ஏனெனில் நமது அறிவு அரைகுறையானது. நாம் அறைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்...ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்...ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
(1 கொரிந்தியர் 13:9-10,12-13)
திருத்தூதர் யோவானைப் பற்றி ஒரு நிகழ்வு கூறக் கேள்விப்பட்டதுண்டு. திருத்தூதர்களிலேயே திருமணம் ஆகாதவர் தூய யோவான் என்பதும், திருத்தூதர்களில் அதிக ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பதும், திருத்தூதர்களிலேயே இயல்பான மரணத்தைத் தழுவியவர் (அதாவது மறைசாட்சியாக இரத்தம் சிந்தாமல்) என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இதயம் எப்போதும் கழுகைப் போல மேலே பறந்து சென்றதால் இவரின் நற்செய்திக்கு கழுகை அடையாளமாக வைத்திருக்கிருக்கிறது திருஅவை. இவர் பட்மோஸ் என்ற தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கிருந்துதான் நற்செய்தி நூலையும், திருவெளிப்பாட்டு நூலையும் எழுதினார் என்பதும் மரபு. அவரின் முதிய வயதில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவரை அவர் படுத்திருந்த கட்டிலோடு தூக்கிக்கொண்டு அவரின் போதனையைக் கேட்பர் தொடக்கக் கிறித்தவர்கள். ஒவ்வொரு ஞாயிறும் இறைமக்கள் கூடி வரும்போது அவரைத் தூக்கிக் கொண்டு வருவர். ஒவ்வொரு முறையும் அவர் பின் வரும் வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னார்: 'பிள்ளைகளே, ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள். பிள்ளைகளே, ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்'. வேறு ஒன்றும் சொல்ல மாட்டார். ஒவ்வொரு வாரமும் இதையே சொல்லக் கேட்ட இறைமக்கள் ஒரு நாள் அவரைப் பார்த்து, 'ஏன் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள்? வேறு ஏதும் இல்லையா?' அதற்கு அவர் சொன்னாராம்: 'நம் தலைவர் நம்மோடு இருந்தபோதும் இதையே தான் எங்களிடம் தினமும் சொன்னார்!'
அன்பு. நிறைய புத்தகங்கள் இதைப் பற்றி எழுதப்பட்டாலும், நிறையத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், நிறையப் பேர் பேசக் கேட்டாலும் இன்னும் இதுதான் என்று வரையறுத்துக் கூற முடியாத ஒரு வார்த்தை அன்பு. அன்பின் முகம் பெரிது. அன்பின் முகம் யார் கைக்குள்ளும் அடங்கிவிடாது. ஆகையால் தான் 'அன்பே கடவுள்' என்றும் 'அன்பே சிவம்' என்றும் மதங்கள் அன்பையும் இறைவனையும் ஒன்றாக்கிப் பார்க்கின்றன. கணவன் மனைவியின் அன்பு காதலாகக் கனிகின்றது. அந்தக் கனி புதிய உயிரை இந்த உலகிற்குத் தருகின்றது. அன்பு என்று ஒரு வார்த்தைதான் மனித குல வளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கின்றது.
கடவுள் பக்தனின் மேல் காட்டும் அன்பு வரம். பக்தன் கடவுளின் மேல் காட்டும் அன்பு பக்தி. கணவன் மனைவிக்கிடையே அன்பு காதல். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இரண்டு இதயங்கள் பரிமாறிக்கொள்ளும் நட்பு. பெற்றோர் குழந்தையிடம் காட்டும் அன்பு பாசம். பிள்ளைகள் பெற்றோரிடம் காட்டும் அன்பு கீழ்ப்படிதல். பெரியவர்கள் சிறியவர்களிடம் காட்டும் அன்பு அக்கறை. சிறியவர்கள் பெரியவர்களிடம் காட்டும் அன்பு மரியாதை. முன்பின் தெரியாதவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு சகிப்புத்தன்மை. புன்னகையில் பிறந்து, பேச்சில் மலர்ந்து, இதயத்தில் கனிவதே அன்பு. அன்பிற்கு இலக்கணமில்லை என்பார்கள். ஆனால் அன்பு செய்வதற்கு நிச்சயம் இலக்கணம் தேவை. ஒவ்வொரு அன்பிலும் ஒருவர் தன் முழு சிந்தனையை, முழு ஆற்றலை, முழு உள்ளத்தைச் செலவிடுகின்றார்.
அன்பில் வளர என்ன செய்ய வேண்டும்?
1. நாம் அன்பு செய்பவரோடு அதிக நேரம் செலவிட வேண்டும். பகவத்கீதையின் பல போதனைகளில் ஒன்று 'தினச்சார்யா'. இந்தத் தினச்சார்யாவிற்கு அதிக அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று என்னவென்றால், 'நாம் எதன்மேல் அதிக நேரத்தைச் செலவிடுகின்றோமோ அது வளரும். எதன் மேல் குறைவான நேரத்தைச் செலவிடுகின்றோமோ அது மறைந்து போகும்'. எபிரேய வகுப்புகளும், பாடமும் ஒன்றும் புரியவில்லை என்று மாணவர்கள் நாங்கள் ஒருமுறை ஒரு வயதான பேராசிரியரிடம் முறையிட்டபோது அவர் சொன்னதும் இதுதான்: 'கடினமாக இருக்கிறதென்றால் நீங்கள் அதற்குப் போதுமான நேரம் கொடுக்கவில்லை என்று அர்த்தம்'. நாம் யாருடன் அல்லது யாருக்காக அதிக நேரம் செலவிடுகின்றோமோ அது வளரும். யாரிடம் அல்லது யாருக்காக செலவழிக்கவில்லையோ அந்த உறவு உதிரும். ஒருவர் திருடும் குணமுள்ளவர் என வைத்துக்கொள்வோம். அவரின் திருட்டை எப்படி ஒழிப்பது? தினச்சார்யா சொல்வது இதுதான்: 'திருடும் நேரத்தைக் குறை. திருட்டு ஒழிந்து போகும். திருடுவதற்கு நீ அதிக நேரம் செலவழித்தால் திருடிக்கொண்டேதான் இருப்பாய்'. கெட்ட வார்த்தை பேசும் பழக்கத்தை நிறுத்த அதற்காக நாம் செலவிடும் நேரத்தைக் குறைப்பதுதான் வழி. உடல்நலம் நன்றாக இருக்க வேண்டுமா அதற்கேற்ற நேரத்தை நாம் செலவழிக்க வேண்டும். இதே கொள்கையை டார்வினும் தன் கோட்பாட்டில் நிரூபிக்கின்றார். உயிர்களில் எல்லா உயிரினங்களும் தாங்கள் எவற்றைப் பயன்படுத்துகின்றனவோ அவைகளில் அதிக வளர்ச்சி காண்கின்றன. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீளமானதற்குக் காரணம் அது உயரமான மரங்கள் நோக்கித் தங்கள் தலைகளை நீட்டியதுதான். அன்பிற்கு நேரம் செலவழித்தால்தான் அன்பு வளரும். திருமண உறவில் இது எளிது. துறவற வாழ்வில் இது கொஞ்சம் கடினம். தன் இலக்கு மக்களுக்காக நேரம் செலவழிக்கும் அருட்பணியாளர் மட்டுமே அன்பில் வளர முடியும். தன் பணி, தன் நட்பு வட்டம், தன் குடும்பம் எனச் சுருக்கிக் கொண்டால் மக்களுக்கு நேரம் இருக்காது. 'என் மக்கள் என்னைப் புரிந்துகொள்வதில்லை' எனப் புலம்பத் தொடங்குவோம். யாரும் நம்மைப் புரிந்துகொள்வார்கள் - அதற்கான நேரத்தை நாம் எடுக்கும்போது.
இன்னும் சொல்வேன்...
திருத்தூதர் யோவானைப் பற்றிய தகவல் முற்றிலும் புதிது.நன்றி."வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளளாரின் கூற்றிற்கிணங்க தன் சக மனிதனின் உள்ளத்து உணர்ச்சிகளைத் தன் முகத்தில் பிரதிபலிப்பதற்குப் பெயரும் கூட அன்பு தான்...சரிதானே?
ReplyDelete