Saturday, February 15, 2014

களத்தூர் கண்ணம்மாவும் காதலர் தினமும்

இன்று காதலர் தினம். இன்றைய தமிழில் இதை அன்பர்கள் தினம் என்றும் அழைக்கின்றனர். இன்று தொலைக்காட்சி நிகழ்வுகளைப் பார்த்தால் காதலர் தினத்தை அனைவரும் கொண்டாடலாம் என்று புதிய பொருள் கொடுத்துள்ளனர். இது அன்பின் திருநாள். இந்தத் திருநாளுக்குப் பின் நிற்பவர் தூய வலண்டின் என்ற புனிதர். இந்தப் புனிதரைப் பற்றி இன்றைய உரோமைத் திருச்சபை வழிபாட்டுக் குறிப்பில் எதுவும் இல்லை. இந்தப் புனிதரைப் பற்றி பல்வேறு மரபுக் கதைகள் இருக்கின்றன. இது மேற்கத்திய விழா என்று நாம் சொல்கிறோம். ஆனால் இன்று இதன் தாக்கம் மேலை நாடுகளை விட கீழை நாடுகளில் தான் அதிகம் தான் இருக்கின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்னணியில் பார்த்தால் இது தங்கள் வாழ்த்து அட்டைகளையும், மிட்டாய்களையும், பரிசுப் பொருட்களையும் விற்கும் வியாபார நுணுக்கம்தான் காதலர் தினம்.

ஒரு காலத்தில் காதல் என்றால் கெட்ட வார்த்தையாகப் பார்க்கப்பட்ட நம் மண்ணில் இன்று இளைய தலைமுறையினர் நடுவில் 'நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்!' என்று சொல்லக் கூடிய துணிச்சல் வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. காதல் நல்லதா? கெட்டதா? என்று இங்கு ஆராய வேண்டாம்.

காதல் என்ற சிந்தனை எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம். நான் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் ஒரு திரைப்படம் 'களத்தூர் கண்ணம்மா'. இந்தத் திரைப்படத்தில் வரும் 'கண்களின் வார்த்தைகள் புரியாதோ' என்ற பாடலும், குட்டிக் கமலஹாசன் பாடும் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். கண்களில் தோன்றி இதயத்தில் குடிகொள்ளும் ஒரு உணர்வே காதல். களத்தூர் கண்ணம்மா முன்வைக்கும் காதல் 'பிரமாணிக்கம்'. எந்த ஒரு இக்கட்டிலும் தன் காதலுக்குப் பிரமாணிக்கமாய் இருக்க நினைக்கின்றனர் இருவரும். இன்று திரைப்படத்தில் காதல் எப்படி வளர்ந்திருக்கிறது? 'வில்லா' (பீட்சா 2) திரைப்படம் பார்த்தீர்களா? தன் காதலனின் கையிருப்பை முன்வைத்துக் காதலிக்கும் ஒரு காதலியாய் முன்வைப்பதில் திருப்பத்தை உருவாக்குகிறது இந்தத் திரைப்படம்.

காதல் மாறிவிட்டதா? அல்லது காதலைப் பற்றிய திரைப்படங்களின் பார்வை மாறிவிட்டதா? திரைப்படங்களின் தாக்கங்களால் காதல் மாறியதா? அல்லது காதல் மாறியது திரைப்படங்களில் பிரதிபலிக்கிறதா? 'கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?' கதைதான்.

இன்று வத்திக்கான் நகரில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அகில உலக 20,000 தம்பதியினரைச் சந்தித்துப் பேசினார் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இன்று மேலை நாடுகளில் திருமணம் யாரும் கண்டுகொள்ளாத ஒரு சமூக அமைப்பாக மாறிவிட்டது. இந்தப் பின்னணியில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு திடம் ஊட்டுகிறார் திருத்தந்தை. இன்று அவர் சொன்னதில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்:

'எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்' என்பது இயேசுவின் செபம்.

ஆனால் இன்று நீங்கள் செபிக்க வேண்டியது இதுதான்:

'எங்கள் அனுதின அன்பை எங்களுக்கு இன்று அளித்தருளும். ஏனெனில் திருமண உறவில் அன்புதான் அனுதின உணவு. இந்த அன்பில் பட்டினி வந்துவிட்டால் திருமணம் வாடி விடுகிறது.'

'எங்கள் அனுதின அன்பை எங்களுக்கு இன்று அளித்தருளும்' என்ற இந்த இறைவேண்டல் திருமண உறவிற்கு மட்டுமல்ல, அருள்நிலை உறவிற்கும் பொருந்தும்.

இந்த இரண்டு உறவுகளிலும் அடிப்படையாக இருப்பது: 'அனுதின அன்பு'.

'அன்பு என்றும் உலகை ஆளட்டும்...'

அன்பின் தின வாழ்த்துக்கள்!

1 comment:

  1. அன்பு என்றும் உலகை ஆளட்டும்...'
    Very excellent Yesu

    ReplyDelete