உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. உன் உணவில் ஒரு பகுதியை பசித்திருப்போருக்கு வழங்கு. ஞானிகளிடம் அறிவுரை கேள். எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று. உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு. (தோபி 4:15-19)
அருட்பணியாளர்கள் அன்றாடம் திருப்பலி நிறைவேற்றுவதை விட கட்டளைச் செபம் சொல்வதையே திருஅவை ஒரு கடமையாக முன்வைக்கின்றது. பல நாட்களாக எனக்குள் ஒரு கேள்வி: எதற்காக செபத்தை, அதுவும் தொடர்ந்து ஒரே வகை செபத்தைத் தொடர்ந்து செபிக்க வேண்டும்? 'திருஅவையின் திருப்புகழ்மாலையின்' அர்த்தம் என்ன?
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக நான் இந்தத் திருப்புகழ்மாலையை தமிழில் செபிக்கின்றேன். ஆங்கிலத்திலும், இத்தாலிய மொழியிலும் சொன்ன போது இல்லாத ஒரு நெருக்கம் தமிழில் செபிக்கும் போது இருக்கின்றது.
திருப்புகழ்மாலையில் தினமும் வருகின்ற ஒரு வாக்கியம் இது:
'உளத்தை அவரே ஆண்டு நடத்திடவும்
உடலைத் தூயதாய்க் காத்திடவும்,
ஒளிரும் நம்பிக்கையில் நிலைத்து
உலகில் துலங்கிடவும் வேண்டிடுவோம்'
இந்த வாக்கியம் ஏதோ ஒரு வகையில் எல்லா நாட்களிலும் இருக்கும். இது உடல் தூய்மை மற்றும் உள்ளத் தூய்மையை முன்வைக்கின்ற ஒரு வாக்கியம். எதற்காக இது எல்லா நாட்கிளில் இடம் பெற வேண்டுமென்று நினைத்தேன். நேற்று சிம்பிள் ட்ரூத்ஸ் என்ற வலைத்தளத்தில் ஒரு கட்டுரை: 'நாம் ஏன் தினமும் குளிக்க வேண்டும்?' நாம் குளிக்கும் போது கிடைக்கின்ற உடல் சுத்தம் 24 மணி நேரங்களுக்குத் தான் தாங்குகின்றது. அதைத் தக்க வைத்துக்கொள்ள நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுபோலத் தான் உள்ளத்து ஊக்கமும். அதன் வாழ்நாளும் 24 மணிநேரங்கள் தான். அடுத்த நாளும் அது புதுப்பிக்கப்பட வேண்டும். அல்லது உள்ளம் வாடிவிடும்.
இதன் பின்னணியில் திருப்புகழ்மாலை இன்று எனக்கு இரண்டு பொருளைத் தருகின்றது:
1. நான் கடவுளோடு இருக்கிறேன். கடவுளுக்காக இருக்கிறேன் என்று நாம் நமக்குக் கொடுக்கும் ஊக்கம் தினமும் புதுப்பிக்கப்பட வேண்டும். உடல் தூய்மைக்குக் குளியல் உதவுவது போல உள்ளத் தூய்மைக்கு செபம் உதவுகிறது.
2. திருப்புகழ்மாலை நம்மை காலத்தையும் கடந்து போகச் செய்கின்றது. இன்றைய இறைவார்த்தைப் பகுதி தோபியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் வயது ஏறக்குறைய 4000 ஆண்டுகள் இருக்கும். இதை வாசிக்கும் போது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அப்பா தன் மகனுக்குச் சொன்ன அறிவுரை. அது இன்றும் எனக்குச் சொல்வது போலவே இருக்கின்றது. நாம் செபிக்கும் திருப்பாடல்களின் வயது ஏறக்குறைய 6000 ஆண்டுகள். நாம் இந்த உலகில் இருந்து சென்றாலும் அவைகள் தொடர்ந்து செபிக்கப்படும். திருப்புகழ்மாலை செபிக்கும் போது பல ஆண்டுகள் முன்னே செல்வது போன்ற அனுபவமும், பல ஆண்டுகள் பின்னே செல்வது போன்ற அனுபவமும் கிடைக்கின்றது.
தோபித்து,திருப்புகழ்மாலை இரு பகுதிகளுமே வாசிக்கவும் யோசிக்கவும் உகந்தவை.உடல் குளியலும் உள்ளக்குளியலும் அருட்பணியாளர்களுக்கு மட்டுமா..எல்லோருக்கும் தானே பொருந்தும்? நல்லவை எங்கிருப்பினும் எடுத்துக் கொள்வதுதானே விவேகம்..! யோசிக்க வைத்த உங்களுக்கு நன்றி.
ReplyDelete