நேற்றைய தினம் ஆண்டவர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இந்த விழாவைக் குறித்து வத்திக்கான் வானொலி தமிழ் பிரிவில் அருட்பணி. ஜெரோம் அவர்கள் மிக அழகாகத் தன் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் கொடுத்த தலைப்பு: குழந்தையைக் கையில் ஏந்துவது ஒரு கலை. மிகவும் அருமையான தலைப்பு.
குழந்தையைக் கைகளில் ஏந்தியிருக்கிறீர்களா? அதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். கழுத்து நிற்காத குழந்தையைக் கைகளில் தூக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தத் தலைப்பு என்னில் எழுப்பிய சிந்தனைகள் தாம் இன்றைய பகிர்வு.
இன்றைய நாளின் மையம் குழந்தையா? முதியவரா? இரண்டு பேரும் தாம். ஒரு முதியவர் ஒரு குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். ஒரு அஸ்தமனம் ஒரு உதயத்தைத் தாங்குகிறது. வாழ்வின் முடிவும் வாழ்வின் தொடக்கமும் ஒன்றையொன்று சந்திக்கிறது.
எருசலேம் கோவிலுக்குள் தினமும் எத்தனையோ குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களில் இவர்தான் 'நான் எதிர்பார்த்த குழந்தை!' என எப்படி முதியவர் சிமியோனால் கண்டுபிடிக்க முடிந்தது? நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தன் தந்தைக்காக சிறுவன் ஒருவன் வாசலில் காத்திருந்தான். மாலை மங்கும் நேரம். பணியாளர்கள் வரிசையாக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். சுரங்கத்தில் வேலை பார்த்ததால் எல்லார் முகமும் கறுப்பாக இருக்கின்றது. சிறுவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வாயில் காப்போன் கேட்கின்றார்: 'தம்பி, ஏறக்குறைய 700 பேர் இந்தச் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். எல்லாரும் வேலை முடிந்து வரும்போது கரி பிடித்துத்தான் வருவார்கள். எல்லாரும் ஹெல்மெட்டும் அணிந்திருப்பார்கள். இவர்களில் உன் அப்பாவை எப்படிக் கண்டுபிடிப்பாய்?' சிறுவன் சொல்கிறான்: 'என்னால் அவரைக் கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் அவர் என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். ஆகையால் தான் நான் இங்கே நிற்கிறேன்.'
சிமியோனுக்கும் இயேசுவுக்கும் உள்ள நெருக்கம் இதுதான். அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. குழந்தையை ஏந்தியவுடன் அவர் சொல்லும் சொற்களுக்கு மிகுந்த வாழ்வியல் அர்த்தம் உண்டு:
'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன'.
தன் வாழ்க்கை முடிவுற்றது. இனி தான் அமைதியாகச் செல்லலாம் என்று மொழிகின்றார் முதியவர். வாழ்வில் நமக்கு மிகவும் கஷ்டமாக இருப்பது 'விடைபெறுவது'. எதற்காக மரணம் அல்லது பிரிவு பயத்தைத் தருகின்றது? 'பிடிமானம்'. நாம் 'இதுதான் எல்லாம்' என எதையாவது பிடித்துக் கொள்கின்றோம். அதை விட மனம் வரவில்லை. அது கண்டிப்பாக நம்மிடமிருந்து எடுக்கப்படும் என்று தெரியும். இருந்தாலும் நாம் அதை எளிதாக விடுவதில்லை. இது வாழ்வில் மட்டுமல்ல. அனைத்துப் பணிநிலைகளிலும் இருக்கலாம். குறி;ப்பாக, அரசியலில் தலைமைத்துவத்தில் இருப்பவர்களும், மற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், ஏன் குடும்பத்தில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு கட்டத்தில் அதை விட்டுத்தாங்கள் செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. 'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று பிடித்துக் கொண்டேயிருப்பது அவர்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பையே கொண்டு வருகின்றது. 'முகமலர்ச்சியுடன் விடைபெற' இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் சிமியோன். சிமியோனின் மனநிலை நமக்கு இருந்தால் இறப்பைக் கண்டும், பிரிவைக் கண்டும் பயப்படவே தேவையில்லை.
என் குடும்பத்தில், என் பணியில், என் படிப்பில், என் பயணத்தில், என் நண்பரில் நான் மீட்பைக் கண்டுகொண்டேன். என்னால் அமைதியாகப் போகமுடியும் என்று நம்மால் சொல்ல முடிந்தால் நாமும் சிமியோன்களே.
பல நேரங்களில் இவர்களில் நாம் மீட்பiயும் மகிழ்வையும் காண்பதில்லை. ஆகையால் தான் நம்மால் மகிழ்ச்சியோடு விடைபெற முடிவதில்லை. நம் வாழ்வின் உதயம் எந்த அளவிற்கு எதார்த்தமானதோ அந்த அளவிற்கு அஸ்தமனமும் எதார்த்தமானது. அஸ்தமனம் கூட அழகுதான் என்பதற்கு அடையாளம் சிமியோன்.
நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே ஒரு குழந்தை. ஒவ்வொரு பொழுதும் ஒரு உதயம். ஒவ்வொரு பொழுதும் ஒரு அஸ்தமனம். திறக்கின்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட வேண்டும். நாம் சந்திக்கும் உறவுகள் எல்லாம் பிரிய வேண்டும். சில நேரங்களில் பிரியம் வளர பிரிந்துதான் இருக்க வேண்டும். சந்திப்பிற்கும், பிரிவிற்கும் இடையே ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்?
இன்று, வாழ்வின் நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. அதாவது கருத்தடைச் சாதனங்கள், கருக்கலைப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாள். நம் விருப்பு வெறுப்புக்கேற்ப குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள நினைப்பது நம் வியாபார உலகின் தாக்கத்தையே காட்டுகின்றது. உயிர்களில் மனிதர்கள் மட்டும்தான் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். கருக்கலைப்பு செய்கின்றனர். ஏதோ ஒரு சூழலில் கருக்கலைப்பு செய்துவிட்டு அதற்காக வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டிருப்பவர்களின் கண்ணீரை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன்.
குழந்தைகளைப் பற்றிய எண்ணம் நமக்கு இரண்டு நிலைகளில் இருக்கிறது: ஒன்று, குழந்தை பெற்றுக்கொள்ளவோ, வேண்டாம் என்று சொல்லவோ எனக்கு அதிகாரம் இருக்கிறது என்ற தன்னல உணர்வு. என் நலன், என் மகிழ்ச்சி, என் வரவு, என் சௌகரியம்தான் முக்கியம் என நினைக்கும் முதல் வகையினர் குழந்தை பிறப்பையே விரும்புவதில்லை. அவர்களின் பெற்றோர்கள் அப்படி நினைத்திருந்தால் இவர்கள் பிறந்திருப்பார்களோ? அருட்பணி நிலையில் மேற்கொள்ளும் கன்னிமை அல்லது கற்பு என்ற வார்த்தைப்பாடும் ஒரு வகையான 'செயற்கை கருத்தடை' என்றே பல நேரங்களில் நான் நினைத்திருக்கிறேன். என்னதான் 'எல்லாரும் என் குழந்தைகள்' என்றும் 'எல்லாரையும் அன்பு செய்வதற்காக நான் கற்பு காக்கிறேன்' என்று சொன்னாலும் தனிமையில் இருக்கும் போது 'இயற்கையின் வடிகாலுக்குக் குறுக்கே அணை கட்டுவது போலவும், அது பல நேரங்களில் அறவியல் பிறழ்வுகளாக வெளிப்படுகிறது' என்பதும் தான் கன்னத்தில் அறையும் உண்மை. 'கற்பும்' 'கன்னிமையும்' ஒரு ஸொபிஸ்டிகேடட் சுயநலம்.
இரண்டாவது வகையினர், இதற்கு எதிர்ப்பதம். குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். அவர்கள் என் சொற்படிதான் கேட்க வேண்டும். நான் டாக்டர் ஆக முடியவில்லை. ஆகையால் என் குழந்தை டாக்டராக வேண்டும். நாம் வாழ்வில் அடைய முடியாத இலக்குகளையெல்லாம் நம் குழந்தைகள் மேல் திணிக்கிறோம். குழந்தைகளை நாம் கொண்டாடுவதில்லை. அவர்கள் கஷ்டத்தில் நாம் இன்பம் காண்கிறோம். 'நான் செய்வதெல்லாம் என் குழந்தைகளுக்காக!' என்று சொல்வதே ஒரு பெரிய சுயநலம்தான். அவர்களுக்காக நான் செய்கிறேன் என்றால் எனக்காக அவர்கள் செய்வார்கள் என்ற எண்ணமும், செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அங்கே ஒளிந்துதான் இருக்கின்றது. 'இப்படித்தான் ஒருவர் இருக்க வேண்டும் என்று ஒரு பெட்டி செய்து' நாம் அதற்குள் அந்தக் குழந்தையைத் திணிக்க நினைக்கின்றோம். அதில் பல நேரங்களில் குழந்தை மூச்சுத் திணறி விடுகின்றது. உடனே நாம் சொல்வது, 'இன்றைக்குக் கஷ்டப்பட்டால் தான் நாளைக்கு நீ நல்லா இருக்க முடியும்'. இப்படியே ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுகிறோமே நாம் என்று நல்லா இருக்கப் போகிறோம். எதற்காக நாளைய மகிழ்ச்சிக்காக இன்றைய நாளை விலை பேச வேண்டும். இன்றே நல்லா இருந்துவிட்டுப் போகலாமே. இந்த இரண்டு நிலையும் ஆபத்துதான்.
மணிகண்டன் என்ற எழுத்தாளர் ஒரு நிகழ்வை தன் வலைப்பக்கத்தில எழுதுகிறார்: 'என் வீட்டிற்கு அருகில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுவற்றில் ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருப்பான். எனக்குக் கோபம் வரும். ஒருநாள் அவனை அடித்தும் விட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து நான் வேலை முடித்து வரும் ஒரு மாலை நேரம் அந்தச் சிறுவனின் வீட்டிற்கு வெளியே ஒரே கூட்டம். என்னவென்று விசாரித்தேன். பள்ளி சென்ற சிறுவனைக் காணவில்லையாம். வீட்டில் ஒரே அழுகைச் சத்தம். காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சிறுவன் கிடைத்துவிடுவான். கிடைத்தவுடன் அவன் கைகள் நிறைய பென்சில்கள் கொடுத்து என் வீடு முழுவதும் கிறுக்கச் சொல்வேன்.'
குழந்தைகளைப் பற்றி கலீல் கிப்ரான் அழகாகக் கூறுவார்:
'உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்லர்.
அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்.
உங்கள் வழியாக வந்தாலும் அவர்கள் உங்களிடமிருந்து வருவதில்லை.
உங்களோடு இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்லர்.
உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் சிந்தனைகளை அல்ல.
ஏனெனில் அவர்களுக்கென்று சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடலை நீங்கள் வீட்டில் அடைக்கலாம். அவர்களின் ஆன்மாக்களை அல்ல.
அவர்களின் ஆன்மாக்கள் என்றும் எதிர்காலத்தில் பறக்கும்.
அது அவர்களுக்கு உரியது. அவர்களின் கனவுகளைப் பின்பற்ற உங்களால் முடியாது.
நீங்கள் இறந்தகாலத்தவர்கள்.
அவர்களை உங்கள் காலத்திற்கு இழுக்காதீர்கள்.
முடிந்தால் நீங்கள் அவர்கள் காலத்திற்குச் செல்லுங்கள்.
உங்களைப் போல அவர்களை மாற்றி விடாதீர்கள்.
நீங்கள் வெறும் வில்தான். அவர்கள் அம்புகள். நீங்கள் ஒரே இடத்தில் இருப்பீர்கள்.
அவர்கள் முன்னேறிச் செல்வார்கள்.
எய்தவர்கள் நீங்கள் அல்லர் இறைவன்.
அவருக்குத் தெரியும் அம்பு எங்கு செல்ல வேண்டுமென்று.'
ஒவ்வொரு குழந்தையும் வளராத முதியவர். ஒவ்வொரு முதியவரும் வளர்ந்த குழந்தை. இரண்டு பேரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வோம். எப்போதும் கைகளில் ஏந்திக் கொள்வோம்.
'நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன!'
இன்றையப்பகுதி ஒவ்வொன்றையுமே முத்துக்களின் கோர்வையாகப் பார்க்கிறேன்.கழுத்து நிற்காத குழந்தையைக் கைகளில் ஏந்தும் கலையில் தொடங்கி குழந்தை- முதுமை,உதயம்-அஸ்தமனம்,உறவு-பிரிவு,வாழ்வு-மரணம் போன்ற சொற்றொடர்களின் மூலம் வாழ்வின் எதார்த்தத்தைப் படம் பிடித்துக்கொண்டு காட்டியுள்ள விதம் அருமை.அந்த நிலக்கரிச் சுரங்கப்பையனைப் பற்றிய நிகழ்வு ஒரு 'ஒளி காணலைக்' கண் முன் கொணர்ந்தது.இறுதியாக குழந்தைகள் பற்றிய கலீல் கிப்ரானின் வார்த்தைகளைப் பின்பற்ற முடிந்தால் அஅத்தனை பெற்றோரும் பூஜிக்கப்பட வேண்டியவர்களே!
ReplyDelete