Tuesday, September 17, 2019

விதிமுறை மாற்றம்

இன்றைய (18 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 7:31-35)

விதிமுறை மாற்றம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சமகாலத்தில் குழந்தைகள் நடுவே இருந்த விளையாட்டு ஒன்றை உருவகமாகக் கையாண்டு, தன்னுடைய சமகாலத்தவரின் மனப்பாங்கை எடுத்தியம்புகின்றார்.

வீதியில் இரு மருங்கிலும் குழந்தைகள் நின்றுகொள்வர். ஒரு குழுவினர் செய்வதை மறு குழுவினர் செய்ய வேண்டும். 'குழல் ஊதும் போது குழல் ஊத வேண்டும்,' 'கூத்தாடும் போது கூத்தாட வேண்டும்' - நம்ம ஊர்ல 'ஜோடி போடுவது' மாதிரி. ஆனால், விதிமுறைகளை மாற்றி, குழல் ஊதியவர்களைப் பார்த்து, 'கூத்தாடவில்லை,' ஒப்பாரி வைத்தவர்களைப் பார்த்து, 'அழவில்லை' என்று சொல்வது, திடீரென்று தங்கள் விதிமுறைகளை மாற்றிக்கொள்வதாக இருக்கிறது.

இயேசுவின் சமகாலத்தவர் திருமுழுக்கு யோவான் வந்தபோது ஒரு அளவுகோலால் அளந்தார்கள். ஆனால், இயேசு வந்தபோது அவர்கள் அளவுகோலை மாற்றிக்கொண்டனர்.

ஆக, தங்களுடைய விருப்பம் போல விதிமுறைகளை மாற்றி, அதில் மற்றவர் பொருந்தவில்லை என்று சாடுகின்றனர்.

கிரேக்க புராணத்தில் இதே போன்ற கதை ஒன்று உண்டு. பார்க்கிடிஸ் என்ற திருடன் தன்னுடைய அறையில் ஒரு கட்டில் வைத்திருந்தான். தான் திருடிய நபர்களை அதில் தூங்குமாறு சொல்வான். தூங்குபவர் கட்டிலுக்குச் சரியாக இருந்தால் அவருக்குப் பரிசு கொடுத்து அனுப்பி விடுவான். அந்த நபர் கட்டிலைவிட சிறியவராக இருந்தால் கட்டிலில் சேரும் அளவிற்கு இழுப்பார். அதில் அந்த மனிதர் இறந்துவிடுவார். கட்டிலை விடப் பெரியவராக இருந்தால் தலை அல்லது காலை வெட்டிக் கொன்றுவிடுவார்.

ஆக, நாம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு விதிமுறை வைத்திருக்கிறோம். அந்த விதிமுறையின்படி அவர் ஆட வேண்டும் என நினைக்கிறோம். அடுத்தவரின் ஆட்ட விதிமுறைகள் நமக்குப் பிடிப்பதில்லை. நம் விதிமுறைகளின்படியே அவர் ஆட வேண்டும் என நினைக்கிற நாம், அவர் நன்றாக ஆடினாலும், திடீரென்று விதிமுறைகளை மாற்றி அவரை வெளியே அனுப்புகின்றோம்.

அவரை அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும், 'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று' என்கிறது நற்செய்தி.

இயேசுவையும் யோவானையும் சிலர் இப்படி வெளியேற்றினாலும் பலர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு ஏற்ப வாழ்ந்தனர்.


2 comments:

  1. இயேசுவின் சமகாலத்தவர் திருமுழுக்கு யோவானையும்,இயேசுவையும் வெவ்வேறு அளவு கோலால் அளந்ததாக குற்றம் சாற்றுகின்றார் தந்தை.. மாறிவரும் மனிதரின் மனநிலைக்கேற்ப அஅவர்களைத் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்..மாறவேண்டும் என்பது இயற்கையின் நியதி. நம் விதிமுறைகளை நம் எதிர்பார்ப்புக்கேற்றவாறு அடுத்தவர்மேல் திணிப்பது தவறுதான்.ஆனால் சரியான விதிமுறைகளை நிர்ணயம் செய்பவர் யார்? தந்தையின் ஞானத்தால். நிரப்பப்பட்ட இயேசுவுக்கும்,யோவானுக்கும் அது வேறு விதமாக இருந்ததெனில் இவர்களுக்குத் தந்தையால் பொழியப்பட்ட “மெய்யான ஞானமே” காரணம் என்பதை ஏற்றுக்கொள்வோம்; அதை நம் வாழக்கையிலும் தேடுவோம். நம் அன்றாட வாழ்வின் நிதர்சனத்தை படம்பிடித்துக்காட்டும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete