ஜென் துறவிகள் மடத்தில் யாராவது தவறு செய்தால் அவர்களுக்குத் தண்டனை சமையலறையில் வேலை செய்வது: காய்கறி வெட்டுவது, பாத்திரங்களைக் கழுவுவது, சமையல் செய்யும் இடத்தைத் துப்புரவு செய்வது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். தியான நேரத்தில் வழக்கமாகத் தூங்கி வழியும் கீன் என்ற சீடருக்கு அதே தண்டனை கொடுக்கப்படுகிறது. மூன்று மாதங்கள் சமையலறையில் வேலை செய்ய வேண்டும். கீன் எல்லாரையும் விட நன்றாகவே வேலை செய்கின்றார். கொடுக்கின்ற வேலைகளைச் சிறப்பாகச் செய்கின்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் புலம்பிக்கொண்டும், வசைபாடிக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் வேலைகளைச் செய்வார். அவரின் வேலையைப் பார்த்த தலைமைத் துறவி அவரின் தண்டனையை இரண்டு மாதமாகக் குறைத்து விடுகின்றார். சில மாதங்கள் கழித்து சமையலறையின் நிர்வாகம் சரியில்லை எனவும் அதற்கு தலைவராக ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் சொன்னபோது கீன் தலைவராக நியமிக்கப்படுகிறார். இம்முறையும் அதே வேலைகளைச் சிறப்பாகச் செய்கின்றார். ஆனால் இம்முறை எந்த வருத்தமோ, முணுமுணுப்போ இல்லாமல் செய்கின்றார். முதல் வேலை கண்டிப்பால் வந்தது. இரண்டாம் வேலை அன்பால் வந்தது. கண்டிப்பிலும், தண்டனையிலும் முணுமுணுப்பு இருக்கும். அன்பில் முணுமுணுப்பு இல்லை. ஞானம் பெற்றான் சீடன்.
இந்த வாரமும், வருகின்ற வாரமும் நற்செய்திப் பகுதிகள் இயேசுவின் மலைப்பொழிவின் தொடர்ச்சியாகவே உள்ளன. 'திருச்சட்டத்தை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றவே வந்தேன்' எனத் தன் வருகையின் நோக்கத்தை அறிவிக்கின்ற இயேசு தன் சமகால யூதர்களின் வழக்கத்திலிருந்த ஆறு சட்டங்களை எடுத்து அவற்றிற்குப் புதிய அர்த்தங்கள் கொடுக்கின்றார். இன்றைய நாளில் 4 சட்டங்களும் வருகின்ற வாரம் 2 சட்டங்களும் நமக்குப் புதிய அர்த்தங்கள் கொடுக்கின்றன. சட்டங்களை வெறும் தண்டனைக்கான காரணிகள் எனப் பார்க்காமல், அவற்றை அன்பின் தொடர்ச்சியாகப் பார்க்க அழைக்கின்றார் இயேசு. இந்த ஆறு சட்டங்களுமே அன்பால் கட்டப்பட்டவை.
1. அன்பு வெறுப்பைக் காட்டாது. 'கொலை செய்யாதே' என்ற சட்டத்தை எடுக்கின்ற இயேசு, 'யாரையும் வெறுக்காதே!' என அதற்குப் புதிய அர்த்தம் கொடுக்கின்றார். கொலையின் விதை வெறுப்பு. யாரும் யாரையும் கத்தியை எடுத்து எளிதாகக் கொலை செய்துவிடுவதில்லை. ஒருவரின் மனதில் இருக்கும் வெறுப்பு, கோபமாக மாறி, அந்தக் கோபம் 'கொலை' என்ற செயலாக வெளிப்படுகின்றது. 'கொலை' என்ற செயலில் ஈடுபடத் துணியாமல் பல நேரங்களில் நாம் 'வெறுப்பையும்,' 'கோபத்தையும்' நம் உள்ளத்தில் எரிய விட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம். எரிச்சல், வெறுப்பு, கோபம் அனைத்தும் பல நேரங்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் வழியாக வெளியே கொட்டப்படுகின்றது. நமக்கு மேல் இருப்பவர்கள் மேல் கோபம் எனில் அது திசைமாறி மற்றவர்கள் மேலும் திருப்பப்படுகின்து. கொலையின் வேரான வெறுப்பைக் களையச்சொல்கிறது இயேசுவின் புது மொழிபெயர்ப்பு.
2. அன்பு தீர்ப்பிடுவதில்லை. சண்டைகள் வரும்போது சமரசம் செய்து வைக்க நாம் நடுவரை நாடுகிறோம். நம் வாழ்க்கை முறையில் எடுத்துக்கொண்டால் காவல்துறை அல்லது நீதிமன்றத்தை நாடுகிறோம். இந்த இரண்டிற்கும் சென்றால் நம் வாழ்க்கை எப்படிப் பாழாய்ப்போகும் என்பதை நாம் அறிவோம். இயேசுவின் காலத்து நிலையும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். வலிமை படைத்தவர் பக்கமே தீர்ப்பு வழங்கப்பட்டது. நலிந்தவர் பணம் செலவழிக்க, வலிமையானவர் வெற்றி பெற்ற அவலம் அன்றும் நடந்தது. அந்த நிலைக்குப் போவதற்குப் பதில், எதிரியோடு வழியிலேயே சமரசம் செய்வது மேல் என்கிறார் இயேசு. நடுவர் மன்றங்கள் இருவருக்கிடையேயிருக்கும் பகையுணர்வைக் குறைப்பதை விட, அதிமாக்கவே செய்கின்றன. நாம் யாரையும் தீர்ப்பிடவில்லையெனில் யாரும் நம்மைத் தீர்ப்பிடுவதற்கும் வாய்ப்பு இல்லை.
3. அன்பு பிரமாணிக்கமாய் இருக்கும். அன்பின் முக்கிய பரிமாணம் பிரமாணிக்கம் அல்லது நம்பகத்தன்மை. நாம் ஒருவரை அன்பு செய்கிறோம் என்றால் அந்த நபர்மேல் நாம் பிரமாணிக்கமும், நம்பகத்தன்மையும் கொண்டிருக்கின்றோம். அந்த நபரும் பதிலுக்கு நம்மேல பிரமாணிக்கமும், நம்பகத்தன்மையும் வைக்கின்றார். அன்பில் இணையும் இருவரும் ஒருபோதும் இந்த பிரமாணிக்கத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் எதிராகச் செயல்பட முடியாது. திருமணம் என்ற அமைப்பில் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது. பிரமாணிக்கம், நம்பகத்தன்மை குறையுமிடத்தில்தான் விபச்சாரம் நுழைகின்றது. ஒருவரின் உள்ளத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, உடலைப் பார்க்கத் தொடங்கும்போதே விபச்சாரம் அங்கே நுழைந்து விடுகிறது. உள்ளத் தூய்மை என்ற புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார் இயேசு. உடலோடு விபச்சாரம் செய்வதற்கு முதற்படி உள்ளத்தால் விபச்சாரம் செய்வதே. விபச்சாரம் இரண்டு முறை நடக்கின்றது. முதலில் ஒருவரது எண்ணத்தில். இரண்டாவதுதான் செயலில். எண்ணத்தையே களைந்துவிடச் சொல்கின்றார் இயேசு.
4. அன்பு உண்மை பேசும். 'ஆணையிடாதீர்கள்' என்ற சட்டத்திற்கு 'உண்மை பேசுங்கள். அப்போது ஆணையிடத் தேவையே இருக்காது' என்ற புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார் இயேசு. உண்மையில்லாத இடத்தில்தான் சத்தியம் நுழையும். 'சத்தியமாக' என ஒருவர் ஆரம்பிக்கிறார் என்றால் அவர் எதோ பொய் சொல்லப் போகிறார் என்பதே அர்த்தம். வார்த்தையில் தூய்மையே வாய்மை. 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் இருக்க வேண்டும். 'இரண்டிற்கும் நடுவில்' என்ற நிலை அன்பில் இல்லை.
No comments:
Post a Comment