Wednesday, October 28, 2015

நம் சார்பாக

சின்ன வயதில் பள்ளிப்பருவத்தில் சக மாணவனின் தோளில் (பல நேரங்களில் அவன் என்னைவிட உயரமாகவே இருப்பான்) கை போட்டுக்கொண்டு நடப்பதுண்டு. யாராவது கேட்டால், 'இவன் என் கூட்டாளி' என்று கெத்தாக பதில் சொல்வேன். 'இவன் என் கூட இருக்கிறான்' - என்பதன் அர்த்தம் புரியாமலேயே பள்ளிப்பருவம் கடந்து போனது.

நாம் பேசும் அல்லது பழகும் ஒவ்வொரு நபர், ஏன் நாம் நம் தொலைபேசியில் சேமித்து வைத்திருக்கும் தொலைபேசி எண்கூட மறைமுகமாக நமக்கு இதைத்தான் சொல்கிறது: 'இவர் என் சார்பாக இருக்கிறார்' அல்லது 'இவர் என்னோடு இருக்கிறார்' அல்லது 'அவரோடு நான் இருக்கிறேன்.'

அருட்திரு. மைக்கேல் ஆலோசனை, சே.ச., என் பாப்பிறைப் பாசறை அதிபர், நண்பர், வழிநடத்துநர். அவரின் மின்னஞ்சலில் எப்போதும் உரோ 8:31 அவரின் கையெழுத்தோடு இணைந்துவரும். இவ்வளவு நாட்கள் புரியாத அதன் அர்த்தம் நாளைய முதல் வாசகத்தை (உரோ 8:31-39) வாசித்துக்கொண்டிருக்கும்போது புரிந்தது.

உரோமை நகர திருஅவைக்கு எழுதும் திருமடலில் ஒரு பெரிய சொற்போரை நடத்திக் கொண்டிருக்கும் பவுல் ஒரு கட்டத்தில் நிறுத்தி, 'இதற்கு மேல் நாம் என்ன சொல்வோம்?' என்று தான் இவ்வளவு தூரம் மூச்சு விடாமல் பேசியதை ஒரே வரியில் சொல்கின்றார்: 'கடவுள் நம் சார்பாக இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?'

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் வார்த்தைகளில் எனக்குப் பிடித்தது இதுதான்: 'உன் மகிழ்வையும், இருப்பையும், இயக்கத்தையும் என்றும் மாறாத ஒன்றில் கட்டு - அது கடவுளாகவோ, கருத்தியலாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். ஆனால் ஆட்கள் மற்றும் இடங்களின் மேல் கட்டாதே. பின்னவர்கள் மாறக்கூடியவர்கள். முன்னவைகள் மாறாதவைகள்'.

வேதனை, நெருக்கடி, இன்னல், பட்டினி, ஆடையின்மை, இடர், சாவு, வாழ்வு, வானதூதர், ஆட்சியாளர், நிகழ்வன, வருவன, வலிமை மிக்கவை, உன்னத்தில் உள்ளவை - இவை எல்லாம் மாறக்கூடியவை.

மாறுகின்ற படைப்புப் பொருட்களை விடுத்து, மாறாத படைத்தவரைப் பற்றிக்கொள்வது எவ்வளவு நலம்.

அகுஸ்தினார் அடிக்கடி புலம்புவதும் இதற்காகத்தான். 'படைப்புப் பொருட்கள் படைத்தவராகிய உன்னிடமிருந்து என்னை தூர இழுத்துவச்சென்றனவே' என்று அழுகின்றார்.

பட்டினத்தாரின் ஒரு பாடலும் இந்தக் கருத்தியலை ஒத்தே இருக்கிறது:

'பிறந்தன இறக்கும். இறந்தன பிறக்கும்.
தோன்றின மறையும். மறைந்தன தோன்றும்.
பெருத்தன சிறுக்கும். சிறுத்தன பெருக்கும்.
உணர்ந்தன மறக்கும். மறந்தன உணரும்.
புணர்ந்தன பிரியும். பிரிந்தன புணரும்.
அருந்தின மலமாம். புனைந்தன அழுக்காம்.
உவப்பன வெறுப்பாம். வெறுப்பன உவப்பாம்.
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும்
... ... ...
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொன் அம்பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!'

(கோயிற்றிருவகவல் - 1)

'கடவுள் என் சார்பில் இருக்கிறார்' என்ற உணர்வு ஆழமாக இருந்ததால்தான் இயேசுவால் ஏரோதுவை நரி என்று அழைக்கவும், அவனுக்கு சவால் விடவும் (காண். லூக் 13:31-35) முடிகிறது.

இந்த ஒரு உணர்வு என்னிடம் ஆழமாக இருந்தது என்றால் நான் என் வாழ்வில் நிகழும் எல்லாவற்றிலும் சமநிலையை எளிதாக உணர முடியும்.

இந்த உணர்வு மனிதர் தரும் பாராட்டை நம்பியிருக்காமல் என் மனதிற்கு நிறைவு தரும் ஒன்றில் நான் ஊன்றியிருக்க உதவி செய்யும்.

இந்த உணர்வு நம்மிடமிருக்கும் தாழ்வு மனப்பான்மை போக்கி நம்மை எல்லாவிடத்திலும் நேர்முகமாக மற்றவர்கள்முன் நிமிர்ந்து நிற்கத் துணை வரும்.

'கடவுள் நம் சார்பாக' என்று சொல்வதால் மட்டும் இவை நடந்துவிடாது. இது ஒரு மாய மந்திரம் அல்ல. நாம் யார் சார்பாக இருக்கிறோமோ அவரின் எண்ணங்களும், சொற்களும், செயல்களும் நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

இந்தக் கருத்தையொட்டிய திபா 124 நம் செபத்தில் இணைத்துப் படிக்கலாம்:

'ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் -
... ... ...
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!'


2 comments:

  1. என்னவொரு அழகான சிந்தனை! பவுலையும்,தந்தை மைக்கிள் ஆலோசனையையும்,ஆல்பர்ட் ஐன்ஸ்டைனையும், புனித அகுஸ்தினாரையும்,பட்டினத்தாரையும் ஒரே கோணத்தில் பிரதிபலிக்கத் தந்தை ஒருவரால் தான் முடியும். " கடவுள் என் சார்பில் இருக்கிறார்" என்ற எண்ணம் நம்மில் ஓங்கி இருந்தால் மட்டுமே நம்மிடமுள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி எதிராளியை நிமிர்ந்து நின்று நேருக்கு நேர் பார்க்க முடியும். ' என்னிலிருப்பவர் என்னை விடப் பெரியவர்' என நினைக்கும் ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியமென நினைக்கிறேன். மாறுகின்ற படைப்புப் பொருளை விடுத்து மாறாத படைத்தவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று உள் மனது உரைத்திடினும்.பல சமயங்களில் படைப்புக்களை நம்பி ஏமாறுவதே இந்த மனித வரக்கத்துக்கு வாடிக்கையாகி விட்டது.கண்டிப்பாக இன்றையப் பதிவுக்கு கட்டியம் கூற வரும் திருப்பாடல் 124 ஐ நம் தாரக மந்திரமாக எடுத்துக்கொள்ளலாமே! இத்தனை சிறிய மண்டைக்குள் இவ்வளவு பெரிய விஷயங்களை அடைத்து வைத்து தேவைப்படும் போது அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளும் தந்தையே! தங்களை எத்துணை
    பாராட்டினாலும் தகும்!!!

    ReplyDelete
  2. Dear Father,It is very good reflection for tomorrows reading.I too like very much these verses that is When the God is with me who can be against of me?
    Then I have one question Why people are still not believing these type of precious verses of God in their life when suffering comes? Faith of the Christians are questionable? Congrats.How was the parish feast? I hope it went on well.

    ReplyDelete