Tuesday, February 4, 2014

அப்சலோமே என் மகனே!

தாவீது அரசர் உரியாவின் மனைவியைத் தனதாக்க நினைத்து உரியாவை வாள்முனையில் கொன்ற போது, அவரிடம் கடவுளின் செய்தியைக் கொண்டு வருகின்ற நாத்தான் இறைவாக்கினர் 'வாள் உன் வீட்டை விட்டு நீங்காது!' என்று சொல்வார்.

அவ்வாறே அடுத்தடுத்து தாவீதின் இரண்டு மகன்கள் அம்னோன் மற்றும் அப்சலோம் இறந்துவிடுவர். அப்சலோமின் இறப்பு மிகவும் கொடுமையாக இருக்கும். அவனது முடியழகை விவிலிய ஆசிரியர் மிகவும் அழகாக வர்ணிப்பார். ஒவ்வொரு ஆண்டும் அப்சலோம் முடி வெட்டும்போது அது ஏறக்குறைய 10 கிலோ இருக்குமாம். உடலில் எவ்வித குறைபாடும் இல்லாதவனாக இருந்தான் அப்சலோம். ஆனால் மனதில் நிறையவே குறை இருக்கின்றது. தன் தந்தையைக் கொன்று ஆட்சியை எடுத்துக்கொள்ள நினைக்கின்றான். இதனால் தன் மகனிடமிருந்து தப்பி ஓடுகின்றார் தாவீது. போரின் ஒருகட்டத்தில் ஒரு கோவேறு கழுதையின் மேல் செல்லும் போது முடி கருவாலி மரத்தில் மாட்டிக்கொள்ள அங்கேயே கொல்லப்படுகிறான் அப்சலோம்.

நாம் நமது ஆற்றல் அல்லது அழகு என நினைக்கும் ஏதோ ஒன்றே நம் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதற்கு அப்சலோம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 

தன் மகன் அழிந்தவுடன், 'எதிரி அழிந்தான்!' என்று ஆர்ப்பரிக்கவில்லை தாவீது. 'என் மகன் அப்சலோமே! அப்சலோமே!' என்று புலம்புகிறார். இதுதான் தாவீதின் தாயுள்ளம். இந்த நாட்களில் விஜய் டிவியில் 'தாயுமானவனே' என்ற தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ஆண் மற்றவர்களுக்காக எப்படியெல்லாம் தன்னையே இழக்கின்றான் என்பதை மையமாக வைத்து ஓடும் தொடர் இது. 

நாம் நம் பெற்றோருக்கு எதிராக என்னதான் சொன்னாலும், செய்தாலும் அவர்கள் அதற்காக நம்மேல் பழிதீர்ப்பதில்லை. நாம் இடறிவிட்டால் 'ஐயோ மகனே! மகளே!' என்றுதான் அலறத் தொடங்குகிறார்கள். தாவீது ஒரு நல்ல தந்தை.

'தாவீதே...தாயுமானவனே...!'

1 comment:

  1. Anonymous2/04/2014

    "தென்னைய வச்சா இளநீரு,புள்ளயப் பெத்தா கண்ணீரு"......"பெத்த மனம் பித்து,புள்ள மனம் கல்லு" போன்ற பாடல் வரிகளை நினைவூட்டுகின்றது இன்றையப்பகுதி. இன்றையப் பிள்ளைகள் தான் நாளையப் பெற்றோர்கள் என்பதை உணர்வில் கொண்டால் எந்தப் பிள்ளையுமே தன் பெற்றோர் கண்களை வியர்க்கச் செய்ய மாட்டான்/ள்."தாயுமானவன்" பார்க்க வேண்டிய தொடர் தான்.

    ReplyDelete