Sunday, September 1, 2019

கண்கள் அனைத்தும்

இன்றைய (2 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 4:16-30)

கண்கள் அனைத்தும்

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் இயேசு தான் வாழ்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வருகின்றார். அங்கே தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றார்.

இங்கே, 'வழக்கத்தின்படி' என்ற வார்த்தை முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது.

நாம் வாழ்வில் சிலவற்றை நம்முடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். வழக்கமாக ஒரு ஹோட்டலில் சாப்பிடுவது,  ஒரு கடையில் துணி எடுப்பது, வேளாங்கண்ணி கொடியேற்றத்திற்குச் செல்வது, ஒரே இடத்தில் பெட்ரோல் போடுவது, ஒரே அழகு நிலையம் செல்வது என வழக்கங்கள் நிறைய இருக்கின்றன. வழக்கத்தை நாம் வழக்கமாக மாற்றுவது இல்லை. வழக்கமாகச் செய்வது நமக்கு மிகவும் எளிதானது. வழக்கமாகச் செய்வதில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. நாம் நிறையவற்றை வழக்கமாகச் செய்யக் கற்றுக்கொள்ளும்போதுதான் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறோம் என்று சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பல் துலக்குவதை நாம் வழக்கமாகக் கொள்ளும் அளவிற்கு, நடை பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்வதில்லை. வழக்கமாக்கிவிடும் ஒன்று நம்முடைய ஆழ்மனத்திற்குச் சென்றுவிடுகிறது. அது நம்முடைய வாழ்வை நேர்முகமாக அல்லது எதிர்மறையாகப் பாதிக்க ஆரம்பிக்கிறது.

இயேசுவைப் பொறுத்தவரையில் ஓய்வுநாளை அணுசரிப்பது, செபம் செய்வது போன்றவை அவருடைய வழக்கங்கள். இவை நல்ல வழக்கங்களே.

செபக்கூடத்தில் இயேசுவின் மேல் கண்கள் அனைத்தும் பதிந்தன. 'கண்கள் அனைத்தும் பதிந்தன' என்ற சொல்லாடலும் நம்மைக் கவர்கிறது. சில நபர்கள், சில வண்ணங்கள், சில எழுத்துக்கள் நம் கவனத்தை உடனடியாக ஈர்க்கின்றன. சிலவற்றை நாம் பார்க்கிறோம். சிலவற்றை நாம் திரும்பிப் பார்க்கிறோம். சிலவற்றை நாம் நினைத்து நினைத்துப் பார்க்கிறோம்.

இயேசுவின்மேல் அவர்கள் கண்களைப் பதியவைக்கக் காரணம் எவை?

அ. ஆச்சர்யம். தச்சனின் மகனுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா? அப்படித் தெரிந்தாலும் பொதுவிடத்தில் வாசிக்கும் தைரியம் இருக்குமா? அப்படி வாசித்தாலும், 'நீங்கள் கேட்டவை நிறைவேறிற்று' என்று சொல்லும் துணிச்சல் இருக்குமா?

ஆ. ஆர்வம். இவர் யார்? உண்மையில் இவர் யார்? இவரின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது உண்மையா? இவ்வளவு நாள்கள் இவர் எங்கு இருந்தார்?

இ. பேரார்வம். இவர் சொல்வதை எல்லாம் செய்துவிடுவாரா? 'நிறைவேறிற்று' என்றால் எப்படி நிறைவேறிற்று? இவர் எப்படி நிறைவேற்றுவார்? இன்னும் நாம் உரோமைக்கு அடிமைகளாகத்தானே இருக்கிறோம்.

இந்த மூன்று காரணங்களுமே அவர்களை இயேசுவின் பக்கம் திருப்பினாலும், விரைவில் அவர்கள் இயேசுவைவிட்டுத் திரும்பிவிடுகின்றனர்.

அவரின் மேல் கண்களைப் பதித்த அவர்கள் சற்று நேரத்தில் அவரின் கழுத்தில் தங்களுடைய கைகளை வைத்து அவரை மலையிலிருந்து தள்ளிவிட அழைத்துச் செல்கின்றனர்.

இதுதான் கூட்டத்தின் மனநிலை. கூட்டம் எப்போ என்ன முடிவு எடுக்கும் என்று யாரும் சொல்ல முடியாது. திடீரென்று தன்னுடைய முடிவை யாருக்கும் தெரியாமல் மாற்றிக் கொள்ளும்.

இன்று நான் கடவுளை எப்போதெல்லாம் தேடுகிறேன்? எப்போதெல்லாம் என்னுடைய கண்களை அவர்மேல் பதிக்கின்றேன்? வெறும் ஆச்சர்யம், ஆர்வம், மற்றும் பேரார்வம் கொண்டு பதித்தால் அது ஆழமற்றதாக இருக்கும். அவரிடம் நான் ஈர்க்கப் பெறுவது எப்போது?

அவரை நான் வாழ்விலிருந்து அகற்றிவிட முயற்சி செய்கிறேனா?

அவரைப் பற்றி நான் இடறல்படுகிறேனா?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 4:13-17) புனித பவுல் இறந்தோர் உயிர்ப்பு பற்றி தெசலோனிக்கத் திருச்சபைக்கு எழுதுகின்றார். 'எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்' என்பதையே நிலைவாழ்வு என எழுதுகின்றார். நாம் இன்றே இப்போதே ஆண்டவரோடு இருந்தால் மறுவாழ்வு என்பது வெறும் நீட்சியே.


2 comments:

  1. “சிலவற்றைப் பார்க்கிறோம்; சிலவற்றைத் திரும்பிப்பார்க்கிறோம்; சிலவற்றை நினைத்து நினைத்து திரும்பிப்பார்க்கிறோம்”. மனித மனத்தை சரியாகப் புரிந்து வைத்திருப்பவரின் வெளிப்பாடு.ஆனால் இதையெல்லாம் தாண்டி “ அவர்கள் இயேசுவின் மீது கண்களைப்பதிய வைக்க காரணம்... வெறும் curiosity யா? இல்லை அவர் யாரென்று தெரிந்ததால் ஏற்பட்ட ஆச்சரியம்,ஆர்வத்தினாலா? அவர்கள் எப்படிப் பார்த்திருப்பினும் இன்று என் பார்வை இயேசுவின் மீது படிந்திருப்பதை நான் எப்படி புரிந்துகொள்வது? நிலைவாழ்வாகவா? இல்லை இடறல் தரும் ஒன்றாகவா?” நிலை வாழ்வு” வாழப்பழகுவோம்...நம்மை மறுவாழ்விற்கு தகுதியாக்கும் முறையில். என்னுடைய வழ்க்கங்கள் இயேசுவை மையப்படுத்தியவையா? யோசிக்க வைக்கும் தந்தைக்கும்,மற்றும் அனைவருக்கும் புலர்ந்திருக்கும் புதியமாதம் புதுப்பொலிவைக் கொணரட்டும். வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete