Wednesday, February 12, 2014

நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்

'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக் கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்' என்றார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், 'என்னைப் பின்தொடர்' என்றார். (யோவான் 21:18-19)

இன்று அகில உலக நோயுற்றவர் தினம். கிபி 1858 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் லூர்து நகரில் பிப்ரவரி 11 முதல் சூலை 16 வரை பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மரியாள் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியின் முதல் காட்சி இன்றைய தினம். இன்றைய நாளில் இத்தாலியின் பல நகரங்களில் மதியம் 3 மணிக்கு நோயுற்றவருக்கான சிறப்பு திருப்பலி நடைபெறும். இன்றைய தினம் எங்கள் பங்கிலும் திருப்பலி நடைபெற்றது. இந்தத் திருப்பலியில் நோயிற்பூசுதல் என்ற அருளடையாளம் வழங்கப்படும். நோயிற்பூசுதல் என்றால் என்ன? திருஅவையின் ஏழு அருளடையாளங்களில் ஒன்று இது. சாதாரண சொல் வழக்கில் 'அவஸ்தை' என்று இதைச் சொல்வார்கள். 'மரண அவஸ்தையின்' போது வழங்கப்படும் அருளடையாளம் இது. இதைக் கேள்விப்பட்டாலே பலரும் பயப்படுவர். இதைப் பெற்றுக்கொண்டால் நாம் இறந்துவிடுவோம் என்பதும் ஒரு சிலரது பயம். அந்தக் காலத்தில் இந்த அருளடையாளம் கொடுக்க வரும் அருட்பணியாளர் கையில் ஒரு சிறிய மணியை வைத்து அடித்துக் கொண்டே வருவார். அவர் நற்கருணை ஆண்டவரைக் கையில் கொண்டு வருகிறார் என்பதை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காக அந்த மணி. நோயிற்பூசுதலின் போது நற்கருணையும் வழங்கப்படும் என்பது குறிப்பு. அருட்பணியாளரின் அந்த மணிச்சத்தத்தைக் கேட்கும் நீட்சே என்ற மெய்யியலார் இப்படி கிண்டலாக எழுதுகிறார்: 'இதோ மரண மணி அடித்துக்கொண்டு அருட்பணியாளர் வருகிறார். யார் உயிரை அவர் எடுக்கப் போகிறாரோ? இதோ வருகிறார் இறப்பின் தூதன்'. நீட்சேவைப் போல இன்னும் பலர் எண்ணுகின்றனர். 

ஆனால் நோயிற்பூசுதலின் பின்புறம் இருக்கும் பொருள் தூய யாக்கோபின் வார்த்தைகள்தாம்: 'உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்' (யாக்கோபு 5:14-15). நோயிற்பூசுதல் ஒரு நலம்தரும் அடையாளம். இன்றைய திருப்பலியில் நான் 73 பேருக்கு இந்த அருட்சாதனத்தை நிறைவேற்றினேன். மிகவும் மனதுக்கு உருக்கமான நிகழ்வாக இருந்தது. இந்த அருளடையாளம் எப்படி வழங்கப்படும்? புனிதப்படுத்தப்பட்ட திருஎண்ணெயை பெறுபவரின் நெற்றியிலும், இரண்டு புறங்கைகளிலும் பூசுவதால் நிறைவேற்றப்படும். ஏன் உள்ளங்கைகளுக்குப் பதிலாக புறங்கைகள்? உள்ளங்கையில் எண்ணெய் தேய்த்து வழங்கப்படும் அருளடையாளம் குருத்துவம். புறங்கைகளுக்கும் இந்த அருளடையாளத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. என்ன தொடர்பு?

இன்று என்னிடம் இதைப் பெற வந்த ஒரு பாட்டியின் கண்கள் என் கண்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அவருக்கு ஏறக்குறைய 75 வயது இருக்கும். சிவப்பு ஆடை. நல்ல வெள்ளை நிறம். நரைத்த முடி. கைப்பிடி, கைத்தடி இல்லாமல் நடக்க முடியும் என்னும் அளவிற்கு உடல் பலம். நெற்றியில் நான் சிலுவை அடையாளம் வரைந்தவுடன் அவரது கண்கள் கலங்குவதை நான் கவனித்தேன். பின் அவராகவே தன் இரு புறங்கைகளையும் நீட்டினார். 'இவற்றில் எண்ணெய் தேயுங்கள்!' என்று சொல்வதற்குப் பதில், 'என்னைப் பிடித்து நடத்திச் செல்லுங்கள்' என்று அவர் சொல்வது போலவே இருந்தது. என் தங்கை மகள் குட்டி ஃபிலோவும் மின்னலாக வந்து சென்றாள். 'மாமா' என்று சொல்லத் தெரியாமல் 'ம்மா...ம்மா..' என்று கைகளை நீட்டுவாள். 'என்னை நடத்திச் செல்' என்று சொல்லாமல் சொல்வாள். குழந்தைப் பருவத்திலும் கைகளை விரித்துக் கொடுக்கிறோம். வயது முதிர்ந்ததும் கைகளை விரித்துக் கொடுக்கிறோம். இந்த இரண்டு நிலைகளிலுமே மற்றவரின் துணை நமக்குத் தேவைப்படுகிறது. ஆகையால்தான் ஷேக்ஸ்பியர் முதிர்வயது பருவத்தை இரண்டாம் குழந்தைப் பருவம் என அழைக்கிறார் போலும். இரண்டு நிலைகளிலும் கைகளை வரித்துக் கொடுக்கும் போது மனதின் உணர்வுகள் வித்தியாசமாக இருக்கின்றன.

குழந்தை கையை விரித்துக் கொடுக்கும் போது அதன் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு, தேடல், துணிச்சல், ஆர்வம் தெரியும். முதியவர் விரித்துக் கொடுக்கும் போது அந்த பளுப்பு நிறக் கண்களில் கண்ணீர் மட்டுமே தெரிகின்றது. முதுமையாக இருப்பது பெரிய விஷயம்தான். ஒவ்வொரு முதியவருமே புதிதாகப் பிறக்கின்றார் ஒவ்வொரு நாளும். 'எனக்கு யார் இருக்கிறார்? யார் இருப்பார்?' என்ற கேள்வி அவர்களைத் தொற்றிக் கொள்கின்றது. 'அவர்கள் கைகளை நீட்டி மட்டுமே இருக்கும் அளவிற்கு' மாறிவிடுகிறார்கள். இறப்பின் தூதன் அவர்களை அவர்கள் விரும்பாத இடத்திற்கு அழைத்துச் செல்வான் என்பது அவர்களுக்குத் தெரியத் தொடங்குகிறது. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும்.

தான் உயிர்த்தபின் இயேசு பேதுருவைப் பார்த்துக் கூறும், 'நீ கைகளை விரித்துக் கொடுப்பாய், மற்றவன் உன்னைக் கூட்டிச் செல்வான்' என்ற வார்த்தைகள் நம் ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட்டதாகவே இருக்கின்றது.

இப்பொழுதும் என் நினைவில் அந்த சிவப்பு உடை பாட்டியே இருக்கின்றார். அவரின் புறங்கைகள் என் கைகளைப் பற்றிக் கொள்வது போலவே உணர்கின்றேன். குருத்துவத்தின் இனிமையான பொழுதுகளில் இதுவும் ஒன்று. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஒரு இனியவரின் கைகளை என் கைகள் பற்றிக் கொள்ளத் துடிக்கின்றது. அவரின் கைகள் என் கைகளைப் பற்றிக் கொள்ளத் துணிகின்றன. 

'என்னை நோக்கித் தன் கைகளை நீட்டும் இரண்டாம் குழந்தையர் அனைவரையும் அணைத்துக் கொள்ளும் பரந்த மனம் கேட்கின்றேன்!'

'நீ கைகளை விரித்துக் கொடுப்பாய் ... வேறொருவர் உன்னைக் கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.'

1 comment:

  1. Anonymous2/12/2014

    கண்கள் கசிந்து நெஞ்சம் கனத்து விட்டது இன்றையப் பகுதியைத் படித்தவுடன்.. சாதாரணமாக 'நோயில் பூசுதல்' என்னும் திருவருட்சாதனத்தை மக்கள் மரணத்தோடு சம்பந்தப் படுத்துவதை நானும் உணர்ந்துள்ளேன்.ஆனால் இன்று அதன் அர்த்தத்தை, அவசியத்தைப் பூரணமாக உணர்ந்து கொண்டது மட்டுமல்ல,என் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அந்த இனியவருக்காக விரித்த கரங்களோடு காத்திருக்கிறேன். கொடுத்த தைரியத்திற்கு நன்றி.

    ReplyDelete