'என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்.
அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்;
ஆண்டவர் அளித்தார். ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.
ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!' என்றார்.
இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை.
கடவுள் மீது குற்றம் சாட்டவுமில்லை. (யோபு 1:21-22)
இன்று எங்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு விரிவுரை இருந்தது. விரிவுரையின் தலைப்பு, 'யோபு நூல்'. விரிவுரை வழங்கியவர்: பீட்டர் மெசினிஸ்ட் (Prof. Dr. Peter Machinist). என் கனவு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். கிழக்கத்திய மொழிகளில் அசீரியம், சீரியம், எபிரேயம், அரமேயம் முனைவர் பட்டம் பெற்றவர். இவை தவிர விவிலிய தொல்பொருள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டவர். அவரிடம் எனக்குப் பிடித்தவை மூன்று: ஒன்று, எளிமை (உடையில், நடையில், பேச்சுத் தொனியில்). தான் ஒரு அமெரிக்கர் என்பதிலும், ஹார்வர்ட் பேராசிரியர் என்பதிலும் அலட்டிக் கொள்ளவே இல்லை. இரண்டு, புலமை (எந்த ஏரியாவில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்றார் மனுசன்!). மூன்று, புன்சிரிப்பு (ரொம்ப படிச்சவங்க ரொம்ப சீரியஸா இருக்கணும்கிற myth-ஐ உடைக்கிறவர் இவர்).
ஐபேட், ஐஃபோன், மேக்புக், பவர்பாயிண்ட் போன்ற லக்சுரி அயிட்டங்கள் எதுவும் இல்லாம ஏறக்குறைய 600 பேரின் கவனத்தை 60 மணித்துளிகள் விடாமல் பெற்றுவிட்டார் இன்று. இவரைப் போல இருக்கணும்னு எனக்கும் இன்று ஆசை வந்தது.
சரி லெக்சர் என்னன்னு பார்ப்போம்.
அவரின் வார்த்தைகளோடு என் புரிதலையும் இணைத்துப் பதிவு செய்கிறேன்.
யோபு நூல் விவிலியத்தில் மட்டுமன்றி உலக இலக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. யோபு என்பவர் இருந்தாரா? இல்லையா? யோபு என்பவர் இருந்தார் என்று சொல்கின்றார் எசேக்கியேல் இறைவாக்கினர் (14:4-20). அவரைப் பற்றிய வேறு குறிப்புக்கள் இல்லை. யூதர்களைப் பொறுத்தவரையில் யோபு ஒரு உருவகம். அந்த யோபு என்பவர் நம் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் சுட்டிக் காட்டுகின்றார். அந்த யோபுவிற்குள் நாமும் ஒளிந்திருக்கின்றோம்.
யோபு நூலில் மொத்தம் 42 அதிகாரங்கள் உள்ளன.
உரைநடை முன்னுரை: 1-2
பாடல் உரையாடல்கள் - யோபுவும் நண்பர்களும் 3-37
பாடல் உரையாடல்கள் - யோபுவும் கடவுளும் 38-42:6
உரைநடை முடிவுரை: 42:6-17
முன்னுரையும், முடிவுரையும் உரைநடை வடிவில் உள்ளன. உரையாடல்கள் அனைத்தும் பாடல்கள் வடிவில் உள்ளன். தமிழ் மொழியைப் போலவே எபிரேய மொழியிலும் இரண்டு நடை உண்டு: உரைநடை, செய்யுள் நடை. இரண்டு தமிழும் வித்தியாசம். இரண்டு எபிரேயமும் வித்தியாசம். செய்யுளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு மொழியின் வார்த்தைகள் மட்டும் தெரிந்தால் போதாது. அந்த மொழியின் அணி இலக்கணம் தெரிய வேண்டும். மாத்திரை அளவுகள் தெரிய வேண்டும். 'நேர் நேர் தேமா!' நினைவிருக்கிறதா? யோபு நூலில் வரும் செய்யுள் நடை உரையாடல்கள் இன்றும் புதிராகவே இருக்கின்றன. இவற்றை எழுதியவர் எபிரேய மொழியில் மிகச் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும்.
இந்த நூலில் மூன்று வகை டூவலிட்டி (duality) இருக்கின்றது:
பொறுமையுள்ள யோபு - கோபப்படும் யோபு.
கடவுள் பக்தி - துன்பம்
உரைநடை - செய்யுள்
உரைநடைப் பகுதிகள் யோபுவை பொறுமையுள்ளவராகவும், செய்யுள் பகுதிகள் அவரைக் கோபக்காரராகவும் காட்டுகின்றன. உரைநடைப் பகுதிகள் கடவுள் பக்தியையும், செய்யுள் பகுதிகள் 'ஏன் துன்பம்?' என்பதையும் விளக்குகின்றன.
யோபு நூலின் தொடக்கம் விண்ணக நீதிமன்றத்தில் நடக்கின்றது. கடவுள் முன் வாதாடுகின்றான் சாத்தான். சாத்தான் இருக்கின்றானா? இல்லையா? என்ற கேள்வி இங்கே தேவையற்றது. யோபு பக்தியாய் இருப்பதற்குக் காரணம் அவனின் உடல்நலமும், பொருள்சுகமும் எனவும் அது அழிந்தால் அவன் கடவுளை மறந்து விடுவான் எனவும் சவால் விடுகிறது அலகை. ஒவ்வொன்றாய் இழக்கின்றார் யோபு. அவரின் மனைவி அவரைச் சபிக்கின்றார். அவரின் நண்பர்கள் எலிபாசு, பில்தாது மற்றும் சோப்பார் அவரைச் சபிக்கின்றனர். இறுதியாக வருகின்ற எலிகு என்கிற நண்பர் கடவுளின் ஞானம் பற்றிப் பேசுகின்றார். கடைசியில் கடவுள் அவருக்குப் புயல் காற்றில் தோன்றி, 'முதலைகளும், நீர்யானைகளும் எதற்காகப் படைக்கபட்டன?' எனத் தெரியுமா? என்று கேட்கின்றார். உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது. இருப்பவைகள் பலவற்றிற்கு நம்மால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாது. இறுதியில் சராணாகதியாகின்றார் யோபு. அவரின் சொத்துக்களை இன்னும் அதிகமாகத் தருகின்றார் கடவுள்.
இந்த நூலின் ஒரு சில சித்தாந்தப் பிரச்சினைகள்:
1. இவ்வுலகில் தீமை இருப்பது எதனால்? துன்பம் நம் பாவத்தால் வருகிறதா? பாவம் செய்யாதவர்கள் துன்பப்படுகிறார்களே அதை எப்படிப் புரிந்து கொள்வது? நாம் கெட்டது செய்தால் கடவுள் தண்டிப்பார் என நமக்கு ஏன் பயம் வருகிறது?
2. இந்த நூலின் தொடக்கத்தில் வரும் சாத்தானையும், விண்ணக நீதி மன்றத்தையும் புத்தகத்தின் இறுதியில் காணோம். சாத்தான் ஜெயித்து விட்டது போலவே இருக்கின்றது இந்த நூலின் இறுதிப் பகுதி.
3. பொறுமைசாலியாகவும், கோபக்காரராகவும், மீண்டும் பொறுமைசாலியாகவும் மாறுகிறார் யோபு. இறுதியில் பொறுமை தான் தேவை என்றால் எதற்காக இடையில் இவ்வளவு கோபம்.
இந்த நூலை 'ஞானம்' என்ற வார்த்தையை வைத்து மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்:
யோபு மற்றும் அவரது நண்பர்களின் ஞானம்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் நம் ஞானம்.
கடவுளின் ஞானம்.
யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் சாத்தான் கடவுளிடம் விட்ட சவால் தெரியாது. நமக்கு சாத்தானின் சவால் பற்றியும் தெரியும், யோபுவின் துன்பமும் தெரியும். அவரது நண்பர்களின் கடினமான சொற்களும் தெரியும். இந்த இரண்டு ஞானங்களுமே கடவுள் என்ற ஞானத்திடம் சரணாகதியாக வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
61 வயதில் கேன்சரால் இறந்து போன ஒரு ரபியைப் பற்றிய அவரது நண்பரின் வார்த்தைகளோடு விரிவுரையை நிறைவு செய்தார் பேராசிரியர்:
'இவர் நிறையப் படித்தார். எழுதினார். பேசினார். ஒவ்வொரு நாளும் கேன்சர் இவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றது. ஆனால் அவர் அதற்காக தன்னை நொந்து கொள்ளவோ, 'ஏன் எனக்கு மட்டும்!' என்று கேட்கவோ இல்லை. அந்த நாள் வந்தது. மௌனமாகச் சரி என்று சொன்னார். தான் அன்பு செய்த நண்பர்களும், தான் அன்பு செய்த புத்தகங்களும் அருகிருக்க அமைதியாக விடைபெற்றார்.'
இந்த விரிவுரையின் வழியாக நான் கற்றுக்கொண்ட பாடங்கள் மூன்று:
1. எல்லாக் கேள்விகளுக்கும், பதில்களுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டிற்கு மேல் நாம் சரணாகதி ஆக வேண்டும். கேள்வி கேட்கும் புத்தியை விடுத்து சரணாகதியாகும் மனநிலை எனக்கு தேவை.
2. நம் லிமிட் என்ன என்று தெரிந்து கொள்வதில்தான் ஞானம் தொடங்குகிறது. ஆல்பர் கேம்யூ அழகாகச் சொல்வார்: 'we can only do this much. therefore we must do at least that much' நான் பல நேரங்களில் என்னால் முடிபவற்றையே செய்வதில்லை. 'எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது' என்றும் 'எனக்கு வேற வேலை இருக்கிறது' என்றும் என் லிமிட்டையே நான் வாழ்வதில்லை. 'இதுதான் லிமிட்' என்று தெரியாமல் ஏன் பயந்து நிற்க வேண்டும்? முடிந்த வரைப் போய்ப் பார்ப்போமே. என் பயம் விடுப்பேன்.
3. துன்பம் என்று வந்தவுடன் 'கடவுள் இல்லை' என்றும் 'கடவுள் ஒரு அசுரன். நம்மைத் துன்புறுத்தி வேடிக்கை பார்க்கிறார்' என்றும் விடையை எழுதிவிடுகிறது என் மனம். இந்த இரண்டு மனநிலையையும் கடந்து துன்பத்தை ஒரு எதார்த்தமாக ஏற்கும் வரம் கேட்கின்றேன்.
'ஆண்டவர் அளித்தார். ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.
ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!'
நிறைய தகவல்களை மிக அழகாகள் கொடுத்துள்ளீர்கள்.தொகுத்து வழங்கியுள்ளதில் அந்த 1ஆம் பத்தி என்னைக் மிகவும் கவர்ந்தது.ஆம்,ஒருலிமிட்டிற்கு மேல் அவன் எத்துணை பெரிய கொம்பனாக இருப்பினும் நாம் சரணாகதியாகத்தான் வேண்டும்.ஒரு பாடலின் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன."மாற்ற முடிந்ததை மாற்றவும் அதற்கு மேல் அதை ஏற்கவும் வரம் தருவாய்".நம் அகம்பாவத்தின் உச்சம் இதுவாகத்தான் இருக்க முடியும்.யோபுவின் வாழ்க்கை நமக்கு கற்பிக்கும் பாடமும் இதுதான்.தங்களைக் கவர்ந்த அன்த, 'அமெரிக்க விரிவுரையாளரைப்' போல இருக்கணும்னு வாழ்த்துகிறேன்.
ReplyDelete