Friday, September 6, 2019

கட்டுப்பட்டதே

இன்றைய (7 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 6:1-5)

கட்டுப்பட்டதே

இன்று மேலாண்மையியலில் இலக்கு (vision) மற்றும் நோக்கு (mission) போல அதிகம் பேசப்படுவது 'கையெழுத்து வாக்கியம்' (signature statement). அது என்ன கையெழுத்து வாக்கியம்?

'இதுதான் நான்' என்று என்னை எப்படி அடையாளப்படுத்துவேன்?

வழக்கமாக கையெழுத்து என்றவுடன் நாம் நம்முடைய பெயரை எழுதுகின்றோம். பெயர் ஓர் அடையாளம். சிலர் தங்கள் சொந்த மொழியில் கையெழுத்திடுவர். சிலர் மாற்று எழுத்துரு கொண்டு கையெழுத்திடுவர். சிலர் இரண்டையும் கலந்து எழுதுவர். சிலர் கோட்டு ஓவியம் போல வரைவர். ஆனால், அடிப்படையில் நம் பெயரை நாம் கையெழுத்து என இடுகிறோம்.

ஆனால், என்னுடைய பெயர்தான் எனக்கு அடையாளமா?

என்னுடைய பெயரை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. எனக்குக் கொடுக்கப்பட்ட ஒன்று எப்படி எனக்கு அடையாளமாக மாற முடியும்?

அருள்பணியாளர்கள் தங்களுடைய பெயருக்கு முன் 'அருள்பணி' அல்லது 'அருள்திரு' என்று சேர்த்துக்கொள்கின்றனர். இது தவிர பெரிதாக நாம் பெயருக்கு முன்னால் எதுவும் சேர்த்துவிடுவதில்லை. பெயரின் முன் வருவதே சிறப்பு என்கிறது நம்முடைய இலக்கியம். ஆனால், சில நேரங்களில் நம் பெயருக்குப் பின் நாம் நம்முடைய சமூகம் போன்ற அடையாளங்களைச் சேர்க்கின்றோம். ஆனால் அது சால்பன்று.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும், இன்றைய முதல் வாசகத்தில் பவுலும் தங்களுடைய கையெழுத்து வாக்கியங்களைக் குறிப்பிடுகின்றனர்.

இயேசு: 'மானிட மகன் - இவருக்கு ஓய்வுநாளும் கட்டுப்பட்டதே'

பவுல்: 'பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன்'

இருவருமே இதைத் தங்களுடைய வாழ்வில் வாழ்ந்தும் காட்டினார்கள்.

இயேசு தான் மானிட மகன் என்பதை உணர்ந்து பாடுகள் ஏற்றார், இறந்தார், சாவையும் தனக்குட்படுத்தி உயிர்த்தெழுந்தார்.

பவுல் தன்னை நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனாக, பணியாளனாகக் கருதினார்.

இன்று என்னுடைய கையெழுத்து வாக்கியம் எது?

அதை நான் வாழ்வதற்கு எத்தடையையும் தாண்டத் தயாராக இருக்கின்றேனா?

என்னுடைய கையெழுத்து வாக்கியத்தை வாழ்வாக்க நான் என்ன விடயங்கள் செய்கிறேன்?

2 comments:

  1. “கையெழுத்து வாக்கியம்”... புதிதாகப் பேசப்படும் வார்த்தை.நம் பெயருக்குப் பின் நம் குணாதிசயங்களை சித்தரிக்கும் வார்த்தைகளை விட்டு பெயருக்கு முன் வரும் வார்த்தைகள் ‘ சிறப்பு’ என்பது எல்லா விஷயங்களிலும் பொருந்துமா? தெரியவில்லை. ஒரு ‘அருள்பணியாளர்’ விஷயத்தில் அது சரியாக இருக்கலாம்.ஆனால் மருத்துவர், பொறியாளர் என பெயருக்கு முன்னால், சொல்கையில் அது அவர்களின் தொழிலைக் குறிக்குமே தவிர என்ன சிற்ப்பு இருக்கிறது? புரியவில்லை.ஆனால் இயேசுவின் ‘மானிட மகனும்’, பவுலின் ‘திருத்தொண்டனும்’ சிறப்புறுவது அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையால்.அவர்களின் வாழ்க்கைதான் அந்த வார்த்தைகளின் புனித்த்துவத்தைக் கூட்டுகிறது. என் கையெழுத்து வாக்கியம்? முதலில் அது என்னவென்று கண்டு பிடிக்கிறேன்.பின் அதை வாழ்வாக்கப்பார்க்கிறேன். புது விஷயங்களைப் புதுப்பாணியில் சொல்லும் தந்தைக்கு இறைவன் எல்லா நலங்களையும் தர வாழ்த்துகிறேன்; வேண்டுகிறேன்....

    ReplyDelete
  2. என்னுடைய கையெழுத்து வாக்கியத்தை உய்த்துணர,வாழ்வாக்க, வழிகாட்டிய, அருட்பணி.யேசுவுக்கு 🙏

    ReplyDelete