Sunday, September 15, 2019

தகுதியற்றவன்

இன்றைய (16 செப்டம்பர் 2019) நற்செய்தி (லூக் 7:1-10)

தகுதியற்றவன்

'நான் என்னைப் பற்றிப் பேசுவதைவிட என்னுடைய செயல்களும், என்னுடைய செயல்களால் பயன்பெற்றவர்களும் பேச வேண்டும்' என்பது மேலாண்மையியலில் சொல்லப்படுகின்ற ஒன்று.

இந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக வரும் கதைமாந்தர்தான் இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் நூற்றுவர் தலைவர். லூக்கா நற்செய்தியாளர் மற்ற நற்செய்தியாளர்களைவிட இவரை இயேசுவிடமிருந்து தூரத்தில் வைக்கிறார். மற்ற நற்செய்தியாளர்கள் இவரே இயேசுவிடம் வந்ததாக எழுதுகின்றனர். ஆனால், லூக்காவில் இவர் உடல் அளவிலும் தொலைவில் இருக்கிறார்.

இவருக்கும் இயேசுவுக்கும் இடையேயான தொலைவு அவரை நம்பிக்கை அடிப்படையில் இயேசுவுக்கு இன்னும் நெருக்கமாக்குகிறது.

முதலில் யூதர்கள் சிலர் இவருடைய விண்ணப்பத்தைச் சொல்லி இயேசுவிடம் பரிந்துரை செய்கின்றனர்.

இரண்டாவதாக, இவரின் நண்பர்கள் சிலர் இவரின் வார்த்தைகளை இயேசுவிடம் வந்து தூது சொல்கின்றனர்.

படைவீரராய் இருந்த இவருக்கு தூது மற்றும் கட்டளையின் பொருள் நன்றாகப் புரிந்தது. தூது அனுப்பப்படுபவர் எப்போதும் தூது அனுப்பியவரின் செய்தியை அப்படியே போய்ச் சொல்ல வேண்டும். அவரின் வேலை அதுதான். மேலும், கட்டளையிடுபவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர் இடுகின்ற கட்டளைக்கு மற்றவர்கள் கீழ்ப்படிய வேண்டும்.

இங்கே, நண்பர்கள் அவரின் வார்த்தைகளை அப்படியே இயேசுவிடம் சொல்கின்றனர். மேலும், தன்னுடைய வார்த்தைகளுக்கே அதிகாரம் இருக்கிறது என்றால், இறைமகனின் வார்த்தைகளுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும் என்பதை அவர் அறிந்தவராய் இருக்கிறார்.

இயேசுவிடம் வந்த யூதர்கள், 'இவர் தகுதியுள்ளவர்' என்று சொல்கின்றனர். ஆனால் இவரோ, 'நான் தகுதியற்றவன்' என்கிறார்.

இதில் ஒரு பெரிய வாழ்க்கைப் பாடம் இருக்கிறது?

'நான் தகுதியானவன்' என்று என்னைப் பற்றிச் சொல்வதைவிட, 'இவர் தகுதியுள்ளவர்' என்று என்னைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு நான் மனிதர்களைச் சம்பாதித்து வைத்துள்ளேனா? என்னுடைய தொடர்பு எப்படி இருக்கிறது? - இந்தக் கேள்வியை நான் கேட்க வேண்டும்.

இரண்டாவதாக, இயேசுவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நான் இணைப்பை ஏற்படுத்துகிறேனா? இரண்டு பேருக்கு இடையே இருக்கும் உறவைப் பிரித்து விடுவதற்கு நாம் பல நேரங்களில் மும்முரமாய் இருக்கிறோம். ஆனால், இயேசுவிடம் வந்த யூதர்களும், நண்பர்களும் இயேசுவுக்கும் தலைவருக்கும் இடையே இணைப்புக்கோடாய் இருக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொ 2:1-8) பவுல், 'கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளர் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்' என இயேசுவுக்கு ஒரு புதிய அடைமொழியைக் கொடுக்கின்றார். இணைப்பாளராகிய இயேசுவைப் போல இன்று நான் ஒருவர் மற்றவருக்கு இடையே ஒப்புரவின் கருவியாக இருந்தேன் என்றால் தகுதியற்றவர்களும் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

2 comments:

  1. “நான் என்னைப்பற்றிப்பேசுவதைவிட, என்னுடைய செயல்களும்,என்னுடைய செயல்களால் பயன்பெற்றவர்களும் பேச வேண்டுமென்பது” மேலாண்மையில் மட்டுமல்ல; நிஜத்திலும் பேசப்பட வேண்டுமென்பது என் கருத்து. கடவுளுக்கும் மனிதருக்குமிடையே உள்ள இணைப்பாளர் இயேசு போல இன்று நான் மற்றவருக்கு ஒப்புரவின் கருவியாகி,தகுதியற்றவர்களைத் தகுதியுள்ளவர்களாக்க முயலுவேன். கிரியாவூக்கி தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete