Tuesday, February 18, 2014

நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்?

ஆண்டவர் அன்னாவை மலடியாக்கியிருந்ததால் அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது. அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார். அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி அன்னா நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ? என்பார். (1 சாமுவேல் 1:6-8)

இந்தப் பகுதியை நாம் ஏற்கனவே நம் சிந்தனைக்கு எடுத்துள்ளோம். ஆனால் இந்தப் பகுதியை நேற்று எபிரேய மொழியில் வாசித்தபோது இதன் பொருள் வித்தியாசமாகத் தெரிந்தது. ஆகையால் அன்னா என்ற இந்தப் பெண்ணையும் அவர் குறிப்பிடும் இஸ்ரயேல் இனத்தையும் இன்று சிந்திப்போம்.

அன்னா.

இதன் பொருள் அருள் என்றாலும், எபிரேய இலக்கியத்தில் இதன் பொருள் 'ஈர்ப்பு'. கவிஞர் பா. விஜய் பெண்களை மூன்று வகைகளாகப் பிரிப்பார். முதல் வகையினர் 'பார்க்கலாம்' என்பது போல இருப்பார்கள். இரண்டாம் வகையினர் 'திரும்பிப் பார்க்கலாம்' என்பது போல இருப்பர். ஆனால் மூன்றாம் வகையினர் 'நினைத்து நினைத்துப் பார்க்கணும்' போல இருப்பார்கள். இந்த மூன்றாம் வகை உணர்வை உணர்த்தக் கூடிய பெண்ணின் குணநலமே ஈர்ப்பு. அன்னாவின் பெயர் இந்த ஈர்ப்பையே குறித்தது. அன்னா இஸ்ரயேல் இனத்தின் தாயாக இருக்கிறாள். எவ்வாறு? அன்னாவின் வழி வரும் சாமுவேலுக்குப் பிறகுதான் இஸ்ரயேலர் சவுல் என்ற அரசரையும் தொடர்ந்து அரசர்களையும் பெறுகின்றனர். அரசாட்சி தொடங்கியது அன்னாவில்தான். 'எல்லாம் இருந்தது. ஆனால் மகன் இல்லை' என்று அன்னாவைப் பற்றி சொல்லப்படுகின்றது. இதன் பொருள் என்ன? இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாம் இருந்தது. ஆனால் அரசன் இல்லை.

அன்னாவிடம் பிடித்த பண்புகள் மூன்று:

1. அன்னாவின் அழுகை. அன்னாவை அழ வைத்துப் பார்க்கும் சேடிஸ்ட் அல்ல. ஆனால் அன்னா ஒரு உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண். பெண்மையின் அழகு ஒளிவுமறைவில்லாத ஒரு நிலை. ஆண்களின் இயலாமை கோபமாக வெடிக்கும். பெண்களின் இயலாமை கண்ணீராகக் கசியும். தன் கருவறை அடைக்கப்பட்டதற்கு கடவுள்தான் காரணம். அந்த இயலாமையில் கண்ணீர் வடிக்கிறார். கடவுளும் எதிராக இருக்கிறார். சக்களத்தியும் எதிராக இருக்கிறாள். கணவனும் எதிராக இருக்கிறார். கணவனின் வார்த்தைகள் 'நான் உனக்குப் பத்துப் புதல்வர்களை விட மேலானவர்கள் அல்லவா?' என்னும் வார்த்தைகள் கணவனை நல்லவன் போலக் காட்டுகின்றன. ஆனால் கணவன் உண்மையில் நல்லவனாய் இருந்திருந்தால் 'நீ எனக்குப் பத்துப் புதல்வர்களை விட மேலானவர்கள் அல்லவா?' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். நம் வாழ்க்கையில் கடவுளும் நம் அருகில் இல்லை, நம் நண்பர்களும் நம் அருகில் இல்லை, நம் உடன்பிறந்தவர்களும் நம் அருகில் இல்லை எனில் நாமும் அழத்தானே செய்வோம். அழுகை ஒரு நல்ல உணர்வு. உணர்வு என்பதை விட உணர்வின் வெளிப்பாடு. எல்லோருக்கும் உள் ஏதோ ஒரு குழந்தை அழுது கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சில குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஒரு சில குழந்தைகள் காயத்தால் அழுகின்றன. ஒருவர் மற்றவரின் கண்ணீரைத் துடைக்க அன்னாவின் அழுகை நம்மைத் தூண்டுகிறது.

2. அன்னாவின் இறைவேண்டல். பழைய ஏற்பாட்டில் அன்னா இறைவேண்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்வைக்கப்படுகின்றார். அன்னாவின் அழுகை கலந்த மன்றாட்டை குரு ஏலி குடிபோதை என்று தவறாகப் புரிந்து கொள்கிறார். ஆனால் அவரின் மனக்கலக்கமே கண்ணீராய் வெளிவருகின்றது. பல நேரங்களில் நம் இறைவேண்டலும் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. 'அவன் நடிக்கிறான். அவள் வெளிவேடம் போடுகிறாள்' என்று நம் செபங்களையும் மற்றவர்கள் விமர்சனம் செய்திருக்கலாம். ஆனால் நம் அழுகை நம் இறைவனுக்குத் தெரியும். மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அருட்பணியாளராகிய எனக்கு இன்னும் ஒரு பாடத்தைத் தருகின்றார் ஏலி. நம்மிடம் செபிக்க வருபவர்களின் கண்ணீர் குடிபோதை அன்று. அது எதார்த்தம். அதை நான் மதிக்க வேண்டும்.

3. நான் பெற்றதை ஆண்டவருக்கே கொடுப்பேன். வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தவர் அன்னா. நான் இறைவேண்டலில் பெற்ற குழந்தையை இறைவனுக்கே கொடுப்பேன் என்று துணிகின்றார் அன்னா. என்ன ஒரு தன்னலமற்ற வேண்டல்? தான் பெற்றதை இறைவனுக்கே கொடுக்கின்றார் என்றால் எதற்காக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்? என நினைக்கலாம். இறைவனுக்குக் கொடுப்பது ஒரு போதும் இழப்பு அன்று. இறைவனிடம் இருக்கும் எல்லாம் நம்மோடும் இருக்கின்றது. நம்மிடம் உள்ளதன் மதிப்பு மிக்கதை இறைவனுக்குக் கொடுக்கும்போது அது இன்னும் மதிப்பு மிக்கதாக மாறுகின்றது.

அன்னாவின் அழுகை ஏலிக்குக் கேட்கிறதோ அல்லது எல்கானாவுக்குக் கேட்கிறதோ இல்லையோ! ஆனால் இறைவனுக்குக் கேட்கிறது.

'நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்?'

1 comment:

  1. Anonymous2/19/2014

    மிக மிக உருக்கமான,என் மனதைத் தொட்ட பகுதி.பெண்களை எத்துணை வகையாகப் பிரிப்பினும் அடிப்படையில் எந்தப் பெண்ணுமே மென்மையானவள்தான்.பெண்களின் இயலாமையின் வெளிப்பாடே கண்ணீர் என்று தெரிந்தும் பல ஆண்கள் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.அதிலும் படு தாயின் கண்ணீர் எத்துணை வலியது என்பதற்கு விவிலியத்தின் புனித மோனிக்காவே சாட்சி.அழுகையினூடே வாழ்க்கை நடத்தும் பல 'அன்னாக்கள்' நம் மத்தியிலும் உள்ளனர்.அவர்களைத்தேடிக் கண்டு பிடிப்போம்...அவர்களின் கண்ணீ ர் துடைப்போம்.

    ReplyDelete