Wednesday, June 26, 2013

பொறுமையா? சமரசமா?



போன வாரம் சனிக்கிழமை மாலை எங்கள் பங்கில் ஒரு தம்பதியினரின் திருமண வெள்ளி விழாத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் மறையுரை நேரத்தில் அருட்பணியாளர் தம்பதியினரைப் பார்த்து, 'இந்த 25 ஆண்டு இல்லற வாழ்வின் இரகசியம் என்ன?' என்று கேட்டார். எல்லாரின் கண்களும் மணமக்களை நோக்கியே இருந்தன. மணமக்களும் ஒருவர் ஒருவரை பார்த்துக்கொண்டனர். அருட்பணியாளர் மீண்டும் அதே கேள்வியை அவர்களிடம் கேட்டார். 'லா பாட்சியன்ஸா (பொறுமை)!' என்று பதிலளித்தார் பெண். பலர் சிரித்தனர். சிலர் ஆச்சர்யப்பட்டனர். அருட்பணியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. 'பொறுமை!?' மீண்டும் அவர்களைக் கேட்டார். 'அன்பு', 'தியாகம்' எனச் சொல்வார்கள் என அவர் நினைத்திருப்பார்போல. ஆகையால் தொடர்ந்து பிரசங்கம் வைத்தார்: 'அன்பு பொறுமையுள்ளது!'. திருப்பலி முடிந்தது. எல்லாரும் தம்பதியினரை வாழ்த்தினர். நானும் வாழ்த்தினேன். நல்ல விருந்தும் நடந்து முடிந்தது.

இன்று மாலை அதே பெண்ணை நான் பார்க்கில் சந்திக்க நேர்ந்தது. அவரின் அருகில் சென்று 'நீங்கள் சொன்ன பதிலை யாருமே எதிர்பார்க்கல!' என்றேன். உடனே அப்பெண் அழத்தொடங்கினார். எனக்கு பயமாயிற்று. சுற்றி நின்றவர்கள் எங்களையே பார்க்துக் கொண்டிருந்தனர். அவரை அருகிலிருந்த பெஞ்சில் அமர வைத்து நானும் அருகில் அமர்ந்தேன். 'ஸ்கூஸா சிக்னோரா!' (மன்னிச்சுக்கோங்க மேடம்!) என்றேன். 'நியன்த்தே!' (பரவாயில்லை), என்று பதில் தந்தார். தொடர்ந்து, 'என் வீட்டுக்காரர் மிகவும் கோபக்காரர். அதிகம் குடிப்பார். போதை மருந்துப் பழக்கமும் இருந்தது. ஆகையால் வேலையை இழந்தார். நான் தான் பிள்ளைகளை வளர்த்தேன். எனக்கு அவர் பிரமாணிக்கமாக இருந்ததும் கிடையாது. கையில் கிடைக்கும் பணத்தை குதிரை ரேஸில் பந்தயம் கட்டுவார். அல்லது லாட்டரியில் செலவிடுவார். இப்படிப்பட்ட வாழ்க்கையில் 'பொறுமை' இருந்தததால்தானே 25 வருடங்கள் கடக்க முடிந்தது' என்று அழுது முடித்தார்.

அவரிடம் விடைபெற்று நான் வாக்கிங் கிளம்பினேன். எனக்குள் ஒரு நெருடல். அவரைக் காயப்படுத்திவிட்டோமோ என்று. ஆனால் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அந்த உரிமையில்தான் கேட்டேன். அவரும் அந்த உரிமையிலே பதில் சொன்னார்.

எனக்கு இப்ப எழும் கேள்வி இதுதான்: 'இந்தப் பெண் தன் திருமண வாழ்வில் காட்டியது பொறுமையா? அல்லது சமரசமா?' எனக்கு என்னவோ இவர் 25 வருடங்கள் செய்தது 'சமரசம்' தான் எனத் தோன்றுகிறது.

சமரசத்திற்கு நாம் வைத்திருக்கும் செல்லப்பெயர்தான் பொறுமையா?

'என்ன சார். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் பண்ணியிருக்காங்க. நாம எதுவும் செய்ய முடியாதா?' என்று மாணவர்கள் கேட்டதற்கு பேராசிரியர் சொல்கிறார், 'பொறுமையா இருங்க. எல்லாம் சரியாயிடும்!'. இது பொறுமையா? சமரசமா?

'என்ன மேடம் நீங்க இவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. அவன் நன்றியில்லாம நடந்துக்கிறான். நீங்களும் அமைதியா இருக்கீங்க!' இது பொறுமையா? சமரசமா?

நானும் ஃபாதர் ஆகி 4 வருடம் ஆகிறது. 'எதுக்காக இங்க இருக்கிறோம்? நம்மளால யாருக்கு பிரயோசனம்? இவ்வளவு ஹியூமன் ரிசோர்ஸ் வேஸ்ட் ஆகுதே. என்னால ஒன்னும் உருப்படியா செய்ய முடியலயே?' என்று யாரிடம் புலம்பினாலும் அவர்கள் சொல்வது, 'ஃபாதர் எல்லாம் சரியாயிடும். பொறுமையா இருங்க!' இது பொறுமையா? அல்லது என் வெறுமையுடன் நான் செய்து கொள்ளும் சமரசமா?

'எல்லாம் சரியாயிடும்'னு நினைச்சா சரியாயிடுமா? கார் ஓட்டிட்டு போறோம். எதிரில் ஒரு கார் வருது. 'எல்லாம் சரியாயிடும்னு' நினைச்சா மட்டும் சரியாயிடுமா? 'பிரேக் போடனும்னு நினைச்சா மட்டும்' கார் நின்னுடுமா? பிரேக் போடனும்ல! 'விஷிங் எ திங் டஸ் நாட் மேக் எ திங்' என்பார்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செயல்படுத்த வேண்டும். அதுவும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்தானே!

வாக்கிங் முடிஞ்சு எங்க வீட்டுக்குத் திரும்பினேன். எப்பவும் எங்க கோவிலுக்கு வெளியே பிச்சையெடுக்கும் (மன்னிக்கவும்...இந்த வார்த்தையில் எதுவும் ஏளனம் கையாளப்படவில்லை!) ருமேனிய நாட்டுப் பெண் நின்று கொண்டிருந்தாள். வழக்கமாகக் கைக்குழந்தையோடு வரும் அவள் இன்று தனியே நின்றுகொண்டிருந்தாள். 'என்ன ஈவா! உன் குழந்தையை எங்கே?' என்றேன். 'அதற்கு நெற்றியில் அடிபட்டு விட்டது. ஆஸ்பத்திரில சேர்த்திருக்கிறேன்' என்றாள் கலங்கிய கண்களோடு.

'கவலைப்படாதே! எல்லாம் சரியாயிடும்' என்று சொல்லிவிட்டு கேட்டைச் சாத்தினேன்.

அவள் என்ன நினைத்திருப்பாள்?

'எல்லாம் சரியாயிடுமா? அவள் குழந்தையின் நெற்றி சரியாயிடுமா? அவளின் வறுமை சரியாயிடுமா?'

'இது நான் காக்கும் பொறுமையா? அல்லது என் இயலாமையில் எனக்கு நானே  செய்துகொள்ளும் சமரசமா?'

1 comment:

  1. Anonymous6/26/2013

    Really very nice thought kanna....

    ReplyDelete