Monday, October 26, 2015

பேறுகால வேதனை

'இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்' (காண். உரோ 8:18-25)

டென்மார்க் நாட்டில் 1000 க்கு 10 என்ற விகிதத்தில் குழந்தை பிறப்பு இறப்பதால் அந்த நாடு தன் குடிமக்களை வார நாட்களிலும் விடுமுறை எடுத்து ஊர் சுற்றி குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிப்பதாக இன்றைய காலை செய்தியில் சொன்னார்கள்.

தாய்மை அடைவது - இது ஏதோ தவறு என்றே கற்பிக்கிறது நம் தமிழ் ஊடகங்களில் வெளிவரும் நெடுந்தொடர்கள்.

'தவறு செய்யலாம். ஆனால் தாய்மை அடைந்துவிடக்கூடாது' என்று மற்றொரு பக்கம் ஒரு புரட்சி சித்தாந்தம் பரவிக்கொண்டிருக்கிறது.

தாய்மை அடைவதை ஓரு நோய் போல நினைத்து அதற்கு மருந்து, பக்குவம், பயிற்சி என்று கல்லா கட்டுகிறது மருத்துவ உலகம்.

'பேறுகால வேதனை' - நாளைய முதல் வாசகத்தில் தூய பவுலடியார் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகின்றார்.

பேறுகால வேதனை நிறைய இடங்களில் உருவகமாக விவிலியத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு எடுத்துக்காட்டுகள்:

'நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நிலநடுக்கமும் ஏற்படும். இவையனைத்தும் பேறுகால வேதனையின் தொடக்கமே.' (மத் 24:7-8)

'பிள்ளையைப் பெற்றெடுக்கும் போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றபின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை மறந்துவிடுகிறார்.' (யோவா 16:21)

மற்ற வேதனைக்கும் பேறுகால வேதனைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?

மற்ற எல்லா வேதனைகளும் மகிழ்ச்சியில் முடிவதில்லை. உதாரணத்திற்கு, புற்றுநோய் அல்லது கைகால் உடைந்து போதல் தரும் வேதனை. இந்த வேதனையால் நமக்கு மகிழ்ச்சி வருவதில்லை. மாறாக, இந்த வேதனை முடிந்ததே என மகிழ்ச்சி வருகிறது. ஆனால் பேறுகால வேதனையில்தான் துன்பமும், மகிழ்ச்சியும் இணைந்து வருகிறது.

பெண்கள் அனுபவிக்கும் பேறுகால வலியை அனுபவிக்க வாருங்கள் என்று லண்டனில் ஒரு மருத்துவமனை தொடர் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, செயற்கையாக இந்த வலியை ஆண்களுக்கு ஊட்டுகிறது. நான்கு கட்டமாகத் தரப்படும் வலியில் 100ல் 1 ஆண் மட்டுமே நான்காம் கட்ட வலியைத் தாங்கிக் கொள்ள முடிகிறதாம். உண்மையில் பெண்கள்தாம் பலசாலிகள்.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும்கூட நமக்கு பேறுகால வேதனையைத்தானே தருகிறது. என்னிடம் உதவி கேட்டு வரும் ஒருவருக்கு நான் 500 ரூபாய் தருகிறேன் என்றால் ஒரே நேரத்தில் எனக்கு துன்பமும், இன்பமும் இருக்கிறது - துன்பம், ஏனென்றால் என் பணம் என்னை விட்டுப் போகிறது. இன்பம், ஏனென்றால் மற்றவரின் தேவையை என்னால் நிறைவு செய்ய முடிகிறது.

மேலும் பேறுகாலம் போல அல்லது தாய்மை அடையும் காலம் போல வாழ்வை வாழ்தல் மிக நல்லது. எப்படி? வளைகாப்பு என்ற நிகழ்வில் பேறுகாலத்திற்கு தயாராய் இருக்கும் பெண்ணின் கைகளில் வளைகளை நிரைப்புவார்கள். எதற்காக? நான் நினைக்கும் காரணம் இதுதான்: இந்தப் பெண்ணின் இருப்பை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வெளியில் இருக்கும் மற்றவருக்கும் கண்ணாடி சிணுங்கல்கள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உள்ளே இருக்கும் குழந்தை இந்த சிணுங்கல் கேட்டு மகிழும். வெளியே இருக்கும் வளர்ந்தவர்கள் இந்தப் பெண்ணின் இருப்பை நினைத்து அவரை மதிப்பர். அவருக்கு பணிவிடை செய்ய தயாராயிருப்பர்.

நாம் எழுப்பும் சின்னச் சின்ன சிணுங்கல்களும், நம் உள்ளே இருக்கும் நம் மனம் என்னும் குழந்தைக்கு உற்சாகமாகவும், நம் வெளியில் இருப்பவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தவதாகவும் இருக்கலாமே!

2 comments:

  1. தந்தைக்கு வணக்கம். "பேறுகால வேதனை" என்னே அழகு, எத்தனை அழகு என்று பாடும் அளவுக்கு அழகான பதிவு. வேதனைகளே நமக்கு நிறைய மகிழ்ச்சியை தருகின்றது. நாம் எழுப்பும் சின்னச் சின்ன சிணுங்கல்களும், நம் உள்ளே இருக்கும் நம் மனம் என்னும் குழந்தைக்கு உற்சாகமாகவும், நம் வெளியில் இருப்பவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தவதாகவும் இருக்கலாமே! எனக்கு மிக மிக பிடித்த வரிகள்.
    இருக்கலாமே! அதில் எந்த குழப்பமும் இல்லை. தந்தைக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. 'பேறுகால வேதனை'....இதனை ஆதரித்தும்,எதிர்த்தும் பல விஷயங்கள் பேசப்பட்டாலும் ஒரு தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள் கொடி உறவைப் பலப்படுத்துவதே இந்தப் பேறுகால வேதனைதான்.மருத்துவம் பல எல்லைகளைத் தொட்டிருக்கும் இந்த காலத்தில் வலியே இல்லாத பேறுகாலம் என்ற ஒன்று நடைமுறையில் இருப்பினும் அதைப் புறம்பே தள்ளி பேறுகாலத்தின் வேதனையை சுவைக்கத் துடிக்கும் பல பெண்களை நான் கண்டுள்ளேன்." பிள்ளையைப் பெற்றெடுக்கும் போது தாய் தனக்கு பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார்.ஆனால் பிள்ளையைப் பெற்றபின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது எனும் மகிழ்ச்சியால் தம் வேதனையை மறந்து விடுகிறார்." பெண்ணின் பெருமை கூற இதற்கு மேல் என்ன வேண்டும்.எத்தனைதான் பல சாலிகள் என ஆண்கள் மார்தட்டிக்கொண்டாலும் இந்த ஒரு விஷயத்துக்காகவே அவர்கள் பெண்களையும்,பெண்மையையும் கொண்டாட வேண்டும்.எந்த ஒரு முரட்டு ஆணுக்குள்ளும் கூட ஒரு பெண்மை ஒளிந்திருக்கிறது எனும் உண்மை 'வளைகாப்பு' குறித்த தந்தையின் வரிகளில் அழகாக வெளிப்படுகிறது."நாம் எழுப்பும் சின்னச் சின்ன சிணுங்கல்களும், நம் உள்ளே இருக்கும் நம் மனம் என்னும் குழந்தைக்கு உற்சாகமாகவும்,வெளியில் இருப்பவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தால் எத்துணை நலம்!"பெண்ணின் பெருமையை உரக்கச்சொல்லும் தந்தையின் வார்த்தைகளுக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete