Tuesday, February 18, 2014

அவரும் ஞானத்தைக் கொடுப்பார்

உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும். அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். ஆனால் நம்பிக்கையோடு ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். (யாக்கோபு 1:4-5)

'ஞானம்' - நாம் அதிகமாகக் கேட்கும் ஒரு வார்த்தை. ஞானத்தை பொன்னைவிட மேலானதாகக் கருதுகின்றது பழைய ஏற்பாடு. கடவுளின் ஞானமாக வந்தார் இயேசு என்கிறார் யோவான் நற்செய்தியாளர். ஞானம் என்பதன் பொருள் என்ன? 'ஞானம்' என்பது எபிரேய இலக்கியத்தில் கடவுளுடைய கொடை எனவும், கிரேக்க இலக்கியத்தில் 'செய்முறை அறிவு' என்றும் கருதப்படுகின்றது. யாக்கோபு திருத்தூதர் கிரேக்க இலக்கியத்தின் பொருளோடு எபிரேய இலக்கியத்தின் பொருளையும் இணைத்துச் சொல்கின்றார்.

அறிவிற்கும், ஞானத்திற்கும் என்ன வித்தியாசம்? நெருப்பு சுடும் என்பது அறிவு. நெருப்பு சுடும் என்பதால் அதைத் தொடக்கூடாது என்பது ஞானம். அறிவைச் செயல்முறைப்படுத்துதலே ஞானம். 'அறிவே ஆற்றல்' என்றார் பிரான்சிஸ் பேகன். அறிவு மட்டும் ஆற்றல் ஆகிவிடுமா? இல்லை. சர்க்கரை நோயாளர்கள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்பது அறிவு. இந்த அறிவு இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் சரியாகி விடுமா? சாப்பிடக் கூடாது என்ற அறிவு சாப்பிடமால் இருக்கும் செயலாக வடிவம் பெற வேண்டும். அதுவே ஞானம்.

ஞானம் (wisdom), திடம் (fortitude), நீதி (justice) மற்றும் மட்டுசனம் (temperance) - இந்த நான்கும் உரோமை அரசர்கள் வரலாற்றில் மேன்மையான மதிப்பீடுகளாகக் கருதப்பட்டன. இதற்கு எதிர்மறையாக உரோமை அரசர்கள் கருதியவை நான்கு: ambition, resourcefulness, courage மற்றும் devotion. முதல் நான்கையே விவிலியத்தின் ஞான நூல்களும் மதிப்பீடுகளாக வைத்துள்ளன.

இரண்டாம் ஆண்டின் புதிய பருவத்தை இன்று தொடங்கினேன். இன்று நான் வேண்டிக் கொண்டவையும் முதல் நான்கு மதிப்பீடுகளே. ஆனால் பல நேரங்களில் இரண்டாவது சொல்லப்பட்ட நான்கு மதிப்பீடுகளையே நான் பற்றியிருந்திருக்கின்றேன். ஆனால் இரண்டாம் நிலையிலிருந்து முதல் நிலைக்குக் கடந்து போதலே மேன்மை.

ஞானம் மேலிருந்து வரக்கூடியது. 

'எங்கள் வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்று உணரும் ஞானத்தைத் தாரும்' என்கிறார் தாவீது. இன்று நாம் கேட்கும் ஞானம் என்ன?

1 comment:

  1. Anonymous2/18/2014

    இறைவா, தாவீதுடன் சேர்ந்து அவர் உம்மிடம் கேட்ட அந்த 'ஞானத்தையே, நானும் வரமாகக் கேட்கிறேன்.இந்த ஒரு 'ஞானம்' மட்டுமே போதும் நம்மை மனிதர்களாக்க..புனிதர்களாக்க.எல்லாமே தெரிந்த விஷயங்கள்தான்...சிறிய விஷயங்கள்தான்.ஆனால் நாம் சிந்திக்க மறந்த விஷயங்கள்.அழகான விஷயங்களைத் தெளிவாக உரைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.தங்கள் இரண்டாம் ஆண்டின் 'புதிய பருவம்' சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete