Monday, February 10, 2014

உப்பு பொம்மை

ஒரு ஜென் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்வதற்கு இளைஞன் ஒருவன் வருகிறான். அந்த இளைஞனிடம் மூன்று பொம்மைகளைக் காட்டுகின்றார் மூத்த துறவி கியான். ஒரு பொம்மை கண்ணாடியால் ஆனது. இரண்டாவது பொம்மை பஞ்சால் ஆனது. மூன்றாவது பொம்மை உப்பால் ஆனது. 'இந்தப் பொம்மையில் எது உனக்குப் பிடிக்கும்?' எனக் கேட்கின்றார் துறவி. பளபளப்பாய் இருந்த கண்ணாடி பொம்மையைச் சுட்டிக்காட்டிய இளைஞன், 'இதுதான்!' என்கிறான். துறவி அவனை அழைத்துக்கொண்டு பொம்மைகளையும் எடுத்துக்கொண்டு கடலுக்குச் செல்கிறார். மூன்று பொம்மைகளையும் கடலுக்குள் எறிகின்றார். கண்ணாடி பொம்மை தொட்டும், தொடாமல் தண்ணீரின் மேலேயே கிடக்கின்றது. பஞ்சு பொம்மை தண்ணீரை தனக்குள் இழுத்துக் கொண்டு தன் உருவையே மிஞ்சி விகாரமாக ஆகிவிடுகிறது. உப்பு பொம்மை கரைந்து விடுகிறது. 'தொட்டும், தொடாமல் இருப்பதும், உறிஞ்சி தனக்கென வைத்துக்கொள்வதும் ஜென் அல்ல. இறையோடு கலப்பதே ஜென்' என்கிறார் கியான். ஞானம் பெற்றான் இளைஞன்.

இயேசுவின் மலைப்பொழிவின் தொடர்ச்சியாக, ஏன் அதன் ஒரு பகுதியாகவே இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது. மூன்று உருவகங்களை முன்வைக்கின்றார் இயேசு: உப்பு, ஒளி, மலைமேல் இருக்கும் நகர்.

1. உப்பு: பழைய ஏற்பாட்டில் உப்பு பல அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது. பலிப்பொருளில் முக்கியமானதாக உப்பு கருதப்பட்டது (லேவி 2:13, எசேக் 43:24). உடன்படிக்கையின் அடையாளமாக (எஸ்ரா 4:14, எண் 18:19), தூய்மைச்சடங்கிற்காக (2அர 2:19-26), பொருட்களை பதப்படுத்துவதற்காக (யோபு 6:6) என பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டது உப்பு. மேலும் ஒன்றாக சேர்ந்து உணவு உண்பதற்கு 'உப்பைப் பகிர்வது' என்ற பெயர் கொடுக்கப்பட்டது. உப்பு பயன்தர வேண்டுமென்றால் 'உவர்ப்புத்தன்மை' அவசியம். உவர்ப்புத்தன்மை எப்போது கரைந்து போகும்? தகாத பொருட்களோடு சேர்ந்தால் அது தன் இயல்பை இழந்துவிடலாம். உவர்ப்புத்தன்மை இல்லையென்றால் அது பலன்தராமல் போய்விடுகிறது. உப்பின் இயல்பு தனக்காக இருப்பதற்கு அல்ல, மற்ற பொருட்களோடு இணைந்து அதன் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதே. அதுபோல சீடர்களும் இருப்பது தங்களுக்காக அல்ல, மாறாக, மற்றவர்களுக்காகவும், மற்றவர்களோடும் கலந்து மற்றவர்களின் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கே. அவர்கள் தகாத பொருட்களோடு இணைந்தால் அவர்களின் 'உவர்ப்புத்தன்மையும்' நீர்த்துப்போக வாய்ப்பு இருக்கின்றது. 'உலகிற்கு உப்பு நீங்கள்' என்றால் இந்த உலகத்தோடு நாம் கலக்க வேண்டும் என்பது பொருள். சோற்றிற்குள் இடப்படுகின்ற உப்பு சோற்றோடு கரைந்து விடுகிறது. இனி அதைத் தனியாகப் பிரித்து எடுக்க முடியாது. ஆனால் அதன் தன்மையை சோறு தன்னகத்தில் எடுத்துக்கொள்கிறது. அதனால் சுவை பெறுகிறது. வெறும் உப்பினால் பயன் இல்லை. அந்த உப்பு மற்ற உணவுப்பொருளோடு இணையும்போதுதான் அது அர்த்தம் பெறுகிறது.

2. ஒளி. ஒளி எப்படி இருக்கும்? இருளின் மறைந்த நிலையே ஒளி. ஒளி மற்ற பொருட்களையெல்லாம் அடையாளம் காட்டும். ஆனால் ஒளி இப்படித்தான் இருக்கும் என நாம் சொல்லிவிட முடியாது. நாம் பயன்படுத்தும் மெழுகுதிரி, ஒளி விளக்கு, நெருப்பு அனைத்துமே ஒளியின் வடிவங்கள்தாம். அவற்றில் இதுதான் ஒளி என நாம் எதையும் வரையறுத்துவிட முடியாது. ஒளியை யாரும் பொத்தி மூடிவிடவும் முடியாது. கார்மேகம் மறைத்தாலும் சூரியனின் ஒளி அதைச்சுற்றி வெள்ளை வெளேரென தன் முகத்தைக் காட்டிவிடுகிறது. ஒளி ஒளியாக மட்டுமே இருக்க முடியும். நான் இன்று ஒளியாக இல்லை, நான் கொஞ்சம் மட்டும் ஒளியாக இருக்கிறேன் என்று அது சொல்ல முடியாது. முழுமையாக ஒளிர வேண்டும். அல்லது அணைந்து போக வேண்டும். இடைப்பட்ட நிலையே கிடையாது. 'வெப்பமாக இருக்க வேண்டும். அல்லது குளிராக இருக்க வேண்டும். இடைப்பட்ட நிலையில் வெதுவெதுப்பாக இருக்க முடியாது'. சீடர்களின் இயல்பும் அதுதான். இன்று சீடராக இருக்கிறேன். நாளை நான் வேறு மாதிரி இருக்கிறேன் எனவும், இன்று நான் யாருக்கும் பயன்பட மாட்டேன். நாளை பயன்பட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவு செய்ய முடியாது. சீடனாக இருக்க வேண்டும். அல்லது இருக்க முடியாது. 50-50 மனநிலைக்கு வாய்ப்பே இல்லை. தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லையென்றாலும் மற்றவர்களுக்கு ஒளி காட்ட வேண்டியது ஒளியின் வேலை. நல்லவர் கெட்டவர் எனப் பாகுபாடு காட்டாமல் அனைவர்மேலும் ஒளிர வேண்டும். நல்லது, கெட்டது என இல்லாமல் எல்லாவற்றையும் அடையாளம் காட்ட வேண்டும். தன்னைச் சுற்றியிருப்பவைகளை, தன்னைச் சுற்றியிருப்பவர்களை ஒளிரச் செய்ய வேண்டும்.

3. மலைமேல் உள்ள ஊர். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது. அது மறைவாக இருக்க வேண்டுமென்றால் பள்ளத்தாக்கில்தான் இருக்க வேண்டும். சீடத்துவம் என்பது உயர்ந்த நிலை. அந்த உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தாங்கள் விரும்புகிறார்களோ இல்லையோ மற்றவர்களின் கண்களுக்குத் தெரிந்துகொண்டேதான் இருப்பார்கள். இது ஒரு பெரிய பொறுப்புணர்வை நமக்குத் தருகின்றது. பிறர் நம்மைப் பார்க்கிறார்கள் எனில் நம் செயல்கள் மேன்மையானவையாக இருக்க வேண்டும். 'இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக!' (உரோ 13:12).

1 comment:

  1. Anonymous2/10/2014

    இந்த "ஜென்" கதைகள் மிக எளிமையான முறையில் சொல்லப்பட்டாலும் வாழ்க்கையின் த்த்துவங்களை அவை உணர்த்தும் விதம் அருமை.தேவையில் இருக்கும் நம் சகோதர்ர்களின் வாழ்வில் ஒளியாக,உப்பாக சுவை கூட்டுவோம்.நம் இல்லத்தை மட்டுமல்ல,அவர்களின் இல்லத்தையும் மலைமேல் கட்ட உதவுவோம். பிறர் நம்மை "யார் இவர்கள்?" என்று அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு நம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வோம்.

    ReplyDelete