Wednesday, February 26, 2014

என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்!

இயேசுவைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான். வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, 'இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?' என்று கேட்டார். அதற்கு அவர், 'குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள் மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்றார். இயேசு அவரை நோக்கி, 'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று கதறினார். (மாற்கு 9:20-24)

நேற்றைய நற்செய்தியை திருப்பலியில் வாசிக்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் தண்ணீர் கோர்த்தது. இந்த முறை இந்த நற்செய்தியை வாசித்த போது இதே நிகழ்வு இப்போதே நடப்பது போல இருந்தது. நான் தேனியில் அருட்பணியாளராய்ப் பணியாற்றிய போது ஒரு நாள் காலை வாக்கிங் முடிந்து திரும்பினேன். என் அறைக்கு அருகில் ஆரம்பப் பள்ளி உண்டு. அந்த ஆரம்பப் பள்ளிக்கு வந்து கொண்டிருந்து சிறுமி ஒருத்தி கோவிலை ஒட்டி அமர்ந்திருந்தாள். நான் அறைக்குச் சென்று அறையைத் தாளிடும்போது மறுபடியும் அவளை எதார்த்தமாகக் கவனித்தேன். அப்படியே சாய்ந்தாள். சற்று நேரத்தில் கையும் காலும் இழுத்தது. வாயெல்லாம் நுரை. ஓடிச் சென்று பார்த்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை? ஏதாவது இரும்பைக் கொடுத்தால் அடங்கும் என்று எங்கோ சொல்லக் கேட்டு அவளின் கைகளில் கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் அமைதியானாள். அவளின் முகமெல்லாம் வியர்வை. துடைத்து விட்டு அவளுக்கு காஃபி போட்டு கொடுத்தேன். பின் அவளின் பெற்றோரை அழைத்து வரச் சொன்னேன். அவர்களும் வந்தார்கள். மிகவும் பரிதாபமான பெற்றோர். ஒருநாள் அந்தக் குழந்தைக்கு நடந்ததையே என்னால் தாங்க முடியவில்லை. அந்தப் பெற்றோர்கள் எத்தனை முறை இரவிலும், பகலிலும் அவளுக்கு உதவி செய்திருப்பார்கள்.

மற்றொரு முறை திருவனந்தபுரத்திலிருந்து ஒரு ஆசிரியரின் காரில் மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென்று அவரின் தம்பியை ஓட்டச் சொல்லிவிட்டு பின்னால் அமர்ந்தார். வண்டி சென்று கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு வலிப்பு வர அப்படியே நிறுத்தி அவருக்கு முதலுதவி செய்தோம். அவர் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு வேளை வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக விபத்து நடந்திருக்கும். 

இப்பொழுதுதான் வரும், அப்பொழுதுதான் வரும் என்று கணிக்க முடியாத ஒரு கொடிய நோய் இது. பாவம் இதனால் வருத்தப்படுவோர். இதைக் குணமாக்க இப்போது மருத்துவம் வளர்ந்து விட்டது என்பது குறித்து மகிழ்ச்சி. இயேசுவின் காலத்தில் இந்த நோய்க்குக் காரணம் அலகை என நினைத்தனர். அந்த அப்பாவித் தந்தையும் அப்படியே நினைத்திருப்பார். ஆனால் அலகையும் இருந்து, இந்த நோயும் இருந்தால் அந்தச் சிறுவன் பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான். 

சுற்றி நின்ற கூட்டத்திற்கு இது ஒரு பெரிய வேடிக்கையாக இருந்திருக்கும். 'நமக்கு நடக்கும் வரை நடப்பதெல்லாம் வேடிக்கை' என்பார் கண்ணதாசன். இயேசுவுக்கு ஏன் அக்கறை? குணமாக்க நினைக்கின்றார். நான் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பேன்? நீங்க என்ன செஞ்சிருப்பீங்க?

மிக எதார்த்தமான இயேசுவின் உரையாடலை இங்கே பதிவு செய்கிறார் மாற்கு நற்செய்தியாளர். இயேசு ஒரு மந்திரவாதி அல்ல. எடுத்தவுடன் குணமாக்கி விட. அவரின் மனிதாபிமானம் இங்கே அழகாகச் சித்தரிக்கப்படுகின்றது. 'எவ்வளவு காலம் இது இவனுக்கு இருக்கிறது?' என்று கேட்கின்றார். என்ன ஒரு அக்கறை? அந்த அப்பாவி அப்பாவுக்குத் தெரியவில்லை இயேசுவால் குணமாக்க முடியும் என்று. ஆகையால் தான் 'உம்மால் இயலுமானால்!' என்கிறார். 'நம்புகிறவருக்கு எல்லாம் முடியும்!' என்கிறார் இயேசு. நம்பிக்கையில் தளர்வுறும் போது எல்லாமே தளர்ந்து விடுகிறது. 'நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்!' என்கிறார் அந்த அப்பா. மிக எளிய செபம். தன் லிமிட்டை உணர்ந்தவர் அந்த அப்பா.

குடும்பத்தில் வேலை, குழப்பம், பிரச்சினை என புலம்பிக் கொண்டிருக்கும் சாமானியர்கள் தாம் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள் என்பேன் நான். நான் ஒரு சில நாட்கள் நினைத்துப் பார்த்ததுண்டு. என்னுடைய கவலைகள் எவை? அந்தப் பட்டியல் இப்படி இருக்கும்: திருப்பலி வைக்க வேண்டும்? மறையுரை தயாரிக்க வேண்டும்? காலை செபம் சொல்ல வேண்டும்? எபிரேயம் படிக்க வேண்டும்? கிரேக்கம் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்? மொபைல் டாப் அப் செய்ய வேண்டும்? வைஃபை பாஸ்வேர்ட் மாற்ற வேண்டும்? நல்ல மொபைல் ஃபோன் வாங்க வேண்டும்? நாளைக்கு கறுப்பு கலர் டிரஸ் அணிய வேண்டும்? பிடிஎஃப் பைல்களை பிரிண்ட் எடுக்க வேண்டும்? ஸ்பைரல் செய்ய வேண்டும்? நேற்று அவனை விஷ் பண்ணினேன். அவன் கண்டு கொள்ளவில்லை. இன்று அவனை விஷ் பண்ணக் கூடாது? ஏன் என்னைப் பார்த்து சிரித்தான் எனக் கேட்க வேண்டும்? அவள் எப்போதும் என்னைப் பற்றியே பேசுகிறாள். அவளை அவாய்ட் பண்ண வேண்டும்? இதெல்லாம் பல நேரங்களில் என் கவலைகள்.

இதே நாட்களில் என் கிராமத்தில் இருக்கும் என் அம்மாவின் கவலைகள் என்னவாக இருக்கும் என்றும் நினைத்துப் பார்த்துள்ளேன்: பால் வாங்கப் போக வேண்டும். குழந்தைக்கு பிஸ்கட் வாங்க வேண்டும். பள்ளிக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும். குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மதியும் டவுணுக்குச் செல்ல வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும். நோயுற்றிருக்கும் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்க வேண்டும். ஊருக்கு வரும் பங்குத்தந்தைக்கு காலை உணவு கொடுக்க வேண்டும். மகளிர் கூட்டத்திற்கு அறிக்கை எழுத வேண்டும். கடந்த வாரம் வந்த பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். கடன் கேட்ட மல்லிகா அக்காவை பேங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

முதல் லிஸ்டையும் இரண்டாவது லிஸ்டையும் பாருங்களேன். முதலில் உள்ள லிஸ்டில் கவலையெல்லாம் தன்னைப் பற்றி. இரண்டாவது லிஸ்டில் கவலையெல்லாம் அடுத்தவர்களைப் பற்றி. இரண்டாவது லிஸ்டிலிருந்து புறப்படும் ஆன்மீகம் தான் இன்றைய நற்செய்தி காட்டும் ஆன்மீகம். 'நம்பிக்கையில் ஊன்றி இருப்பதற்காகவே பத்து ஆண்டுகள் படித்தேன்!' என்று சொல்கின்ற என் நம்பிக்கை இன்னும் தள்ளாடுகின்றது. நம்பிக்கைக்கும் எதிர்நோக்கிற்கும் அர்த்தம் தெரியாது. ஆனால் இரண்டையும் வாழ்ந்து காட்டும் சாமானியர்களின், அப்பாக்களின், அம்மாக்களின் நம்பிக்கை கற்பாறையாய் கலங்காமல் நிற்கின்றது.

'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்!'

1 comment:

  1. Anonymous2/26/2014

    நம்பிக்கை என்பது நாம் படித்து வாங்கும் பட்டம் போன்றதல்ல.அது நாம் நம்மீதும் நம்மைச்சுற்றியுள்ளோர் மீதும் வைக்கும் 'positive attitude'.இத நமக்குள்ளிருந்து வரவேண்டுமேயன்றி வெளியிலிருந்து அல்ல.தன்னை நம்பும் ஒருவனால்தான் அயலானையும் நம்ப முடியும்.ஆனால் இதற்கெல்லாம் அஸ்திவாரம் இறைவனோடு நமக்குள்ள உறவு...அதுதான் 'நம்பிக்கை.' இதைத் தனக்கே உரித்தான மென்மையான உணர்வுகளின் கலவையோடு பகிர்ந்துள்ள விதம் பாராட்டுக்குறியது.

    ReplyDelete