Saturday, October 24, 2015

போர்வை

இன்று காலை ஒரு பாட்டிக்கு நற்கருணை கொடுக்க அவர்கள் வீட்டுக்குப் போகும்போது, வழியில் கேட்பாரற்ற ஒரு போர்வை கிடந்தது. அந்தப் போர்வையைச் சுற்றி ஒரு கூட்டம். கொஞ்சம் தள்ளி போலீஸ் வாகனங்கள் நின்றிருந்தன. 'நேற்று இரவு தெருவில் இந்தப் போர்வையைப் போர்த்தி தூங்கியிருந்த ஒரு ஆப்பிரிக்க அகதி இறந்துவிட்டார் என்றும், அவரை இன்று காலையில்தான் அப்புறப்படுத்தினார்கள்' என்று வழியில் இரண்டு பேர் பேசிக்கொண்டு சென்றனர். 'இந்த அகதிகள் எல்லாம் நம் நாட்டிற்குள் வரக்கூடாது!' என்று ஒருவரும், 'அவர்கள் வேறெங்கே போவார்கள்' என்றும் அவர்களே மாறி மாறிப் பேசிக்கொண்டார்கள்.

பாட்டி வீட்டிற்குச் சென்று நற்கருணை கொடுக்கும் சடங்கில் நற்செய்தியை எடுத்து பார்த்திமேயு பகுதியை வாசித்தபோது, பார்த்திமேயு தன் போர்iவையை வீசி எறிந்ததை வாசித்தவுடன் எனக்கு இந்த ஆப்பிரிக்க அகதியின் போர்வை என்னவோ செய்தது.

பார்த்திமேயு வீசிவிட்டு வந்த போர்வையும் இப்படித்தானே கொஞ்ச நாட்கள் கேட்பாரற்றுக் கிடந்திருக்கும்.

இன்று தெருக்களில் எண்ணற்றவை கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஒரு காலத்தில் தாங்கள் பார்த்துப் பார்த்து வாங்கிய ஒன்றை வெகு சாதாரணமாக மக்கள் இன்று தூக்கி எறிந்து விடுகிறார்கள். செருப்பு, பாய், மெத்தை, கால் ஒடிந்த நாற்காலி, கீறல் விழுந்த கண்ணாடி, அட்டை கிழிந்த புத்தங்கள், கண்களை இழந்த, கைகளை இழந்த பொம்மைகள் என எண்ணற்றவைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஆனால் இவைகள் ஒவ்வொன்றும் நமக்கு எதை நினைவுறுத்துகின்றன? இந்தப் பொருட்களை 'இதுதான் எல்லாம்' என பாதுகாத்த ஒருவர் இருந்தார் என்பதைத்தானே.

'இன்று எனக்குப் பிடிப்பது' ஏன் நாளை 'எனக்குப் பிடிக்காதது' என ஆகிவிடுகிறது.

நான் வைத்திருக்கும் ஒன்றைவிட அதிக மதிப்பு உள்ள மற்றொன்று வந்தவுடன், நான் ஏற்கனவே வைத்திருப்பதை விட்டுவிடுகிறேன். பார்த்திமேயுக்கும் அப்படித்தான். தன் போர்வையைவிட மதிப்புள்ள இயேசுவைக் கண்டவுடன் போர்வை ஒருபொருட்டாகத் தெரியவில்லை.

விவிலியத்தில் போர்வை அல்லது மேலாடை என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. உடனே என் நினைவிற்கு வந்த எல்லா 'போர்வை'- 'மேலாடை' வார்த்தைகளையும் எண்ணிப் பார்த்தேன்.

'ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார். அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, 'என்னோடு படு' என்றாள். உடனே அவர் அவள் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.' (தொநூ 39:11-12)

'...எலியா போர்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தார்...எலியா எலிசாவிடம் சென்று தன் போர்வையை அவர்மீது தூக்கிப் போட்டார்.' (1 அர 19:13, 19)

'இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின்மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார். அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் தன் மேலாடையை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.' (மாற் 14:52)

இந்த மூன்று மற்றும் பார்த்திமேயு நிகழ்வில் மேலாடையை விட்டுவிடும் இடத்தில் ஒரு வேகம் அல்லது ஓட்டம் இருக்கிறது. போர்வையை மாற்றுதல் அல்லது போர்வையை விலக்குதல் புதிய ஒரு செயலின் அடையாளமாக இருக்கிறது.

ஒவ்வொருநாள் நாம் போர்வை விலக்கி படுக்கையிலிருந்து எழும்போதும் புதிய மனிதர்களாக, புதிய செயல்கள் செய்யத்தானே எழுகிறோம்.

இன்று படுக்கையறையிலோ, தெருவிலோ எந்தப் போர்வையைக் கண்டாலும், மடித்து வைக்கப்பட்ட ஒவ்வொரு போர்வையும் இதைப் போர்த்தியிருந்தவர் இப்போது புதிய இயல்புக்குக் கடந்தவிட்டார் என நினைவுகூரலாமே.

6 comments:

  1. சாதாரணப் போர்வையை வைத்து ஒரு இரத்தினக் கம்பளமே பின்னிவிட்டார் தந்தை.விவிலியத்தில் மேலாடை,போர்வை என்று வரும் இடங்களைக் கோடு காட்டியுள்ளீர்கள். நினைத்தவுடன் மனதை மாற்றிக்கொள்ளும் மனித மனத்துக்கு எந்தப் பொருளின் மேலும் நிரந்தர ஒட்டுதலும் இல்லை; வெட்டுதலும் இல்லை.தெருவில் கேட்பாரற்றுக் கிடைக்கும் பொருட்களைப் பார்க்கையில் நமக்கு நினைவுக்கு வருவது அவற்றை வைத்திருந்தவர்களின் பொருளாதார நிலை உயர்ந்து விட்டது என்பது தான்....மதிப்புமிக்க இயேசுவைக்கண்டவுடன் மதிப்பற்ற போர்வையைக் கைவிட்ட பார்த்திமேயு மாதிரி.நாமும் ஒவ்வொரு நாளும் படுக்கையிலிருந்து போர்வையை விலக்கி எழுகையில் " இன்று நாம் யாரை சார்வதற்காக யாரை விடப்போகிறோம்?" எனும் நினைவோடு எழுந்தால் நம் எண்ணங்களும் விண்ணை நோக்கிப் பயணம் செய்யுமே! மிகச் சாதாரண விஷயங்களையும் அசாதாரண விஷயங்களாக மாற்றிக்காட்டும் தந்தைக்கு என் நன்றிகள்! பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.நாளை ஞாயிறு இந்த மறைகல்வி வகுப்பில் எதை பற்றி சொல்வது என்று இந்த இரவில் சிந்தித்து கொண்டு தங்களின் பதிவிற்காக காத்திருந்தேன். "போர்வை" மிக வித்தியாசமான படைப்பு.பதிவில் பிடித்தது: இந்த மூன்று வசனங்களும்,

    ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார். அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, 'என்னோடு படு' என்றாள். உடனே அவர் அவள் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.' (தொநூ 39:11-12).

    '...எலியா போர்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தார்...எலியா எலிசாவிடம் சென்று தன் போர்வையை அவர்மீது தூக்கிப் போட்டார்.' (1 அர 19:13, 19).

    'இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின்மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார். அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் தன் மேலாடையை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.' (மாற் 14:52).

    நாளை மறைகல்வி வகுப்பு கலை கட்டும். யேசு தந்தைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. Guruji, Sehr Gut.thanks for teaching German too.

    ReplyDelete
  4. it is a good reflection.good message is drawn from single word 'bed sheet'.ur reflections make me to think deeply on every word in bible and in every incident in life.

    ReplyDelete
  5. thanks a lot for ur great job.

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot Britto for the fond comments and perceptive observations. Have a nice day. God bless us. Love.

      Delete