Monday, September 9, 2019

இணைப்பு

இன்றைய (10 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 6:12-19)

இணைப்பு

சுவாமி விவேகானந்தர் 'தொடர்பு' (contact) மற்றும் 'இணைப்பு' (communication) ஆகிய இரண்டிற்கான வித்தியாசத்தை மிக அழகாகக் கூறுகின்றார். நம்முடைய தொலைபேசி எண்களில் ஒருவராக இருப்பவரை நாம் தொடர்பில் இருப்பவர் என்கிறோம். ஏதோ ஒரு வகையில் அவர் நம்மோடு தொடர்பில் இருப்பதால் - அருள்பணியாளர், வாகன ஓட்டுநர், கூரியர் சேவைக்காரர், நண்பர், அம்மா - நாம் அவருடை எண்ணை நம்முடைய தொலைபேசியில் சேமித்து வைக்கிறோம். 'இணைப்பு' என்பது நாம் அந்த நபரோடு கொண்டுள்ள நெருக்கம். ஒருவருடைய எண்ணை நாம் நம்முடைய தொலைபேசியில் சேர்த்து வைப்பதால் மட்டும் இணைப்பு வந்துவிடுவதில்லை. அல்லது நாம் தொடர்பில் இருக்கும் அனைவரும் நம்மோடு இணைப்பில் இருக்கிறார்கள் என்றில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய சீடர்களிலிருந்து திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அதாவது, தொடர்பில் இருக்கும் நிறையப் பேரிலிருந்து இணைப்பில் இருக்கும், இணைப்பில் இருக்க பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கிறார்.

தான் அப்படித் தேர்ந்தெடுக்குமுன், தானே தன் தந்தையோடு இறைவேண்டலில் இணைப்பில் இருக்கின்றார்.

தன் தந்தையோடு இணைப்பில் இருக்கும் இயேசு, தன்னோடு இணைப்பில் இருப்பதற்காக பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்.

இரவெல்லாம் தந்தையைக் கூப்பிடுகின்றார். விடிந்தவுடன் தன் சீடர்களைக் கூப்பிடுகின்றார்.

இணைப்பிற்கு கூப்பிடுதல் மிகவும் அவசியம். நாம் கூப்பிடாதவரை யாரிடமும் நம்மால் பேச முடியாது.

இன்று நாம் இறைவனைக் கூப்பிடுகிறோமா?

இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். கொலோ 2:6-15), பவுல், 'அவரோடு இணைந்து வாழுங்கள்' என்று கொலோசை நகர மக்களை அழைக்கின்றார். அவரோடு தொடர்பில் இருப்பது மட்டுமல்ல, இணைப்பில் இருப்பதும் அவசியம்.

நாம் இன்று பின்வரும் கேள்விகளைக் கேட்போம்:

அ. இன்று நான் எத்தனை பேரோடு தொடர்பில் இருக்கிறோம்? எத்தனை பேரோடு இணைப்பில் இருக்கிறோம்?

ஆ. ஆண்டவரோடு நான் இணைந்திருக்கிறேனா?

இ. அவர் என்னைக் கூப்பிடுவது என் காதுகளில் விழுகிறதா? என் கவனச் சிதறல்கள் எவை?

ஈ. கூட்டத்திலிருந்து என்னைத் தனி நபராகப் பெயர் சொல்லி அழைக்கிறார் என்றால், நான் என்னுடைய தான்மையை, அடையாளத்தை எப்படி வாழ்வாக்குகிறேன்?

உ. இயேசுவைத் தொட முயன்ற மக்களின் தாகம் என்னிடம் இருக்கிறதா?


1 comment:

  1. தொடர்பு,இணைப்பு....இரு சொற்களைக் கொண்டே ஒரு அழகான பதிவு.தன் “தந்தையோடு இணைப்பிலிருக்கும் இயேசு,தன்னோடு இணைப்பிலிருப்பதற்காக பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.இரவெல்லாம் தந்தையைக்கூப்பிடும் இயேசு விடிந்தவுடன் தன் சீடர்களைக் கூப்பிடுகிறார்.” இந்தச் செய்தியின் பின்னனியில் சில கேள்விகளை முன் வைக்கிறார் தந்தை.தந்தையின் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலைத்தர முடியவில்லை எனினும் அந்தக் கடைசி கேள்விக்குப் பதிலை “ஆம் “ என்று உரத்த குரலில் சொல்ல ஆசை.அப்படி என்னிடம் ஒரு தாகம் இருப்பின் அந்த தாகத்தைத் தீர்க்க முயல்கிறேனா? இல்லை அப்படியே வறட்சி நிலையில் விட்டுவிடுகிறேனா? யோசிக்கிறேன்.கண்டிப்பாகத் தகுந்த பதிலைக் கண்டுபிடிப்பேன்.தந்தையின்,’ வார்த்தை விளையாட்டு’ இரசிக்கும்படி உள்எது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete