Monday, June 12, 2023

உப்பும் ஒளியும்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 13 ஜூன் 2023

பொதுக்காலம் 10-ஆம் வாரம்

2 கொரி 1:18-22. மத் 5:13-16.

உப்பும் ஒளியும்

மலைப்பொழிவில் இயேசு மொழிந்த எட்டு பேறுபெற்ற நிலைகளுக்கும், அவர் வழங்குகின்ற கட்டளைகளுக்கும் இடையே நிற்கிறது இன்றைய நற்செய்தி வாசகப்பகுதி. 'நீங்கள் இப்படி இருக்க வேண்டும்' என மொழிவதற்குப் பதிலாக, 'நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்' எனத் தம் சீடர்களின் தான்மையை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார் இயேசு. இத்தான்மையே அவர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைதல் வேண்டும். மேலும், சீடர்களின் செயல்கள் அல்ல மாறாக, அவர்களுடைய இத்தான்மையே அவர்களுடைய இருத்தலையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கிறது. தம் சீடர்கள் உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறார்கள் எனச் சொல்கிறார் இயேசு. முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் இனம், திருச்சட்டம், எருசலேம், ஆலயம் போன்றவை ஒளியாகக் கருதப்பட்டன. ஆனால், இயேசு இதுமுதல் தம் சீடர்களே ஒளி என அழைப்பதன் வழியாக, ஒரு மாற்றுச் சமூகத்தை முன்மொழிவதுடன், இந்த அடையாளம் தருகின்ற பொறுப்புணர்வையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

(அ) 'நீங்கள் மண்ணுலகுக்கு உப்பாய் இருக்கிறீர்கள்'

உணவுக்குச் சுவையூட்ட, உணவைப் பதப்படுத்த, பலிப்பொருளோடு கலக்க என பல நிலைகளில் உப்பு பயன்படுகிறது. உப்பு தான் தழுவுகிற பொருளோடு கலந்து தன்னைப் பிறரின் கண்களுக்கு மறைத்துக்கொள்கிறது. ஆனால், மற்றவர்கள் உப்பைச் சுவைத்துப் பார்க்க முடியும். உப்பின் தன்மை அதன் உவர்ப்புத் தன்மையில்தான் இருக்கிறது. அத்தன்மையை அது இழந்தாலோ, அல்லது அதிலிருந்து அது பிறழ்வுபட்டாலோ அது தேவையற்ற பொருளாக மாறிவிடும். தட்பவெப்பநிலை, காலம், பொதிந்துவைக்கப்பட்ட இடம் போன்றவை உப்பின் தன்மையின்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சீடருடைய வாழ்விலும் புறக்காரணிகள் பல செயல்பட்டு அவர்களுடைய தன்மையைச் சீர்குலைக்க முயற்சி செய்யும். அந்த நிலையிலும் சீடர்கள் தங்கள் தன்மையை நிலைகுலையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். தாங்கள் செய்கிற அனைத்தோடும் கலந்து அதற்குச் சுவை ஊட்ட வேண்டும்.

(ஆ) 'நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்'

'ஒளி' என்னும் உருவகத்தோடு 'மலைமேல் உள்ள நகர்,' 'விளக்கு' என்னும் உருவகங்களும் இப்பகுதியில் இணைந்து மொழியப்படுகின்றன. உலகின் ஒளியாக வந்த இயேசு இப்போது தம் சீடர்களையும் ஒளி என அழைக்கிறார். உப்பு நாக்குடன் தொடர்புடையது. ஒளி கண்களுடன் தொடர்புடையது. ஒளி இருக்கும் வரைதான் வாழ்வு இருக்கிறது என்பது பண்டைக்கால நம்பிக்கை. மனித வாழ்க்கையும் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பெரிய மாற்றம் அடைந்துவிட்டது. ஒளி ஓர் உயிரின் இருத்தலை உறுதிசெய்வதுடன், இயக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. உப்பு மற்றும் ஒளி ஆகியவற்றின் இருத்தல் அவற்றின் பயன்பாட்டுத்தன்மையில்தான் இருக்கிறது. உப்பு கரைவது போல ஒளி கரைவதில்லை. ஆனால், ஒளி மற்றவர்களுக்குப் பயன்படாமல் தடுக்கப்படலாம். தடைகளைத் தாண்டி ஒளிர்கிறார்கள் சீடர்கள்.

இரண்டாம் உருவகத்தின் இறுதியில், 'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க' என்னும் கட்டளை கொடுக்கிற இயேசு, அப்படி ஒளிர்வதன் வழியாகச் சீடர்கள் அல்ல, மாறாக, 'விண்ணகத் தந்தையை மக்கள் போற்றிப் புகழ்வார்கள்' என்கிறார். 'உங்கள் விண்ணகத் தந்தை' என்னும் சொல்லாடல் மத்தேயு நற்செய்தியில் மிக முக்கியமான ஒன்று. இங்கேதான் அது முதன்முதலாகப் பயன்படுத்தப்படுகிறது. சீடர்கள் வானகத் தந்தையின் பிள்ளைகளாக இருக்கிறார்கள் என்னும் புதிய தான்மையும் இங்கு புலப்படுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், தானும் தன் பணியும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை அறிந்து, தன்விளக்கம் அளிக்கிறார் பவுல். தன் சொற்களிலும், செயல்களிலும் முரண் எதுவும் இல்லை என்று எடுத்துரைக்கிறார்: 'நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை.' கடவுளின் முரண்படா நிலை போல தன் நிலையும் இருப்பதாகக் கூறுகிறார்.

உப்பு தன் உப்புத்தன்மையை இழந்தால் தனக்குத்தானே முரண்படுகிறது. ஏனெனில், அது பார்ப்பதற்கு உப்பு போல இருந்தாலும், உப்புத்தன்மை அதில் இல்லை.

தடுக்கப்படும் ஒளி இருளை உண்டாக்குவதான் அது தனக்குத்தானே முரண்படுகிறது. ஏனெனில், ஒளியாக இருந்தாலும் அதன் மறைவான இருத்தல் இருளையே உண்டாக்குகிறது.

சீடர்களுடைய சொற்களும் செயல்கள் முரண்கள் தவிர்த்ததாக இருத்தல் வேண்டும். 

இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 119), 'உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்' எனப் பாடுகிறார் ஆசிரியர். ஆண்டவரின் முக ஒளி நம்மேல் வீசுவதால் நாம் ஒளிர்கிறோம். அவர் நம்மை அழைத்ததால் உப்பாக இருக்கிறோம்.

இன்று நாம் கொண்டாடுகிற பதுவை நகர் புனித அந்தோனியார் தன் எளிமைமிகு வாழ்வாலும், ஆற்றல்மிகு நற்செய்தி அறிவிப்புப் பணியாலும் உலகின் உப்பாக ஒளியாகத் துலங்கினார்.


No comments:

Post a Comment