Tuesday, September 10, 2019

சமவெளிப் பொழிவு

இன்றைய (11 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 6:20-26)

சமவெளிப் பொழிவு

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சமவெளிப் பொழிவை வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் மலைப்பொழிவிற்கும் இங்கே வாசிக்கும் சமவெளிப் பொழிவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

அங்கே இயேசு மலைமேல் ஏறி அமர்கின்றார். இங்கே இயேசு தம் சீடர்களோடு சமதளத்தில் நிற்கின்றார்.

அங்கே எட்டு பேறுபெற்ற நிலைகளைச் சொல்கின்றார் இயேசு. இங்கே நான்கு பேறுபெற்றவை என்றும் நான்கு கேடுகள் என்றும் சொல்கின்றார் இயேசு.

அங்கே 'ஏழையரின் உள்ளத்தோர்.' இங்கே 'ஏழைகள்.'

அங்கே 'எல்லா மக்களும்' இயேசுவுடன் இருக்கிறார்கள். இங்கே சீடர்கள் மட்டும் இயேசுவோடு இருக்கின்றனர்.

நிற்க.

யார் பேறுபெற்றவர்கள்?

ஏழைகள் - இறையாட்சி

பட்டினி கிடப்பவர்கள் - நிறைவு

அழுதுகொண்டிருப்பவர்கள் - சிரிப்பு

தள்ளிவிடப்படுபவர்கள் - துள்ளி மகிழுங்கள்


யார் சபிக்கப்படுபவர்கள்?

செல்வர் - அனுபவித்துவிட்டீர்கள்!

உண்டு கொழுப்போர் - பட்டினி

சிரிப்பவர் - அழுகை

புகழப்படுபவர்கள் - ஏமாற்றம்

முந்தைய நான்கு பேறு பெற்ற நிலைகளும் பிந்தைய நிலையில் சபிக்கப்படுகின்றன.

'இயேசு தன் சீடர்மீது பார்வையைப் பதித்துக் கூறியவை' என்று சொல்கின்றார் லூக்கா.

அப்படி என்றால், இவை அனைத்தும் இயேசுவின் சீடர்களுக்குப் பொருந்தியதா?

வாழ்வின் இரட்டைத் தன்மையைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு. இரட்டைத்தன்மையை நாம் ஒருபோதும் ஒன்றாக்கிவிட முடியாது. இரட்டைத்தன்மையை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல், இவ்விரட்டைத் தன்மைகள் கிறிஸ்துவில் நிறைவுபெறுவதாக எழுதுகின்றார்: 'கிரேக்கர் என்றும் யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும் பெறாதவர் என்றும், அடிமை என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை.'

கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்.

இதன் பொருள் என்ன?

நம் வாழ்வில் பேறுபெற்ற நிலைகளும் கேடுறும் நிலைகளும் மாறி மாறி வரத்தான் செய்யும். இரண்டிலும் கிறிஸ்து அனைவருள்ளும் அனைத்துமாய் இருந்தால் வேறுபாடுகள் இல்லை.

பசியாய் இருக்கிறேன் என்று நான் வாடி, பசி நிறைவுபெற்றவுடன், அதுவே சாபமாகி விட்டால், வாழ்க்கை சுழன்றுகொண்டே தான் இருக்கும்.

வாழ்வின் சுழற்சியைக் கற்றுத்தருகின்றார் இயேசு.

'பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்' என்று பட்டினத்தாரும்,

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு' என்று சபை உரையாளரும் இதையே சொல்கின்றனர்.


1 comment:

  1. புரிந்துகொள்ள கொஞ்சம் எக்ஸ்ட்ரா மூளை தேவைப்படுகிறது. மலைவெளியோ,சமவெளியோ எங்கிருந்து சொல்லப்படுகிறது என்பதை விட,யார் சொல்கிறார்கள் என்பதை விட “ என்ன சொல்கிறார்கள்” என்பதே முக்கியமாகப்படுகிறது.இருளும்- ஒளியும் போல,பகலும்- இரவும் போல, மேடும்- பள்ளமும் போல ஒரு வண்டிச்சக்கரமாய், நம் வாழ்வில் பேறுபெற்ற நிலைகளும்,கேடுறு நிலைகளும் வரத்தான் செய்யும் என்பது எதார்த்தம் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது இன்றையப்பதிவு.
    “பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
    தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”.....என்ற பட்டினத்தாரின் வார்த்தைகளும்
    “ ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு” என்ற சபைஉரையாளரின் வார்த்தைகளும் நம்மிலும்,நம் வாழ்விலும் தினம் தினம் நிறைவேறிக்கொண்டுதானே இருக்கின்றன! “வாழ்வின் சுழற்சி” என்பது இயற்கை. இயற்கையோடு இசைந்த....இணைந்த வாழ்வு வாழப் பழகுவோம். வாசிக்கும் போது கொஞ்சம் மலைப்பைத் தந்தாலும், வாசித்தபின் ஏதோ புரிந்த மாதிரி இருந்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete