Thursday, October 22, 2015

உள்ளே போராட்டம்

'பத்தாம்நாள் வெற்றி' என்று பொருள் கொள்ளும் 'விஜயதசமி' பண்டிகையில், நம் இந்து சகோதரர்கள், துர்க்கை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றனர்.

மனிதருக்கு வெளியே இருக்கும் தீமையை வெற்றி கொள்ள மனிதருக்கு கடவுளின் துணை தேவைப்படுகிறது என்பதை இன்றைய நாள் குறிக்கிறது.

நாளைய முதல் வாசகத்தில் (உரோ 7:18-25) தூய பவுல் 'மனிதருக்கு உள்ளே இருக்கும் தீமை' குறித்தும், அந்தத் தீமையோடு மனிதர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தில் வெற்றி பெறத் தேவையான இறைவனின் பிரசன்னம் குறித்தும் எழுதுகிறார்.

பவுலின் லாஜிக் ரொம்ப அருமை:

நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இருக்கிறது.
ஆனால் அதைச் செய்யத்தான் என்னால் முடியவில்லை.

இதைச் செய்ய முடியவில்லை என்பது முதல் போராட்டம். அதாவது, விரும்புவதும், செய்வதும் ஒத்துப்போவதில்லை. உதாரணத்திற்கு, நான் காலை 5:30 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் நான் எழுவதற்கு 7 மணி ஆகிவிடுகிறது. இங்கே விரும்புவதும், செய்வதும் ஒத்துப்போவதில்லை.

இரண்டாவது போராட்டம் என்னவென்றால், நான் நன்மையைச் செய்யாமல் போவதுகூட இருக்கட்டும். ஆனால் நான் விரும்பாத தீமையையும் செய்துவிடுகிறேனே. அதாவது 5:30 மணிக்கு எழவில்லையென்றாலும் பரவாயில்லை. 7 மணி வரை தூங்கி அந்தத் தூக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு, அல்லது அந்த சிறுதூக்க நேரத்தைத் தேவையற்ற சுயஇன்பத்திற்கும் (உதாரணத்திற்கு!) பயன்படுத்திவிடுகிறேனே. ஒருவேளை நான் 5:30 மணிக்கு எழுந்தால், நன்மை செய்தவனாகவும் ஆவேன். தீமையைத் தவிர்த்தவனாகவும் ஆவேன்.

ஆனால் என்னால் முடியவில்லையே எனப் புலம்புகிறார் பவுல்.

இந்தப் போராட்டத்திற்கான காரணத்தையும் கண்டுபிடிக்கிறார் பவுல். அதாவது கடவுளின் சட்டத்திற்கு எதிரான பாவம் என்னும் சட்டம் என் உறுப்புகளில் செயலாற்றுகிறது.

'நல்லது - தீயது' என்பது ஒரு சட்டம். இது கடவுளின் சட்டம்.

'இன்பம் தருவது - துன்பம் தருவது' என்பது மற்றொரு சட்டம். இது பாவத்தின் சட்டம்.

என் உடல் இந்த இரண்டாவது சட்டத்தின் படி நடக்கத் தொடங்கி 'இன்பம் தருவதை' தழுவிக்கொண்டு, 'துன்பம் தருவதை' தள்ளி விடுகிறது.

பவுல் தன் இயலாமையை 'ஐயோ! இரங்கத்தக்க மனிதன் நான்!' என வெளிப்படுத்துகின்றார்.

பவுலின் இயலாமைதான் நம் ஒவ்வொருவரின் இயலாமையும்கூட.

இந்த இயலாமையில் நாம் சில நேரங்களில் நம் செயல்களை நியாயப்படுத்தவும் தொடங்கிவிடுகிறோம். 'இது மனித பலவீனம்!' என்று மனித வரலாற்றில் எத்தனையோ ஆயிரம் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மற்றொரு பக்கம், 'என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்வேன்!' என்று சொல்கிறோமே, அந்த 'எவ்வளவு' என்ன என்பதை நாம் அளந்து பார்த்திருக்கிறோமா? 'இவ்வளவு'தான் என்று நாம் சுருக்கிக்கொள்ளவில்லையா?

மேலும், பவுலின் நாணயத்தையும், நன்னயத்தையும் நாளைய முதல்வாசகம் சொல்கிறது.

அதாவது, 'இதுதான் நான்' என்று தன் மனப்போரட்டத்தை தன் திருஅவைமுன் வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றார். 'நான் புனிதன்' என்றோ, 'நான் போரட்டத்தை வென்றவன், நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும்' என்று தன்னை எடுத்துக்காட்டாகவும் முன்வைக்கவில்லை. அருள்நிலையில் இருக்கும் எனக்கு இந்தப் பண்பு அவசியம். பல நேரங்களில் என் பலவீனங்கள் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருப்பதில்தான் நான் கருத்தாயிருக்கிறேன். 'மற்றவர்களைவிட நான் சிறந்தவன்' என்று என்னையே தள்ளிவைத்துக்கொள்ளாமல், 'மற்றவர்களைப் போலவே நானும் பலவீனங்களோடு போராடுபவன்' என்று என்னையே அவர்களோடு ஒன்றிணைத்துக் கொண்டால் எத்துணை நலம்!


2 comments:

  1. புனித பவுலின் நாணயத்தையும்,நன்னயத்தையும் விளக்க்கும் இன்றையப் பகுதி என்னை மிகவும் கவர்ந்துள்ளது." நான் புனிதன் என்றோ, போராட்டத்தை வென்றவன் என்றோ,என்னை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றோ நினைக்கவில்லை.பல நேரங்களில என் பலவீனங்கள் மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதில் தான் கவனமாயிருக்கிறேன்.மற்றவர்களைவிட நான் சிறந்தவன் என என்னையே தள்ளி வைத்துக்கொள்ளாமல், மற்றவர்களைப் போலவே நானும் பலவீனங்களோடு போராடுபவன் என்று என்னையே அவர்களோடு ஒன்றிணைத்துக் கொண்டால் எத்துணை நலம்.!" ஒரு தலைவன் தன் மனத்தைக் கிழித்துக் கூறுபோட இமைவிட வேறுவழி உண்டா என்ன? 'நல்லது- தீயது', ' இன்பம் தருவது- துன்பம் தருவது'...இவை இரண்டிற்குமிடையே நடக்கும் போராட்டத்தில் நான் யார் பக்கம்? யோசிக்க ஆரம்பித்தாலே போதும் ...நமக்கு வெளியேயுள்ள அத்தனை மகிஷாசுர்ர்களையும் வெற்றி கொள்ள ஆண்டவரின் பிரசன்னம் நமக்குத் துணை நிற்குமெனக் கூறும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. பாச தந்தைக்கு வணக்கம்."உள்ளே போராட்டம்" எனற அருமையான பதிவுக்கு நன்றிகள்.பவுல் தனது நாணயத்தையும், நன்னயத்தையும் மற்றும் " இதுதான் நான்" என்பதையும் மிக ரெத்தின சுருக்கமாக திரு அவைக்கு தெரியப்படுத்தி தன்னை தானே மிகத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறார் . அந்த ஒரு மனநிலை என்னில் உருவாக வேண்டும் பிறரிலும் பிறக்க வேண்டும் என்பதே என் ஜெபம். நானும் என் பலவீனத்தை கண்டுபிடித்து அதை முற்றிலும் அகற்ற முன் வரும் போதுதான் என் உள்ளே இருக்கும் போராட்டத்தில் இருந்து விடுபட முடியும். இதன் மூலம் நலத்தை காண இறைவா அருள் தாரும்.
    தந்தைக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete