண்ணி மாதா, பிறைவடிவ அடையாளத்தில் 786 என்ற எண். அதாவது 'எங்களைப் பொறுத்தவரையில் இந்த மூன்று கடவுளுமே ஒன்று' என்ற சொல்வது முதல் வகை செக்யுலரிசம். இந்த மூன்று கடவுள்கள் தாம் என்றல்ல, எத்தனை கடவுள்கள் இருந்தாலும் அது எங்களுக்கு ஒன்றுதான். இரண்டாவது வகை செக்யுலரிசம் கவர்ன்மெண்ட் பஸ்ல பார்க்கலாம். எந்தவொரு மதத்தின் அடையாளமோ, சாமி படமோ, மாலையோ இருக்காது. அதற்குப் பதிலாக திருக்குறளை எழுதி வைத்திருப்பார்கள். அதாவது, சாமி வேறு. சமுதாயம் வேறு என்று பார்க்கும் நிலை. இந்த இரண்டாம் வகையில் எந்த சாமிக்கும் இடமில்லை.

நம்ம நாட்டுல நம்ம சட்டம் செக்யுலர் என்று சொல்லும் போது இந்த இரண்டு பொருள்கள் இருக்கின்றன. செக்யுலர் என்ற வார்த்தையின் பொருளை நாம் எப்போது கண்கூடாகப் பார்த்தோமென்றால் நம்ம மன்மோகன் சிங் முதன்முதலா பிரதமர் ஆகும் போதுதான். அதாவது கிறிஸ்தவரான காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா முன்மொழிய, இஸ்லாமியரான குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சீக்கியரான பிரதமர் மன்மோகன் பதவியேற்றார். ஆக, கிறிஸ்தவம், இசுலாம், சீக்கியம் என்று அனைத்தும் ஒரே நேரத்தில் மேடையில் நிற்க முடியும் - எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல்.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடவுளுக்கு பொதுவாழ்வில் இடம் என்பதே இல்லை. ஆக, அவர்களால் வெகு எளிதாக செக்யுலர் என்று சொல்லிக் கொள்ள முடிகிறது. ஆனா நம்ம ஊருல அப்படியா? நீங்க யார்கிட்டயாவது சும்மா பேச்சு கொடுத்து பாருங்க. பேசிய அடுத்த நிமிடம் நீங்க கிறிஸ்டியனா? என்று கேட்பார்கள். பள்ளிக்கூடத்தில் முதலில் நம் குழந்தையிடம் கேட்கப்படும் கேள்வியும் இதுதான். நீ எந்த சாதி? நீ எந்த மதம்? இது இரண்டும் இல்லாமல் நாம் இருக்கணும்னு நினைச்சாலும் முடிவதில்லையே. ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் 'நீ எந்த மதம்?' என்று ஒருவர் மற்றவரைக் கேட்டால் அவரைக் கைது செய்யலாம் என அவர்களின் சட்டம் சொல்கிறது. ஆக அவர்களுக்கு மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அவரின் பெட்ரூம் விஷயம் போன்றது. உன் பெட்ரூமில் என்ன நடக்கிறது? என்று யாரும் அங்கே கேட்பதில்லை. ஆனால், நம்ம ஊருல எல்லாரும் எல்லாத்தையும் கேட்கலாம். ஆக, மதச்சார்பற்று இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

மற்றொரு பக்கம். இந்தியா மதச்சார்பற்றது என சொல்கிறது. ஆனால், எந்தவொரு அரசு விழா என்றாலும், அரசுக் கட்டிட திறப்பு என்றாலும், அரசுக்கட்டிடம் கட்டுதல் என்றாலும், அரசு வாகனம் பயன்பாடு என்றாலும் அங்கே இந்து முறைப்படி பூமி பூஜை நடத்தப்படுகிறது. அல்லது சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இது எப்படி நியாயமாகும்? இது நம் நாட்டில் இருக்கும் மற்ற மதத்தினரின் உள்ளத்தைக் காயப்படுத்துவது இல்லையா?

நம் நாடு இவ்வளவு நாள் வெளிப்படையாக 'மதச்சார்பற்றது' என்று சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே ஒரு குறிப்பிட்ட ஆதிக்க இனத்தவரின் மதத்தை வளர்த்தெடுப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது.

சரி! 'மதச்சார்பற்ற' அப்படிங்கிற வார்த்தையை எடுத்து விடுவோம். இனிமேல் அனைவரும் இந்தியர் என்ற ஒன்றின் அடிப்படையில் மட்டும் நடத்தப்படுவார்களா? இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா, பிராமின் கோட்டா, தலித் கோட்டா, சிறுபான்மையினர் கோட்டா என இருக்கும் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு இந்த நாடு எல்லாரும் இந்தியர்கள் எனச் சொல்லுமா? நான் என் மதத்தை விடுகிறேன் என வைத்துக்கொள்வோம். என்னை மறுபடியும் ஏதாவது ஒரு இந்து வர்ணாஸ்ரமித்தில் இணைப்பார்களா?

இந்த மோடி மற்றும் பாஜக வெண்ணெய்களுக்கு வேற வேலையே இல்லை. பார்க்க எவ்வளவோ வேலைகள் இருக்க, இப்படி நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றிற்குப் பேன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டாவது, சோஷியலிஸம் - இந்த வார்த்தை நம் சட்டத்தில் வரக் காரணம் நம்ம நேரு. அவருக்கு இந்த வார்த்தை பிடிக்குமாம். அதனால சேர்த்தாரம். நம்ம நாட்டுல இருக்கிற மின்சாரம், டெலிஃபோன், போக்குவரத்து எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிவிட்டோம். இப்போதைக்கு ரயில்வேயை மட்டும் நம்ம அரசாங்கம் வச்சிருக்கு. இதுல சோஷியலிஸம் அப்படின்னு நம்ம வச்சிருக்கிறது தப்புதான். சோஷியலிஸம் என்பது பொதுத்துறைகளை அரசாங்கம் மட்டுமே நடத்தும். நம்ம இப்போ வச்சிருக்கிற எகனமாமிகல் சிஸ்டம் ரெண்டுங்கெட்டான். எல்லாம் பொது என்பதும் கிடையாது. எல்லாம் தனி என்பதும் கிடையாது. இந்த வார்த்தையை கண்டிப்பாக மறுஆய்வு செய்வது அவசியம்.

ஆனா பாருங்க. நாம இன்னும் மதம், கடவுள், சாதி, சாமியார், காவி என சொல்லிக்கொண்டிருக்கும் வரை அப்படியே தான் இருப்போம்.

இதுல நாம செலவிடும் நேரத்தை நம்ம வடிவேலு சொல்ற மாதிரி, 'போயி புள்ளைங்களப் படிக்க வைங்கயா!' என்று உருப்படியாக எதற்காவது பயன்படுத்தலாம்.



Thursday, January 29, 2015

பசங்களும் பொசசிவ் தான்

ஒரு துணிக்கடைக்கு துணி எடுக்கப் போறோம்னு வைங்க. சரியா சொல்லணும்னா சேலை எடுக்கப் போறோம். கடைக்காரரோ அங்க வேலைக்கு இருக்குறவரோ நிறைய சேலையை நம்ம முன்னால அடுக்கி வைக்கிறார். அப்புறம் ஒன்னொன்னா விரிச்சு காட்டுறார். நாமளும் பாத்துகிட்டே இருக்கோம். ஒன்னும் நமக்குப் பிடிக்கிற மாதிரி தெரியல. அந்த நேரம் நம்ம பக்கத்துல ஒரு பொண்ணு வந்து நின்னுகிட்டு நாம எடுக்கிற சேலையைப் பார்த்துகிட்டே இருக்கு. பார்த்துகிட்டே இருந்தவங்க டக்குனு ஒன்னை எடுத்துக் காட்டி அவங்க கூட வந்தவங்ககிட்ட, 'இங்க பாரேன்! என்ன அழகாக இருக்கு! இதமாதிரி தான் நான் எடுக்கணும்னு நினைச்சேன்!' அப்படின்னு சொல்றாங்கன்னு வையுங்க. உடனடியே நாமளும், 'இல்லமா! இத நான் ஏற்கனவே எடுத்துட்டேன்!' என்று வேகமாகப் பிடுங்கிக் கொள்வோம்.

அடுத்தவங்க பார்வையில நல்லதுன்னு பட்டாதான் நமக்கே சில நேரம் இது நல்லா இருக்குணு தெரியுது.

இந்த உலகம் நம்ம கிட்ட ஆயிரம் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நம்மிடம் இல்லாத ஒன்றைத் தான் சுட்டிக் காட்டுகிறது.

பரீட்சை எழுதுறோம். 9.8 மார்க் வாங்கினாலும் மனசு வாங்கிய 9.8 ஐ பற்றிக் கவலைப்படாமல், வராத 0.2 ஐ பற்றித்தான் கவலைப்படுகிறது. பக்கத்துல இருக்குறவன் 9.7 வாங்கினால் நம்மையறியாமல் ஒரு சந்தோஷம் பற்றிக் கொள்கிறது.

சரி! இதுக்கும் பசங்க பொசசிவ் அப்படின்னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?

'பொசஸ்' அப்படிங்கிற ஆங்கில வார்த்தை எதில் தொடங்கியிருக்க வேண்டும்? 'பொடன்ஸ்' - அதாவது, பவர், அதிகாரம், ஆற்றல். ஒன்றின் மேல் நமக்கு அதிகாரம் இருக்கும் போதுதான் அதை நம்முடைய பொசசன் என்று சொல்கிறோம். எனக்கு ஆரப்பாளையம் பக்கத்துல ரெண்டு சென்ட் இடம் இருக்குனு வச்சிக்குவோம். அங்க நான் என்னோட காரை நிறுத்துவதற்கும், மற்ற கார் அங்கே நிற்கக் கூடாது என்ற சொல்வதற்கும் அதிகாரம் இருக்கு. ஏன்னா அது என்னோட 'பொசஷன்'.
நாம் ஒருவர் மற்றவரோடு பழகத் தொடங்கும் போதே அவர் மீதான அதிகார வட்டம் வளர்ந்து கொண்டே போகிறது. அதிகார வட்டம் வளர வளர அவரின் மேல் நமக்கிருக்கும் உரிமையும் வளர்கிறது.

இன்னைக்குப் புதுசா ஒருத்தரை பஸ்ல பார்க்கிறோம்னு வைங்க. முதலில் அவர் பெயரைக் கேட்கிறோம். பின் ஊரைக் கேட்கிறோம். அடிக்கடி பார்க்க நேர்ந்தால் ஃபோன் நம்பர் வாங்குறோம். பின் பேசுறோம். அப்புறம் ஒருநாள் வீட்டுக்குப் போறோம். சாப்பிடுறோம். பழகுறோம். பரிசளிக்கிறோம். நல்லது கெட்டதுகளில் பங்கேற்கிறோம்.

முதன்முதலில் அவரி;ன் பெயரைக் கேட்ட அன்று இருந்த உரிமைக்கும், இன்று இருக்கும் உரிமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆக, நமக்கு இன்று அவர்மேல் ஒருவகையான அதிகாரமும் வந்து விடுகிறது. 'இவர் என்னவர்' என்ற பெருமையும் வந்து விடுகிறது.

இப்ப அவர் வாழ்க்கைக்குள் இன்னொருத்தர் வர்றாருன்னு வச்சிக்கிவோம். அவருக்கும், இவருக்கும் உள்ள உரிமை வட்டம் நம் வட்டம் போலவே அதிகமாகும். இப்போ, இவர் நம்ம கூட இருக்கும் நிலையிலிருந்து மற்றவரோடு செல்ல ஆரம்பிக்கிறார் என வைத்துக் கொள்வோம். இவருக்கும் நமக்கும் உள்ள தொலைவு குறைகிறது. அதுபோல நம் அதிகாரமும் தொலைகிறது. இதைத் தக்க வைத்துக்கொள்ள நாம் சின்ன சின்ன சைக்கலாஜிகல் கேமும் விளையாடுகிறோம். 'உனக்கு நான் முக்கியமா? அவன் முக்கியமா?' 'அவன் நேத்து வந்தவன்! நான் ரொம்ப நாளாவே இருக்கேன்!' 'பழகப் பழகப் பாலும் புளிக்கும்!' 'நான் உனக்கு போரடிச்சிட்டேன்ல!' - இப்படி வார்த்தைகள் வர ஆரம்பித்துவிட்டனவென்றால் அங்கே 'பொசசிவ்னஸ்' இருக்கிறது என்று கண்டுகொள்ளலாம்.

இது ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

வழக்கமா நான் பெண்ணுக்குதான் அதிகம் என்று நினைத்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

தன்னுடன் பேசும் ஒரு பையன் இன்னொரு பெண்ணுடன் பேசுகிறான் என வைத்துக்கொள்வோம் அந்தப் பெண் அதைப்பற்றி இந்தப் பையனிடம் தான் சண்டை போடுவாள்.

ஆனால், தன்னிடம் பேசும் ஒரு பொண்ணு மற்றொரு பையனுடன் பேசுகிறான் என வைத்துக்கொள்வோம். அந்தப் பையன் இதைப்பற்றி அந்தப் பெண்ணிடம் சண்டை போட மாட்டான். மாறாக, அந்தப் பையனைத் தேடிப் போய் சண்டை போடுவான். சண்டை போட முடியாத போது அந்தக் கோபத்தை இந்தப் பெண்ணிடமிருந்து விலகி நிற்பதில் காட்டுவான். வார்த்தையால் காயப்படுத்துவான். அவளின் செயல்களை உதாசீனப்படுத்துவான். கண்டுகொள்ளாமல் இருப்பான்.

இப்படி ஒரு டிஃபிகல்ட் சிட்டுவேஷன் தான் நம்ம மாதொருபாகன் கதாநாயகன் காளிக்கு வருகிறது. நம்ம காதலி, மனைவி பொன்னாளை இன்னொருவர் தழுவுவதா என்ற எண்ணமே தன் மனைவியடமிருந்து விலக்கி விடுகிறது.

'பதினான்காம் திருநாளுக்குப் போகிறாயா? அங்கு வரும் சாமியோடு உறவு கொள்வாயா?' என்று கேட்கிறான் காளி.

'நீங்க போகச் சொன்னா போறேன்!' என்கிறாள் பொன்னா.

'குழந்தையா முக்கியம்! நீங்கதான் எனக்கு முக்கியம்' என்று சொல்வாள் பொன்னா என நினைக்கிறான் காளி.

'அவமானம் களைவதற்காக இப்படியும் செய்யலாம் என நினைத்தேன்' என தனக்குள் சொல்லிக் கொள்கிறாள் பொன்னா.

'போ என்றால் யார்கூடயும் போவாளோ!' என நினைக்கத் தொடங்குகிறான் காளி.

இந்த நாவலில் வரும் காளியின் நடவடிக்கையைப் பார்த்தால் ஆண்களுக்குதான் பொசசிவ்னஸ் அதிகம் என்று தோன்றுகிறது.

இது நல்லதா? கெட்டதா?


மாதொருபாகன்

இன்னைக்கு ஒன்இண்டியாவுல நியூஸ் படிக்கும் போது சுபவீ அவர்களோட கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. பெருமாள் முருகன் எழுதி இன்று சர்ச்சiயில் இருக்கும் நாவல் 'மாதொருபாகன்' பற்றிய கட்டுரை அது. மாதொருபாகனை ஆதரித்து எழுதியிருந்தார்.

இப்ப அண்மையில வந்திருக்கிற பிகே திரைப்படமும் சரி, இந்த மாதொருபாகனும் சரி. எந்த அளவுக்கு சர்ச்சையானதோ அந்த அளவுக்கு விற்றும் போகிறது.

இந்த நாவல் 2010ஆம் ஆண்டே வெளிவந்தாலும் இப்போதான் சர்ச்சை வருகிறது. இதன் பிண்ணனி என்ன? வழக்கமாக சினிமாவுல எதும் பிரச்சினைன்னா, ரசிகர்கள் அடிச்சுக்குவாங்க. நடிகர்கள் வேடிக்கை பார்ப்பாங்க. ஆனா எழுத்து உலகத்துல எழுத்தாளர்கள் அடிச்சுக்குவாங்க. வாசகர்கள் வேடிக்கை பார்ப்பாங்க.

இந்த மாதொருபாகன் எழுதிய பெருமாள் முருகன் அண்மையில் நீதிமன்றம் சென்று, 'பெருமாள் முருகன் என்ற ஒரு எழுத்தாளன் இறந்துவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள்!' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

ஒரு கலைஞன் தன் படைப்புத்திறனை வெளிப்படுத்துவதற்கு நம்ம ஊர்ல தான் முட்டுக்கட்டை அதிகம். சாதி, மதம் என அதுக்க ஒரு கோட்டிங் கொடுத்து நாம் ஏதாவது இடையூறு செய்யத் தொடங்கி விடுகிறோம்.

இந்த நாவலை எப்படியும் வாசித்துவிட வேண்டும் என நினைத்து இதன் மின்பதிப்பைக் கண்டுபிடித்து வாசித்தும் விட்டேன். மொத்தம் 190 பக்கங்கள். 3 மணி நேரம் எடுத்தது. இடையில் உணவு இடைவேளை.

மிக அருமையான நாவல்.

முதலில் ஆசிரியரின் பெயரே விநோதமாக இருக்கிறது. பெருமாள் முருகன். 'பெருமாள்' என்பது வைணவம் சார்ந்தது. 'முருகன்' என்பது சைவம் சார்ந்தது. வழக்கமாக, இந்துக்கள் வைணவ மற்றும் சைவப் பெயர்களை சேர்த்து வைக்க மாட்டார்கள். இந்து மதத்தின் இரண்டு தூண்களும் இணைந்திருப்பது போல ஒரு பெயர்.

நாவலின் பெயர் 'மாதொருபாகன்' - 'மாது ஒரு பாகம்' என்பதே மருவி மாதொருபாகன் என வந்துள்ளது. வழக்கமாக அர்த்தனாரீஸ்வரர் அல்லது அம்மையப்பன் என்று கேள்விப்பட்டிருப்போம். அதுதான் இது. திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் உருவமானது ஒரு பக்கம் ஆணாகவும் (வலது), மறு பக்கம் பெண்ணாகவும் (இடது) இருக்கும். ஆணும், பெண்ணும் இணைந்ததே உலகம் என்று சொல்லும் கடவுளின் உருவம் இது. நம்ம பைபளிலும் பாருங்களேன். கடவுள் முதல் பெண்ணை ஆணின் இடது பக்க விலா எலும்பிலிருந்து தான் செய்கிறார். இடது பக்கத்தில் தான் இதயம் இருக்கிறது. ஆக, உணர்வு, எண்ணம் அனைத்தின் ஊற்றாக இருப்பவர் பெண். மேலும், இந்த இதயத்தின் அருகில் நாம் பெண்ணை வைத்து அன்பு செய்ய வேண்டும் என்பதும் இதன் கருத்து.

திருச்செங்கோட்டில் ஒவ்வொரு வருடம் நடக்கும் ஆண்டுத் திருவிழாவின் பதினான்காம் நாளன்று, அதாவது சாமி மலையில் இருந்து இறங்கி மீண்டும் ஏறிச் செல்லும் நாளன்று, அந்த ஆலயத்திற்கு குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் அங்கு தான் காணும் எந்தச் சாமியோடும் (ஆணோடும்!) உறவு வைத்துக்கொள்ளலாம். இப்படிப் பிறந்த பிள்ளைகளை சாமி தங்களுக்குக் கொடுத்த குழந்தைகளாகவே அவர்கள் கருதுவர்.

இது இன்றளவும் நடக்கின்ற ஒரு நிகழ்வு என்று ஆய்வு செய்து, இந்த ஆய்வின் பின்புலத்தில் தன் நாவலை எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன்.

இதுதான் கதையின் பின்புலம். இதை வாசித்தவுடன் சிலருக்கு முகம் சுளிக்கும். அதெப்பெடி முன்பின் தெரியாத ஒரு ஆணிடம் பெண் உறவு கொள்ள முடியும்? திருவிழாவிற்கு வருபவரெல்லாம் சாமி என்று எப்படி சொல்ல முடியும்? இது பெண்ணை இழிவுபடுத்தும் செயல் இல்லையா? என்று நாம் நிறைய கேள்விகள் கேட்கலாம்.

இது சரியா? அல்லது தவறா? என்று விளக்கம் தருவது ஆசிரியரின் நோக்கம் அல்ல.

இதற்கு இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றன. ஆனால் இந்துக்களின் சட்டநூலான மனுநீதியில் கூட இப்படிச் செய்வது சரி என்றே சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மற்றவருக்கு குழந்தை பாக்கியம் தருவதற்காக, அவரோடு எந்தவித காம உணர்வும் இன்றி, மற்றவரோடு கூடலாம் எனவும், அப்படி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனச் சொல்லும் மனுநீதி இதை 'நியோகா தருமா' என அழைக்கிறது. நம்மை பைபிள்ள கூட இதே கான்செப்ட் இருக்கு. அதாவது மணமான ஒரு பெண் குழந்தையில்லாமல் இருக்கின்ற நிலையில் கணவன் இறந்துவிட்டால் அவனது சகோதரன் (இங்கே சகோதரன் என்பது இனத்தான் என்றும் பொருள்படும்!) அவளை மணம் முடித்து குழந்தை கொடுக்கலாம். இங்கே ஒரு கண்டிஷன் - கணவன் இறந்தபின்.

ஒரு சில சாதிய அமைப்புகள் தங்கள் சாதியினரை கொச்சைப்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆக, மதமும், சாதியும் தான் முட்டுக்கட்டை போடுகிறது.

இந்த சாதி, மத சாயத்தை அகற்றிவிட்டு புத்தகத்தைப் பார்ப்போமே!

காளி தான் இந்த நாவலின் கதாநாயகன். பொன்னா கதா நாயகி. திருமணம் ஆகி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் இவர்களுக்குக் குழந்தையில்லை. மேலே சொல்லப்படும் பதினான்காம் திருநாளில் பொன்னா கலந்து கொண்டு வேறு எந்த சாமி வழியாகவாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்பதுதான் கதையின் பிணைப்பு நூல்.

காளிக்கும், பொன்னாவுக்கும் இடையே இருக்கும் காதல். பொன்னாவின் அண்ணன் முத்துவுக்கும், காளிக்கும் இருக்கும் நட்பு, மாமன், மச்சான் உறவு, திருவிழா, ஆடு, கோழி வளர்ப்பு, மாட்டு வண்டி என முழுக்க முழுக்க கிராமத்து மண்வாடை அடிக்கின்றது.

வேளாளம் செய்யும் கவுண்டர், பனையேறி நாடார் மற்றும் சக்கிலி சமூகத்தினர் வாழும் ஒரு ஊரில் தான் இந்தக் கதை நடக்கிறது. இந்த மூன்று குழுக்களுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வை மிகத் தெளிவாகக் கண்முன் கொண்டு வருகின்றார் ஆசிரியர்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் போது ஒரு தம்பதியினர் அடையும் வலியை, இந்தச் சமூகம் பேச்சும் பேச்சுக்களை மிக நேர்த்தியாகப் பதிவு செய்கின்றார்.

மற்றொரு பக்கம் குழந்தையில்லாமல் இருந்தால் எப்படி இருக்கலாம் என்று தொனியில் நல்லுப்பையன் சித்தப்பா என்ற கதாபாத்திரம். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இதுதான். இதை வாசிக்கும் போது என் இரண்டாவது தாய்மாமன் நினைவு தான் அதிகமாக வந்தது.

தன் மனைவி மற்றொருவனுடன் உறவு கொள்ள வேண்டுமா! என்று முடிவெடுக்க முடியாமல் துடிக்கும் காளி, கணவன்னா இப்படித்தான் இருக்கணும் என்பதை நம் முன் கொண்டு வருகிறார். 'பொசசிவ்னஸ்' என்பது பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் தான் என்பதை காளியின் முகத்தில் நாம் காண முடிகிறது.

ஃபோக் ரெலிஜன் என்று சொல்லப்படும் நாட்டுப்புற சாமிகளுக்கும், கோயில் கட்டி மந்திரம் சொல்லி நாம் வழிபடும் சாமிக்கும் உள்ள வித்தியாசத்தையும் இந்த நாவல் சொல்கிறது.

ஒரு சில சொல்வழக்குகள் புரியவில்லை. மக்களின் பேச்சு வழக்கை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

என்னைக் கவர்ந்த வாக்கியங்கள் பல. அவற்றில் இதுதான் இப்போதும் நினைவில் இருக்கிறது:

'புதிதாக்குவது அம்மாக்களின் வேலை.
அதற்காக அவர்களும் புதிதாகிக் கொண்டே இருக்கிறார்கள்.'

எனக்கு ஒரு ஆசை. இதை இன்னும் நேரமெடுத்து வாசித்து, இதன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.

பைபிள் இன்ஸ்டிட்யூட்ல பைபிள் படிக்கிறதுல உள்ள ஒரு பிறவிப்பயன் இதுதான். இந்தப் படிப்பை வைச்சு எந்தப் புத்தகத்தையும், எந்தத் திரைப்படத்தையும், நாடகத்தையும் மிக அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்ய முடியும். இங்க நாங்க படிக்கிற படிப்பே அதுதான். பைபிளை வெறும் புத்தகமா எப்படிப் படிக்கிறது? இதை மனிதர்களுக்கும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மனிதரும் காலம் எழுதுகிற புத்தகம் தானே.

இந்த நாவலை வாங்க முடிந்தவர்கள் கண்டிப்பாக வாங்குங்கள்.

இந்த நாவிலின் மின்பதிப்பை தரவிறக்கம் செய்பவர்கள் இந்த இணைப்பை சொடுக்கவும்.

Maadhorubaagan

பெருமாள்முருகனுக்கு வாழ்த்துகள்!

'மாதொருபாகன்' - உங்களுள்ளும்! என்னுள்ளும்!


Wednesday, January 28, 2015

மிட்-லைஃப் கிரைசிஸ்

நேற்று மாலை நேரம் போகாமல் இண்டர்நெட்டை நோண்டிக் கொண்டிருந்தபோது 'மிட்-லைஃப்' கிரைசிஸ் பற்றிய ஒரு கட்டுரை கண்ணில் கிடைத்தது. 'இறப்பும், மிட்-லைஃப் கிரைசிசும்' - இதுதான் தலைப்பு. அதாவது நாம் நம் வாழ்வின் பாதியை வாழ்ந்த பிறகு ஐயோ சரியாக நாம் வாழவில்லையோ! என்ற பயமோ! நாம் தவறவிட்ட வாய்ப்புகள் குற்ற உணர்ச்சியாகவோ இருக்கும் என்பதைப் பற்றிய கட்டுரை. எழுதியவர் ஒரு அமெரிக்க பெண் உளவியல் அறிஞர். பொதுவாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் 40 முதல் 45 வயதில் அவர்கள் இருக்கும் போது இந்த உணர்வு வரும் என்று குறிப்பிடுகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சராசரி வயது 80 முதல் 85. ஆக, இங்கே 40 முதல் 45 வரை இந்த மிட்-லைஃப் பிரச்சினை வரும். ஆனால், நம் இந்தியாவில் சராசரி வயது 60 முதல் 70 தான். ஆனால், 2010ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சராசரி வயது 75ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். இதில் கிராமத்திற்கம், நகரத்திற்குமே வித்தியாசம் இருக்கின்றது. ஆக, குத்து மதிப்பா வச்சி பார்த்தா 32 முதல் 36 வயது வரை உள்ள ஒருவருக்கு இந்த மிட்-லைஃப் கிரைசிஸ் வர வாய்ப்பிருக்கிறது.

கிரைசிஸ் அப்படின்னாலே ஒரு எதிர்மறையான வாழ்க்கைச் சூழல். இந்த எதிர்மறையான சூழல் இயற்கையான ஒன்றுதான். இதை நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை என்று மாற்றுக் கருத்தும் சொல்கின்றனர் சிலர். ஆண்களுக்கு, தலையில் முடி கொட்டுவது பெரிய அறிகுறியாகவும், பெண்களுக்கு மாதவிடாய் நிற்பது பெரிய அறிகுறியாகவும் சொல்லப்படுகின்றது. இரண்டுமே இயற்கை நிகழ்வுகள் தாம். உடலில் ஏற்படும் இந்தப் பாதிப்புகள் உள்ளத்தையும் பாதிக்கத் தொடங்குகின்றன.

நாம ரோட்டு ஓரத்திலே பாருங்களேன். பச்சைப் பசேல் என்று ஒரு மரம். நல்லா அடர்த்தியா கிளைகள். இலைகள். காய்கள். கனிகள். இயல்பாகவே நாம் அதைப் பார்ப்போம். ரசிப்போம். வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்குவோம். அதே மரம் இலைகளையெல்லாம் இழந்து நின்றால் அதை யாரும் ஏறெடுத்துக் கூடப் பார்ப்பதில்லை. மரத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால் மனிதர்களுக்கு எல்லாம் தெரியுமே. யாரும் நம்மைப் பார்க்கவில்லையென்றாலும், அடுத்தவர்கள் நம்மைப் பார்க்க வைக்க இந்தக் காலத்தில் தான் நாம் அதிக முயற்சி எடுப்போமாம். ஆண்கள் சின்ன வயதுக்காரர்களின் உடைகளை அணிவதும், பெண்கள் தங்கள் உடலமைப்பின் மேல் அதிக ஆர்வம் காட்டுவதும் இப்போதுதான் தொடங்குமாம். தங்கள் வயதுக்கு மிகக் குறைவானவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இங்கே தான் வருமாம்.

ஒரு தலைமுறை என்று சொல்வது 40 ஆண்டுகள். ஆக, நமக்கு நாற்பது வயதான பின் இந்த உலகில் பிறக்கும் எந்தக் குழந்தையும் நமக்கு அடுத்த தலைமுறையாகிவிடுகிறது. ஆக, அந்தத் தலைமுறைக்கும், நமக்கும் 'தலைமுறை இடைவெளி' வேறு வந்துவிடுகிறது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றொருபக்கம் இந்த இடைவெளியை வேகமாக அதிகரிக்கிறது. அடுத்த வரும் தலைமுறை 'கொஞ்ச நாளைக்கு முன்னால செல்ஃபோன்னு ஒன்னு இருந்துச்சாம்!' என்ற சொல்லும் அளவிற்கு வளர்ந்து விடும்.

வாழ்வின் இடைநிலைப்பருவம் எல்லாரும் சந்திக்கக் கூடிய ஒன்றுதான். சரி! இதை எப்படித்தான் சரி செய்வது?

வாழ்வை இருப்பது போல ஏற்றுக்கொள்வது. அவ்வளவுதான்.

'என் வழி எனக்கு. உன் வழி உனக்கு!'

வாழ்வின் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தியிருந்தாலும், பயன்படுத்தவில்லையென்றாலும், நாம் வந்த பாதை சரி என்றாலும் தவறு என்றாலும், வருத்தமோ, குற்றவுணர்வோ இருக்கவே கூடாது.

'இனியாவது நல்லா இருப்பேன்!' என்று ரொம்ப நல்லா இருக்க முயற்சியும் செய்யக் கூடாது.

வாழ்வின் முதல் குவார்ட்டர், ஆஃப் ஸ்டெடியா தான் இருக்கும். ரெண்டாவது குவார்ட்டர், அல்லது ஆஃப்லதான் கொஞ்சம் தடுமாற்றம் வரும்.

ஒவ்வொரு பொழுதையும் இனிதே வாழ்ந்தால், வாழ்வை குறுகிய மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்க்காமல், கலர்ஃபுல் கலைடாஸ்கோப் வழியாகப் பார்த்தால் எல்லா நாளும் நமக்கு வாழ்வின் முதல் நாளே!


Monday, January 26, 2015

வார்த்தைகள்

நம்ம இதயத்துல இருந்து வர்ற வார்த்தைகள் தாம் மத்தவங்களத் தொடும் அப்படின்னு சொல்வாங்க.

இன்னைக்கு நம்மள சுத்தி நிறைய வார்த்தைகள் தாம் இருக்கு.

எங்க பார்த்தாலும் வார்த்தைகள் கொட்டிக் கிடக்கு. நாம பார்க்குறதும் வார்த்தைகள் தாம். கேட்குறதும் வார்த்தைகள் தாம்.

நம்மள சுத்தி நாம பார்க்கிற விளம்பரம், டிவி நியூஸ், ஜன்னல திறந்தா பக்கத்து வீட்டுல இருந்து நம்ம காதுல வந்து விழும் வார்த்தைகள், செய்தித்தாள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்...என எங்கும் வார்த்தைகள் தாம்.

ஒரு நாள் முடியப் போகும்போது நாம பார்த்த அல்லது நாம கேட்ட இத்தனை வார்த்தைகளில் எத்தனை தான் நம்ம மனசுல நிக்குது அப்படின்னா பார்த்தா ஏதோ ஒன்றிரண்டு தாம்.

அப்படின்னா நம்மள வந்தடையற வார்த்தைகள் ஏன் வீணாய்ப் போகின்றன? அல்லது வீணான அந்த வார்த்தைகளுக்கு நாம ஏன் நம்முடைய எனர்ஜியைக் கொடுக்கிறோம்?

மணிக்கணக்கா பேசிட்டு ஃபோன வச்சாலும் பேசுன எந்த வார்த்தையும் சில நேரங்களில் நம்மைத் தொடுவதில்லை. இரண்டு நிமிடங்கள் பேசினாலும் சில வார்த்தைகள் நம்மை ரொம்பவே ஆழமாகப் பாதித்து விடுகின்றன.

இன்னைக்கு திமோத்தேயு, தீத்து விழாவைக் கொண்டாடினோம்.

இன்று முதல் வாசகம் வாசிக்கும் போது (2 திமொத்தேயு 1:1-8) - அடிக்கடி கேட்ட வாசகம் தான் - தூய பவுல் வெறும் வார்த்தைகளை மட்டும் உபயோகிக்காமல் தன் உள்ளத்தையே அப்படியே பிட்டு வைப்பதாக இருந்தது.

நம்ம எவ்வளவு பெரிய சிந்தனையாளராக இருந்தாலும், நம்ம கடவுள்ல ஊன்றி நிற்கலன்னா, நாம பேசற எல்லா வார்த்தைகளும் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை மிக அழகாகச் சொல்கிறார் பவுல்.

வெறும் எட்டு வசனங்களில் தன் அன்பை அப்படியே அள்ளிக் கொட்டுகிறார்.

என்ன திமொத்தேயுவுக்கும், பவுலுக்கும் பத்து வயசுதான் வித்தியாசம் இருக்கும். 'என் அன்பார்ந்த பிள்ளையே!' என்று அள்ளி எடுக்கின்றார். அவர் பெற்ற கடவுள் நம்பிக்கையை நினைவுபடுத்துகிறார். அவரைக் காண ஏங்குகிறார். இருந்தாலும் வேலையில் கருத்தாக இருக்கின்றார். 'கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தைத் தரவில்லை!' ...ஆகையினால் சியர் அப் என்கிறார்.

இன்னைக்கு நான் நினைச்சதெல்லாம் இதுதான். நான் பேசுற வார்த்தை இதயத்தில இருந்து வந்தாதான் மற்றவர்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இதென்ன பெரிய கண்டுபிடிப்பா! அப்படின்னு சொல்லாதீங்க!

உங்க மைன்ட் வாய்ஸ் இங்க கேட்குது!


ஒபாமா நத்தம்பட்டிக்கு வர்றார்!

இந்தா வர்றார்...அந்தா வர்றார்னு சொன்னாங்க.

இன்னைக்கு காலையில் வந்தே விட்டார் நம்ம பிக் பிரதர் ஒபாமா.

பிள்ளைங்களுக்கு ஸ்கூல் லீவ் கிடைக்கலயாம். அதனால மனைவி மிஷலோட மட்டும் வந்திருக்காரம். மிஷலுக்குக் கொடுக்க நம்ம மோடி 100 பனாராஸ் பட்டு சேலை வாங்கி வச்சிருக்காராம். ஆனா, வந்த இறங்குன மிஷலுக்குக் கைகூட குலுக்கல. சரி இருக்கட்டும்!

ஆனா, நம்ம மிஷலும் வந்ததுல இருந்து ஹோட்டலே கதின்னு கிடக்குறாராம். ராஜ்பவன் போகலை. ராஜ்காட் காந்தி நினைவகம் போகல. எல்லாத்துக்கும் பாவம் பிரதர் தனியே தான் போயிருக்கார்.

நம்ம பிரதர் சாப்புடற சாப்பாட்டை 15 நிமிஷத்துக்கு முன்னால ஒருத்தர் சாப்பிடுவாராம். அவருக்கு ஏதும் ஆகலைன்னாதான் பிரதர் சாப்பிடுவாராம். நம்மள எந்த அளவுக்கு நம்புறாங்க பாருங்களேன்!
நம்ம ஊரு போலீசை நம்பல. அதனால அவக ஊருல இருந்தே போலீசு, மோப்ப நாய், ஸ்குவாட் எல்லாம் வந்துருக்கு.

இன்னைக்கு எங்க அம்மாகிட்ட சும்மா கேசுவலா கேட்டேன். என்னம்மா நம்ம ஊருக்கு ஒபாமா வந்துருக்காரமுள்ள! அவங்க காதுல 'கோப்பம்மா!' அப்படின்னு விழுந்துருக்க போல. இந்த கோப்பம்மா தான் எங்க ஊரு முன்னால் பிரசிடன்ட். இப்ப வேற ஊருக்கு போயிடுச்சு. இவங்க பிரசிடன்ட் ஆ இருந்தப்போ தான் எங்கம்மா பேருல ஒரு வீடு கட்ட உதவி வந்துச்சு. அதனால, ஒபாமா கூட கோப்பம்மா னு தான் கேட்குது.

'யாரு வந்தா என்ன? விடிஞ்சா நாம தான் வாசல் கூட்டனும். தண்ணீர் தெளிக்கணும்!' அப்படின்னாங்க. அதென்னவோ உண்மைதான். பிரதர் வந்துட்டுப் போனாலும், வரலன்னாலும் நம்ம வேலை செஞ்சாதான் சாப்பாடு.

இந்த அமெரிக்கா குரூப் நம்ம ஊர்களுக்கு வந்தால் தான் இவ்வளவு அலப்பறை! ஜெர்மனியில போய் இந்த பந்தா பண்ணச் சொல்லுங்களேன்! தம்பி நாங்க குடுக்கிறத சாப்பிடு! விஷம் இருக்கும்! அப்படி இப்படி பயந்தீன்னா நீ ஒங்க ஊர்ல இருந்து சாப்பாடு கொண்டு வா! அப்படின்னு கூலாச் சொல்லிடுவாங்க.

இதுல நம்ம ஊருல ஒருசிலர் நம்ம இந்தியா விருந்தோம்பலுக்கு பெயர் போனதுன்னு சொல்வாங்க. ஏங்க! நீங்க விருந்தோம்பல், விருந்தோம்பல்னு சொல்றீங்களே! எங்க உங்க ஊர் டீக்கடையில ஓசியில ஒரு டீ குடிக்க முடியுமாங்க உங்களால! அல்லது உங்களுக்கு பசின்னா அடுத்தவன் சாப்பாடு கொடுப்பானா?

எல்லாம் இருக்குறவனுக்கு தான் நம்ம ஊர்ல விருந்தோம்பல். ஏன்னா அப்புறம் எப்படியாவது வசூலிச்சிடலாம்ல. ஒன்னும் இல்லாதவனுக்கு வெறுந்தோம்பல்தான்!

சரி! நம்ம பிரதர் எதுக்கு வந்திருக்கார்?

நம்ம ஊர்ல ரெண்டு தேசிய விழாக்கள்: சுதந்திர தினம். குடியரசு தினம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? சிம்பிளா சொல்லணும்னா. நம்ம வீட்டுல பக்கத்து வீட்டுக்காரன் வந்து உட்கார்ந்துகிட்டு நம்மள ஆட்டிப் படைச்சிட்டு, ஒருநாள் சரிப்பா, நான் எங்க வீட்டுக்குப் போறேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டான் வைங்க. 'அப்பாடா! போயிட்டான்!' அப்படின்னு பெருமூச்சு விடுவோம்ல அதுதான் சுதந்திர தினம். அவன் போயிட்டான். இனி சாப்பாட்டுக்கு என்ன பண்றது? வீட்டை எப்படி நிர்வாகம் பண்றது! இதெல்லாம் யோசிச்சு இனிமேல் நம்ம வீடுன்னா இப்படி இப்படிதான் இருக்கணும்னு நினைக்கிறது குடியரசு தினம்.

இந்த குடியரசு தினம் அன்னைக்கு முக்கியமானது ஒரு பெரிய பரேடு நடக்கும். நம்ம ஊருப் பொண்ணுங்க ஆடிப்பாடி பரேடுல வந்தாலும், முக்கியமாக அணிவகுப்பது நம்ம நாட்டோடு படைக்கலங்கள். அதாவது, வெடிகுண்டு, பீரங்கி, ஏவுகணை, ராக்கெட் எல்லாத்தையும் ரோட்டுல கொண்டு வந்து காட்டி, 'பாருங்கடா! நாங்களும் ரவுடிதான்னு!' உலகத்துக்குச் சொல்ற நாள்தான் இந்தக் குடியரசு தினம்.

சும்மாவே அமெரிக்காவுக்கு ஒரு சில நாடுகளைப் பார்த்துப் பயம். 'இவன் எல்லாத்தையும் வச்சிக்கிட்டே இல்லாத மாதிரி நடிக்கிறானா!' அப்படின்னு தான் நம்ம நாட்டை நினைப்பாங்க. ஆனா, விடிஞ்சா நம்ம பிரதர் எல்லாத்தையும் அவரே கண்கூடாய்ப் பார்த்துவிடுவார்.

நம்ம பக்கத்துவீட்டுக்காரன் நம்மளப் பார்த்து உங்க வீட்டுப் பீரோவுல எவ்வளவு பணம் இருக்கு! பண்ட பாத்திரம் எத்தனை இருக்கு! நகை நட்டு எவ்வளவு இருக்கு! அப்படின்னு கேட்டா நம்ம அவனைக் கூட்டி வந்து காட்டுவோமா என்ன? எம்புட்டு கோபம் வரும் நமக்கு? ஆனா, நாளைக்கு நம்ம மோடி அதைத்தான் செய்யப்போறார்.

நம்ம பிரதர்க்கு பாதுகாப்பு அப்படிங்கிற பேர்ல அவங்களோட கேமராவுல எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டு போயிடுவாங்க! போனா போகட்டும்! நம்மள ராமரோ, லட்சுமணனோ யாராவது காப்பாத்துவாங்க!

எங்க ஊர்ல நடக்குற ஆட்சி காவி ஆட்சி தான் அப்படிங்கிறத, காவி சால்வையைப் போட்டுகிட்டு ஏர்போர்ட் போன நம்ம மோடி காட்டிட்டார்.

இந்த முறை நம்ம ஊருக்கு வந்த ஒபாமா காந்தி நினைவகம் போனார். அடுத்த முறை வரும்போது 'கோட்சே நினைவகம்' போக வேண்டியிருக்கும். அதுக்குள்ள தான் கோட்சேக்கு சிலை வச்சு பாலாபிஷேகம் செஞ்சிடுவார் மோடி.

மேல ஒபாமா, ஒபாமா அப்படின்னு இருக்க, நம்ம ஊர்ல ஒரே ஸ்ரீரங்கம் பேச்சாதான் இருக்கு.

எது எப்படியோ, நம்ம படிச்சா தான் மார்க்கு. நம்ம சமைச்சாதான் சோறு.

Saturday, January 24, 2015

மரியாளின் நிழல்கள் - 3

6. தெபோரோ

பெண் நீதித்தலைவரான இவரைப்பற்றி நாம் நீதித்தலைவர்கள் நூல் 4 மற்றும் 5 ஆம் பிரிவுகளில் வாசிக்கலாம். இஸ்ராயேல் மக்களை கானானியரின் தலைவன் யாபினிடமிருந்து காப்பாற்றுகின்றார். வெற்றி தன் வழியாக வந்தாலும் அதை மற்றொரு பெண்ணுக்குக் கொடுத்து அழகு பார்த்தவர். பாராக்குடன் இணைந்து சீசராவை வெற்றி கொண்டபின் அவர் பாடும் பாடல் அவரை ஒரு பாடலாசிரியராகவும் நமக்குக் காட்டுகிறது.

தெபோராவின் பாடலுக்கும், மரியாளின் பாடலுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன. இரண்டுமே ஆண்டவராகிய கடவுளின் வல்லமையை எடுத்துரைப்பவை. தெபோராவைப் போலவே மரியாளும் எந்தவொரு வெற்றியையும் தனக்காக வைத்துக்கொண்டவர் அல்லர்.

7. ரூத்து

மோவாபு நாட்டுப் பெண். தன் கணவன் இறந்தவுடன் தன் மாமியார் ரூத்தைப் பற்றிக் கொள்கின்றார். 'நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன். அங்கேதான் என் கல்லறையும் இருக்கும். சாவிலும் உம்மைவிட்டுப் பிரியேன்.' (காண் ரூத்து 1:16-17) என்னும் ரூத்தின் வார்த்தைகள் காலத்தை வென்றவை. யூதா நாட்டில் போவாசை என்பவரை மணந்து அவர் வழியாக ஓபேதைப் பெற்றெடுக்கின்றார். இந்த ஓபேதின் பேரன் தான் தாவீது அரசர்.

மரியாளும் ரூத்தைப் போல தன் முழுப் பிரமாணிக்கத்தையும் கடவுளுக்குக் காணிக்கையாக்குகின்றார். மேலும், தாவீதின் வழிமரபில் வரும் கடவுளின் மகன் இயேசுவுக்குத் தாயாகின்றார்.

8. அபிகாயில்

தாவீதின் வாழ்வில் வரும் பெண்களில் அபிகாயிலை எனக்கு மிகவும் பிடிக்கும். 1 சாமுவேல் 25ல் இவரைப் பற்றி வாசிக்கலாம். மிகச் சாதாரணமான பெண். மிக அழகும். மிகுந்த செல்வமும் உடையவர். இவரது கணவன் ஒன்றுக்கும் உதவாதவர். இவர் தான் ஊரின் தலைவி. மேலாண்மைத் தத்துவங்களை நாம் இவரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். தாவீதின் மனைவியாக மாறுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இவர் சொன்ன வார்த்தைகள் எவை தெரியுமா? 'இதோ! உம் அடிமையாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக!' (1 சாமுவேல் 25:41). அபிகாயில் என்றால் 'தந்தையின் மேன்மை' என்பது பொருள்.

மரியாளுக்கு மங்கள வார்த்தை அறிவித்த கபிரியேல் தூதரிடம் அவர் சொல்லும் வார்த்தைகளும் அபிகாயிலின் வார்த்தைகளை ஒத்தே இருக்கின்றன: 'இதோ! நான் ஆண்டவரின் அடிமை!' (லூக்கா 1:38).

9. எஸ்தர்

அரசன் எகிசரேயு அவர்களால் அரசியாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர் இவர். இவரின் இனத்து மக்களெல்லாம் சாவிற்குக் கையளிக்கப்பட்டாலும் இவருக்கு மட்டும் இந்தச் சிறப்பான பேறு கிடைக்கின்றது. இறுதியில் தன் இனத்தவரை மீட்பதற்காக தன் வாழ்வையே பணயம் வைக்கத் துணிகின்றார்.

மனுக்குலத்தில் ஒருவராகத் தோன்றினாலும் தொடக்கமுதலே பாவத்திலிருந்து தனித்து வைக்கப்பட்டவர் மரியாள். தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மனித இனத்தின் மீட்பிற்கான வாசலை தானே திறந்து விடுகின்றார்.

இப்படியாக, இந்த முதல் ஏற்பாட்டு ஒன்பது முகங்களில் மரியாளின் முகம் நிழலாடுகின்றது.

Friday, January 23, 2015

மரியாளின் நிழல்கள் - 2

2. சாரா

சாரா ஆபிரகாமின் மனைவி. ஈசாக்கின் தாய். இவரைப்பற்றிய குறிப்பு எபிரேய விவிலியத்திலும் உண்டு. திருக்குரானிலும் உண்டு. தொடக்கநூல் 17:15ன் படி சாராய் என்ற இவரது பெயரை சாரா என மாற்றுகிறார் கடவுள். சாரா என்றால் இளவரசி என்பது பொருள். தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் தன் அடிமைப்பெண் ஆகாரை தன் கணவர் ஆபிரகாமிற்கு மனைவியாக அளிக்கின்றார். அவ்வாறே அடிமைப்பெண் கருவுற்று இஸ்மயேலைப் பெற்றெடுத்ததும் பொறாமையினால் ஆகாரை அலைக்கழிக்கின்றார். ஆகாரையும், அவரது மகன் இஸமயேலையும் வீட்டை விட்டுத் துரத்தும்படி ஆபிரகாமை வற்புறுத்துகின்றார். ஆபிரகாமின் இல்லத்தில் இளவேனிற்காலத்தில் மூன்று தூதர்கள் வந்தபோது அவர்களில் ஒருவர் அடுத்த இளவேனில் காலத்தில் சாரா கருத்தாங்கியிருப்பாள் என்று சொல்ல, தன் கூடாரத்தில் இருந்த சாரா அதைக்கேட்டு சிரிக்கிறாள். 'நீ எதற்காக சிரித்தாய்?' என்று அவர்கள் கேட்டபோது, 'சிரிக்கவில்லை!' என்றும் மறுதலிக்கின்றார் (காண். தொடக்கநூல் 18:9-15). தான் கடவுளின் வாக்குறுதியால் பெற்ற மகன் ஈசாக்கை ஆபிராகாமோடு இணைந்து அவரைப் பலியிடத் துணிகின்றார் (தொநூ 22).

தூய பவுலடியார் ஆகாரை அடிமையின் உடன்படிக்கை எனவும், சாராவை வாக்குறுதியின் உடன்படிக்கை அல்லது விடுதலையின் உடன்படிக்கை எனவும் ஒப்பிட்டுப் பார்க்கின்றார் (காண். கலாத்தியர் 4:21-31). ஆகார் அடிமைத்தனத்தின் மகனைப் பெறுகிறார் எனவும், சாரா அருளின் மகனைப் பெறுகிறார் எனவும், ஆகார் 'சட்டத்தையும்', சாரா 'அருட்கொடையையும்' குறிப்பதாக எழுதுகின்றார். மரியாள் விடுதலையின் மகனாம், அருளின் மகனாம் இயேசுவைப் பெற்றெடு;த்ததில் சாராவின் மேல் நிழலாடுகின்றார். சாரா தன் மகன் ஈசாக்கைப் பலியாகக் கையளிக்க வேண்டியிருந்தது போல, மரியாளும் தன் மகன் இயேசுவைப் பலியாகக் கையளிக்க வேண்டியிருந்தது. சாராவில் புதிய இஸ்ராயேல் இனம் தோன்றுகிறது. இஸ்மயேல் அல்ல, மாறாக ஈசாக்கே வாக்குறுதியின் மகன் என ஈசாக்கைத் தெரிவு செய்கின்றார் கடவுள். அவ்வாறே இயேசுவும் 'சகோதரர் சகோரருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்று' (உரோமையர் 8:29) கடவுள் அவரை முன்குறித்து வைக்கின்றார்.


3. ரெபேக்கா

'ரிபாக்' என்ற எபிரேய வேரிலிருந்து வரும் ரெபேக்கா என்ற சொல்லுக்கு இணைப்பவர், கட்டுபவர் அல்லது பாதுகாப்பவர் என்பது பொருள். இவர் ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் மனைவி. இவரை ஆபிரகாமின் பணியாளர் பெண்பார்க்கத் தேடிச்செல்லும் படலம் மிகவும் சுவராஸ்யமானது (காண். தொடக்கநூல் 24). ரெபேக்காக ஈசாக்கை மணமுடிக்க சம்மதித்துப் பறப்படும்போது அவரை இவ்வார்த்தைகளில் வாழ்த்துகின்றனர்: 'எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய். உன் வழி மரபினர் தங்கள் பகைவர்களின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக!' (தொநூ 24:60). ஏசா மற்றும் யாக்கோபு என்ற இரண்டு மகன்களைப் பெற்றெடுக்கின்றார். இளைய மகன் யாக்கோபை மிகுதியாக அன்பு செய்ததால் அவர் மட்டுமே தந்தை ஈசாக்கின் ஆசியை முழுமையாகப் பெற வேண்டும் என விழைந்து, யாக்கோபை அவரது அண்ணன் ஏசா போல ஜோடித்து அனுப்புகின்றார். சாரா - ஆபிரகாம் தம்பதியரில் ஆபிரகாம் மிக ஆக்டிவ்வாக இருப்பார். ஆனால், ரெபேக்கா - ஈசாக்கு தம்பதியரில் ரெபேக்கா மிக ஆக்டிவ்வாக இருப்பார்.

ஆபிரகாமின் பணியாளர் ரெபேக்காவை தன் தலைவரின் மகனுக்கு மனைவியாய் இருக்கக் கேட்டது போல, கடவுளின் பணியாளராம் கபிரியேல் தூதரும் கடவுளுக்கே தாயாக இருக்கும்படி மரியாளைக் கேட்கின்றார். ரெபேக்காவின் அண்ணன் லாபான் அளித்த ஆசியுரை மரியாளில் நிறைவேறுகிறது: 'ஆயிரமாயிரமாக மரியாளின் தலைமுறை பெருகுகின்றது'. மேலும், யாக்கோபை ஏசாவைப் போல ஆடையுடுத்தி தந்தை ஈசாக்கிடம் ரெபேக்கா அழைத்துச் சென்றது போல, மரியாளும் இயேசு என்னும் கடவுளுக்கு மனிதம் என்னும் ஆடையை உடுத்தி தந்தை இறைவனிடம் அழைத்துச் செல்கின்றார். எல்லாவற்றையும் விட, ரெபேக்காவின் பெயர் குறிப்பிடுவது போல மரியாள் விண்ணையும், மண்ணையும் இணைப்பவராக, அந்த இணைப்பைப் பலப்படுத்துபவராகவும், பாதுகாக்கிறவராகவும் இருக்கிறார்.


4. ராகேல்

லாபானின் இரண்டு புதல்வியர்களுள் இளையவர் இவர். அக்காவைவிட மிக அழகானவர். 'செம்மறியாட்டுக் குட்டி' என்பது இவரது பெயரின் அர்த்தம். யாக்கோபு இவருக்காக ஏழு ஆண்டுகளும், பின் லாபானால் ஏமாற்றப்பட்டு லேயா திருமணம் செய்துவைக்கப்பட, மீண்டும் ஏழு ஆண்டுகளும் வேலை செய்தவர். எந்த அளவிற்கு அவர் அழகாக இருந்தால், இந்த அளவிற்கு யாக்கோபு அவருக்காக வேலை செய்திருக்க வேண்டும். காலத்தையும் கடந்த அழகாக இவரது அழகாக இருந்திருக்க வேண்டும். ஆகையால் தான் 14 ஆண்டுகளுக்கு முன் பார்த்த ராகேல் வேறு, இப்போது திருமணம் முடிக்கும் ராகேல் வேறு என்று பிரித்துப் பார்க்காமல் மாய்ந்து மாய்ந்து அன்பு செய்கிறார் யாக்கோபு. முதலில் தாய்மைப்பேறு அடைய இயலாதவராக இருந்தாலும், கடவுளின் கருணையால் அப்பேற்றை சீக்கிரமே அடைகின்றார். லேயா, ராகேல் மற்றும் அவர்களது பணிப்பெண்கள் வழியாக யாக்கோபு பன்னிரண்டு புதல்வர்களைப் பெற்றுக்கொண்டாலும், ராகேலின் புதல்வர்களான யோசேப்பு மற்றும் பென்யமீனைத்தான் மிக அதிகமாக அன்பு செய்கிறார். இந்த ஓரவஞ்சக அன்பைப் பார்த்து மற்ற பத்து சகோதரர்களும் பொறாமைப்படவும் செய்கின்றனர்.

யாக்கோபு ராகேலின் அழகால் கவரப்பட்டது போல, கடவுளும் மரியாளின் அழகால் கவரப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். மரியாளின் புற அழகை விட, அக அழகை லூக்கா நற்செய்தியாளர் நேர்த்தியாக வர்ணனை செய்கின்றார்: 'அருள்மிகப் பெற்றவர். கடவுளின் அருளைக் கண்டடைந்தவர்' (லூக்கா 1:28-30). ராகேலின் மகன் யோசேப்பு அவருடைய சகோதரர்களால் இருபது வெள்ளிக்காசுகளுக்கு மிதியானியர்களிடம் விற்கப்படுவது போல (தொநூ 37:28), மரியாளின் மகன் இயேசுவும் அவரது சீடர் யூதா இஸ்காரியோத்தால் முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விலைபேசப்படுகின்றார் (மத்தேயு 26:14-16, 27:3-10). எகிப்தில் அடிமையாய் அழைத்துச் செல்லப்படும் ராகேலின் மகன் யோசேப்பு பாரவோனின் முன்னிலையில் தன் அறிவுக்கூர்மையினால் எகிப்தையே ஆளும் அளவிற்கு உயர்கின்றார். பின்நாளில் தன் சகோதரர்களின் பஞ்சத்தைப் போக்குகின்றார். அடிமையின் உருவாம் மனித உருவை ஏற்கும் மரியாளின் மகன் இயேசுவும் சிலுவையில் உயர்த்தப்பட்டு பாவம் என்ற கொடிய அருளின் பஞ்சத்திலிருந்து தன் சகோதரர்களை மீட்கின்றார். பழைய இஸ்ராயேல் மக்களை ராகேலின் பிள்ளைகள் என்றே எரேமியா இறைவாக்கினர் அழைக்கின்றார். புதிய இஸ்ராயேலாம் கிறிஸ்தவர்களும் மரியாளின் பிள்ளைகள் என்றே அழைக்கப்படுகின்றனர்.


5. மிரியம்

'மிரியம்' என்ற வார்த்தை இரண்டு 'மாரா' மற்றும் 'யாம்' என்ற இரண்டு வார்த்தைகளின் தொகுப்பு. 'மாரா' என்பதற்கு 'கசப்பு' என்றும் 'போராட்டம்' என்றும் 'அழகு' என்றும் பொருள். 'யாம்' என்றால் 'கடல்'. ஆக, மிரியம் என்றால் கசப்பின் கடல், போராட்டத்தின் கடல் அல்லது அழகின் கடல் என்று பொருள். புதிய ஏற்பாட்டு மரியாளின் பெயரும், இந்தப் பெயரோடு நேரிடையாகத் தொடர்புடையதே. மிரியம் மோசே மற்றும் ஆரோனின் சகோதரி. இவரை முதல் பெண் இறைவாக்கினர் எனவும் அழைக்கின்றனர். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை யாவே இறைவன் அழைத்து வந்தபோது தன் வலிமைமிகு கரத்தால் செங்கடலைப் பிளக்கின்றார். தங்கள் பாதம் நனையாமல் கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்களோடு இணைந்து பாடல் பாடுகின்றார் மிரியம் (காண். விடுதலைப்பயணம் 15). ஆரோனுடன் இணைந்து கொண்டு மோசேயின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டதால் கடவுளால் தண்டிக்கவும்படுகின்றார் (காண். எண்ணிக்கை 12).

பழைய ஏற்பாட்டில் மோசே திருச்சட்டத்தின் பிதாமகனாகவும், ஆரோன் திருப்பணியின் அதாவது குருத்துவத்தின் பிதாமகனாகவும் வலம் வருகின்றனர். இந்த இரண்டு பேரோடும் தன்னை ஒன்றித்துக் கொண்டவர் மிரியம். புதிய ஏற்பாட்டில் மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய சட்டம் வழங்கும் மோசே எனவும், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் இயேசுவை ஆரோனின் குருத்துவத்தின் மறுபிறப்பு எனவும் எழுதுகின்றனர். இந்த இயேசுவோடு தன்னையே ஒன்றித்துக் கொண்டவர் மரியாள். மேலும், மிரியம் என்ற பெயரிலும் நம் மரியாள் நிழலாடுகின்றார்.

(நிழல்கள் நீளும்)




Thursday, January 22, 2015

மரியாளின் நிழல்கள் - 1

ஒருவரின் நிழல் (ஷேடோ) என்று நாம் ஒன்றைக் குறிப்பிட்டால் உளவியலில் அது அவரது எதிர்மறையான குணம் என்று கருதப்படுகின்றது. உதாரணத்திற்கு, ராஜாவிடம் எல்லா நல்ல குணமும் இருக்கின்றது. ஆனால் அவனுக்கே தெரியாத அவனது நிழல் அவனது கோபம் என்று சொல்கிறோம் என வைத்துக் கொள்வோம். இதில் கோபம் என்ற குணம் ராஜாவின் நிழலாக இருக்கின்றது. மேலும் நிழல் ஒருவருக்குப் பின் விழுவதால் ஒருவருக்குத் தெரியாத ஒன்றாகவும் இருக்கிறது.

மரியாளின் நிழல்கள் என்று நாம் தொடங்கும் இந்தப் பகுதி மரியாளின் எதிர்மறையான பண்புகளைச் சொல்வன அல்ல. மாறாக, பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் இடையே மரியாளை நிறுத்;தி, புதிய ஏற்பாட்டின் ஒளியை அவர்மேல் விழச் செய்தால் பழைய ஏற்பாட்டு கதாபாத்திரங்களின் மேல் விழுகின்ற நிழலே நாம் சொல்ல விழைவது. பழைய ஏற்பாட்டில் மரியாள் பல்வேறு கதாபாத்திரங்களில் நிழலாடுகின்றார். இந்தக் கதாபாத்திரங்கள் கண்டிப்பாக பெண்கள் தாம். பழைய ஏற்பாட்டுப் பெண்களை அலசிப் பார்க்கும் போது மரியாளின் நிழலைத் தாங்கும் பெண்கள் ஒன்பது பேர் இருக்கின்றனர்: ஏவாள், சாரா, ரெபேக்கா, ராகேல், மிரியம், தெபோரோ, ரூத்து, அபிகாயில் மற்றும் எஸ்தர். நம்ம கணக்குப்படி ஏழு தான் இருக்கணும். ஆனா, ஒன்பது இருக்கு. பரவாயில்லை. ஒன்பதையும் பற்றி எழுதுவோம். இந்தக் கதாபாத்திரங்கள் வரலாற்றில் வாழ்ந்தார்களா, இல்லையா என்பது குறித்து நாம் விவாதிக்கப்போவதில்லை. விவிலியத்தில் சொல்லப்பட்டபடி இவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். சரியா?

1. ஏவாள்

ஏவாளுக்கு ஆதாம் இரண்டு முறை பெயரிடுகின்றான்: முதலில், தொடக்கநூல் 2:23 'அப்பொழுது மனிதன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள். ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால் இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்' என்றான்'. இரண்டாவதாக, தொடக்கநூல் 3:20 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான். ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.' எபிரேய மொழியில் முதலில் அவள் 'ஈஷா' ('ஈஷ்' என்றால் ஆண், 'ஈஷா' என்றால் பெண்) என்றும், இரண்டாவதாக 'ஹவ்வா' ('ஹாயா' அல்லது 'ஹாவா' என்றால் உயிர் என்பதும பொருள்) என்றும் அழைக்கப்படுகின்றாள்.

மரியாளை புதிய ஏவாள் என அழைப்பதற்கு முதற்காரணம் இயேசுவை புதிய ஆதாம் என தூய பவுலடியார் அழைப்பதுதான் (காண் உரோமையர் 5, 1 கொரிந்தியர் 15). மரியாளை புதிய ஏவாள் என்று எந்தப் புதிய ஏற்பாட்டுப் பகுதியும் குறிப்பிடவில்லை. தூய யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூலின் 'பெண்ணும் அரக்கப்பாம்பும்' (திவெ 12) பகுதியில் கூட அந்தப் பெண் மரியாள் என்று குறிப்பிடப்படவில்லை.

முதல் ஏவாளுக்கும், இரண்டாம் ஏவாளுக்கும் ஆறு ஒற்றுமைகள் (வேற்றுமைகள்!) உள்ளன:

அ. முதல் ஏவாள் முதல் ஆதாமிலிருந்து வந்தாள். ஆனால் இரண்டாம் ஆதாம் இரண்டாம் ஏவாளிலிருந்து வருகின்றார்.

ஆ. முதல் ஏவாள் சாத்தானின் குரலைக் கேட்கின்றாள். இரண்டாம் ஏவாள் தேவதூதனின் குரலைக் கேட்கின்றாள்.

இ. முதல் ஏவாள் பாவத்தையும், சாவையும் பெற்றெடுக்கிறாள். இரண்டாம் ஏவாள் அருளையும், மீட்பையும் பெற்றெடுக்கிறாள்.

ஈ. முதல் ஏவாளும், முதல் ஆதாமும் சேர்ந்து 'விழுகின்றனர்'. இரண்டாம் ஏவாளும், இரண்டாம் ஆதாமும் சேர்ந்து 'எழுகின்றனர்'.

உ. முதல் ஏவாள் 'உயிர் வாழ்வோர் அனைவருக்கும்' தாயாகிறாள். இரண்டாம் ஏவாள் 'கிறிஸ்துவில் வாழ்வோர் அனைவருக்கும்' தாயாகிறாள்.

ஊ. முதல் ஏவாளுக்குப் பகையாக இருந்தது பாம்பு. இரண்டாம் ஏவாளுக்குப் பகையாக இருப்பது சாத்தான்.

இந்த ஆண்டு புத்தாண்டின் முதல் நாளில் மரியாளை இறைவனின் தாய் என்று ஆற்றிய மறையுரையில் முதல் ஏவாளையும், இரண்டாம் ஏவாளையும் மூன்று பகவத்கீதைக் கோட்பாடுகளை வைத்து ஒப்பிட்டேன். அதை இங்கே பதிவு செய்வதும் பொருத்தமாக இருக்கும்;.

'தினச்சார்யா' என்பது பகவத் கீதையின் ஒரு மேலாண்மைக் கோட்பாடு. இதன் அர்த்தம் இதுதான்: 'நாம் தினமும் செய்யும் ஒன்று என்னதான் குறைவோடு இருந்தாலும், நான் என்றாவது செய்யும் நிறைவான ஒன்றைவிட மேலானது!' புரியலையா! ரொம்ப சிம்பிள். தினமும் அரை மணி நேரம் வாக்கிங் போவது (வேகமாக நடந்தாலும், மெதுவாக நடந்தாலும், பேசிக்கிட்டே நடந்தாலும், பேசாமல் நடந்தாலும்) மாதத்திற்கு ஒருமுறை வாக்கிங் போவதை விட (ரொம்ப பெர்ஃபெக்டா, சைலண்ட்டா போனாலும்) மேலானது. அல்லது தினமும் ஐந்து நிமிடம் தியானம் செய்வது மாதத்திற்கு ஒருநாள் ஒரு மணிநேரம் செய்யும் தியானத்தைவிட மேலானது. உங்க ஒய்ஃப் ரொம்ப தூரமா இருக்காங்கனு வச்சிக்குவோம். அவங்ககிட்ட நீங்க தினமும் அஞ்சு நிமிஷம் பேசினாலும் (சண்டை போட்டுக்கிட்டே!) அது மாதத்திற்கு ஒரு முறை (வழிஞ்சு வழிஞ்சு) பேசுறதை விட ரொம்ப பலன் தருமாம்.

லாஜிக் ரொம்ப சிம்பிள். தினமும் தூங்குகிறோம்;. தினமும் எந்திரிக்கிறோம். தினமும் குளிக்கிறோம். தினமும் பல் துலக்குகிறோம். தினமும் மூச்சு விடுகிறோம். ஆனால் வாழ்வின் சில செயல்கள் (படிப்பது, வேலை பார்ப்பது, உறவுகளை வளர்ப்பது) என்று வரும் போது நாம் அவைகளைச் செய்வதில் தள்ளிப்போடுகிறோம். எதையும் தினமும் செய்ய வேண்டும் என்பதுதான் கீதையின் போதனை. உதாரணத்திற்கு, பன்மொழியில் நீங்க பேசணுமா. தினமும் அந்த மொழிகளில் அஞ்சு நிமிஷமாவது பேசணும். கம்ப்யூட்டரில் கலக்கணுமா. தினமும் ஒரு மணி நேரமாவது அதைக் குறித்துப் படிக்கணும். உங்க ஃப்ரெண்ட்ஷிப் நல்லா இருக்கணுமா. தினமும் ஆஃப் அன் அவராவது ஸ்பெண்ட் பண்ணனும். இப்போ புரியுதா! எப்பாடு பட்டாவது நான் தினமும் ஒரு பக்கமாவது அனிச்சம் வலைப்பூவில் எழுதி விடுவதை!

இந்த 'தினச்சார்யா' பிரின்சிபிலை மூன்று பரிமாணங்களாகப் பிரிக்கலாம்:

அ. மேலானது எது, தாழ்வானது எது என ஆராய்ந்து பார்க்க வேண்டும். தாழ்வானதை உதறித் தள்ளவிட்டு மேலானதைப் பிடித்துக் கொள்ள வேண்டும். காலையில அஞ்சு மணிக்கு 'வேக்-அப்' டைமர் வைக்கிறோம். டைமர் அடிக்கிறது. இப்ப நாம ஒரு முடிவு எடுக்கணும். எந்திரிக்கவா. வேணாமா. நம்ம மூளை என்ன சொல்லும்! இன்னும் கொஞ்ச நேரம் தூங்குமா. ரொம்ப டயர்டா இருக்க. நாளைக்கு வாக்கிங் போய்க்கலாம். அல்லது நாளைக்கு கோயிலுக்குப் போய்க்கலாம். ஒருநாள் போகலனா ஹார்ட் அட்டாக்கா வந்துடும். அல்லது ஒருநாள் போகலனா சாமி கோய்ச்சிக்கிடுமா. இதில் சோம்பல் என்பது தாழ்வானது, சுறுசுறுப்பு என்பது மேலானது. நாம ரெண்டையும் பிரிச்சிப் பார்க்கணும். அப்புறம் தாழ்வான சோம்பலை விட்டுவிட்டு, மேலான சுறுசுறுப்பைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆமாம்! போர்வையை விலக்கி எந்திரிச்சிடணும்.

இதை முதல் ஏவாள், இரண்டாம் ஏவாள் வாழ்வில் பாருங்களேன். கண்ணுக்கு ஒரு பழம் அழகா தெரியுது. மேலானது எது கடவுளுக்குக் கீழ்ப்படிவது. தாழ்வானது எது பழத்தைப் பறித்து உண்பது. ஆனா, முதல் ஏவாள் மேலானதை விலக்கிவிட்டு, தாழ்வானதைப் பற்றிக் கொள்கின்றாள். இரண்டாம் ஏவாளுக்கும் ஒரு கட்டத்தில் முடிவெடுக்க வேண்டிய நிலை வருகிறது. 'நீ தூய ஆவியின் அருளால் குழந்தை பெறுவாய்!' என்று தூதர் சொல்கிறார். இதில் மேலானது என்பது இறைத்திட்டம். கீழானது என்பது மக்களின் ஏச்சுப்பேச்சு. இரண்டாம் ஏவாள், கீழானதை ஒதுக்கி விட்டு மேலானதைப் பற்றிக் கொள்கின்றார்.

ஆ. நாம் எதில் நேரத்தைச் செலவழிக்கிறோமோ, அது வளரும். நாம் எதில் நேரத்தைச் செலவழிக்கவில்லையோ அது குறையும். டார்வினின் உயிரியில் பரிணாமக் கோட்பாடும் இதுதான். பயன்பாட்டில் இருக்கும் எதுவும் வளரும். பயன்பாட்டில் இல்லாத எதுவும் அழிந்து விடும். ஒருகாலத்தில் பாம்புகளுக்கு கால்கள் இருந்தனவாம். காலப்போக்கில் அவைகள் பயன்படுத்தப்படாததால் அழிந்து விட்டன. அது போல ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மற்ற விலங்குகளின் கழுத்து போல சின்னதாகத் தான் இருந்ததாம். ஆனால், உயர்ந்த மரங்களின் இலைகளைப் பறித்து உண்ண வேண்டிய நிர்பந்தம் அவைகளுக்கு இருந்ததால், அந்தப் பயன்பாட்டின் காரணமாக அவைகளின் கழுத்து நீண்டு விட்டது. நாம ஒரு கெட்ட பழக்கத்தை விட முடியலனு சொல்றோம். ஏன்? அந்தப் பழக்கத்தோட நாம நம்ம நேரத்தை செலவழிக்கிறோம். உதாரணத்திற்கு, எனக்கு குடிப்பழக்கம் அல்லது போர்னோகிராஃபி பார்க்கும் பழக்கம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? இந்தப் பழக்கத்தை நிறுத்த முதலில் நான் இந்தப் பழக்கத்தோடு செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். தினமும் மாலை ஒருமணி நேரம் உட்கார்ந்து குடிக்கிறேன் என்றாலோ, அல்லது படம் பார்க்கிறேன் என்றாலோ அதை அரை மணியாக, கால் மணியாக, பத்து நிமிடமாக, ஐந்து நிமிடமாகக் குறைத்து மொத்தமாகக் குறைத்துவிட வேண்டும். நாம் ஒரு நிமிடம் அந்தப் பழக்கத்திற்காக ஒதுக்கினாலும் அது நம்மை விட்டுப் போவதில்லை. 'மாட்டேன்!' என்றால் 'மாட்டேன்!' - இதில் சமரசம் செய்து கொள்ளாத சுயகட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியம். இதேபோல நான் கிரேக்க மொழியில் புதிய ஏற்பாட்டை நன்றாக வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என வைத்துக்கொள்வோம். ஆசை இருந்தால் மட்டும் போதுமா. நான் கிரேக்க மொழி விவிலியத்தோடு என் நேரத்தைச் செலவிழிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை என்பார்கள். அதுபோல நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றிற்கும் நம் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். நமக்குத் தேவையில்லாத உறவுகளை, நம் வளர்ச்சிக்குப் பயன்தராத உறவுகளை எப்படி விட்டுவிடுவது? இதே லாஜிக் தான். அந்த உறவு பற்றி நினைத்துப் பார்க்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். அந்த உறவுகளோடு செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். நேரம் குறைய உறவு குறையும். நேரம் அதிகமாக உறவும் அதிகமாகும்.

முதல் ஏவாள் படைக்கப்பட்டதன் நோக்கம் தன் கணவனோடு இருப்பதற்குத்தான். ஆனால், அவர் கணவனோடு நேரத்தைச் செலவழித்ததை விட பாம்போடும், பழத்தோடும் தான் நேரத்தைச் செலவழிக்கிறார். பாம்பு சொன்னவுடன் பழத்தை பறித்திருப்பார் என நினைக்கிறீர்களா? இல்லை. கண்டிப்பாக ஒரு வாரமாவது அதைப் பற்றியே நினைத்துக் கொண்டே தான் இருந்திருப்பார். பின் ஒரு நாள் எட்டிப் பிடித்துப் பார்த்திருப்பார். பின் தொட்டுப் பார்த்திருப்பார். பின் பறித்து ஒளித்து வைத்திருப்பார். பின் தான் சாப்பிட்டிருப்பார். நாம் செய்யும் தீய பழக்கத்திற்கும், அதை மறைப்பதற்கும் தான் நாம் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இல்லையா? இரண்டாம் ஏவாள் தன் நேரத்தைச் செலவழித்ததெல்லாம் தன் மகனோடு மட்டும் தான். தன் மகனின் விருப்பம், தேடல் அனைத்தையும் தன் தேடலாக வைத்துக் கொள்கின்றார். ஆகையால் தான் தன் மகனின் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்விலும் (பெத்லகேம், நாசரேத்து, கானா, கல்வாரி) அவரோடு தன்னை முழுமையாக ஒன்றித்துக் கொள்ள முடிகிறது.

இ. ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம். அந்த நேரத்தில் அந்த ஒன்று மட்டும் தான். ஒவ்வொன்றிற்கும் ஒரு இடம். அந்த இடத்தில் அந்த ஒன்று மட்டும் தான். இன்னைக்கு நாம மல்டிடாஸ்கிங் பற்றிப் பேசுகிறோம். நாம அதையேதான் செய்றோம். ஃபோன் பேசும்போது பைக் ஓட்டுறோம். சாப்பிடும் போது டிவி பார்க்கிறோம். டிவி பார்க்கும் போது பேசுறோம். பேசும்போது செல்ஃபோனை நோண்டுறோம். எதையும் நாம் முழுமையாகச் செய்வதில்லை. ஆகையால் தான், என்ன பேசுனோம்கிறதும், என்ன சாப்பிட்டோம்கிறதும், என்ன பார்த்தோம்கிறதும் மறந்துடது. சில பேர் டெய்லி பைக் சாவியைத் தேடுவதை ஹாபியாக வைத்திருப்பார்கள். பொண்ணுங்களுக்கு மொபைல் ஃபோனை தேடுறது ஒரு ஹாபி. ஒருகாலத்துல நானும் ஃபோனைத் தேடிக்கிட்டே தான் இருப்பேன். சில நேரங்களில் யாரிடமாவது ஃபோன்ல பேசிகிட்டே ஃபோன் எங்க இருக்குணு தேடுவேன். இப்ப ஸ்மார்ட்ஃபோன் வாங்குனதுக்கு அப்புறம் அந்தக் கவலையே இல்லை. ஏன்னா, எப்பவும் என் ஃபோன் சார்ஜர்லதான இருக்கு! நாம எல்லா நேரத்திலயும், எல்லாத்தையும் பண்றதுனால நம்மளோட உற்பத்தித்திறனும், படைப்புத்திறனும் குறைகிறது. வீணாகிறது. கொஞ்ச வருடத்துக்கு முன்னால கண்டுபிடிச்ச கண்டுபிடிப்புகள் மாதிரி, வரைந்த ஓவியங்கள் மாதிரி, கட்டிய கட்டடங்கள் மாதிரி நம்மால் செய்ய முடியவில்லை. ஏன்? எல்லாத்தையும் உடனடியாக நம் கையடக்க மொபைலில் பார்க்க முடியறதுனால நம்மளோட நாம புதுசா எதையும் கற்பனை பண்ண முடியறதில்லை.

முதல் ஏவாள் செஞ்சதும் மல்டிடாஸ்கிங் தான். பாம்போட செலவிட்ட நேரத்தை கொஞ்சம் கோழிக்குஞ்சு, ஆட்டுக்குட்டி அப்படின்னு செலவிழிச்சிருக்கலாம். ஒருவேளை கோழி வளர்க்கும்போதுகூட பாம்பு சொன்னததான் நினைச்சிட்டு இருந்திருப்பார். ஆதாமோட இருக்க வேண்டிய நேரத்துல பாம்போட இருந்ததுதான் பெரிய பிரச்சினையாயிடுச்சு. ஆனால் இரண்டாம் ஏவாள் அதற்கதற்கான நேரத்தை அதற்கதற்காக மட்டும் செலவழிக்கிறார். பெத்லகேமில் நாசரேத்தை நினைத்து வருந்தவில்லை. கானாவில் கல்வாரியை நினைத்துப் பயப்படவில்லை. அந்தந்த நேரத்தில், அந்தந்த இடத்தில் முழுமையாக வாழ்கின்றார் இரண்டாம் ஏவாள்.

இந்த மூன்று பண்புகளுகளும் இருந்ததால் தான் இரண்டாம் ஏவாள் கடவுளின் தாயாக உயர்கிறாள். இவைகள் இல்லாததால் முதல் ஏவாள் மனிதர்களின் தாயாக மட்டுமே இருந்து விட்டாள்.


Wednesday, January 21, 2015

மரியாளின் பயணங்கள் - 4

5. நாசரேத்திலிருந்து எருசலேமிற்கு

பயணத்தின் தொடங்குமிடமும், முடியுமிடமும் நான்காம் பயணத்தைப் போல இருந்தாலும், பயணம் தொடங்கிய காலமும், நோக்கமும் வேறு. மரியாளின் இந்தப் பயணத்தின் போது இயேசுவிற்கு வயது பன்னிரண்டு. இந்தப் பயணத்தின் நோக்கம் பாஸ்கா விழா (காண் லூக்கா 2:41-52). யூதர்களின் வாழ்வில் எருசலேம் மிக முக்கியமானது. ஏனெனில் அங்கேதான் இறைவனின் பிரசன்னம் துலங்கிய கோவில் இருந்தது. அங்கேதான் அவர்களின் அரசர் குடியிருந்தார். கோயில் என்பது அவர்களுக்கு வெறும் இடம் மட்டுமல்ல. அங்கேதான் கடவுளின் பெயர் குடியிருந்ததாக அவர்கள் நம்பினர். யாவே இறைவன் அவர்களோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமான பத்துக் கட்டளைகளும், பாலைவனத்தில் அளித்த மன்னாவும், அவர்களை வழிநடத்திச் சென்ற ஆரோனின் கோலும் இந்த ஆலயத்தில் தான் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. ஆனால், கிமு 587ல் பாபிலோனியப் படையெடுப்பின் போது, நெபுகத்னேசர் அரசன் எருசலேம் நகரத்தை அழித்து, ஆலயத்தைத் தீக்கிரையாக்கி, மக்களையும் அடிமைகளாக நாடுகடத்திச் செல்கிறான். அப்போதுமுதல் யூதர்கள் சிதறுண்டு போகத் தொடங்குகின்றனர். பாரசீக மன்னன் சைப்ரஸ் மீண்டும் அவர்களுக்கு விடுதலை தர, எஸ்ரா மற்றும் நெகேமியா தலைமையில் மீண்டும் ஆலயத்தைக் கட்டுகின்றனர். ஆக, இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்தது இரண்டாம் ஆலயம்.

யூதர்கள் மற்ற ஊர்களில் சிதறுண்டு வாழ்ந்தாலும், எருசலேம் தவிர மற்ற நகரங்களில் வாழ்ந்தாலும் மூன்று திருவிழாக்களின் போது அவர்கள் எருசலேமிற்குச் செல்ல வேண்டும் என்பது வழக்கம் (காண். விடுதலைப் பயணம் 23:14-17, 34:18-23, இணைச்சட்டம் 16). பெஸாக் என்று அழைக்கப்படும் பாஸ்காத் திருவிழா, ஷவுவோத் என்று அழைக்கப்படும் வாரங்களின் திருவிழா மற்றும் சுக்கோத் என்று அழைக்கப்படும் கூடாரத் திருவிழா - இந்த மூன்று திருவிழாக்களின் போதும் இன்றும் யூதர்கள் எருசலேமில் கூடி வருகின்றனர். இந்த நாளில் இவர்கள் தங்கள் கடவுளோடு உள்ள பிணைப்பையும், ஒருவர் மற்றவரோடு உள்ள பிணைப்பையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். பன்னிரண்டு வயது நிரம்பிய ஆண்கள் 'மேஜர்' என கருதப்பட்டதால், மேஜர் ஆன அனைவருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஆக, இயேசுவுக்கு இதுதான் அதிகாரப்பூர்வமான முதல் எருசலேம் பயணம்.

திருவிழாவுக்கு போறதுனாலே ஒரு குதூகலம் தான்! சொந்தக் காரங்களப் பார்ப்போம்! புதுச்சட்டை அணிவோம்! பலகாரங்கள் சுடுவார்கள்! வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் காசு கொடுப்பார்கள்! அப்படிப்பட்ட குதூகலத்தில் தான் மரியாளும், யோசேப்பும், இயேசுவும் எருசலேமிற்குச் சென்றிருப்பர். இந்தத் திருவிழாவிற்கு சக்கரியா, எலிசபெத்து மற்றும் திருமுழுக்கு யோவான் கூட வந்திருப்பார்கள். ஏனெனில் யோவானுக்கும் தான் பன்னிரண்டு வயது முடிந்திருக்குமே.

மரியாளின் இந்தப் பயணம் கடவுளோடும், தன் சொந்த மக்களோடும் இருக்க வேண்டிய பிணைப்பை நமக்குக் காட்டுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் என்றாலும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவதில் மரியாள் கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார். உறவே வாழ்வின் மையம் என்பதை உணர்ந்தவர் மரியாள். எருசலேம் என்பது ஒரு வாழும் அடையாளம். எருசலேம் என்பது ஒரு உணர்வு. இன்று பலர் படிப்பினிமித்தமும், வேலையினிமித்தமும், போரின் நிமித்தமும் தங்களின் சொந்த வேர்களை விட்டு புலம்பெயர்ந்து நிற்கின்றனர். ஒருசிலர் தங்கள் சொந்த வேர்களுக்குத் திரும்ப முடியாத நிiலியிலும் இருக்கின்றனர். மற்றும் சிலர் தங்கள் வேர்கள் தங்களுக்கு வேண்டாம் என நினைக்கின்றனர். ஆனால் தற்காலிகமாக, நிரந்தரமாக புலம்பெயர்ந்து நிற்கும் ஒவ்வொரு உள்ளத்திலும் சொந்த மண்ணின் ஏக்கம் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

நாம் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முடிவது போல நம் சொந்தங்களைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நம் பெற்றோர், சித்தப்பா, பெரியப்பா, மாமா, அக்கா. அண்ணன், தம்பி, தங்கை எல்லா உறவுகளுமே தானாக வருபவை. நாம யார்கிட்டயும் போய் 'நீங்க எனக்கு அக்காவா இருக்கீங்களா? சித்தப்பாவா இருக்கீங்களா?' என்று கேட்பதில்லை. நம் உடலின் அளவு, அமைப்பு, நிறம், நாம் பேசும் மொழி என எப்படி ஒருசிலவற்றை நாம் கேட்காமலேயே பெற்றிருக்கிறோமோ, அப்படித்தான் இந்த உறவுகளையும் பெற்றிருக்கிறோம். நம் எதிர்பார்ப்புகளை இந்த உறவுகள் பூர்த்தி செய்யவில்லை என்பதற்காகவோ அல்லது இந்த உறவுகளால் நமக்குப் பயனில்லை என்பதற்காகவோ நாம் இவைகளை வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. நான் எங்க போனாலும் என் சொந்த ஊரு நத்தம்பட்டி தான். எங்க ஊர் எனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக அந்த ஊருக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒரு 'மித்' இதுதான்: 'தனிநபர்தான் எல்லாம். உறவுகள் தேவையில்லை. என் சந்தோஷம், என் பாதுகாப்புதான் எனக்கு எல்லாம்!' என்ற மனநிலை. இப்படியே நாம் மற்றவர்களோடு வெட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் காயம் நம்மையும் காலப்போக்கில் பாதிக்கவே செய்கின்றது. ரொம்ப ஒட்டிக் கொள்ளாவிட்டாலும் ஒரு நடுநிலைப் பாதையையாவது நாம் எடுக்க வேண்டும் என்கிறார் மரியாள்.

இந்தப் பயணத்தின் மற்றொரு அம்சமாக இழந்து போன தன் மகனைத் தேடி பரிதவித்துப் போகிறார். பரிதவித்துக் கண்டுபிடித்து அணைக்க ஓடும்போது, 'ஏன் என்னைத் தேடுனீங்க?' என்று ரொம்ப கூலாகக் கேட்கிறார் இயேசு. தாய்மார்கள் அடித்துக் கொண்டு தேட பல நேரங்களில் இந்தப் பிள்ளைகள் அப்படித்தான் கேட்கிறார்கள்: 'ஏம்மா! உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எப்பப்பார்த்தாலும் என் பின்னாலயே ஓடி வர்றீங்க! நான் இங்க தான இருக்கேன்!' ஆனால், இந்தத் தாய்மார்களின் தேடலே பிள்ளைகள் தாமே என்பதை தாங்கள் தாயாகவோ, தந்தையாகவோ மாறும்போதுதான் உணர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு கிராமத்தில் ஒரு இளைஞர் மட்டும் தண்ணீர், திருவிழா, கொண்டாட்டம் என எதற்கும் வரி தராமலும், 'இந்த ஊரை எனக்குப் பிடிக்கவில்லை! இந்த ஊர் எனக்கு வேண்டாம்!' என்று கோபத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தார். இதைக் கேள்வியுற்ற ஒரு பெரியவர் ஒருநாள் அவரைச் சந்திக்க அவரின் வீட்டிற்குச் சென்றார். அது மாலை நேரம். குளிர்காலம். இளைஞன் தன் வீட்டினுள் நெருப்பு மூட்டி அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். இந்தப் பெரியவர், 'தம்பி சூடு ரொம்ப அதிகமாக இருக்கு என்று சொல்லிக் கொண்டே எரிகின்ற கட்டைகளில் ஒன்றை எடுத்து வெளியே வைத்து விடுகின்றார்'. தொடர்ந்து இருவரும் சும்மா பேசிக்கொண்டிருக்கின்றனர். பெரியவர் புறப்படும்போது, தனியாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டை அணைந்துவிட்டதைக் காட்டி அந்த இளைஞனிடம் சொல்கின்றார்: 'தம்பி! கவனித்தீர்களா! மற்ற கட்டைகளோடு சேர்ந்து இராததால் தான் இந்தக் கட்டை இப்போது குளிர்ந்து போனது! நாம் வாழ வேண்டும் என்றாலே மற்றவர்களின் அருகிருப்பு அவசியம்!' சொல்லிவிட்டு நகர்கின்றார். இளைஞன் ஞானம் பெறுகின்றான்.


6. நாசரேத்திலிருந்து கானாவிற்கு

'மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்' என எழுதுகின்றார் யோவான் நற்செய்தியாளர் (காண் 2:1-12). யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் பிறந்த இடத்தையும், வாழ்ந்த இடத்தையும் பற்றி எழுதுவதில் அக்கறை காட்டவில்லை. கானாவிற்கு மரியாள் கண்டிப்பாக நாசரேத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும். இயேசுவும் அங்கிருந்துதான் வந்தாரா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. முப்பது வருடங்கள் மறைமுக வாழ்ந்துவிட்டு முதன் முதலாக பொதுவாழ்விற்கு வருகிறார் என்பதை நாம் அப்படியே எடுத்துக்கொண்டால் ஒருவேளை அவரும் நாசரேத்திலிருந்து கானாவிற்கு வந்திருக்கலாம் எனச் சொல்லலாம். கானாவில் நிகழ்த்தியது தான் இயேசுவின் முதல் அறிகுறி என்றாலும், அறிகுறி நிகழ்த்துவதற்கு முன் இயேசு வெறும் போதிக்கும் பணியை மற்ற இடங்களில் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆக, மரியாளை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.
மரியாளுக்கு திருமண அழைப்பு வருகின்றது. யோவான் நற்செய்தியாளர் மரியாளை 'இயேசுவின் தாய்' என்று குறிப்பிடுகிறாரே தவிர பெயரிட்டுக் குறிப்பிடவில்லை. இந்தத் திருமணம் 'யூதா ததேயுவின் திருமணம்' என்பது மரபு வழி வரும் கதை. இயேசுவின் சகோதரர் (!) - அதாவது சித்தப்பா மகன், பெரியப்பா மகன் - யூதா ததேயு. மரியாளும் அழைப்பு பெற்றிருந்ததை வைத்துப் பார்க்கும் போது இத்திருமணம் யூதா ததேயுவுடையது என்று சொல்ல ஆதாரம் இருக்கின்றது. மேலும் திருமண வீட்டில் மரியாள் 'ஏதோ பட்டுச் சேலை கட்டினோம்! மல்லிகைப் பூ வச்சோம்! வந்தோம்! உக்கார்ந்தோம்!' என்றில்லாமல், ரொம்ப ஆக்டிவ்வாக இருக்கிறார். ஆக, கண்டிப்பாக இந்தக் கல்யாணம் ஒரு உறவினர் இல்லக் கல்யாணமாகத் தான் இருக்க வேண்டும். மரியாள் இந்தக் கல்யாண வீட்டுல செஞ்ச மிகப் பெரிய வேலை என்னன்னா, 'திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது!' என்பதை முதன்முதலாக அவர்தான் கண்டுபிடிக்கின்றார். கண்டுபிடித்து உடனே தண்டாரா போடாமல், காதும் காதும் வைத்த மாதிரி தன் மகனுடன் வந்து சொல்கின்றார்.
இன்றைக்கு நாம யாரிடமாவது குறை கண்டுபிடித்துவிட்டால், உடனடியாக ஊரெல்லாம் போய், 'அவன் அப்படியாக்கும்!' 'இவள் இப்படியாக்கும்!' என்று தண்டாரா போட்டுவிடுகிறோம். சம்பந்தப்பட்ட நபரை அணுகிப் பேசவோ, கேட்கவோ நமக்குத் துணிவில்லை. மரியாளிடமிருந்து நாம் இன்று ஒரு நல்ல பண்பைக் கற்றுக்கொள்ளலாம் - குறைகளைக் காணும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? அல்லது 'டிஃபிகல்ட் சிட்டுவேஷன்' வரும்போது அதை நாம் எப்படிக் கையாள வேண்டும்?

இந்த மரியாள் மட்டும் தாங்க சரியான நேரத்தில் எது தேவையோ, அதைக் கண்டுபிடிக்கிறார். மற்றொரு பக்கம் பாருங்க. மரியாள் அங்கிருந்தவங்களுக்கெல்லாம் 'ரூல்' போடலை. 'டேய்! ஏன்டா குடிக்கிற? என்றோ, கொஞ்சமாக் குடி!' என்றோ சொல்லவில்லை. விருந்தின் மகிழ்ச்சி கலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறார். நம்ம வாழ்க்கையில் நம்ம மகிழ்ச்சி கலைந்துவிடக் கூடாது என்று மெனக்கெடுவதில் இந்த தாய்மார்கள் எப்பவும் ஒருபடி மேலதான். சில இல்லங்களில் மனைவிகளும் தாய்மார்களாகவே மாறி தங்கள் கணவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆக, இந்த அக்கறைப்படுதல் போன்ற பண்புகள் எல்லாம் பெண்மையின், தாய்மையின் பண்புகள். மரியாளின் இந்தப் பயணம் நமக்குக் கற்றுக் கொடுப்பது 'மற்றவர்கள் மேல் அக்கறைப்படுவது!'

'அடுத்தவனுக்கு நான் ஏன் உதவி செய்யணும்!' 'அவனுக்கு கை கால் இல்லையா!' 'நான் உழைச்சு தான முன்னுக்கு வந்தேன்! அவனும் உழைக்கலாமே!' என்பார்கள் சிலர். பிரதர்! வாழ்க்கை எல்லாரையும் ஒரே போல வைத்திருப்பதில்லை. உழைக்கும் எல்லாரும் நல்லா வந்துடறது இல்லை. சிலரை மயிலிறகால் வருடிக் கொடுக்கும் வாழ்க்கை மற்றும் சிலரை செங்கலால் கன்னத்தில் அறைந்து விடுகிறது. 'அவனுக்கு நான் உதவி செய்தா எனக்கு என்ன ஆகும்!' என்று கேட்பதை விட, 'அவனுக்கு நான் உதவி செய்யாவிட்டால் அவன் என்ன ஆவான்!' என்று கேட்பதே சால்பு. இதைக் கேட்க வேண்டால் மரியாளைப் போன்ற ஒரு 'சென்சிட்டிவான' 'எம்பதடிக்' உள்ளம் வேண்டும்.

நாம 'சிம்பதி' காட்டத்தான் தயாரா இருக்கோமேயொழிய, 'எம்பதி' காட்டத் தயங்குகிறோம். பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில் ஒரு நாய்க்குட்டி வியாபாரி நாய்க்குட்டிகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பள்ளிக்கு வந்த சிறுவன் ஒருவன் ரொம்ப நேரமா அந்தப் பெரியவர் முன் நின்று கொண்டு அவர் கொண்டு வந்திருந்த நாய்க்குட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாய்க்குட்டியை நோக்கிக் கையை நீட்டி 'இதை நான் வாங்கிக் கொள்ளலாமா?' எனக் கேட்டான். 'தம்பி! அந்த நாய்க்குட்டி ரொம்ப ஒல்லியால இருக்கு! அதுக்கு ஏதோ நோய் போல! மத்த நாய்க்குட்டிகளைப் பாரு. நல்லா புசுபுசுனு. இவைகளில் ஒன்றை எடுத்துக்கொள்' அப்படிங்கிறார் அந்தப் பெரியவர். 'இல்ல! எனக்கு அதுதான் வேண்டும்!' என்ற சிறுவன் அதை வாங்கிக் கொண்டு சொல்கிறான்: 'ஐயா! எனக்கு அப்பா அம்மா கிடையாது! நான் அதோ அந்த விடுதியல தான் தங்கியிருக்கேன். நானும் சின்னக்குழந்தையா இருந்தப்ப ஒல்லியா, சீக்காளியாத் தான் இருந்தேனாம்! அன்னைக்கு என்னை யாரோ எடுத்து வளர்க்கலயா? நானும் இந்த நாயை நல்லா பார்த்துப்பேன்!' சொல்லி விட்டு வழி நடந்தான் சிறுவன். 'ஐயோ! பாவம் ஒல்லியா இருக்கு!' என்று நினைப்பது 'சிம்பதி'. 'ஒல்லியா இருக்கு! அதை நான் சரியாக்குகிறேன்!' என்று ஆவண செய்வது 'எம்பதி'.


7. கானாவிலிருந்து கல்வாரிக்கு

இயேசுவின் மூன்று வருட பணி வாழ்வில் அவர் கப்பர்நாகூமில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அவரைத் தேடி அவருடைய தாயும், சகோதரர்களும் வருவதாக மத்தேயு (காண் 12:46-50), மாற்கு (3:33-35) மற்றும் லூக்கா (லூக்கா 8:21) நற்செய்தியாளர்கள் எழுதுகின்றனர். இந்த நிகழ்வு இயேசுவுக்கு எதிரான ஒரு குழுவினர் கிளப்பிவிட்ட புரளி எனவும் அது காலப்போக்கில் நற்செய்தி நூல்களுக்குள் புகுந்துவிட்டது என்றும் கருதுகின்றனர் விவிலிய ஆராய்ச்சியாளர்கள். ஆக, மரியாளின் இந்தப் பயணத்தை நாம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.

மரியாளின் இறுதி மற்றும் ஏழாம் பயணம் கானாவிலிருந்து கல்வாரிக்கு என வைத்துக் கொள்வோம். நாசரேத்திலிருந்து தான் வந்திருப்பார்கள். அல்லது எருசலேமிலிருந்து வந்திருப்பார்கள். இயேசுவின் பணியின் மையமாக யோவான் நற்செய்தியில் கானா இருப்பதால் நாம் அங்கிருந்து வந்ததாக வைத்துக் கொள்வோம். மரியாளுக்கு இதுதான் இறுதிப் பயணம் என்று சொல்வதிலும் சிக்கல் இருக்கிறது. ஏனெனில் தூய ஆவியானவர் இறங்கி வரும்போது மரியாள் இயேசுவின் சீடர்களோடு இணைந்து எருசலேமில் செபித்துக் கொண்டிருக்கிறார் (காண். திருத்தூதர் பணிகள் 1:14). இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் நடந்த இந்த நிகழ்வை நாம் தனியாக எடுத்துவிட்டால், அல்லது நற்செய்திகளில் வரும் மரியாளின் பயணங்கள் என வைத்துக்கொண்டால் மரியாளின் கல்வாரிப் பயணமே அவரின் கடைசிப் பயணம்.

மரியாளின் இந்தப் பயணம் ஒரு வருத்தம் கலந்த மகிழ்வைத் தந்திருக்க வேண்டும். வருத்தம் எதற்காக? 'ஐயோ! என் மகன். நான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன்! எகிப்திற்கு தூக்கி;க் கொண்டு போய் எதிரியிடமிருந்து நான் காப்பாற்றிய மகன்! எருசலேம் ஆலயத்தில் காணாமற் போய் நான் கண்டுபிடித்த மகன், என்னோடு உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட மகன் இன்று ஒரு தோல்வியின் அடையாளமான, அவமானத்தின் அடையாளமான சிலுவையில் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறானே!' என்ற ஆதங்கம். மகிழ்ச்சி எதற்காக? 'உம் சித்தப்படியே எனக்கு ஆகட்டும்! என்று அன்று வானதூதர் கபிரேயலுக்குச் சொன்ன வார்த்தை இப்படித் தானே நிறைவேற வேண்டும். இதுதானே கடவுளின் திருவுளம். இதுதானே கடவுளின் மீட்புத் திட்டம்!'

இந்தக் கல்வாரிப் பயணத்தில் இயேசு தன் அன்புத் தாயிடம் தன் சீடரைக் காட்டி, 'அம்மா! இவரே உம் மகன்!' என்றும், சீடரிடம், 'இவரே உம் தாய்!' என்றும் சொல்கின்றார் (காண் யோவான் 19:26-27). மரியாள் மனுக்குலத்தைத் தன் பிள்ளையாக எடுத்துக் கொண்டதும், மனுக்குலம் மரியாளைத் தன் தாயாக எடுத்துக் கொண்டதும் இந்த நிகழ்வில் தான். பெத்லகேமில் முதல் முறை தாயான மரியாள் கல்வாரியில் இரண்டாம் முறை தாய்மைப்பேறு அடைகிறார். இந்தத் தாய்மைப் பேறுக்காக அவர் கொடுத்த விலைதான் அதிகம். தன் மகனையே சிலுவையில் பலியாக்கத் துணிகின்றார். என்னதான் இறைச்சித்தம்! கடவுளின் திருவுளம்! என்றாலும் பெத்த வயிறு சும்மாவா இருந்திருக்கும்! இந்த மகன் இன்று என்னோடு இல்லையென்றாலும், இனி வரும் அனைத்துப் பிள்ளைகளுமே என் பிள்ளைகள் எனப் புதிய பாதையைத் தொடங்குகின்றார் மரியாள். நம் இந்திய மரபில் மனிதர்களின் வாழ்க்கை நிலையை பிரமச்சார்யா, கிரகஸ்தா, வனப்பிரஸ்தா மற்றும் சந்நியாசா என நான்கு நிலைகளாக அழைக்கின்றோம். மரியாளின் சந்நியாசம் கல்வாரியில் தான் தொடங்குகிறது. துறவு என்றால் சந்நியாசம் என்றால் என்ன? வலியைத் தனக்கு வைத்துக் கொண்டு, மகிழ்வை மற்றவருக்குத் தருவதே துறவு.

விவேகானந்தர் பள்ளி மாணவனாக இருந்த போது தான் துறவு வாழ்க்கை மேற்கொள்ளப் போவதாகத் தன் தாயிடம் சொல்கின்றார். தாய் அந்நேரம் சமையல் செய்து கொண்டிருக்கிறார். 'சரி! அந்தக் கத்தியை எடு!' என்கிறார் தாய். இவரும் எடுத்து நீட்டுகின்றார். 'நீ போக முடியாது!' என்கிறார் தாய். இப்படியே இரண்டு முறை நடக்கின்றது. சில மாதங்களுக்குப் பின் மறுபடியும் விவேகானந்தர் அதே விண்ணப்பத்தோடு தன் தாயிடம் வருகின்றார். இப்போதும் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார் தாய். நீட்டுகின்றார் கத்தியை. கத்தியைப் பெற்றுக்கொண்ட தாய், 'நீ போகலாம்!' என்கிறார். விவேகானந்தருக்கு ஆச்சர்யம். 'ஏன்மா! மூன்று முறையும் நீ கத்தியைக் கேட்ட போது நான் மூன்று முறையும் கத்தியைத் தான் கொடுத்தேன்! இப்போ மட்டும் எப்படி நான் போகலாம் என்று சொல்கிறாய்?' எனக் கேட்கிறார். தாய் சொன்னாரம், 'நான் முதல் இரண்டு முறை கத்தியைக் கேட்ட போது கத்தியின் பாதுகாப்பான பகுதியை நீ வைத்துக் கொண்டு வெட்டுகின்ற பகுதியை என்னிடம் நீட்டினாய்! இன்று மட்டும் தான் வெட்டுகின்ற பகுதியை நீ வைத்துக் கொண்டு பாதுகாப்பான பகுதியை என்னிடம் நீட்டினாய்! துறவு என்பது இதுதான்: வெட்டுகின்ற பகுதியை நீ வைத்துக் கொண்டு பாதுகாப்பான பகுதியைப் பிறருக்கு நீட்டுவது!'

மரியாளின் பயணங்களின் ஒவ்வொரு இலக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தின் மைல்கல்லாக இருக்கட்டும்!

(பயணம் முடிந்தது!)


Tuesday, January 20, 2015

மரியாளின் பயணங்கள் - 3

3. பெத்லகேமிலிருந்து எகிப்திற்கு

பெத்லகேமில் இயேசு பிறந்து, இடையர்களும், ஞானிகளும் வந்து வணங்கியபின் ஒரு பெரிய பிரச்சனை ஏரோதின் உருவில் வருகின்றது. 'தன்னைப்போல் மற்றொரு அரசனா!' 'தன் அரியணைக்கு ஆபத்தா!' என நினைக்கிற ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகிறான் மத்தேயு நற்செய்தியாளர் குழந்தை இயேசுவை அவரது பெற்றோர்கள் தூக்கிக் கொண்டு எகிப்திற்குத் தப்பியோடுவதாக எழுதுகின்றார் (காண். மத்தேயு 2:13-15). இயேசு பெத்லகேமில் பிறக்க வேண்டும் என்பது லூக்கா நற்செய்தியாளருக்கு எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு மத்தேயு நற்செய்தியாளருக்கு இயேசு எகிப்திற்குச் செல்ல வேண்டும் என்பதும் முக்கியம். இந்த இடத்தில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நற்செய்தியாளர்களும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே நமக்கு எழுதித்தரவில்லை. ஒவ்வொருவரும் தன் சிந்தனைக்கு, கற்பனைக்கு, தன் குழுமத்தின் தேவைக்கு ஏற்றவாறு எடிட் செய்தே வழங்குகின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய இஸ்ரயேல் இனத்தின் தலைவராகவும், புதிய மோசேவாகவும் முன்வைக்க விழைகின்றார். எப்படி பழைய இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பாலும் தேனும் பொழியும் நாட்டிற்குக் கடந்து வந்தனரோ (காண் விடுதலைப்பயணம் 13-14) அப்படியே இயேசுவையும் எகிப்திற்கு அனுப்பி அங்கிருந்து திரும்பி வருபவராக எழுதுகின்றார்.

'வானதூதர் என் கனவில் வந்து எச்சரித்தார்! நாம் எகிப்திற்குப் போகப்போகிறோம்!' என்று யோசேப்பு மரியாளிடம் சொன்னவுடன் மரியாள் என்ன நினைத்திருப்பார். 'என்ன எகிப்தா?' என்று பதறியிருப்பார். 'அங்கேதானே நம் முன்னோர்கள் பாரவோனின் அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்தனர்!' 'அங்கேதானே அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்தார்கள்!' என்று கலங்கியிருப்பார். 'மறுபடியும் அந்தத் துன்பத்தின் சுவடுகளுக்குள் நாம் நடந்து செல்ல வேண்டுமா?' என்று துடித்திருப்பார். இருந்தாலும், புறப்படுகின்றார். கடந்த காலத்தின் காயங்களை நாம் எப்படி குணப்படுத்துவது என்பதற்கு மரியாளின் இந்தப் பயணம் நமக்குப் பாடம் சொல்கிறது. நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒரு 'எகிப்து' இருக்கும். நம்மை யாராவது அடிமைப்படுத்தியிருந்த நேரம், நம் உரிமை பறிக்கப்பட்ட நேரம், நாம் வெறும் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட நேரம், நம் உழைப்பு உறிஞ்சப்பட்ட நேரம், நம் உறவுகளைக் காண முடியாத நேரம், சோகம், தனிமை, வெறுமை என தனித்திருந்த நேரம், மற்றவர்கள் நம் வெந்த புண்ணிலேயே வேல்பாய்ச்சிய நேரம் என கடந்த காலம் விட்டுச்சென்ற காயங்கள் வடுக்களாக இருக்கின்றன. இந்த வடுக்களையும், காயங்களையும் வெற்றி கொள்வது எப்படி? மரியாள் நமக்குச் சொல்வது இதுதான்: 'எகிப்து நாட்டில் நம் முன்னோர்கள் அடிமைகளாய் துன்பம் அனுபவித்தது எந்த அளவிற்கு உண்மையோ, அந்த அளவிற்கு உண்மை யாவே இறைவன் நம் மக்களை சந்திக்க இறங்கி வந்தது! அவர் நம் மக்களுக்காக மோசே மற்றும் ஆரோனை அனுப்பவில்லையா! பாஸ்கா செம்மறியின் இரத்தத்தால் நம் தலைப்பேறுகளைக் காக்கவில்லையா? பத்துக் கொள்ளை நோய்களால் எதிரிகளை வாட்டவில்லையா? நம் பாதங்கள் தண்ணீரில் நனையாதபடி செங்கடலை இரண்டாகப் பிளந்து நம்மை நடத்திச் செல்லவில்லையா? பாரவோனின் படைகளையெல்லாம் ஆழ்கடலில் ஆழ்த்தவில்லையா? பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் இருந்து நம்மை வழிநடத்தவில்லையா? மன்னாவும், காடையும் தந்து பராமரிக்கவில்லையா? ஆக, துன்பம் வந்தபோதுதான் இறைவனின் அருட்கரமும் உடன் வந்தது. ஆக, காயம் வந்த இடத்தில் அதைத் துடைக்க கடவுளின் பிரசன்னமும் உடனிருந்ததே. அதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டாமா?!'
நாம் நமக்கு வரும் தடைகளைத் தாண்டும் போதெல்லாம் அந்தத் தடைகளை நினைத்துத் துவண்டுவிடாமல், அந்தத் தடைகள் கொண்டு வந்த நல்லவைகளுக்கு நன்றி சொல்லவும் பழகிக்கொள்ள வேண்டும். இறைவனின் அருட்கரம் மீண்டும் உடனிருக்கும் என்ற நம்பிக்கை பெற வேண்டும்.

மரியாளின் இந்தப் பயணத்தின் வெளிப்பாடு பாதுகாப்பு. துன்ப மேகங்கள் சூழும்போது சிறிய மின்னல் கீற்று போல வரும் கடவுளின் உடனிருப்பு கூட வாழ்க்கைப் பயணத்திற்கு பெரிய விளக்குத்தூணாக இருக்கும்.

இந்த நிகழ்வைப் பற்றி வீரமாமுனிவர் அவர்கள் எழுதிய தேம்பாவணியில் ஒரு குறிப்பு உண்டு. எகிப்திற்குப் போகிறோமே! அங்கு என்ன நடக்குமோ? என்று யோசேப்பும், மரியாளும் புலம்பும்போது கடவுள் அவர்களுக்குத் தோன்றி, 'என் விரலைப் பிடித்துக்கொள்!' என்பார். 'நீர் எங்கே இருக்கிறீர் என்றே தெரியவில்லை. அப்படியிருக்க உன் விரலை நான் எப்படிப் பிடிப்பேன்?' எனக் கேட்பார் வளனார். 'மரியாளின் கையில் இருக்கும் குழந்தையே என் விரல்' என்பார் கடவுள்.
நம் உள்ளங்கையில் கடவுளை வைத்துக் கொண்டு 'அவர் எங்கே?' என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் குனிந்துதான் பார்ப்போமே.


4. நாசரேத்திலிருந்து எருசலேமிற்கு

குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடிய ஏரோது இறந்ததும் திருக்குடும்பம் மறுபடியும் இஸ்ரயேல் நாடு திரும்புகிறது (காண். மத்தேயு 3:21-23). தான் புறப்பட்டுச் சென்ற பெத்லகேமிற்குத் திரும்பாமல், கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்துக்குத் திரும்புகின்றனர் யோசேப்பும், மரியாளும் தங்கள் குழந்தையுடன். இந்த இடத்தில் மத்தேயு தன் இரண்டு இறையியில் இலக்குகளை அடைந்து விடுகின்றார். அதாவது இந்த நிகழ்வின் வழியாக, 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்!' என்று இறைவாக்கினர் ஓசேயா சொன்னதும் நிறைவேறுகிறது (காண். ஓசேயா 11:1). மேலும், இயேசு நாசரேத்தில் குடியிருந்ததால் அவர் 'நசரேயன்' எனவும் அழைக்கப்படுகிறார். 'நசரேயன்' என்பதற்கு நாசரேத்தூர்காரர் என்ற பொருள் மட்டுமல்ல, 'கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற பொருளும் உண்டு (காண். நீதித்தலைவர்கள் 13:7). இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் அவரைப் பின்பற்றியவர்கள் பல இடங்களில் 'நசரீன்கள்' எனவே முதலில் அழைக்கப்பட்டனர். முதன் முதலாக அந்தியோக்கியாவில் தான் இயேசுவைப் பின்பற்றியவர்கள் 'கிறிஸ்தவர்கள்' என்ற பெயரைப் பெறுகின்றனர் (காண். திருத்தூதர் பணிகள் 11:26).
புதிய குழந்தையோடு மரியாள் தன் சொந்த ஊராகிய நாசரேத்திற்குச் சென்றபோது மக்கள் அவரை எப்படி அணுகியிருப்பார்கள். 'ஏய்! இங்க பாருடி! மரியாளுக்குக் குழந்தை!' என ஓடிவந்து பார்த்திருப்பார்களா? அல்லது 'கணவனை அறியாமலேயே கருத்தாங்கியவள் ஆயிற்றே!' என்று கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்களா? மரியாள் என்னவோ இந்த இரண்டு ரியாக்ஷன்களையும் ஒரே மாதிரிதான் எடுத்திருப்பார்.

நாசரேத்தில் வந்து ஓய்ந்திருக்கும் மரியாள் மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேமிற்குக் கொண்டு செல்கின்றார் (காண். லூக்கா 2:22). மரியாளைக் கொல்லும் அடுத்த உணர்வு வறுமை. பெரிய செல்வந்தர்கள் தங்கள் தலைப்பேறுகளை அர்ப்பணிக்க இளங்காளைகளையும், செம்மறியாடுகளையும் அர்ப்பணிக்கும் வேளையில், கடவுளின் ஒரே திருமகனை அர்ப்பணிக்க அவருக்கு வாங்க முடிந்ததெல்லாம் இரு மாடப்புறாக்கள் தாம். மரியாள் தன் வாழ்வின் நான்காம் பயணத்தில் கடவுளின் திருச்சட்டத்தை அர்ப்பணிப்பவராக நம் கண்முன் வருகின்றார். கடவுள் தன் மக்களை அன்பு செய்கிறார் என்பதன் அடையாளமே அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையும், அந்த உடன்படிக்கையோடு வந்த சட்டங்களும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்' என்ற இயேசுவின் வார்த்தைகளை (காண். மாற்கு 12:17, மத்தேயு 22:21) முழுமையாக வாழ்ந்தவர் மரியாள். கடவுளுக்கு உரிய இடத்தைக் கடவுளுக்குக் கொடுக்கின்றார். குழந்தை இயேசுவை அர்ப்பணிக்க வந்த மரியாளை சந்திக்க இருவர் வருகின்றனர்: ஒருவர் சிமியோன் மற்றவர் அன்னா. தங்கள் வாழ்வின் அஸ்தமனத்தில் இருந்தாலும் குழந்தை இயேசுவைக் கைகளில் ஏந்துவதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையைப் பற்றிய வியப்பானவற்றையும் கூறுகின்றனர் (காண். லூக்கா 2:33). மரியாளின் இந்தப் பயணம் வெளிப்படுத்துவது வியப்பு. நம் வாழ்வில் நாம் கடவுளுக்கு ஏற்பானவற்றைச் செய்யும் போது, நடக்க வேண்டியது நடப்பதோடு மட்டுமல்லாமல், வியப்புகளும் வந்து சேர்கின்றன. ஆண்டவரின் வியத்தகு செயல்களை சின்னஞ்சிறு வகைகளில் நாமும் உணர்ந்திருப்போம். காசில்லையே என்று புலம்பும் தருணத்தில் நண்பர் ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார், அவசரமாகப் போக வேண்டும் பஸ்சும் இல்லையே என்று நினைக்கும் போது நண்பர் ஒருவர் 'லிஃப்ட்' கொடுப்பார். 'உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆகவேண்டியதாயிற்றே!' என்று நாம் புலம்புவோம். ஆனால் அப்படி அட்மிட் ஆனபோதுதான் நாம் மறந்து போன ஒரு இனிமையான பழைய உறவைப் புதுப்பித்திருப்போம். 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பார்கள். 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் நமக்கு இன்னும் அதிக வியப்புகளை நினைக்கும்' என்பதே எதார்த்தம். இப்படியாக, வெறும் இரண்டு மாடப்புறாக்களோடு சென்றவர்களுக்கு இரண்டு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. ஆண்டவரின் வியத்தகு செயல்களை உணர்வதற்கு திறந்த மனம் ஒன்று இருந்தால் மட்டும் போதும்.

ஒரு ஏழைக்குடியானவனின் வீட்டுக் கூரை ஒருநாள் தீக்கிரையாகிவிட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வந்து ஆறுதல் சொன்னார்கள். 'இனி இவன் என்ன செய்யப்போகிறானோ! மழையிலும், குளிரிலும் வாடப்போகிறான்!' என்று அண்டைவீட்டர்கள் புலம்பிக் கொண்டிருந்தபோது, அவன் சொன்னானாம், 'கூரை எரிந்துவிட்டது. இனி நட்சத்திரங்கள் நன்றாகத் தெரியும்!'

'வறுமை, எளிமை இவர்கள் எப்படி இருக்கப்போகிறார்களோ' என்று தன் சொந்த ஊர் மக்கள் தன்மேல் பச்சாதாபப்பட்டபோது, இறைவனின் அருட்கரத்தோடு அவரின் வியத்தகு செயல்களை அனுபவிக்கின்றேன் என்று தலைநிமிர்கின்றார் மரியாள்.

(பயணம் தொடரும்)


Monday, January 19, 2015

மரியாளின் பயணங்கள் - 2

நம் இந்திய மரபில் தோன்றிய சமண மதத்தில் முக்தி நிலை அடைந்தவரை 'தீர்த்தங்கரா' என அழைக்கின்றனர். தீர்த்தங்கரர் என்பவர் 'சம்சாரா' என்றழைக்கப்படும் வாழ்க்கையின் பயணத்தைக் கடந்தவர். இறப்பு, மறுபிறப்பு என்ற வட்டத்திலிருந்து கடந்து நிற்கும் இவர் முக்தி நிலை நாடும் மற்றவர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர்.

மரியாளையும் தீர்த்தங்கரா என்றழைப்பது பொருத்தமாகவே இருக்கும். பிறப்பிலேயே தூய்மை, இறப்பிலிருந்து விடுதலை என பிறப்பு, இறப்பு வட்டத்தைக் கடந்து நிற்கும் மரியாள் இன்றும் தன் திருமகனிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பது நம் நம்பிக்கை.

தீர்த்தங்கரா மேற்கொள்ளும் பயணத்திற்குப் பெயர் தீர்த்த யாத்திரை, அதாவது தண்ணீர் யாத்திரை. நம் மனித வாழ்வைக் குறிக்கும் ஒரு சொல்லும் தண்ணீர் தான். தாயின் கருவறையின் தண்ணீர்க்குடம் உடையப் பிறக்கும் நாம், நம் நண்பர்களின் கண்களின் கண்ணீர்க்குடங்கள் உடைய நம் வாழ்வை முடித்துக் கொள்கிறோம். ஆக, தண்ணீருக்கும், தண்ணீருக்கும் இடையே நகரும் சிறு தண்ணீர்த்துளிகள் தாம் நாம்.

1. நாசரேத்திலிருந்து எய்ன் கேரேமிற்கு

மரியாளின் முதல் பயணம் நாசரேத்திலிருந்து யூதேயா மலைநாட்டிலிள்ள ஒரு ஊருக்குத் தொடங்குகின்றது (லூக்கா 1:39). வானதூதர் கபிரியேலின் மங்கள வார்த்தையைக் கேட்ட மரியாள், அந்த வானதூதர் தனக்குத் தந்த ஒரு அடையாளமான 'உன் உறவினராகிய எலிசபெத்தும் கருத்தாங்கியிருக்கிறார்!' என்ற வார்த்தைகளை நம்பியவராய்த் தன் உறவினரைக் காணப் புறப்பட்டுச் செல்கின்றார். லூக்கா நற்செய்தியாளர் அந்த ஊரின் பெயரை அறுதியிட்டுக் கூறாவிட்டாலும், வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஊரை எய்ன் கேரேம் என்று குறிப்பிடுகின்றனர். எய்ன் கேரேம் என்ற எபிரேய வார்த்தைகளுக்கு 'திராட்சையின் ஊற்று' என்பது பொருள். நாசரேத்திற்கும் எய்ன் கேரேமிற்கும் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 100 மைல்கள். கருவுற்று ஆறாம் மாதம் நிறைவுற்ற எலிசபெத்தைத் தேடி வருகின்ற மரியாள் அவரோடு மூன்று மாதங்கள் தங்குகின்றார் (லூக்கா 1:56). மரியாள் தனியாக வருவதாகவே லூக்கா நற்செய்தியாளர் எழுதுகிறார். மரியாளைக் காணும் எலிசபெத்தும் மரியாளிடம் மட்டுமே பேசுகின்றார். ஆக, மரியாளின் துணைவர் வளன் உடன் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இவ்வளவு நீண்ட பயணத்தை மரியாள் தனியாகச் செய்திருக்க முடியுமா என்று கொஞ்சம் காமன் சென்ஸ் கொண்டு பார்த்தால் வளன் உடன் வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

மரியாளின் முதல் பயணம் நமக்குச் சொல்வது 'தூரத்தைக் கடப்பது'. உறவுகள் நிலையாக நிற்கவும், நம் இலக்குகளை நாம் அடையவும் நமக்குத் தேவை 'தூரத்தைக் கடப்பதன் துணிச்சல்!' நம் நண்பரைப் பார்க்க வேண்டும், அல்லது அவரோடு உரையாட வேண்டும் என்ற நம் ஆசை நிறைவேறுவது எப்போது? அந்த நண்பரைத் தேடிச் செல்லவும், அவருக்கும் நமக்குமான தூரத்தைக் கடக்கும் போதுதான். நான் டாக்டராவேன் அல்லது ஐ.ஏ.எஸ் ஆவேன் என்று இலக்கை அமைத்துக் கொண்டு நம் வீட்டிற்குள்ளேயே ஓய்ந்திருந்தால் நம் இலக்கு நிறைவேறிவிடுமா? அந்த இலக்கிற்கும், நமது இப்போதைய நிலைக்குமான தூரத்தை நாம் கடக்க வேண்டும்.
நம் இன்றைய வாழ்க்கை நிலையை 'தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடு' என்று சொல்லலாம். பக்கத்தில் இருக்கும் நம் வீடுகளும், நம் உறவுகளும் கூட இன்று தூரமாய் இருக்கின்றார்கள். நம் கைச்சொடுக்குமிடத்தில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என நண்பர்களை நம் உள்ளங்கைகளில் வைத்திருந்தாலும், அவர்களுக்கும் நமக்குமான தொலைவு அதிகமாகவே இருக்கின்றது. விண்ணுக்குச் சென்று நிலவில் கால் பதித்த மனுக்குலத்திற்கு பக்கத்து வீட்டைக் கதவைத் தட்டி, 'நல்லா இருக்கீங்களா?' என்று கேட்கத் துணிச்சல் இல்லை. ஒன்று, அடுத்தவர்கள் நமக்குத் தேவையில்லை என நினைக்கிறோம். அல்லது, என்னிடம் தான் எல்லாம் இருக்கிறதே என தன்னிறைவு அடைந்து கொள்கிறோம்.

தூரத்தைக் கடக்க ஒரு துணிச்சல் தேவை. தன் வாழ்விடத்தை விட்டு வெளியேறும் பறவையினமே மற்றொரு கண்டத்தில் சென்று கால் பதிக்கிறது. மரியாளின் துணிச்சல் தூரத்தைக் கடந்து போகச் செய்தது. தூரத்தைக் கடந்த மரியாள் எலிசபெத்தின் உள்ளத்திலும், உடலிலும் மகிழ்ச்சியை விதைக்கிறார். 'உம் வார்த்தை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள் குழந்தை அக்களிப்பால் துள்ளியது!' என்கிறார் எலிசபெத்து. ஆக, தூரத்தைக் கடந்தால் மட்டும் முக்கியமல்ல. கடந்து செல்லும் நாம் மகிழ்வை விதைக்க வேண்டும்.

ஒரு சிலர் நம்ம வீட்டுக்கு வர்றாங்க என்றால், இன்னைக்கு என்ன குட்டையக் குழப்ப வருகிறாரோ! என நினைப்போம். தூரத்தைக் கடந்து வந்து ஒரு சிலர் நம் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் கலைத்துவிட்டு;ப் போவார்கள். மகிழ்ச்சியின் தூதர்களாக நாம் இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த மனக்கவலையின் காரணிகள் நம்மை அண்டி வந்தாலும் நம் மகிழ்வை இழக்காமல் தக்கவைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

தூரத்தைப் பற்றி விவேகானந்தர் அழகாகச் சொல்கிறார்: 'காதல் செய்யும் இரண்டு பேரைப் பாருங்கள். ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்கிறதா என்று நினைக்கும் அளவிற்கு மிக நிசப்தமாகப் பேசுவார்கள். ஆனால், சண்டையிடும் இரண்டு பேரைப் பாருங்கள். அருகருகே இருந்தாலும் கத்திக் கூப்பாடு போடுவார்கள். காரணம் இதுதான்: அன்பில் இதயங்கள் நெருக்கமாக இருக்கின்றன. ஆக, மௌனமொழி கூட அங்கே நன்றாகக் கேட்டும். ஆனால் கோபத்திலும், வன்மத்திலும் உடல்கள் அருகருகே இருந்தாலும் இதயங்கள் தூரமாகிவிடுகின்றன. ஆக, சத்தம் போட்டுப் பேசினால் தான் அடுத்தவருக்குக் கேட்கும்!'

தூரத்தைக் கடக்கவும், கடந்து சென்று மகிழ்வை விதைக்கவும் நம்மைத் தூண்டுகிறது மரியாளின் முதல் பயணம்.

2. நாசரேத்திலிருந்து பெத்லகேமிற்கு

'தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்' என எழுதுகிறார் லூக்கா (2:4-5). மரியரிளின் இரண்டாம் பயணம் நாசரேத்தில் தொடங்கி பெத்லகேமில் முடிகிறது. பயணத்தின் காரணம் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது: பெயரைப் பதிவு செய்ய. லூக்கா இந்த நற்செய்திப் பகுதியில் முதலில் யோசேப்பு தான் பயணம் செய்வதாகவும், மரியாள் உடன் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தாலும், அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் மரியாளையே முன்னிறுத்துகின்றன.
லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிடும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வரலாற்றுத் தவறுகள் உள்ளதாக ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். அகஸ்து சீசர் பற்றியும் குரேனியு பற்றியும் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் நற்செய்திக் குறிப்புகளோடு ஒத்துப் போகவில்லை. மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது வழக்கமாக ஒருவரது சொந்த ஊரில் தான் எடுக்கப்படும் (இன்றுவரை!). அப்போதுதான் ஒருவரது அசையும் சொத்து, அசையாச் சொத்து என அனைத்தையும் முறையாகப் பதிவு செய்ய முடியும். மற்றொரு ஊரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதும், அங்கே ஒருவர் தனக்குச் சொந்தமான அனைத்தையும் தூக்கிக்கொண்டு சென்று பதிவு செய்வதும் நடக்கக் கூடிய காரியம் அல்ல. பின் எதற்காக லூக்கா நற்செய்தியாளர் வலிந்து அவர்களைப் பெத்லகேமிற்கு அனுப்புகிறார்?

மரியாள் மற்றும் யோசேப்பின் சொந்த ஊர் கலிலேயாவிலுள்ள நாசரேத்து. இயேசு வாழ்ந்த காலத்து  யூதா நாடு அல்லது இஸ்ரேல் நாடு கலிலேயா, யூதேயா மற்றும் சமாரியா என்று மூன்று மாகாணங்களை உள்ளடக்கியது. எருசலேம் நகரமும் அதன் மேன்மையான ஆலயமும் இருந்தது யூதேயாவில். இங்கேதான் அரச வம்சாவழிகளும், முதன்மைக் குடிமக்களும் வாழ்ந்தனர். அதற்குக் கீழ் இருந்து கலிலேயா விவசாயிகள் மற்றும் தினக்கூலிகள் வாழும் நாடு. யூதேயாவிற்கு மேலிருந்த சமாரியாவில் அசீரியர்களுக்கும், யூதர்களுக்கும் பிறந்த கலப்பின மக்கள் என்று சொல்லப்பட்ட சமாரியர்கள் வாழ்ந்தனர். முதல் ஏற்பாட்டு நூலின் படி தாவீது அரசரின் சொந்த ஊர் பெத்லகேம். பெத்லகேம் என்றால் 'அப்பத்தின் வீடு' என்பது பொருள். இயேசுவை தாவீதின் மகன் என வானதூதர் சொன்னதால், தாவீதிற்கும் நாசரேத்திற்குமான 'கேப்பை' இந்தப் பயணத்தின் வழியாக 'ஃபில்லிங்' செய்கின்றார் லூக்கா.

மரியாளின் இந்தப் பயணம் நமக்குச் சொல்வது என்ன? 'வீ மஸ்ட் நாட் டேக் எக்ஸெப்ஷன்ஸ்!' இன்னைக்கு நம் நாட்டில் உள்ள பெரிய பிரச்சினையே இதுதான்: ஒருதலைப்பட்சம். இருக்கிறவனுக்கு ஒரு சட்டம். இல்லாதவனுக்கு வேறு சட்டம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று நாம் வெளியே சொல்லிக் கொண்டாலும், சட்டம் எல்லாரையும் ஒன்று போல ஆட்சி செய்வதில்லை. மேலும், தனி நபர் தன் அதிகாரம், ஆள்பலம் மற்றும் பணத்தை வைத்து தன்னை 'எக்ஸெப்ஷன்' ஆக்கிக் கொள்ளலாம். டிராஃபிக்கில் சிகப்பு லைட் எரிந்தாலும் கடந்து செல்லலாம். பொதுவிடத்தில் வண்டியை நிறுத்தலாம். சாமானியர்களை மிரட்டலாம். என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், மரியாள் தன் வயிற்றில் இருப்பது கடவுளின் மகன் தான் எனத் தெரிந்திருந்தாலும், தன் மகன் நினைத்தால் தனக்காக என்ன புதுமைகளையும் நிறைவேற்றலாம் என நினைத்தாலும், மற்றவர்களோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்கின்றார். எல்லாரும் தங்கள் ஊர்களைவிட்டுச் செல்லும் போது, நான் ஏன் கருவுற்றிருப்பதாகச் சாக்குப் போக்கு சொல்ல வேண்டும்? எனக்கு மட்டும் ஏன் எக்ஸெப்ஷன்? என்று புறப்படுகிறார். வழியில் பாதை கண்டிப்பாக எளிமையாக இருந்திருக்காது. பேறுகாலம் நெருங்குகின்ற வேளையில் பெரும் பயணமா? பயணத்தின் இறுதியில் தங்குவதற்குக் கூட சத்திரத்தில் இடமில்லையா? என்று கலங்கவில்லை. 'என்னய்யா பொறுப்பான ஹஸ்பன்ட் நீ!' என யோசேப்பைச் சாடவோ, ஏன் மேல் சுயஇரக்கம் காட்டவோ கூடத் துணியவில்லை.

வாழ்வின் இன்பங்கள் எல்லாம் சின்னச் சின்ன இடைஞ்சல்களிலும், துன்பங்களிலும் தான் வெளிப்படுகின்றன என மரியாளுக்குத் தெரியும். நம்ம வாழ்வில் பிரச்சினைகள் வரும் போது முதலாக நாம் செய்ய நினைப்பது அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதுதான். நமக்குத் தெரிந்தவர்களின் சிபாரிசுகளைக் கொண்டோ, நம் ஆற்றல், பணத்தைக் கொண்டோ 'எப்படியாவது' வெளிவந்திட நினைக்கிறோம். மரியாள் இன்று நமக்கு மாற்றுப் பாதை காட்டுகின்றார். 'கொஞ்சம் போய்த்தான் பாருங்களேன்!' என்கிறார்.

மரியாளின் இரண்டாம் பயணம் கொண்டு வந்தது மீட்பு. மீட்பு என்பது ஏதோ மறுவுலகம் சார்ந்து அன்று. மீட்பு என்பது நாம் உள்ளுக்குள் உணரும் ஒரு விடுதலை உணர்வு. நெடுநாள் நம்மைப் பிடித்திருந்த மது, சுய இன்பம் மற்றும் விடமுடியாத ஏதோ ஒரு பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நமக்குள் தோன்றும் விடுதலை உணர்வே மீட்பு. 'இனி நான் எதற்கும் அடிமையில்லை!' என்று நம் ஆழ்மனம் சொல்ல ஆரம்பிப்பதே மீட்பின் தொடக்கம். பெத்லகேமில் தான் மரியாள் இயேசு என்னும் மீட்பரை உலகிற்குக் கொணர்கின்றார். இயேசுவின் மீட்பு என்பது இந்த உணர்வுதான். தான் செல்லும் இடங்களில் இயேசு விதைத்தது இந்த உணர்வைத் தான். தான் அழைத்த முதற்சீடர்கள், தான் சந்தித்த சக்கேயு, தன்னிடம் இழுத்துவரப்பட்ட விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் என அனைவரையும் பிடித்திருந்த ஒரு அடிமை உணர்வை நீக்கி விடுதலை உணர்வை உள்ளத்தில் மலரச் செய்கின்றார். 'உயர்ந்தவர் - தாழ்ந்தவர்' என்ற உணர்விலிருந்து 'சமத்துவம்' என்ற உணர்விற்கு அழைக்கிறார். 'கடவுளைப் பெரிய நீதிபதி!' என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் நடுவில் கடவுளை 'அப்பா!' என அழைக்கத் துணிகிறார். இந்தச் சின்ன சின்ன மாற்றங்கள் தாம் மீட்பு. மீட்பு என்பது ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக மாறி நம் வீடு நிறைய தங்கமும், டாலர் நோட்டுக்களும் இருக்கும் என்ற நிலை அல்ல. மாறாக, சின்னச் சின்ன வாழ்வியல் மாற்றங்களே மீட்பு.

மூன்று பேர் ஒரு பரிசல் எடுத்து ஆற்றின் அக்கரைக்கு மது அருந்தச் சென்றனர். மது போதையில் இக்கரை திரும்புவதற்காக பரிசலில் ஏறியவர்கள் பரிசல் போடத் தொடங்குகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக விடியத் தொடங்க இவர்களின் போதையும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தொடங்குகிறது. விழித்தெழுந்த அவர்கள் தாங்கள் இன்னும் அக்கரையிலேயே இருப்பதை உணர்கிறார்கள். காரணம் என்ன என்று சுற்றிலும் பார்க்கிறார்கள். மது போதையில் மரத்தில் கட்டியிருந்த பரிசல் கயிற்றை அவர்கள் அவிழ்க்கவில்லை.

நாமாகக் கட்டிக் கொண்டிருக்கும் பரிசல் கயிறுகளை அகற்றி மீட்பு என்னும் விடுதலை உணர்வுக்கு நம்மை அழைக்கிறது மரியாளின் இரண்டாம் பயணம்.

(பயணம் தொடரும்)

மரியாளின் பயணங்கள் - 1

ஒரு நாவலைப் படித்ததால் அன்னை மரியாளின் மேலுள்ள பக்தி மீண்டும் உயிர் பெற்றது என போன வாரம் எழுதியிருந்தேன்.

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த அன்னையின் மேல் இன்னும் ஆர்வம் வரத் தொடங்கியது. ஆகையால் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கும், திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா ஆலயத்திற்கும் சென்றேன். அந்த இரண்டு நாட்கள் அனுபவம் மிக அருமையாக இருந்தது.

எனது இரண்டாம் புத்தகம் அன்னை மரியாளைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று அங்கே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்படின்னா முதல் புத்தகம் எழுதியாச்சா? அதாங்க, மூன்று வருடங்களுக்கு முன்பாக வந்த 'அவரோடு' என்னும் நூல். தவக்கால மற்றும் உயிர்ப்புக்கால சிந்தனைகளைத் தாங்கி வந்த நூல். என் குருத்துவ அர்ப்பணத்தின் விருதுவாக்கையே அந்த நூலுக்கு தலைப்பாக்கிக் கொண்டேன்.

அன்னை மரியாளின் ஏழு - ஏழு. இதுதான் இந்தப் புதிய புத்தகத்தின் கான்செப்ட். அன்னை மரியாளின் ஏழு என்றால் வழக்கமாக நாம் அவரது ஏழு துயரங்களைத் தான் நினைப்போம். ஆனால் அதையே கொஞ்சம் நீட்டி அன்னை மரியாள் பேசிய ஏழு வார்த்தைகள், அன்னை மரியாளிடம் பேசப்பட்ட ஏழு வார்த்தைகள், அன்னை மரியாளின் ஏழு மௌனங்கள், அன்னை மரியாளின் ஏழு பயணங்கள், அன்னை மரியாளின் ஏழு மகிழ்ச்சிகள், அன்னை மரியாளின் ஏழு நிழல்கள் என கற்பனை செய்யத் தோன்றியது. இவைகளில் அன்னையின் மௌனங்கள் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம். மற்றவைகளை எழுதத் தொடங்கி எல்லாம் ஒவ்வொரு பத்தியில் நிற்கிறது. ஆக, இப்படி வலைப்பதிவில் தினமும் எழுதினால் இதை எளிதாகவும், வேகமாகவும் எழுதி முடித்துவிடலாம் என்ற ஆசையில் இன்று முதல் இந்த எண்ண ஓட்டங்களை வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இன்று நாம் தொடங்கவிருப்பது பயணங்கள். ஆம்! அன்னை மரியாளின் ஏழு பயணங்கள்!

பயணங்கள் முடிவதில்லை. அலைகள் ஓய்வதில்லை என்பார்கள்.

நம் வாழ்க்கையை ஒரு ரயில் பயணத்திற்கு ஒப்பிடலாம். எங்கோ புறப்பட்ட ரயில் எங்கோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் ஒரு ஸ்டேஷனில் ஏறுகிறோம். நாம் ஏறுகின்ற பெட்டியில் ஏற்கனவே ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் நமக்கு உறவினர்கள் என மற்றவர்கள் அறிமுகம் செய்து வைக்கின்றனர். மற்றும் சிலரை நாமாகவே பழகிக் கொள்கிறோம். அடுத்த ஸ்டேஷனில் சிலர். அதற்கடுத்து சிலர் என ஆட்கள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். புது முகங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவர்களோடும் அறிமுகம் ஆகிறோம். சிலரோடு சேர்ந்து சாப்பிடுகிறோம். சிலரோடு அப்படியே வாக்கிங்கும் போகிறோம். வெளியில் வேடிக்கை பார்க்கிறோம். பொருட்கள் வாங்குகிறோம். பரிமாறிக் கொள்கிறோம். கூடவே வந்தவர்கள் திடீரென இறங்க ஆரம்பிக்கிறார்கள். தனிமை கொஞ்சம் வாட்ட ஆரம்பிக்கிறது. அடுத்த பெட்டிக்குப் போனால் தனிமை மறையும் என்கின்றனர் சிலர். நாம் போயும் பார்க்கிறோம். அங்கேயும் நம் உடன் வரும் சிலர் அடுத்தடுத்து இறங்க ஆரம்பிக்கின்றனர். நாமும் இறங்க வேண்டுமோ என்ற பயம் நம்மை தொற்றிக் கொள்கின்றது. இன்னும் யார் ஏறுவா என்ற ஏக்கம், யார் இறங்குவா என்ற கவலை, நாம எங்க எறங்கணும்கிற பயம் என்று டிரெய்ன் சென்று கொண்டே இருக்கிறது.

பயணத்தைப் பயணம் எனக் குறிக்கும் பண்புகள் மூன்று:

அ. இலக்கு. ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு இலக்கு இருக்கிறது. ஒரு பஸ்ல ஏர்றோம். கண்டக்டர் நம்மள எங்க போகணும்னு கேட்கிறார். தெரியலயே என்று நாம் பதில் சொன்னாலோ அல்லது ஏதாவது ஒரு டிக்கெட் கொடுங்க என்று சொன்னாலோ நம்மை ஏற இறங்கப் பார்ப்பார். 20 நிமிடங்கள் நாம் செல்லும் சின்னப் பயணத்திற்குக் கூட இலக்கு தேவைப்படுகிறது. நம் பயணங்களின் இலக்குகளாகப் பெரும்பாலும் மனிதர்களே இருக்கிறார்கள். நாம் யாரையாவது சந்திக்கப் போகிறோம். அல்லது அந்தச் சந்திப்பின் வழியாக ஏதாவது ஒன்றை நிறைவேற்றிக்கொள்ளப் போகிறோம். உதாரணத்திற்கு, வங்கிக்குப் போகிறோம். வங்கியின் காசாளரைச் சந்திக்கப் போகிறோம். அந்தச் சந்திப்பின் வழியாக நம் அக்கவுண்டில் பணம் போடப் போடுகிறோம்.

ஆ. இயக்கம். இலக்கு மட்டும் இருந்தால் பயணம் பயணமாகிவிடுமா? இல்லை. இயக்கம் அவசியம். ஒரு இடத்திலிருந்து நாம் மற்றொரு இடத்தை நோக்கி இயங்க வேண்டும். மருத்துவமனைக்கு நாம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என வைத்துக் கொள்வோம். மருத்துவமனை என்ற இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை நோக்கிய இயக்கம் இருக்க வேண்டும். இயக்கத்திற்கு அவசியம் விடுதல். அதாவது, வீடு என்ற ஒன்றை விட்டு வெளியேறினால் தான் நாம் மருத்துவமனை என்ற இலக்கை அடைய முடியும். ஆக, ஒவ்வொரு பயணத்திலும் நாம் கண்டிப்பாக ஒன்றை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. ஒன்றிலிருந்து நாம் வெளியேறுகிறோம். மற்றொன்றினுள் உள் நுழைகிறோம். வீட்டை விட்டு வெளியேறி பேங்கிற்குள் நுழைகிறோம். பேங்கிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் நுழைகிறோம். ஆக, உள்ளும் வெளியே இயங்கும் இயக்கம் பயணத்தின் இரண்டாவது கூறு.

இ. இணைப்பு. இதை இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று, நாம் பயணம் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தோடும், இடத்தோடும் நம்மையே இணைத்துக் கொள்கிறோம். இந்த இரண்டோடும் தொடர்பு இல்லாமல் நாம் பயணம் செய்ய முடியாது. காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரசில் நாம் பயணம் செய்கிறோம் என்றால், அந்த நேரத்தில் நாம் வைகை எக்ஸ்பிரசில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், நேரத்தோடும், இடத்தோடும் நம்மை இணைத்தால் தான் பயணம் செய்ய முடியும். இரண்டாவதாக, நாம் மற்ற பயணிகளோடு இணைகின்றோம். நாம் நடந்து சென்றால் கூட அந்தப் பயணத்தில் யாரோ ஒருவர் போட்ட சாலையைப் பயன்படுத்துகிறோம். யாரோ ஒருவர் நட்ட மரத்தின் அடியிலோ, கட்டிய சத்திரத்தின் நிழலிலோ இளைப்பாறுகிறோம். ஏதோ ஒரு வகையில் நாம் அந்த முகம் தெரியாத மனிதரோடு இணைந்திருக்கிறோம். ஒவ்வொரு பயணத்திலும் நாம் தெரிந்தவர்களோடும், தெரியாதவர்களோடும் இணைந்தே இருக்கின்றோம்.

இந்த மூன்று அம்சங்களும் எல்லாப் பயணங்களுக்கும் பொருந்தக் கூடியவை.

நம் வாழ்வில் சில பயணங்களை நாம் விரும்பி மேற்கொள்கிறோம். சிலவற்றில் நாம் கட்டாயப்படுத்தி அனுப்பப்படுகிறோம். சில பயணங்களை ரசிக்கிறோம். சில பயணங்களைக் கண்டு எரிச்சல் படுகிறோம். சில பயணங்கள் சீக்கிரம் முடிந்துவிட்டதாக வருந்துகிறோம். சில பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சில பயணங்களை மற்றவர்களோடு மேற்கொள்கிறோம். சில பயணங்களில் தனிமையே இன்பம் என நினைக்கிறோம். சில பயணங்களை நினைத்து நினைத்து அகமகிழ்கிறோம். சில பயணங்களை முயற்சி செய்து மறக்க நினைக்கிறோம்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பயணத்திற்கு எப்போதும் இரண்டு முகம் உண்டு. தொடங்கும் பயணம் கண்டிப்பாக முடிய வேண்டும். பயணம் என்னும் வட்டம் நிறைவு பெற வேண்டும். பிறக்கும் நாம் இறக்க வேண்டும். ஏறும் நாம் இறங்க வேண்டும். கை குலுக்கும் நாம் கையசைக்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம்.

ஒருசிலரைப் பார்த்து 'அவன் அங்கேயே போய் செட்டில் ஆயிட்டான்!' என்பார்கள். சில பயணங்கள் விபத்தினாலோ, இழப்பினாலா, இயற்கைச் சீற்றத்தாலோ பாதியிலேயே முடிந்துவிடுகின்றன. நாமாக பயணத்தை முடித்துக் கொண்டாலோ, விபத்தால் பயணம் தடைபட்டாலோ அங்கே அழுகையும், கண்ணீருமே மிஞ்சுகின்றது.

இன்னைக்கு நாம எவ்வளவோ பயணங்களை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு பயணமும் எதற்காக மேற்கொள்ளப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்போதுதான் நிறைவு பெறுகிறது. நம் பயணங்கள் அன்னை மரியாளின் பயணங்களோடு தொடர்புடையவையா? அன்னையின் பயணங்களின் நோக்கங்கள் என்ன என்பதை நாளை காண்போம்!

(இன்ட்ரோவே இவ்வளவு பெருசா வரும்னு நினைச்சு கூட பார்க்கல!)

(பயணம் தொடரும்)