Sunday, June 30, 2013

வாட் இஸ் தட்?

நான் அடிக்கடி ரசித்துப் பார்க்கும் ஒரு குறும்படம் 'வாட் இஸ் தட்?' கான்ஸ்டான்டின் பிளாவியுஸ் இயக்கி 2007ஆம் ஆண்டு வெளியான கிரேக்க மொழித்திரைப்படம் இது. வெறும் 5:30 மணித்துளிகள் ஓடக்கூடிய இக்குறும்படத்தின் நடிகர்கள் மூன்றே பேர்தான். ஒரு வயதான தந்தை. அவரது இளவயது மகன். பறந்து திரியும் ஒரு சிட்டுக்குருவி.

தந்தையும் மகனும் தங்கள் வீட்டையொட்டியிருக்கின்ற தோட்டத்திலுள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கின்றனர். தந்தை அமைதியாக அமர்ந்திருக்கின்றார். மகன் அமைதியாக நியூஸ்பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறான்.

இவர்களின் அமைதியைக் குலைப்பதற்காக(!) பறந்து வருகிறது ஒரு சிட்டுக்குருவி.

தந்தை மகனைப் பார்த்துக் கேட்கின்றார்: 'வாட் இஸ் தட்?' (அது என்ன?) மகனும் நியூஸ்பேப்பரை விலக்கிப் பார்த்துவிட்டு 'சிட்டுக்குருவி' என்கிறான். தந்தையும் அதை மௌனமாக ஆமோதிக்கின்றார்.

ஐந்து செகண்டுகள் கழித்து மறுபடியும், 'அது என்ன?' எனக் கேட்கின்றார். 'நான்தான் சொன்னேன்ல அப்பா! அது ஒரு சிட்டுக்குருவி!,' தான் தொந்தரவு செய்யப்பட்ட எரிச்சலில் விடைதருகின்றான் மகன்.

அங்குமிங்கும் பறக்கும் சிட்டுக்குருவி சற்றுத் தள்ளிச் சென்று அமர்கிறது. அதை உற்றுப்பார்க்கின்ற தந்தை மறுபடியும் தன் மகனிடம், 'அது என்ன?' எனக் கேட்கின்றார். 'எத்தனை தடவை சொல்வது...சிட்டுக்குருவி...பாருங்க சிட்டுக்குருவி...சி...ட்...டு...க்...கு...ரு...வி...' என்கிறான் கோபமாக.

'அது என்ன?' மீண்டும் கேட்கின்றார் தந்தை. மகன் கோபத்தில் வெடிக்கிறான்: 'எத்தனை தடவை சொல்றது ... அது ஒரு சிட்டுக்குருவி ... ஏன் இப்படிப் பண்றீங்க?!'

தந்தை பெஞ்சிலிருந்து எழுகின்றார். 'எங்கே போறீங்க?' கேட்கின்றான் மகன். மௌனமாகத் தன் வீட்டிற்குள் செல்கின்ற தந்தை ஒரு பழைய டைரியுடன் வெளியே வந்து மீண்டும் பெஞ்சில் அமர்கின்றார்.

டைரியின் ஒரு பக்கத்தை மகனிடம் நீட்டி, 'படி, சத்தமாகப் படி!' என்கிறார்.

மகன் டைரியின் பக்கத்தைச் சத்தமாக வாசிக்கின்றான்: 'இன்று நானும் மூன்று வயது நிரம்பிய என் மகனும் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தோம். அப்போது எங்களுக்கு முன்னே ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்ந்தது. 'அது என்ன?' என்று மகன் 21 முறை என்னிடம் கேட்டான். நானும் 21 முறையும் 'அது ஒரு சிட்டுக்குருவி' எனப் பதில் சொன்னேன். ஒவ்வொரு முறை அவன் அதே கேள்வியைக் கேட்டபோதும் அவனை மீண்டும் மீண்டும் கட்டித் தழுவிக்கொண்டேன் - எரிச்சல்படாமல் அவனது குழந்தையுள்ளத்தை எண்ணி அவனை அன்போடு தழுவிக்கொண்டேன்.'

மௌனம்.

டைரியை மூடிவிட்டு மகன் தன் தந்தையை அணைத்து முத்தமிடுகிறான்.

'வாட் இஸ் தட்?' என்ற கேள்வியோடு முடிகிறது குறும்படம்.

இந்தக் குறும்படம் பல கேள்விகளை என்னுள் எழுப்புகின்றது:

1) 'அது என்ன?' எனும் கேள்வி. குழந்தைப்பருவத்தில் நாம் நம் பெற்றோரிடம் கேட்ட முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். 'அது என்ன?' 'அவர் யார்?' என நாம் உலகத்தையும், உறவுகளையும் அறியத்தொடங்கினோம். சின்னக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது இன்னும் நடக்கும்: 'அது என்ன?' 'இது என்ன?' 'ஏன் செடி பச்சையா இருக்கு?' 'ஏன் நாய் நடக்குது?' 'ஏன் கோவிலுக்குப் போகணும்?' என அவர்கள் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். வயது ஆக ஆக நாம் கேள்வி கேட்பதை குறைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நிறுத்தியும் விடுகிறோம். மைக்கேல் ஸ்டீவன்ஸ் என்ற அமெரிக்கக் கல்வியியல் ஆராய்ச்சியாளர் கேள்விகள் மூலமே நாம் குழந்தைகளுக்கு அறிவைப்புகட்ட முடியும் என்றும் நாம் கேட்கும் கேள்விகளே நம்மை புதிய கண்டுபிடிப்புக்களுக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறுகின்றார். அவர் கேட்கும் 13 கேள்விகளை நான் இங்கே தருகிறேன். நீங்கள் பதில் கண்டுபிடியுங்கள்.

1. நாம் பார்க்கும் வீடியோவின் எடை என்ன?
2. நாம் முகம் பார்க்கும் கண்ணாடியின் நிறம் என்ன?
3. ஐந்து செகண்ட் ரூல் உண்மையா?
4. எல்லாரும் ஒரே நேரத்தில் குதித்தால் என்ன ஆகும்?
5. நாம் ஏன் ஆடை அணிகிறோம்?
6. இசை என்றாவது முடிந்து போகுமா?
7. இப்பூமியில் மிக ஆபத்தான இடம் எது?
8. உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பானதா?
9. உலகில் மொத்தம் எவ்வளவு பணம் இருக்கும்?
10. நான் சொல்லும் சிகப்பும் நீ சொல்லும் சிகப்பும் ஒன்றா?
11. கோழி ஏன் ரோட்டைக் கடந்தது?
12. நமக்கு ஏன் இரண்டு மூக்குத் துவாரங்கள் உள்ளன?
13. ஏன் பொருட்களும் மனிதர்களும் அழகாக இருக்கின்றன?

நாம் இன்று கேள்வி கேட்பதில்லை. 'பதில் எனக்குத் தெரியும்' என நினைத்துக்கொள்கிறோம். அல்லது 'பதில் தெரிந்து என்ன?' என கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகின்றோம். இது நம் அறிவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நம் உறவுகளில் மனிதர்களை புரிந்து கொள்ள மறுப்பதாகவும், தவறாகப் புரிந்து கொள்வதாகவும் மாறிவிடுகின்றது.

2) எரிச்சல். கோபத்தின் குழந்தை எரிச்சல். ஆனால் கோபத்தைவிட அதிக எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது இது. இது ஒரு எதிர்மறை உணர்வு என்பதைவிட மனம் தானாக உருவாக்கிக் கொள்ளும் 'டிஃபன்ஸ் மெக்கானிஸம்' என இதைச் சொல்லலாம். செல்ஃபோன் பேசும் போது, வேலை செய்யும் போது, வாக்கிங் செல்லும் போது, ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது என எப்போது வேண்டுமானாலும் எரிச்சல் வரலாம். நம் நண்பர், உறவினர், நாம் வளர்க்கும் செல்லப்பிராணி, டிராஃபிக் போலீஸ், வாட்ச்மேன், கிளைமேட் என யார்மேலும் எரிச்சல் வரலாம். எரிச்சல் ஒரு எமோஷனல் திரை. அடுத்தவர் சொல்ல வருவதை நாம் கேட்க முடியாமல் இது தடுத்து விடுகிறது. மனம் உடனே மௌனமாக அவரைப் பற்றிய ஒரு (தவறான) தீர்ப்பை எழுதிமுடித்துவிடுகின்றது.

3) 'நமக்கொரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயம்.' 'நாம் பேசும்போது அனைவரும் கேட்க வேண்டும்', என நினைக்கிற நாம் 'அடுத்தவர்கள் பேசும்போதும் நாம் கேட்க வேண்டும்' என்று பல நேரங்களில் நினைப்பதில்லை. பேசுபவருக்கும், கேட்பவருக்கும் இடையில் உரையாடல் இரண்டு திசைகளில் இருக்கும்போதுதான் அது அன்பின் உரையாடலாக மாறுகின்றது. அப்படியில்லையென்றால் அது வெறும் கிளாஸ்ரூம் லெக்சர் போலவோ, எப்.எம். ப்ரோகிராம் போலவோ மாறிவிடும். 'மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்வதில்லை' என்று புலம்புவதிற்குப் பதில் நாம் மற்றவர்களைப் புரிந்துகொள்கிறோமா எனக் கேட்கலாமே?

இன்று யாராவது நம்மைப் பார்த்து 'வாட் இஸ் தட்?' எனக் கேட்டால்...


['வாட் இஸ் தட்?' குறும்படத்தைப் பார்க்க: What is That? ... மைக்கேல் ஸ்டீவன்ஸின் '13 கேள்விகள்' காணொளியைப் பார்க்க: 13 Questions]


1 comment:

  1. Dear Father,It is very very excellent writings of yours.I learnt many things.
    Thank you Fatehr

    ReplyDelete