Monday, September 16, 2019

பரிவு கொண்டு

இன்றைய (17 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 7:11-17)

பரிவு கொண்டு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நயீன் நகரத்துக் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் கொடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொ 3:1-13) பவுல், ஆயர் (கண்காணிப்பாளர்) மற்றும் திருத்தொண்டரின் பண்பு நலன்களைப் பட்டியலிடுகின்றார்.

பவுலைப் பொறுத்தவரையில் 'ஆயராக விரும்பும் எவரும் - கண்காணிப்பாளராக விரும்பும் எவரும் - மேன்மையானதொரு பணியை நாடுகிறார்.' ஆக, ஆயராக ஆசைப்படும் அருள்பணியாளர் பற்றி யாரும் இடறல்படத் தேவையில்லை. அவர் மேன்மையான பணியை நாடுகின்றார். இந்தப் பணியைப் பெற ஒருவர் பின்வரும் குணநலன்களைப் பெற்றிருக்க வேண்டும்:

(1) குறைச்சொல்லுக்கு ஆளாகாத நிலை
(2) ஒரு மனைவி கொண்டிருத்தல் (இன்று மணத்துறவு ஏற்கப்பட்ட நிலையில் இது ஏற்புடையதன்று)
(3) அறிவுத்தெளிவு
(4) கட்டுப்பாடு
(5) விருந்தோம்பல்
(6) கற்பிக்கும் ஆற்றல்
(7) குடிவெறி, வன்முறை இல்லாதிருத்தல்
(8) கனிந்த உள்ளம்
(9) சண்டை மற்றும் பொருளாசை தவிர்த்தல்
(10) திருச்சபைக்கு வெளியே இருப்பவர்களிடமும் நற்சான்று

திருத்தொண்டர் நிலைக்கு பின்வரும் பண்புகள் அவசியம் எனப் பவுல் கூறுகிறார்:

(1) கண்ணியம்
(2) இரட்டை நாக்கு, குடிவெறி, இழிவான ஊதியத்தின்மேல் ஆசை - இல்லாதிருத்தல்
(3) தூய மனச்சான்று

இவர்களில் பெண்கள் கண்ணியம், அறிவுத்தெளிவு, நம்பகத்தன்மை கொண்டிருத்தல் வேண்டும். தொடக்கத் திருஅவையில் பெண் திருத்தொண்டர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் பகுதியும் சான்றாக இருக்கிறது.

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

திருத்தொண்டர், அருள்பணி நிலை, அல்லது ஆயர் நிலை ஆகிய திருப்பட்டங்கள் இறைவனின் அருள்கொடை என்றாலும், இந்த அருள்கொடையைப் பெற ஒருவர் தன்னையே தகுதியாக்கிக்கொள்வது அவசியம். அதே வேளையில், தனக்குத் தகுதிகள் இருக்கின்றன என்ற நிலை மட்டும் போதாது. அருள்கொடையும் அவசியம்.

இப்பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு எப்படி தொடர்புபடுத்துவது?

இயேசுவின் எல்லாக் குணங்களையும் ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டுமெனில், 'பரிவு' என்று சொல்லலாம். நயீன் நகரத்துக் கைம்பெண்ணோ, உடன் வந்தவர்களோ யாருமே எதுவுமே விண்ணப்பிக்காமல், தானே முன் வந்து, 'அழாதீர்!' என்று அந்தப் பெண்ணுக்குச் சொன்ன ஆண்டவர், 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திடு!' என்று இளைஞனை எழுப்பி அவனுடைய தாயிடம் ஒப்படைக்கின்றார்.

பரிவு என்ற ஒற்றைக் குணம் இறந்து கிடப்பவர்களுக்கும் உயிர் கொடுத்து எழுப்பிவிடும்.

மேலும், மேற்காணும் அனைத்துக் குணங்களும் இருந்தும் இயேசுவின் இந்தப் பரிவு இல்லை என்றால் எந்தப் பணி நிலையும் மேலோட்டமான அரசியல் பணியாக மட்டுமே அமைந்துவிடும்.

இன்று என் கண் முன்னே கடந்து போகும் எத்தனை பேரை நான் பரிவுடன் நோக்குகிறேன்?

என் கண்களில் பரிவு தெரிகிறதா?


1 comment:

  1. ஒரு ஆயருக்கோ இல்லை ஒரு திருத்தொண்டருக்கோ தேவைப்படும் குணாதிசயங்கள் எத்தனைதான் பட்டியலில் இருப்பினும் அவை அத்தனைக்கும் தாய்குணமான ‘பரிவே’ அவர் தோள்மேல் சுமந்திருக்கும் சுமைக்கு( பணிக்கு) அச்சாணி என்கிறது இன்றையப் பதிவு. ‘பரிவு’ எனும் ஒற்றைக்குணம் இறந்து கிடப்பவர்களுக்கும் உயிர்கொடுத்து எழுப்பிவிடும் என்கிறார் தந்தை. அந்த அளவிற்கு இல்லையெனினும் என் முன் சோம்பி நிற்கும் ஒருவரை என் பரிவு புன்னகைக்கச் செய்தால் அது போதுமே என்னை ஒரு திருத்தொண்டர் நிலைக்கு உயர்த்த! நான் எந்த நிலையிலிருப்பினும் இறைவன் எனக்களித்த கொடைகளுக்கு நான் தகுதியுள்ளவளாக இருக்கிறேனா? சிந்திக்க உதவிக்கரம் நீட்டும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete