Thursday, February 6, 2014

எவை தேவையில்லை?

இயேசு எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பியதையும், அவர்கள் தங்கள் பணிமுடிந்து திரும்பி வருதலையும் இன்று வாசிக்கக் கேட்டோம். 12 திருத்தூதர்களின் எண்ணிக்கை 72 சீடர்களாக மாறியிருப்பது இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் வளர்ச்சியுறும் தொடக்கத் திருஅவையின் முன்னோட்டமாக இருக்கின்றது. 70 மற்றும் 72 இஸ்ராயேல் மக்களின் சிந்தனையில் நிறைவை, வெற்றியை, ஆண்டவரின் பிரசன்னத்தைக் குறிக்கும் எண். இயேசு இருவர் இருவராக அனுப்புவதற்கு அடிப்படை இச 19:15. தொடக்கத் திருஅவையிலும் இந்த நிலை தொடர்கிறது: பேதுரு – யோவான், பவுல் - பர்னபா, பர்னபா – மாற்கு, பவுல் - சீலா என இருவர் இருவராக பணிக்குச் செல்கின்றனர். இயேசு பயன்படுத்தும் உருவகங்கள் இரண்டு: 1) அறுவடை. 2) ஓநாய்களிடையே ஆடுகள். அறுவடை என்ற உருவகம் (காண் யோவேல் 3:13, மீக்கா 4:11-13) செய்ய வேண்டிய பணியின் விரைவுத்தன்மையைக் காட்டுகின்றது. ஓநாய் - ஆடுகள் (எசாயா 11:6, 65:25) எதிர்கொள்ள வேண்டிய எதிர்ப்புக்களை அடையாளப்படுத்துகின்றது.

எவை தேவையில்லை? பணப்பை, வேறு பை, மிதியடி, வணக்கம் செலுத்துதல். குறைவான சுமை, நிறைவான பயணம் என்று இயேசு கற்றுக்கொடுக்கின்றார். பணப்பையும், மிதியடிகளும் நம் கவனத்தைத் திசைதிருப்புவை. இவைகளை எடுத்துச் சென்றால் நம் மனம் இவைகளைச் சுற்றியே இருக்கும். பணம் நாம் நம்பும் வாழ்வாதாரம். மிதியடி நம் பாதங்களைப் பாதுகாப்பவை மட்டுமல்ல. நமக்கு அந்தஸ்து கொடுப்பவை. நாம் திருமண நிகழ்விற்கோ, நேர்காணலுக்கோ, பொது நிகழ்விற்கோ செல்லும்போது நம்மைச் சில நேரங்களில் கூனிக்குறுகச் செய்வது நாம் அணிந்து செல்லும் மிதியடிகளே. 'சே...இதைப் போட்டு வந்து விட்டோமே' என்று நமக்குச் சின்ன தாழ்வு மனப்பான்மையைத் தருவதும் மிதியடிகளே. மற்றொரு வகையில் பார்த்தால் இயேசுவின் காலத்தில் கற்களும், முற்களும் நிறைந்த யூதேய பகுதிகளில் மிதியடிகள் இல்லாமல் செல்வது ஆபத்தாகத்தான் இருக்கும். பாதங்கள் நோகலாம். முட்கள் தைக்கலாம். ஆனால் 'வலியும், துன்பமும் அவை வலிக்கும் என்பது வரைக்குத்தான். ஓ...இதுதான் வலி என்று துணிந்துவிட்டால் மனம் அந்த வலியை எளிதாக வென்றுவிடும்'. 'வணக்கம் செலுத்துதல்' நம் வேகத்தைக் குறைக்கலாம். 'நான் வணக்கம் சொன்னேன். ஆனால் அவன் சொல்லல. ஏதோ கோபத்துல இருக்கானோ' என்று பிறரைப் பற்றி தேவையற்ற எண்ண ஓட்டங்களை இவை நம்முள் எழச்செய்யலாம்.

எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் கொடுக்க வேண்டியது 'அமைதி'. அமைதி - இது ஒட்டுமொத்த இஸ்ராயேல் மக்களின் ஏக்கம். மெசியா தரும் வாக்குறுதி. வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்: ஒரு பணியாளருக்குத் தேவை நிலைப்புத்தன்மை. இருக்கின்ற இடத்தில் இருப்பது - இதுதான் இன்றும் நாம் சந்திக்கின்ற பெரிய சவால். எப்போதும் அடுத்த வீடு நாம் இருக்கும் வீட்டைக் காட்டிலும் அழகாகவே தெரிகிறது! இறுதியாக, 'ஏற்றுக்கொள்ளாவிட்டால்' என்ன செய்வது? கால்களின் தூசியைத் தட்டிவிடுவது. தேவையற்ற காயங்களைச் சுமந்து கொண்டே செல்வதைவிட அந்தந்த இடத்தில் உதறிவிடுதல்.

1. 'அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு'. சீடரின் முதற்பணி சமூகத்தைக் கட்டியெழுப்புவது. உணவு ஒரு சமூக அடையாளம். நாம் சேர்ந்து உண்ணும்போது ஒருவருக்கொருவர் உறவினராகின்றோம். நாம் ஒரே பாத்திரத்தில் கையிடும்போது ஒரே உடலாக மாறுகின்றோம். சீடரின் பணி ஒருவர் மற்றவருக்கிடையேயிருக்கும் வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒற்றுமைகளைப் பார்ப்பது. அவன் வேறு, நான் வேறு என்று நாம் பிரிக்கத் தொடங்கிவிட்டால் அங்கே பணிக்குச் சாத்தியமில்லை. 'நான் அவனைவிட மேலானவன்' என்ற எண்ணமே மேலோங்கும்.

2. 'உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி'. சீடரின் ஆன்மீகப் பணி சாத்தியமாக வேண்டுமென்றால் சமூகப் பணிகளும், அடித்தட்டுப் பணிகளும் அவசியம். 'வறுமையா? நோயா? ஏற்றத்தாழ்வா? அடிமைத்தனமா? எல்லாவற்றையும் பொறுத்துக்கொள், விண்ணுலகில் எல்லாம் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்' என்று வானத்தைப் பார்க்கச் சொல்வதல்ல நம் பணி. ஏன் வறுமை? ஏன் நோய்? ஏன் ஏற்றத்தாழ்வு? ஏன் அடிமைத்தனம்? என்று நம்மையும், நம் சமூகத்தையும் எதிர்கேள்வி கேட்டு அதற்கேற்ற விடையும் காண்பதே சீடரின் பணி.

3. 'இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்'. இறைவன் வாக்களிக்கும் அன்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, அமைதி நெருங்குகிறது என அறிவிப்பதும், 'இப்படியெல்லாம் நடக்கிறதே? இறைவன் இருக்கிறாரா?' என்று விரக்தியடையும் உள்ளங்களுக்கு இறைவனின் உடனிருப்பைக் காட்டுவதும் சீடர்களின் பணி.

மேலும், இன்றைய நற்செய்தியில் சீடத்துவத்தின் பத்து ஒழுங்குகளையும் காணலாம்: 1) இன்றைய உலகிற்கு நம் பணி அவசியம், 2) செபத்தின் இன்றியமையாமை, 3) ஒவ்வொரு சீடனும் தேவை, 4) வழியில் வரும் ஆபத்துக்கள், 5) கூர்மையான இலக்கு, 6) பணியின் நோக்கம், 7) ஏற்;றுக்கொள்பவரின் முன் சாட்சியம், 8) வெற்றிகள் மட்டுமே கிடைப்பதில்லை, 9) விடாமுயற்சியின் அவசியம் மற்றும் 10) இறைவன் தரும் நம்பிக்கை.

1 comment:

  1. Anonymous2/07/2014

    சில நாட.களுக்கு முன்பு வரை துறவறத்தில் உள்ளவர்கள் மட்டுமே செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட பல விஷயங்கள் இன்று ''பொது அப்போஸ்தலத்துவம்'' என்ற பெயரில் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை நற்செயல்களையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.இதை ஊக்குவிக்க எழுப்பப்பட்டவை தான் நம் 'அன்பியங்கள்'.இன்று அவை எந்நிலையில செயல்படுகின்றன? யோசிக்க வேண்டிய விஷயம்....

    ReplyDelete