Saturday, February 1, 2014

சீடத்துவத்தின் விலை

இயேசு எங்கே சென்றாலும் ஒரு கூட்டம் அவரைப் பின்பற்றியே வருகின்றது. இயேசுவைத் தொடவும், இயேசுவைக் காணவும், இயேசுவுக்கு அருகில் வரவும், இயேசுவை நெருக்கவும் என கூட்டம் இயேசுவின் பின் காந்தத்தை நாடும் இரும்புத் துகள்களாய் ஒட்டிக்கொண்டே வருகின்றது. இந்தக் கூட்டத்திலிருந்து தப்பிக்க படகை நாடும் அளவிற்குக் கூட்டம் வருகின்றது. இன்றைய நற்செய்தி நிகழ்வு நடைபெறும் இடம் ஒரு கூட்டம். இந்தக் கூட்டத்தோடு இணைந்து அவர் நடந்து கொண்டிருக்கிறார். பெண்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள் எல்லாம் வருகின்றனர் என அவர் கண்டிப்பாய் மெதுவாகத்தான் நடந்து சென்றிருப்பார். அந்தக் கூட்டம் அவரைப் பற்றியும், அவரது சீடர்களாய் இருப்பவர்களைப் பற்றியும், அவரது சீடர்களாய் இருப்பதைப் பற்றியும் பேசிக்கொண்டே சென்றிருந்திருக்க வேண்டும். ஆகையால் தான் இயேசுவின் போதனையும் சீடத்துவத்தைப் பற்றியதாக இருக்கின்றது. 

சீடத்துவத்தின் மூன்று பண்புகளை முன்வைக்கின்றார் இயேசு: முதலில், யார் சீடராய் இருக்க முடியாது? 'என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது' இயேசு ஏன் இவ்வளவு கடினமான சவாலை முன்வைக்கின்றார்? மனித உறவுகள் தேவையற்றவையா? மனித உயிரும் தேவையற்றதா? இதற்கு நாம் எப்படி பதில்மொழி தருவது? இயேசுவின் இந்த வார்த்தைகள் ஒரு இலக்கியக் கையாள்கை. நம் வாழ்வின் அனைத்தைவிடவும் இயேசுவுக்கு முதன்மையான இடத்தை அளிக்க வேண்டும் என்பதே இயேசுவின் முன்மொழியாக இருக்கின்றது. நாம் இயேசுவை முதன்மைப்படுத்துவதை விட முழுமைப்படுத்த அழைக்கப்படுகின்றோம். 'பத்தோடு ஒன்று பதினொன்றாக' இயேசுவை நாம் கருத முடியாது. 

இரண்டாவதாக, 'தன் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது'. எல்லா உறவுகளையும் விட இயேசுவை முதன்மையாக்கியாயிற்று. அடுத்ததாக, மறுபடியும் சிலுவை சுமக்க வேண்டுமா? இது ரொம்ப கஷ்டமானதாச்சே. இந்த இரண்டாம் கட்டளை முதற்கட்டளையின் மறுபக்கம்தான். இயேசுவை நம் வாழ்வின் முதன்மையாகவும், முழுமையாகவும் மாற்றிவிட்டாலே சிலுவைகள் தாமாய் வந்துவிடும். நாம் சிலுவைகளைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வாழ்வின் ஒவ்வொரு முடிவும், முயற்சியும் நாம் சுமக்கும் சிலுவைகளாகவே மாறிவிடும். நாம் சுமப்பதால் வரும் இந்தத் துன்பம் இறையரசின் மகிமைக்காகவே. 

அடுத்ததாக, இயேசு இரண்டு கதைகளின் வழியாக தன் மூன்றாவது பாடத்திற்கு மக்களைத் தயாரிக்கின்றார். முதலில், 'உங்களில் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?' (லூக் 14:28) கட்டிமுடிக்க இயலாமற்போனால் பார்ப்பவர்களின் ஏளனப் பேசு;சுதான் மிஞ்சும். இரண்டாதாக, 'வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?' (லூக் 14:31). இந்த இரண்டு கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் 'தங்களிடம் போதுமான சக்தி உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதுதான்' – கோபுரம் கட்ட பணம், போர் செய்ய வீரர்கள். இந்தக் கதைகளின் நிறைவில் தன் மூன்றாவது பாடத்தைக் கற்பிக்கின்றார்: 'உங்களுள் தம் உடைமையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது'. 'நம்மிடம் போதுமானதாக இருக்கிறதா?' என ஆராய்ந்து பார்க்கச் சொல்லிவிட்டு 'நம்மிடம் ஒன்றும் இருக்கக் கூடாது' என இயேசு சொல்வது சற்று வியப்பாகவே இருக்கிறது. 'சீடத்துவத்திற்குக் குறுக்கே வேறெதுவும் வரக்கூடாது' என்பதே இயேசுவின் பாடம். சீடத்துவம் என்பது கோபுரம் கட்டுவதற்கும், போரில் வெல்வதற்கும் சமம். சீடத்துவம்தான் வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர பணமோ, ஆள்பலமோ அல்ல.

ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மல்லிகா என்ற சிறுமி அழுதுகொண்டே வீடு திரும்புகின்றார். 'என்ன ஆயிற்று?' என்று கேட்கின்றார் அவளின் தாய். சிறுமி சொல்கின்றாள்: 'இன்னைக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர் எல்லாருக்கும் விளையாட்டு ரூபாய் கொடுத்து விளையாடச் சொன்னாங்க. எல்லாருக்கும் 1000 ரூபாய் கொடுத்தாங்க. அன்பு 500 ரூபாய், காலதாமதமின்மை 250 ரூபாய், நட்பு 300 ரூபாய், கடின உழைப்பு 400 ரூபாய் என விலைப்பட்டியல் போட்டாங்க'. நான் 'மோட்சம் 500 ரூபாய்க்கு கிடைக்குமான்னு கேட்டேன்?' உடனே டீச்சர் 'மோட்சம் 500 ரூபாய்ன்னு ஏலம் போட்டாங்க'. எப்பவுமே எங்கூட சண்டை போடுற மாலதி உடனே 'மோட்சம் 1000 ரூபாய்ன்னு' கேட்டு மோட்சத்தை வாங்கிட்டா.' தாய் திரும்பவும் கேட்டாள், 'இப்ப என்ன சொல்ல வர்ற?' மல்லிகா சொன்னாள், 'நான் பேரம் பேசுதனதுக்குப் பதிலா எல்லாத்தையும் கொடுத்திருக்கணும்!' 

சீடத்துவம் என்பதும் இதுவே. 'இவ்வளவு அர்ப்பணம் கடவுளுக்கு,' 'இவ்வளவு அர்ப்பணம் மற்றவைகளுக்கும், மற்றவர்களுக்கும்' என பேரம் பேசுவதல்ல. மாறாக, எல்லாவற்றையும் கொடுப்பது.

No comments:

Post a Comment