ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று 'ஆபிரகாம்! ஆபிரகாம்!' என்று கூப்பிட, அவர் 'இதோ! அடியேன்!' என்றார். அவர், 'பையன் மேல் கை வைக்காதே. அவனுக்கு எதுவும் செய்யாதே' என்றார். (தொடக்கநூல் 22:9-12)
யூத செபக்கூடம் ஒன்றில் ரபி ஒருவர் இந்த இறைவாக்குப் பகுதியை வாசித்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். 'ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்' என்று சொன்னவுடன் செபக்கூடத்திலிருந்த குழந்தை ஒன்று 'ஐயோ!' என்று கத்தி அழுதது. எல்லாரும் அமைதியாக இருந்தனர். ரபி அந்தக் குழந்தையைப் பார்த்துச் சொன்னார்: 'பயப்படாதே குழந்தாய்! வானதூதன் வந்து ஆபிரகாமை நிறுத்தி ஈசாக்கைக் காப்பாற்றி விட்டார்!' குழந்தை சொன்னது: 'வானதூதன் வர ஒரு நிமிடம் தாமதமாகியிருந்தாலும் ஈசாக்கு இறந்திருப்பாரோ!' ரபி சொன்னாரம்: 'வானதூதர்கள் எப்போதும் சரியான நேரத்தில் வருவார்கள்!'
'தேவதைகள் சரியான நேரத்தில் வருவார்கள். தேவதைகள் காலம் தாழ்த்துவதில்லை!'
நேற்று இரவு 'நட்பு என்ற அருளடையாளம்' (Friendship as Sacrament by Carmen L. Caltagirone) என்ற புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்தச் செபக்கூட நிகழ்வோடு தொடங்குகிறது இந்தப் புத்தகம். 'வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்' என நற்செய்தி நமக்குச் சொல்லுகின்றது. இந்த இறைவன் அன்று மட்டுமல்ல இன்றும் நம் நண்பர்கள் நடுவில் 'மனிதராக' மாறுகின்றார் என்கிறார் ஆசிரியர்.
நட்பு ஒரு மந்திரச்சொல்.
நம் வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து நபர்களும் கடவுள் நம்மிடம் அனுப்பிய தேவதூதன்களும், தேவதைகளும் தான். நம் வாழ்வின் பயணத்தை ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு தூதன் அல்லது தேவதை இருப்பார். இவர்கள் நாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லர். பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களைப் போல இவர்களும் நமக்குக் கொடுக்கப்படுபவர்களே. 'அன்பே கடவுள்', 'அன்பே சிவம்' என்றெல்லாம் சொல்கின்றோம். நாம் அன்பிற்குரியவர்களை நினைக்கும் போது திடீரென்று அவர்களிடமிருந்து அழைப்பு அல்லது மின்னஞ்சல் வரும். இது வெறும் கோ-இன்சிடன்ஸ் அல்ல. நாமும் கடவுளில் இருக்கிறோம். அவர்களும் கடவுளில் இருக்கிறார்கள். கடவுள் நம் இருவரின் இணைப்புக் கோடாய் நிற்கின்றார்.
அன்பைப் பற்றிச் சொல்லும் போது இரண்டு கிரேக்க வார்த்தைகளைக் கையாளுகின்றது விவிலியம். ஒன்று 'ஈரோஸ்' (eros). மற்றொன்று 'அகாபே' (agape). ஈரோஸ் வகை அன்பு தன்னை மையப்படுத்தியது. அடுத்தவரைக் கொண்டு நம் வெறுமையை நிரப்பத் துடிக்கும் அன்பு ஈரோஸ். இந்த வார்த்தையிலிருந்துதான் erotic என்ற வார்த்தை வருகின்றது. மற்ற வவை அகாபே அன்பு பிறரை மையப்படுத்தியது. தன்னையே வெறுமையாக்கி பிறரை நிரப்புவது. முதல் வகை அன்பு தவறு என்றோ இரண்டாம் வகை அன்பு சரி என்றோ பொருள் அல்ல. இரண்டும் சரிதான். ஆனால் அன்பு முதல் வகையிலிருந்து இரண்டாம் வகைக்குப் பயணம் செய்ய வேண்டும். முதல் நிலையிலேயே தேங்கிவிடக் கூடாது. அப்படித் தேங்கிவிட்டால் அடுத்தவர் நமக்குக் போரடித்துவிடுவார். குலோப் ஜாமுன் பிடிக்கும் என்பதற்காகவும், அது இனிப்பாய் இருக்கிறது என்பதற்காகவும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா? ஒரு கட்டத்தில் அந்த இனிப்பு திகட்டி விடும். ஈரோஸ் வகை அன்பும் அப்படித்தான். திகட்டிவிடும். சரியான நேரத்தில் அது அகாபே அன்பாக மாற வேண்டும்.
பழைய ஏற்பாட்டில் நட்பின் அடையாளமாகக் காட்டப்படுபவர்கள் 'யோனத்தான் - தாவீது'. யோனத்தான் சவுலின் மகன். சவுலுக்குப் பின் அரியணை ஏறும் தகுதி பெற்றவன். யோனத்தானைப் பொறுத்த வரையில் தாவீது தன் அரியணைக்கான எதிரி. ஆனால் இந்த இருவரையும் பற்றி விவிலியம் சொல்லும் போது, 'தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுபட்டது. யோனத்தான் அவரைத் தம் உயிரெனக் கருதி, அவர்மீது அன்பு கொண்டிருந்தார்' (1 சாமுவேல் 18:1) என்று குறிப்பிடுகின்றது. தாவீது யோனத்தானின் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரைப் பிடித்துப் போய்விடுகின்றது யோனத்தானுக்கு. இதுதான் அன்பின் இயல்பு.
இவர் இவரோடுதான் பழக வேண்டும். அவர் அவரோடுதான் பழக வேண்டும் என்று அன்பிற்கு வேலி இடுவது கடினம். வயது, நிறம், பாலினம், மதம், சாதி என்ற அனைத்து மதிப்பீடுகளையும் கடக்கின்றது அன்பு. ஏனெனில் அன்பு கடவுள். கடவுளுக்கு வயது இருக்கிறதா? நிறம் இருக்கிறதா? பாலினம் இருக்கிறதா? மதம் இருக்கிறதா? சாதி இருக்கிறதா?
நம் வாழ்வின் தேவதூதன்களுக்கும், தேவதைகளுக்கும் நன்றி கூறுவோம். அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். சரியான நேரத்தில் அனுப்பப்பட்டவர்கள்.
அவர்கள் வரும்போது லைட் எரியும், பெல் அடிக்கும்!
அசல் சமயங்களில் நமக்குப் பாலைவனமாகத் தோன்றும் நம் வாழ்க்கையை பசுஞ்சோலையாக மாற்ற வருபவர்கள் தாம் இந்த தேவதூதன்களும் தேவதைகளும்.நாம் சறுக்கி விழும் நேரங்களில் நாம் சற்றும் எதிர்பாராமல் வருபவர்கள் தாம் இவர்கள்.இந்த தூதர்களை இனம் கண்டு அவர்களுக்காக இறைவனிடம் நன்றி பகர்வோம்....நாமும் நாம் எதிர்கொள்ளும் மக்களுக்கு தேவதைகளாக மாறுவோம்....
ReplyDelete