Sunday, February 16, 2014

நீரையும் நெருப்பையும் வைத்துள்ளார்

நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி. பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார். உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (சீராக்கின் ஞானம் 15:15-18)

மனிதர்களை விலங்குகளிடமிருந்து பிரிக்கின்ற ஒரு மாபெரும் கொடை சுதந்திரம். 20000 ஆண்டுகளுக்கு முன் சிட்டுக்குருவி எப்படிக் கூடு கட்டியதோ அதே போலத்தான் இன்றும் கட்டுகிறது. பறவைகள், விலங்குகள் 'ஒரே-மாதிரி-நிலைக்கு' (condemned to sameness) சபிக்கப்பட்டுள்ளனர் என்பர் சமூக ஆய்வாளர்கள். மனிதர்கள் மட்டும்தான் தங்களையும் மாற்ற முடியும். தங்களைச் சுற்றியிருப்பவைகளையும் மாற்ற முடியும். இதற்குக் காரணம் அவர்களிடமுள்ள சுதந்திரம். 'இதைச் செய்வேன்' என்று சொல்லவும், 'இதைச் செய்ய மாட்டேன்' என்று சொல்லவும் அவர்களால் மட்டும்தான் முடியும். நமக்கு முன்னிருக்கும் பலவற்றிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் உரிமை நமக்கு மட்டுமே உண்டு. இதுவே நமது வரம். இதுவே நமது சாபம். எல்லாமே கடவுள் அல்லது ஒரு வெளிப்புற ஆற்றல் நமக்காகத் தெரிவு செய்தால் நாம் கவலையில்லாமல் இருக்கலாம் தானே. நாம் செய்யும் தெரிவுகள் பல நேரங்களில் தவறாகப் போய்விடுகின்றன. ஏமாற்றம் அல்லது தோல்வியைத் தருகின்றன. அந்த நேரங்களில் நம் சுதந்திரத்தை நாமே நொந்து கொள்கிறோம்.

இன்றைய சிந்தனைப் பகுதியில் ஏறக்குறைய 4000 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட ஒரு விவிலியப் பகுதியை எடுத்துள்ளோம். இந்தப் பகுதியை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்:

1. மனிதர்கள் முன் உள்ள சாய்ஸ்
2. எதையும் தெரிந்து கொள்ள நமக்கு உரிமை உண்டு
3. நாம் எதை விரும்புகிறோமோ அதுவே நமக்குக் கிடைக்கும்

1. சாய்ஸ். இன்னைக்கு உள்ள உலகத்தை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் 'சாய்ஸ்' எனச் சொல்லிடலாம். எல்லாவற்றிலும் சாய்ஸ். குழந்தை பெற்றுக்கொள்ளவா வேண்டாமா என்ற சாய்ஸ். கவர்மண்ட் ஆஸ்பிடலா பிரைவேட் ஆஸ்பிடலா என்ற சாய்ஸ். சமச்சீர் கல்வியா சிபிஎஸ்சி கல்வியா என்ற சாய்ஸ். தமிழ் வழியா ஆங்கில வழியா என்ற சாய்ஸ். பள்ளிப் படிப்பா டுடோரியல் படிப்பா என்ற சாய்ஸ். டே ஸ்காலரா கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸா என்ற சாய்ஸ். ஃபேஸ்புக்கா டுவிட்டரா என்ற சாய்ஸ். திருமணமா தனித்த வாழ்வா என்ற சாய்ஸ். பெண் பார்க்க சாய்ஸ். வேலை பார்க்க சாய்ஸ். நாம் பார்க்கும் சேனல்களில் சாய்ஸ். குடிக்கும் பாலில் சாய்ஸ். மருத்துவத்தில் சாய்ஸ். அரசியல் கட்சியில் சாய்ஸ். கும்பிடும் கடவுளில் சாய்ஸ். வைக்கும் பெயர்களில் சாய்ஸ். எல்லாவற்றிலும் சாய்ஸ். சாய்ஸ் இருப்பது பெரிதன்று. நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதில் தான் கவனம் தேவை. 'தண்ணீரும் நெருப்பும்' உன் முன் என்கிறார் சீராக்கு. இதில் எது வாழ்வு எது சாவு என்பது தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் எழுதும் வாக்கியத் தொடரைப் பார்த்தால் தண்ணீர் வாழ்வு எனவும் நெருப்பு சாவு எனவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் எடுக்கும் எல்லா சாய்ஸ்களையும் இந்த இரண்டிற்குள் அடக்கி விடலாம். ஒன்று நன்மையாக இருக்கும், மற்றொன்று தீமையாக இருக்கும். ஒருசில நேரங்களில் நன்மையும் தீமையும் கலந்திருப்பது போல இருக்கும். அந்த இடத்தில் 'குறைந்த தீமை' (லெஸ்ஸர் ஈவில்) யை நாம் தெரிவு செய்யலாம். 

2. நம் வாழ்க்கை நம் கையில். கடவுள் நம்மேல் எதையும் சுமத்துவதில்லை. கடவுள் நம் விருப்பத்தை மதிக்கின்றார். எது நமக்கு விருப்பமோ அதைத் தெரிவு செய்ய நமக்கு உரிமை உண்டு. 'நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி' என்று தான் விவிலியம் சொல்கிறது. ஆகையால் கடவுளின் கட்டளைகளையோ, ஒரு மதத்தின் கோட்பாடுகளையோ யாரும் யார்மேலும் பயத்தினாலோ, அச்சுறுத்தலினாலோ, மறைபோதகம் என்ற அடிப்படையிலோ திணிக்க முடியாது. ஒவ்வொருவரின் மனச்சான்றும் கடவுளின் குரல். அந்தக் குரல் ஆம் என்றால் நாமும் ஆம் எனலாம். இல்லையென்றால் இல்லை எனலாம். 

3. எதை விரும்புகிறோமோ அதுவே நமக்குக் கிடைக்கும். 'பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா (தமன்னா! அல்ல) பிற்பகற் தாமே வரும்' என்கிறது குறள். முற்பகல் பிற்பகல் மட்டுமல்ல. நாம் நல்லது செய்தால் நல்லது வரும். கெட்டது செய்தால் கெட்டது வரும். 'ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு' என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. 'தென்னங்கன்று வைத்து மாமரம் வராது' என்பார்கள் நம்மூரில். கொடுத்தல் மிகப்பெரிய கொடை. எல்லாராலும் கொடுக்க முடியாது. கொடுத்தலைப் போலவை வருவதை அனுமதிப்பதும் ஒரு கொடை. சிலர் சொல்வாங்க. நான் எல்லாருக்கும் கொடுப்பேன். ஆனால் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டேன். என்ன சார் ஃபிலாசபி இது. அப்போ நாங்கெல்லாம் பிச்சைக்காரங்க. நீங்க கொடுக்கறத வாங்கிக்கணும். ஆனா நாங்க கொடுத்தா வாங்க மாட்டீங்க? அன்பைக் கொடுக்கிறோம் என்றால் அன்பை மற்றவர்கள் நமக்குத் தரும்போது அதைத் தாராளமாக வாங்கிக் கொள்ள வேண்டும். 'கொடுத்தலில் இன்பம் வைத்தான். ஆகையால் அன்பைத் தாராளமாய்க் கொடு' என எழுதியிருந்தாள் என் நண்பி. வாழ்விற்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே வாழ்வு நமக்கும் கொடுக்கும். இதையே மேலாண்மையியலில் 'பூமராங் இஃபெக்ட்' என்று சொல்வார்கள். 

இறுதியாக, பீட்சா 2 பற்றிய ஒரு குறிப்பு. நெகடிவ் எனர்ஜி (எதிர்மறை ஆற்றல்) எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைச் சொல்லும் ஒரு திரைப்படம். ஜெபினின் பெயரில் உள்ள வில்லாவில் வாழ்ந்த பலரின் எதிர்மறை ஆற்றல் அவனது வாழ்விலும், அவனைச் சுற்றியிருக்கும் வாழ்விலும் பல விபரீதங்களை உருவாக்குகிறது. அந்த பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றலை விட ஜெபினை அழித்தது ஆர்த்தியின் 'தன்னல அன்பு' என்றுதான் நான் சொல்வேன். ஜெபினை அவனது வங்கிக் கணக்கை வைத்து அளவிடுகிறாள் ஆர்த்தி. அதுவும் ஜெபினைச் சுற்றியிருக்கும் ஒரு நெகடிவ் எனர்ஜி தானே.

'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம்' என்பதும் நியூட்டனின் விதி. அன்பு என்பது நம்மிடம் உள்ள ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி. அதை நாம் எடுக்கும் எல்லா சாய்ஸ்களிலும் மிளிரச் செய்வோம். அது அன்பாகவே நம்மிடம் திரும்பி வரும்.

'உனக்கு முன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்!'

1 comment:

  1. Anonymous2/17/2014

    சில நாட்களுக்கு முன்கோபமானதொரு தொனியில்'எதற்காக இறைவன் தவறுகளை அனுமதிக்கவும் பின் தண்டிக்கவும் வேண்டும்'என்று கேட்டது ஞாபகம் வருகிறது.மனித சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் இன்றையப்பகுதி அந்தக கோபத்திற்கு விடை சொல்கிறது.ஆம்,நமக்கு சுதந்திரத்தைக் கொடுக்கும் இறைவன்
    அதை மதிக்கவும் செய்வதால்தான் பல சமயங்களில் நாம் நீருக்குப்பதில் நெருப்பை விரும்பினாலும் பொறுமை காக்கிறார்.நம் சுதந்திரத்தை மட்டுகல்ல அடுத்தவரின் சுதந்திரத்தையும் மதிப்போம்....

    ReplyDelete