Sunday, September 8, 2019

எது முறை?

இன்றைய (9 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 6:6-11)

எது முறை?

இன்று மாலை தாமஸ் மெர்ட்டன் அவர்களின் சில சிந்தனைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் தாங்கள் விரும்பாத கேள்வி எதைப்பற்றி என்றால் தங்களுடைய உண்மைத்தனம் அல்லது பிரமாணிக்கம் பற்றித்தான் என்கின்றார். 'நீ பொய் சொல்கிறாயா?' என்ற கேள்வியை நம்மில் யாரும் விரும்புவதில்லை. இந்தக் கேள்விக்கு, 'ஆம்' என்று சொன்னாலும் தவறு. 'ஆம்' என்று சொன்னால், 'பொய் சொல்வது தவறு' என்று அடுத்தவர் சொல்வார். 'இல்லை' என்று சொன்னாலும் தவறு. 'இல்லை' என்று சொல்லும்போது, மற்றவர் இதுவரை பொய் சொன்னார் என்றும், இது பொய் இல்லை என்பது போலவும் ஆகிவிடும்.

பிலாத்து இயேசுவிடம், 'உண்மையா அது என்ன?' எனக் கேட்கின்றார். இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலை இயேசு கொடுத்தாலும் அது முழுமையாகாது. ஆகையால்தான் அமைதி காக்கின்றார். பிலாத்துவாலும் இதற்கு விடை காண முடியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று ஓய்வுநாளில் கற்பிக்கின்றார். அங்கே சூம்பிய கை உடைய ஒருவர் இருக்கின்றார். அவரைக் குணமாக்க விழைகின்றார் இயேசு. ஆனால் அங்கிருந்தவர்கள் இவர்மேல் குறைகாண விழைகிறார்கள்.

ஆகவே, இயேசு அவர்களிடம், 'உங்களிடம் ஒன்று கேட்கிறேன். ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை?'

அவர்கள், 'நன்மை' என்று சொன்னாலும் மாட்டிக்கொள்வார்கள். 'தீமை' என்று சொன்னாலும் மாட்டிக்கொள்வார்கள். 'உயிரைக் காப்பது' என்றாலும் மாட்டிக்கொள்வார்கள். 'அழிப்பது' என்றாலும் மாட்டிக்கொள்வார்கள். ஆகவே, அவர்கள் மிகவும் பாதுகாப்பாக அமைதி-மௌனம் காக்கின்றனர்.

சில நேரங்களில் மௌனமே சிறந்த பதில்.

அடுத்தவர்களுக்குச் சொல்வதற்கு மட்டுமல்ல. நமக்கு நாமே சொல்லிக்கொள்வதற்கும்.

நமக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் நாம் உடனடியாகத் தீர்க்க நினைத்து, எதையெதையோ யோசித்து அங்கலாய்க்கிறோம். விடையை நாம் ஒருபோதும் காண முடியாது. ஆனால், மௌனமாக இருந்தால் நாம் ஒருவேளை விடை காண முடியும்.

இங்கே அவர்களின் மௌனம் இயேசுவையும் மௌனம் கொள்ளச் செய்கிறது. அவர்களிடம் ஒன்றும் பேசாமல், 'உம் கையை நீட்டும்' என்று கைசூம்பிய நபரிடம் சொல்கின்றார். இந்த நிகழ்வு மற்றவர்களின் கோபவெறியைத் தூண்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் தன் கைகளால் தான் செய்யும் உழைப்பைப் பற்றிப் பெருமை பாராட்டுகின்றார். பவுல் ஒருபோது தன் கைகள் சூம்பியிருக்கவோ, தன் மனம் கோபமாயிருக்கவோ விரும்பவில்லை.

கோபமில்லாத மனம், உழைக்கும் கைகள், வாயில் மௌனம். வாழ்க்கை வெற்றி.


1 comment:

  1. தங்களின் புத்திசாலித்தனத்தை பிறரிடம் காட்டிக்கொள்ள நினைத்து பின் விழிபிதுங்கி நின்ற பலபேரைப் பார்த்திருக்கிறேன்.இப்படிப்பட்ட நபர்களிடம் சிக்கிக்கொண்டு உண்மையா..பொய்யா எதைச்சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றவர்களையும் பார்த்திருக்கிறேன்.இப்படிப்பட்ட இக்கட்டான சமயங்களிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வழி சொல்கிறார் தந்தை...அடுத்தவர்களுக்குச் சொல்வதற்குமட்டுமல்ல...நமக்கு நாமே சொல்லிக்கொள்வதற்கும் சிறந்த பதில் “மௌனமே” என்பதே அந்த வழி. நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ள மேற்கொள்ளும் மௌனம் மட்டுமின்றி, கோபமில்லா மனம், உழைக்கும் கைகள்......இவைகூட நம்மை வாழ்க்கையின் உச்சத்திற்குக் கொண்டுசெல்லும் படிக்கட்டுகள் என்று சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!! இந்த வாரம் இனியதாகட்டும்!!!

    ReplyDelete