Sunday, February 23, 2014

கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்


ரியோகான் என்ற ஜென் துறவி ஒரு காட்டின் நடுவில் ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்தார். மிக எளிமையான வாழ்வு வாழ்ந்தார். ஒருநாள் இரவு அவரது குடிசைக்கு திருடன் வந்துவிட்டான். எங்கும் தேடி ஒன்றும் கிடைக்காமல் வெறுங்கையனாய்ப் புறப்படுகின்றான் திருடன். அவனை விரட்டிச் செல்கின்றார் ரியோகான். 'நண்பா! இவ்வளவு தூரம் வந்துவிட்டு நீ வெறுங்கையனாய்த் திரும்பக் கூடாது. இதோ என் உடைகளை எடுத்துச்செல்' எனச்சொல்லித் தன் உடைகளைத் திருடனிடம் கொடுத்து விடுகின்றார். ஆச்சர்யப்பட்ட திருடன் அதையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான். கொஞ்ச தூரம் சென்றுவிட்டு திரும்ப ரியோகானிடமே திரும்ப வருகிறான். அந்நேரம் நிலாவை நோக்கி தியானம் செய்து கொண்டிருக்கிறார் ரியோகான். கண்விழிக்கும்போது எதிரில் நிற்கின்றான் திருடன். 'என்னப்பா ஆடை போதவில்லையா? என்னால் முடிந்தால் அந்த நிலவையும் உனக்குக் கொடுத்துவிடுவேன்!' என்கின்றார் ரியோகான். ஞானம் பெற்றான் திருடன்.

இயேசு தன் மலைப்பொழிவில் பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் ஆறிற்கு புதிய அர்த்தங்கள் கொடுக்கின்றார் எனவும், அந்தச் சட்டங்கள் அனைத்தும் அன்பினால் பிண்ணப்பட்டவை எனவும் கடந்த வாரம் நாம் பார்த்தோம். கடந்த வாரத்தில் நான்கு சட்டங்களுக்கு இயேசு கொடுத்த புதிய அர்த்தத்தையும் பார்த்தோம். அன்பு என்ற நூலில் தொடர்ச்சியாக இந்த வாரமும் இரண்டு சட்டங்களைக் கோர்க்கின்றார் இயேசு.

5. அன்பு பழிவாங்குவதில்லை. 'கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்' என்ற பழைய ஏற்பாட்டுச் சட்டம் ஒருவரையொருவர் பழிதீர்த்துக் கொள்ள வழிகோலுவதாய் அமைந்திருந்தது. 'கண்ணுக்குக் கண்' என இந்த உலகத்தில் இன்னும் சட்டம் இருந்தால் நாம் அனைவரும் பார்வையற்றவர்களாகத்தான் இருப்போம் என்கிறார் காந்தியடிகள். பழி தீர்ப்பதற்குப் பதில் பரந்த மனம் காட்டுங்கள் என்ற புதிய அர்த்தம் கொடுக்கின்றார் இயேசு. தன் சமகாலத்தில் நடந்த மூன்று நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார் இயேசு. அ. வலக்கன்னத்தில அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள். நமக்கு முன் நிற்கும் ஒருவரை நாம் அறைந்தால் நம் வலது கையால் அவரது இடது கன்னத்தைத்தானே அறைய முடியும். அப்புறம் எப்படி வலது கன்னம்? உரோமையர்கள் தவறு செய்யும் யூதர்களை தங்கள் வலது கையால் அறைவார்கள். வலது கையின் உள்புறத்தால் அல்ல, மாறாக வெளிப்புறத்தால். அதாவது தங்கள் புறங்கைகளால் அறைவார்கள். எதற்காகவென்றால் யூதர்கள் மேல் தங்கள் உள்ளங்கைகள் பட்டால் தங்களுக்கு அசிங்கம் என நினைத்தார்கள். அப்படி அவர்கள் புறங்கையால் வலது கன்னத்தால் அடிக்கும்போது, மறு கன்னத்தைக் காட்டினால் அவர்கள்தான் அசிங்கப்பட்டுப் போவார்கள். ஆ. அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் மேலாடையையும் கொடுங்கள். மானம் மறைப்பது ஆடை. உள்ளாடையை நாம் இழந்த பின் மேலாடையால் என்ன பயன்? அதையும் கொடுத்து விடுங்கள். உங்களின் நிர்வாணம் அவனுக்கு அவமானமாய்ப் போய்விடும். இ. ஒரு கல் வரக் கட்டாயப்படுத்தினால் இரு கல் தூரம் செல்லுங்கள். ஒரு கல் என்பது மைல்கல். உரோமைப் படையினர் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பயணம் செய்யும்போது யாராவது யூதர்கள் வந்தால் அவர்களைக் கட்டாயப்படுத்தி தங்கள் ஆடைகள், உணவு, ஆயுதங்கள் என அனைத்துச் சுமைகளையும் அவர்கள் சுமந்துவரச் செய்வார்கள். அப்படி ஒரு யூதரைப் பயன்படுத்தி ஒரு கல் வரை அழைத்துச் செல்லலாம் என்பது உரோமைச் சட்டம். அதையும் மீறி நாமாகவே இரண்டு கல் தூரம் சென்றால் அது அவர்களுக்கே தண்டனையாக முடியும். இப்படியாக இந்த மூன்று நிகழ்வுகளில் அன்பின் வழி, மிதவாதமும், மிதவாதத்தின் வழி சுயமதிப்பும் கிடைக்கும் என்கிறார் இயேசு. இந்த மூன்றையும் செயல்படுத்தத் தேவையானது பரந்த மனம். பரந்த மனம் படைத்தவர்கள் மட்டுமே படபடப்பின்றி இருக்க முடியும். படபடப்பாக செயல்பட்டுப் பழி தீர்க்க நினைத்தால் நம்மேல் நாமே நெருப்பைக் கொட்டிவிடுவதாக ஆகிவிடும்.

6. அன்பு பகைவர்களையும் தழுவிக்கொள்ளும். 'பகைவர்களை அன்பு செய்வாயாக' என்று இயேசு புதிய அர்த்தம் கொடுக்கிறார் என்றால் 'பகைவர்கள் இருக்க வேண்டும்' என்பது பொருளல்ல. பகைவர்கள் இல்லாத அளவிற்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார். அன்பு ஒளியைப்போலவும், மழையைப் போலவும் இருக்க அழைப்பு விடுக்கின்றார் இயேசு. வானகத் தந்தையைப் போல நிறைவுள்ளவராக இருக்கச் சொல்கின்றார் இயேசு. நிறைவு எதில் வெளிப்படுகிறது? அனைவரையும் ஒன்றுபோலப் பார்ப்பதில். ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் கொண்டு வாழாமல், அனைவரையும் சமமாகப் பார்ப்பதே அன்பின் புதிய பரிமாணம். 'நல்லவர்கள் மேலும் கெட்டவர்கள் மேலும் சூரியன் சமமாகவே ஒளிர்கிறான். நீதியுள்ளோர் மேலும், நீதியற்றோர் மேலும் மழை ஒரே மாதிரிதான் பொழிகின்றது.'

இப்படியாக இந்த ஆறு நிலைகளிலும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களைவிட சீடர்களின் எண்ணங்கள் உயர்ந்திருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றார் இயேசு. சட்டம் என்று பார்த்தால் அது சுமை. அன்பு என்று பார்த்தால் அது சுகம். நம் வாழ்வில் இறைவனையும், சக உறவுகளையும் 'கட்டளையாகப்' பார்த்தால் அவர்கள் சுமைகளாகத்தான் தெரிவார்கள். அவர்களை நாம் அன்பு என்ற கண்ணாடியில் வைத்துப் பார்த்தால் அவர்கள் சுகங்களே.

1 comment:

  1. Anonymous2/23/2014

    இங்கே குறிப்பிடப்பட்ட 'ஜென்' துறவியின் மனநிலைக்குச் சென்றாலொழிய அதாவது தன்னையே வெறுமையாக்கினாலொழிய இயேசுவின் வழியில் 'அன்பின்' பரிமாணத்தைப் புரிந்து கொள்ளுதலும் பகிர்ந்து கொள்ளுதலும் கடினம்தான்.ஆயினும் 'முயற்சி திருவினையாக்குமல்லவா?' முயன்று பார்ப்போம்.ஞாயிறு வாழ்த்துக்கள்.

    ReplyDelete