Saturday, June 3, 2023

அனுபவம்-சான்று, கடவுள்-அன்பு, ஒற்றுமை-வேற்றுமை

மூவொரு கடவுள் பெருவிழா

விப 34:4-6,8-9. 2 கொரி 13:11-13. யோவா 3:16-18.

அனுபவம்-சான்று, கடவுள்-அன்பு, ஒற்றுமை-வேற்றுமை

இன்று மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதி வாக்கியம் மூவொரு இறைவன் வாய்ப்பாடாக அமைந்துள்ளது: 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்களனைவரோடும் இருப்பதாக' (2 கொரி 13:13). இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் மூவொரு கடவுள் மறைபொருளை பின்வரும் சொல்லாடல் இணைவுகளாகப் புரிந்துகொள்வோம்: 'அனுபவம்-சான்று,' 'கடவுள்-அன்பு,' 'ஒற்றுமை-வேற்றுமை.'

அ. மூவொரு கடவுள் நம்பிக்கையை அனுபவித்தலும் சான்று பகர்தலும்

கடவுள் அனுபவம் பெற்ற ஒருவர் அல்லது ஒரு சமூகத்தவர் அல்லது ஒரே நம்பிக்கையைப் பகிர்கின்ற மக்கள், தங்கள் கடவுள் இப்படித்தான் என்று அனுபவித்து அதைச் சொற்களால் வடிக்க முயற்சி செய்கின்றனர். யூதர்களின் யாவே, இசுலாமியர்களின் அல்லா, இந்துக்களின் விஷ்ணு-பிரம்மன்-சிவன், புத்தர்களின் புத்தர், சைனர்களின் மகாவீரர் இப்படியாக, மனிதர்கள் கடவுளர்களையும், கடவுள்-மனிதர்களையும் கொண்டாடி வருகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட கடவுள் என்பவர் ஒரு அனுபவமே. ஆக, மூவொரு இறைவன் என்பது வெறும் நம்பிக்கைக் கோட்பாடு அல்ல. மாறாக, முதலில் அது ஓர் அனுபவம். இந்த அனுபவத்தை விவிலியம் பல இடங்களில் பதிவு செய்துள்ளது: ஆபிரகாமுக்கு மெம்ரே என்ற இடத்தில், மோசேக்கு சீனாய் மலையில் (முதல் வாசகம்) , யோசுவாவுக்கு எரிக்கோவில், திருத்தூதர்களுக்கு இயேசுவில் (நற்செய்தி வாசகம்), முதல் கிறிஸ்தவர்களுக்கு தூய ஆவியாரில் (இரண்டாம் வாசகம்).

நாம் திருமுழுக்கு பெற்றபோது மூவொரு கடவுளின் பெயரால் திருமுழுக்கு பெற்றோம். நம் வழிபாடுகள் அனைத்தையும் மூவொரு கடவுள் பெயரால்தான் தொடங்கி நிறைவு செய்கிறோம். திருச்சிலுவையின் அடையாளத்திலும் நாம் மூவொரு கடவுள் பெயரையே சொல்கிறோம். தந்தையாகிய கடவுள் நம் நெற்றியையும், மகனாகிய கடவுள் நம் இதயத்தையும், தூய ஆவியார் நம் கரங்களையும் ஆட்சி செய்ய வேண்டும் என இறைவேண்டல் செய்கிறோம். நம் எண்ணம், உணர்வு, வலிமை என அனைத்தும் மூவொரு கடவுளால் புனிதப்படுத்துகின்றன. மேலும், நாம் மற்றவர்கள்முன் நம்பிக்கை அறிக்கை செய்யும்போதும், திருச்சிலுவை அடையாளத்தை வரைகிறோம். இவ்வாறாக, மூவொரு கடவுள் நம்பிக்கை என்பது நம் அன்றாட வாழ்வியல் அனுபவமாக இருப்பதுடன், சான்று பகர்தலுக்கான தளமாகவும் இருக்கிறது.

நாம் அன்றாடம் நமக்கு நாமே அல்லது மற்றவர்கள்மேல் வரையும் இந்த அடையாளம் ஓர் அனிச்சை செயல்போல நடந்தேறுகிறதா? அல்லது நாம் அதன் பொருளுணர்ந்து மூவொரு கடவுளின் உடனிருப்பைக் கொண்டாடுகிறோமா?

ஆ. கடவுள் அன்பாக இருக்கிறார்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நிக்கதேமுடன் உரையாடுகிற இயேசு, 'கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' என மொழிகிறார். கடவுளின் முதன்மையான உணர்வாக அன்பு முன்வைக்கப்படுகிறது. மேலும், கடவுளின் இந்த அன்பு தம் மகனையே உலகுக்காக அளிக்கும் தற்கையளிப்பு என்னும் செயலாக வெளிப்படுகிறது. முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தம்மையே மோசேக்கு வெளிப்படுத்தும் நிகழ்வில் 'இரக்கம்,' 'பரிவு,' 'பேரன்பு,' 'நம்பகத்தன்மை,' 'பற்றுறுதி,' 'மன்னிப்பு' ஆகியவை அன்பின் பரிமாணங்களாக வெளிப்படுகின்றன. கடவுள் காணக்கூடாத நிலையில் அல்ல, மாறாக, அனுபவித்து உணரக்கூடிய உணர்வுகளாக நம் நடுவில் இருக்கிறார்.

கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் நான் உணர்கின்ற பொழுதுகள் எவை? அவருடைய அன்பையும் இரக்கத்தையும் உணர்கின்ற நான் அவற்றை மற்றவர்களுக்குக் காட்ட முயற்சி செய்கிறேனா?

இ. வேற்றுமையில் ஒற்றுமை

கடவுள் மூன்று ஆள்களாக இருந்தாலும் ஒரே இறைத்தன்மையைக் கொண்டிருக்கிறார். மூன்று ஆள்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் வேறுபாடும் உயர்வு தாழ்வும் இல்லை. மதிப்பும் ஏற்றுக்கொள்தலும் ஒருவரை மற்றவர் நிரப்புதலும் அங்கே நிரம்பி வழிகிறது. நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு நிற்கிறோம். பாலினம், சமயம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், படிப்பு, பதவி, பணம் என அனைத்திலும் நாம் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு நிற்கிறோம். ஆனால், மானுடம் என்ற நிலையிலும், நம்மில் குடிகொள்ளும் இறைச்சாயல் என்ற நிலையிலும் நம்மிடம் ஒற்றுமைக்கான கூறும் உள்ளது. 

வேற்றுமையில் ஒற்றுமை என்பது கடவுளில் செயல்படுகிறது எனில், என் தனிப்பட்ட மற்றும் குழும வாழ்வில் நான் அதை வாழ்வாக்காதது ஏன்? என்னிடமிருந்து மற்றவரை வேற்றுமைப்படுத்தும் காரணியை எண்ணிப்பார்ப்பதை விடுத்து, மற்றவரையும் என்னையும் இணைக்கும் காரணிகளைப் போற்றி வளர்க்க நான் முயற்சி செய்யாதது ஏன்?

நிற்க.

நாம் எதற்காகக் கடவுளைத் தேடுகிறோம்?

நம் வாழ்வில் நாம் உணரும் பத்து எதிர்மறை உணர்வுகளில் அல்லது உணர்வுகளால் நாம் இறைவனைத் தேடுகிறோம் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்:

1. பயம் - எதிர்காலம், நிகழ்காலம், மனிதர்கள், நிகழ்வுகள் பற்றிய பயம்.

2. கோபம் - எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததால் எழும் கோபம்.

3. குற்றவுணர்வு - நாம் செய்த தவறு அல்லது பாவத்திற்காக எழும் வருத்தம்.

4. தாழ்வு மனப்பான்மை - தன்மதிப்பு குறைந்த நிலை.

5. பொறாமை - குறைவு மனப்பான்மை கொண்டிருத்தல்.

6. பலிகடா ஆக்கப்படுவது - எல்லாரும் என்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று உணர்வது.

7. ஒதுக்கப்படுதல் - பிறப்பிலிருந்து அல்லது சூழ்நிலைகளால்.

8. நிராகரிக்கப்படுதல் - தகுதி பெற்றிருந்தும் தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற உணர்வு.

9. விலகிக்கொள்தல் - ஒரு நபர் தானே விலகிக் கொள்தல்.

10. இறுமாப்பு - தன்னிடம் இருப்பதை விட அதிகமாகக் காட்டிக்கொள்வது. லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போல.

இந்த உணர்வுகளில் சில உணர்வுகளை, அல்லது எல்லா உணர்வுகளையும் உணருகின்ற ஒருவர், அவற்றுக்கு மாற்றாக அல்லது மருந்தாக நேர்முக உணர்வுகளைத் தேடுகின்றார். பயத்திற்கு மருந்தாக நம்பிக்கை, கோபத்திற்கு மருந்தாக ஏற்றுக்கொள்தல், குற்றவுணர்வுக்கு மருந்தாக மன்னிப்பு, தாழ்வு மனப்பான்மைக்கு மருந்தாக தன்மதிப்பு, பொறாமைக்கு மருந்தாக நிறைவுமனம், பலிகடா மனநிலைக்கு மருந்தாக தலைவன் மனநிலை, ஒதுக்கப்படுதலுக்கு மருந்தாக உள்வாங்கப்படுதல், நிராகரிக்கப்படுதலுக்கு மருந்தாக அங்கீகரிக்கப்படுதல், விலகிக்கொள்தலுக்கு மருந்தாக பங்கேற்றல், இறுமாப்புக்கு மருந்தாக தன்னறிவு.

கடவுளைத் தேடுதல் என்பது நம் அன்றாட வாழ்வியல் அனுபவம். கடவுளே தம்மை நமக்கு வெளிப்படுத்தினாலன்றி அவரை நாம் அறிந்துகொள்ள இயலாது. 'கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்' (யோவா 1:18).

காணக் கூடாத கடவுளின் காணக் கூடிய முகமாக வந்த இயேசு கடவுளை நமக்கு வெளிப்படுத்தியதோடு, கடவுள்தன்மை நோக்கிப் பயணம் செய்வது நமக்கும் சாத்தியம் எனக் கற்பித்தார்.

கடவுள் அனுபவம் பெற்றுள்ள நாம் கடவுளுக்குச் சான்று பகரவும், அன்பாகவும் மதிப்பாகவும் ஒருவர் மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்தல் நலம்.


No comments:

Post a Comment