Tuesday, October 20, 2015

நீங்கள் அடிமைகள்

'எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ
அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ?' (உரோ 6:16)

சட்டத்திற்கு உட்படுவதா, அருளின் ஆட்சிக்கு உட்படுவதா என்று தொடர்ந்து தன் திருமடலில் விவாதிக்கின்றார் பவுல்.

இதில் சட்டம் என்பது பாவம் என்றும், அருளின் ஆட்சி என்பது கடவுள் என்றும் இடையே ஒப்பீடும் செய்துகொள்கின்றார்.

அடிமைத்தனம் என்றவுடன் கறுப்பாக சங்கிலியால் கட்டப்பட்ட ஒருவர் பொதுவிடத்தில் வெள்ளையர் ஒருவரால் விலைபேசப்படும் வரலாறு புத்தகத்தின் படம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் இது மட்டும்தானா அடிமைத்தனம்?

இன்று அடிமைத்தனம் பல முகங்களைக் கொண்டு நம் முன் நடமாடி வருகிறது.

தொலைபேசிக்கு, மதுவிற்கு, இணையதளத்திற்கு, படிப்பிற்கு, வேலைக்கு என நிறைய அடிமைத்தனங்கள் தினந்தோறும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

ஒன்றிற்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்பதை நாம் இரண்டு குணங்களில் வைத்துத் தெரிந்து கொள்ளலாம்:

அ. அந்த ஒன்றிடம் நான் என்னையே ஒப்புவித்துவிடுகிறேன்
ஆ. அந்த ஒன்றிற்கு நான் எப்போதும் கீழ்ப்படிகிறேன்

அ. ஒப்புவித்தல். 'ஒப்புவித்தல்' என்பது திருக்குறளில் ஒரு அதிகாரம் படித்துவிட்டு அடுத்தவரிடம் ஒப்புவிக்கும் படிப்பு யுக்தி அன்று. ஒப்புவித்தல் என்பதில் நான் என் மனதை மற்றவரிடம் கொடுத்துவிடுகிறேன். அதாவது, அடுத்தவரைப் போல நான் சிந்திக்கத் தொடங்கிவிடுகிறேன். உதாரணத்திற்கு, நான் மதுவிற்கு அடிமை என வைத்துக்கொள்வோம். அங்கே என் மனம் எப்போதும் மதுவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும். ஏற்கனவே குடித்த பாட்டில், நாளை குடிக்கப் போகும் பாட்டில், இன்று குடிக்கும் பாட்டில், இந்த மதுவை வாங்குவதா, திருடுவதா, விலையில்லாமல் குடிப்பதா, குடித்துவிட்டு நேற்றுபோல சாப்பிடாமல் கிடப்பதா, அல்லது நன்றாக சாப்பிடுவதா என்று மதுவையொட்டி மட்டும் என் சிந்தனை அமைந்துவிட்டால் நான் மதுவிற்கு அடிமை. இந்த ஒப்புவித்தலில் என்னால் வேறெதையும் பற்றி சிந்திக்கவே முடியாது. வேறொரு வேலையை நான் செய்ய வேண்டியிருப்பினும் என் மனம் என்னவோ மதுமேலேயே இருக்கும்.

ஆ. கீழ்ப்படிதல். 'டே இங்கே வா! இதை ஐந்து காப்பி ஜெராக்ஸ் எடுத்து வா!' என்று என் ஆசிரியர் என்னிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். உடனடியாக நான் அதை எடுத்துக்கொண்டு ஜெராக்ஸ் செய்ய ஓடுகிறேன். இதை நீங்கள் 'கீழ்ப்படிதல்' என்கிறீர்கள். இந்தக் கீழ்ப்படிதலில் என்ன நடக்கிறது? என் ஆசிரியரின் கால் மற்றும் கையாக நான் செயல்பட்டு அவருக்குத் தேவையானதை நான் நிறைவேற்றிக்கொடுக்கிறேன். கீழ்ப்படிதலில் நான் அவருக்கு அல்லது அதற்கு என் உடலையும் கொடுத்துவிடுகிறேன். மதுக்கடை நோக்கியே என் கால்கள் இருக்கும். எங்கே பாட்டில் இருக்கிறது என்று கண்களும், கைகளும் தேடும். மதுவைத் தொட்டுப் பார்ப்பதில், சுவைத்துப் பார்ப்பதில் அலாதி இன்பம் பிறக்கும். அந்த இன்பத்தை முன்னதாகவே மனம் கற்பனை செய்து பார்க்கும்.

ஆக, என் மனமும், என் உடலும் என்னிடம் அன்றி மற்றவரிடம் அல்லது மற்றதிடம் நான் கொடுத்துவிட்டால் நான் அவருக்கும், அதற்கும் அடிமையாகிவிடுகிறேன்.

பாவம் என்ன செய்கிறதாம்? நம்மை உடலின் இச்சைகளுக்கு அடிமையாகச் சொல்கிறது (உரோ 6:12).

கடவுளுக்கு நான் அடிமையானால் என் மனதை கடவுளுக்கு ஒப்புவித்து, என் உடலை கடவுளுக்கு கீழ்ப்படியச் செய்வேன்.

அருள்நிலை வாழ்வில் 'கீழ்ப்படிதல்' என்பது நாங்கள் கொடுக்கும் அல்லது எடுக்கும் மூன்று வாக்குறுதிகளில் மூன்றாவதாகும். எனக்கு மேலிருக்கும் ஆயருக்கு நான் கீழ்ப்படிய வேண்டும். அந்த ஆயர் என்முன் கடவுளின் பிரதிநிதியாக இருக்கின்றார்.

கீழ்ப்படிதலில் ஒரு மனச்சுதந்திமும் இருக்கிறது. அதாவது, நான் கீழ்ப்படிந்துவிட்டால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, அடுத்த ஜூன் முதல் என்ன செய்வது என்று என் மனதில் குழம்பிக் கொண்டிருக்காமல், 'ஆயர் அனுப்பும் இடத்திற்குச் செல்வேன்' என்று நான் கீழ்ப்படிந்துவிட்டால், அங்கே என் மனம் சுதந்திரம் பெற்றுவிடுகிறது. என் கவலை மேகம் கலைந்துவிடுகிறது. அதற்காக, 'பொறுப்பை தட்டிக்கழித்தல்' என்றும் நான் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இன்று நான் கேட்கும் கேள்வி இதுதான்:

நான் எதற்கு அல்லது யாருக்கு அடிமையாகிறேனோ, அதற்கு அல்லது அவருக்கு என் மனதையும், உடலையும் ஒப்படைத்துவிடுகிறேன்?

இன்று நான் எதற்கு அல்லது யாருக்கு அடிமை?

அல்லது

இன்று எதனிடம் அல்லது யாரிடம் என் மனமும், உடலும் இருக்கிறது?

3 comments:

  1. " எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்படிகிறீர்களோ அதற்கே நீங்கள அடிமைகள் என்று உங்களுக்குத் தெரியும் அன்றோ?"..... நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும்பொழுது பெரியவர்கள் எதைச் சொன்னாலும் ஏன்,எதற்கு எனக் கேள்வி கேளாமல் சொன்னதைச் சிரமேற்கொண்டு செய்வதைத்தான் ' கீழ்ப்படிதல்' எனக் கேட்டிருக்கிறோம்.ஆனால் இன்று தந்தையின் கூற்றுப்படி யார் எதைச்செய்யும்படி பணித்திடினும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று புரிகிறது.நம் கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு." கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பாருக்கு புத்தி எங்கே போச்சு?" என்பார்கள்.உண்மைதான்...இன்று யாரும், என்னை அவ்ர்கள் வசம் இல்லை அதன் வசம் இழுக்கலாம்.ஒரு குரங்காட்டி அளவுக்குக் கூத்தாடவும் வைக்கலாம்.நம் மனசாட்சி எனும் 'அலாரம்' நம் செவிகளில் ஒலிக்க வேண்டுமெனில் அதற்கு நம்மைக் கண்டிஷன் பண்ணி வைத்திருத்தல் அவசியம்.நம்மைப் பணியை வைப்பது அடிமைத்தனமா,கீழ்ப்படிதலா? யாரை மையமாக வைத்து என் மனமும் ,உடலும் செயல்படுகிறது? எல்லோரும் அவரவர் மனசாட்சியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விதான்; நேரம் தான்....ஒரு வித்தியாசமான கருத்தை முன் வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."நீங்கள் அடிமைகள்" என்ற எழுச்சியூட்டக்கூடிய பதிவை படைத்ததற்கு நன்றிகள் பல. இன்று நான் எதற்கு அல்லது யாருக்கு அடிமை? இந்த கேள்வியை நிறைய நேரங்களில் என்னக்குள்ளே என்னிடம் கேட்டதுண்டு .தந்தையின் பதிவு மிக அழகானதொரு பதிவு.ஏனென்றால் நாம் பிறரை அடக்கவும் பிறர் நம்மை அடக்கவும் கடவுள் நம்மை படைக்கவில்லை.கடவுளால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் அவரால் படைக்கப்பட்டவைகளை அளவுடன் நேசிக்கவும்,ஆழவுமே நம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால், நாம் பிறரை தாறுமாறாக அடக்கவும்,ஆழவும் தவறுதலாக கற்றுக்கொண்டோம்.இவைகளை எல்லாம் விட்டுவிட்டு நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.இயேசுவின் வழியில் இவ்வையகத்தை காப்போம்.எதற்குமே நாம் அடிமையாகாமல் இருக்க இயேசுவை தாய் மரியின் வழியாக வேண்டுவோம் .தந்தைக்கு பாராட்டுக்கள் . மரியே வாழ்க !

    ReplyDelete