நேற்று நாங்கள் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோது அந்த உணவின் ஒரு பகுதியாக 'பனாத்தோனே' என்ற கேக் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கேக் கிறிஸ்துமஸ் காலத்தில் இத்தாலி முழுவதும் செய்யப்படுகின்ற ஒரு கேக் வகை. இப்போது உலகின் பல நாடுகளில், குறிப்பாக கிறித்தவ மதம் மேலோங்கி நிற்கும் நாடுகளில் இது கிறிஸ்துமஸ் காலத்தில் தயாரிக்கப்படுகின்றது. அதை வெட்டி எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு வயதான அருட்தந்தை (82) உங்கள் நாட்டிலும் இந்த கேக் உண்டா என்று கேட்டார். நான் 'நல்ல வேளை இல்லை!' என்றேன். அவரின் புருவம் சற்றே உயர்ந்தது. 'ஏன் நல்ல வேளை! பிடிக்கவில்லையா?' என்று கேட்டார். 'இல்லை. கிறிஸ்துமஸ் முடிந்து ஏறக்குறைய 45 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் இந்தக் கேக்கைச் சாப்பிடுகிறோமே. அதனால் சொன்னேன்' என்றேன். 'ஏன் நீங்கள் விழாக்களுக்கேற்ற உணவு வகை செய்வதில்லை இந்தியாவில்?' என்று கேட்டார். 'எங்களுக்கு கிறிஸ்துமஸ் பெரிய விழா அன்று. எங்கள் ஊரில் அதிகமாகக் கொண்டாடப்படும் விழா தீபாவளி. அந்த நாளில் நாங்கள் பலகாரங்கள் செய்வோம். மேலும் எங்கள் தமிழ்நாட்டின் பொங்கல் திருவிழாவில் நாங்கள் பொங்கல் செய்வோம்.' என்றேன். பின் பேச்சு அப்படியே வளர்ந்து இந்துக்களின் திருவிழா, கொண்டாட்டம், சாமி, விரதம், நேர்ச்சை, அபிசேகம் எனத் தொடர்ந்தது. காலை உணவு முடிவு பெறும் வேளையில் விருந்துக்கு வந்திருந்த ஒரு மேலைநாட்டு அருட்தந்தை, 'இந்த மக்கள் மனம் மாற மாட்டார்களா?' என்றார். எனக்குக் கொஞ்சம், இல்லை, ரொம்பவே கோபம். வயதான அருட்தந்தை சொன்னார்: '2000 வருடங்களாக இருக்கிறார்கள். எப்படி மாறுவார்கள்?' என்றார். 'எல்லாருமே மனம் மாற வேண்டுமா? ஏன் இப்படியே இருந்தால் என்ன? உங்களுக்கு என்ன?' என்று நான் கோபமாகவே கேட்டேன். 'இல்லை. நம் கடவுள் தான் உண்மையான கடவுள்' என்றார். 'அடுத்தவர்கள் பொய் என்று நிரூபித்து உங்கள் கடவுளை உண்மை என்று ஆக்க வேண்டுமா?' என்றேன். வாக்குவாதம் அப்படியே வளர்ந்தது. கடைசியில் 'நீ கிறித்தவ அருட்பணியாளர் மாதிரி பேசுவதற்குப் பதிலாக ஏன் இந்துவைப் போலப் பேசுகிறாய்?' என்று என்னிடம் கேட்டுவிட்டு கலைந்து சென்றனர். 'அடுத்தவர்கள் வித்தியாசமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற மேற்கத்திய மூளை அந்த வித்தியாசத்தை அழித்து தன்னைப் போல ஆக்கிவிட நினைக்கிறது. தன்னைப் போல ஆக்கிவிட்டால் பயமில்லைதானே. பயந்தாங்கொள்ளிகள்!' என்று நானும் பதிலுக்குச் சொன்னேன்.
மதமாற்றம். மனமாற்றம். ஒளி. உப்பு. மலைமேல் உள்ள ஊர். என்று நேற்று சிந்தனை ஓடியது. 'எல்லாரும் என்னைப் போல இருக்க வேண்டும்' என்ற மேல்தட்டு சித்தாந்தமே நம் மண்ணில் நடந்த மனமாற்றத்திற்குக் காரணம். ஒரு நிமிடம் யோசிங்களேன். 'நாம் ஒரு குடும்பத்தில் பிறந்தோம் என்கிற ஒரே காரணத்திற்காக அந்தக் குடும்பத்தின் மதம் நம்மேல் ஒட்டிக் கொள்வது எப்படி? அப்படி ஒட்டிக்கொண்டாலும் அந்த அடையாளத்தைப் பெறாதவர்கள் எல்லாம் பொய் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?'
விவிலியத்தை அடிப்படையாக வைத்து உருவானது. இயேசு இந்த உலகில் வாழ்ந்தார் என்றெல்லாம் சொல்லலாம். இயேசு மட்டுமல்ல இயேசுவைப்போல 13 மெசியாக்கள் இருந்தார்கள் என யூதர்களின் வரலாறு சொல்கிறது. அப்படியென்றால் மற்ற 12 மெசியாக்களின் கதி என்ன? விவிலியம் ஒரு நல்ல புத்தகம். காலங்கலாமாக கைமாறி வருகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் விவிலியத்திலும் அந்தந்த காலப் பிரச்சனைகள் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியே உள்ளன. உதாரணத்திற்கு, லூக்கா நற்செய்தியாளர் இயேசு திருமுழுக்கு பெறும் நிகழ்வை எழுதும்போது திருமுழுக்கு யோவான் சிறையில் இருந்தார் என எழுதுகின்றார். திருமுழுக்கு யோவான் சிறையிலிருந்தால் அவர் எப்படி யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுக்க முடியும்? ஏன் லூக்கா இப்படி எழுதிகிறார் என்றால் லூக்காவின் திருச்சபைக்கும், திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்குமிடையில் ஒரு சில கருத்தியல் வேறுபாடுகள். நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற அதிகாரப் போராட்டம். 'உங்கள் போதகர் இல்லாமலும் எங்கள் இயேசுவால் பணியாற்ற முடியும்!' என்ற ஆதிக்க சிந்தனையில் திருமுழுக்கு யோவான் சிறையில் இருந்ததாக எழுதுகின்றார் லூக்கா. இப்படியே ஆராயந்தால் எல்லா மதங்களின் அடித்தளங்களும் கொஞ்சம் வீக்காகவே இருக்கின்றன. மதம் இருப்பதற்குக் காரணம் புத்தகமோ, மத போதகர்களோ, கடவுள்களோ அல்ல - நம்பிக்கைதான். காதலிப்பவர்களுக்கு காதல் ஒரு மதம். நண்பர்களுக்கு நட்பு ஒரு மதம். அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஒரு மதம். எல்லாம் இயங்குவது நம்பிக்கையில் தானே. அப்படியென்றால் எல்லாம் மதம் தானே.
இந்தப் மனமாற்ற, மதமாற்றப் மனப்போராட்டத்தோடு 'ராஜா-ராணி' திரைப்படம் பார்த்தேன். 'நல்லாயிருக்கு! இன்னும் பார்க்கலயா? இன்னும் பார்க்கலயா?' என்று நண்பர்கள், நண்பிகள் நச்சரித்தபின் இன்று பார்த்தேன். ஒரு வித்தியாசமான படம் தான். 'ப்ளே ஆஃப் போல்ஸ்', அதாவது இரண்டு துருவங்களை வைத்துக் கதையைக் கட்டமைப்பு செய்திருக்கின்றார் இயக்குநர்: இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின், இரண்டு காமெடியன், இரண்டு அப்பாக்கள், இரண்டு வீடுகள், இரண்டு பணியிடங்கள் என இரண்டுகளில் விளையாடுகின்றார் இயக்குநர். ஒரு ஹீரோவின் பெற்றோர் பற்றி எல்லாமே இருட்டு. அதுபோல ஒரு ஹீரோவின் பெற்றோர் பற்றி எல்லாமே இருட்டு. ஒரு ஹீரோ இறக்கிறார். ஒரு ஹீரோயின் இறக்கிறார். மறு ஹீரோவும், மறு ஹீரோயினும் கைகோர்க்கிறார்கள். படத்தின் கருத்து இதுதான்: வாழ்க்கையில் அனைவருக்குமே பிரச்சினைகள் வரும். அந்தப் பிரச்சினைகளில் நாம் காயப்பட்டாலும் அந்தக் காயத்தை நாம்தான் ஆற்ற வேண்டும். இதில் திருமண உறவை எடுத்திருப்பதால், முதலில் ஒருவர் தன் காயத்தை ஆற்ற வேண்டும். பின் மற்றவரின் காயத்தை ஆற்ற வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு காயம்பட்ட மருத்துவர் என்பதை எதார்த்தமாகச் சொல்கின்றது இந்தத் திரைப்படம்.
இங்கே பிரச்சினையாக வைக்கப்படுவது காதல். படத்தைக் கொஞ்சம் விமர்சனம் செய்வோம். முதல் காதலில் (சூர்யா - ரெஜினா) சூர்யாவிடம் காதல் வருமுன் ரெஜினா ஒரு அழகான வசனம் சொல்வார்: 'ஸ்மார்ட்டா இருக்கிற பையன விட இன்னசன்ட்டா இருக்கிற பையனத்தான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்!' ஸ்மார்ட்டா இருக்கிற என்ன மாதிரி பையன்களுக்கு (!) இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் கொடுக்கிற வசனம் இது. அப்ப ஸ்மார்ட்டா இருக்கக் கூடாதா? என்று பொங்கி எழாதீங்க ப்ளீஸ். இன்னசன்ட்டா இருக்கிற சூர்யா எப்படி ரெஜிஸ்டர் ஆபிஸ் வருவதற்குப் பதில் அமெரிக்கா செல்கிறார்? எப்படி தான் இறந்ததாகப் பொய் சொல்லச் சொல்கிறார்? இதுதான் பெண்கள் விரும்பும் இன்னசன்ஸா? காதல் செய்வது தங்கள் கலாச்சாரத்தில் இல்லை என்று சொல்லும் சூர்யாவின் தந்தையின் கலாச்சாரத்தில் ஏமாற்றுவதும், பொய் சொல்வதும் சாதாரணமா? 'தன் அப்பாவிற்காகப் பயப்படுவதாகக் கூறும் சூர்யா அந்தப் பயத்தை அன்பாக மாற்றினாரா? இல்லையா?' பயம் இருக்கும் இடத்தில் எதுவுமே சாத்தியமில்லையே?
இரண்டாம் காதலில் (ஜான் - கீர்த்தனா) கொஞ்சம் 'எங்கேயும் எப்போதும்' வாடை அடிக்கிறது. இந்த இரண்டு காதலும் இணைந்து ஒரு திருமணம் - இதுதான் சிம்ப்ளிஸ்டா இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல ஒரு வழி. 'எவ்ளோ பெரிய காதலாயிருந்தாலும் ஒரு கட்டத்துல எல்லாம் சரியாயிடும்!' என்றும் எடுத்துக் கொள்ளலாம். 'எல்லாத் திருமணங்களுக்குப் பின்னாலும் ஏதாவது ஒரு காதல் இருக்கும்!' என்றும் எடுத்துக் கொள்ளலாம். 'நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போயிட்டாங்கன்னா நம்மளும் போகணும்னு அவசியமில்ல. என்னைக்காவது ஒருநாள் நம்ம ஆசப்பட்டது மாதிரி நம்ம லைஃப் மாறும். கண்டிப்பா மாறும்!' இதுதான் இத்திரைப்படத்தின் இரத்தின வரி. இந்த வரிகள் இரண்டிரண்டு முறை (நான்கு முறை) சொல்லப்படுகின்றன - இங்கும் இரண்டுதான்!
சரிப்பா...மதமாற்றத்திற்கும், ராஜா-ராணிக்கும் என்ன சம்பந்தம்?
எனக்காக அடுத்தவன் அல்லது அடுத்தவள் மாறனும்னு நினைச்சா அது மதமாற்றம்.
அடுத்தவன் அல்லது அடுத்தவளுக்காக நான் மாறனும்னு நினைச்சா அது ராஜா-ராணி.
ஒவ்வொவரும் ஒரு காயம்பட்ட மருத்துவர் என்பதை உணர்ந்து, இன்னும் தொடர்ந்து காயப்படுத்தாமல், ஒருவர் மற்றவரின் கண்ணீர் துடைக்க நம் கரம் நீட்டினால் நாமும் ராஜா - ராணிதான்!
ரொம்பக் குழப்பிட்டிங்க.மூளைய ஓவரா கசக்கிப் பிழிந்து படிப்பதன் விளைவா..என்னவென்று தெரியவில்லை.கூட்டிக கழித்துப் பார்க்கும்போது "நம் கரம் அடுத்தவர்களின் கண்ணீர் துடைப்பதற்கன்றி காயப்படுத்த அல்ல" என்பது புரிகிறது. பல சமயங்களில் "Innocense is bliss." I'm happy to be a person of simple faith.
ReplyDeleteமதம் இருப்பதற்குக் காரணம் புத்தகமோ, மத போதகர்களோ, கடவுள்களோ அல்ல - நம்பிக்கைதான்.
ReplyDeleteமறுக்க முடியாத உண்மை!!!