Sunday, June 16, 2013

எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!


ஒரு குழந்தையின் திருமுழுக்கு விழாவிற்காக செசானோ என்ற மலைக்கிராமத்திற்குச் சென்றிருந்தேன். நகரத்தின் நெருக்குமான அப்பார்ட்மென்ட்களையே பார்த்துவிட்டு மலைச்சரிவுகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகளைப் பார்க்க மகிழ்ச்சியாகவே இருந்தது.

மதிய உணவிற்காக 'கொல்லோ தோர்ட்டோ' என்ற உணவு விடுதிக்குச் சென்றோம். உணவு விடுதியும் ஒரு கிராமப்புற அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. முற்றிலும் மரப்பலகைகளால் வடிவமைக்கப்பட்டு இரண்டு மலைகளுக்கிடையே அந்தரத்தில் தொங்குவதுபோல மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

விடுதிக்கு வருபவர்களை, குறிப்பாக குழந்தைகளை குதூகலப்படுத்த கழுதைகளை வைத்திருந்தனர். கழுதை என்றால் துணி துவைப்பவர்கள் பயன்படுத்துவது என்ற கிராமத்தின் எண்ணத்தில் வளர்ந்த எனக்கு கழுதையைக் கழுதையாகப் பார்க்கும் முதல் வாய்ப்பு இதுதான். நாம் பிராணிகள் வளர்ப்பதே அவற்றால் பயன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே: 'நாய் வளர்த்தால் அந்நியர்களின் மேல் பாய வேண்டும் அல்லது குரைக்கவாவது வேண்டும். கிளி வளர்த்தால் பேச வேண்டும். கோழி வளர்த்தால் முட்டையிட வேண்டும். ஆடு வளர்த்தால் வெட்டி விருந்து வைக்க வேண்டும்.' இந்தக் கழுதைகளைச் சுற்றி ஒரே குழந்தைகள் பட்டாளம்தான். குழந்தைகள் கழுதைகளுக்குக் கொடுப்பதற்காக பக்கத்தில் புற்களை வைத்திருந்தார்கள்.

எங்களோடு வந்திருந்த ஒரு குழந்தையின் பெயர் யான். வயது ஒன்றரை இருக்கும். தானும் கழுதைக்கு புல் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்து அவனது அப்பாவை அழைத்துச் சென்றான். நானும் உடன் சென்றேன். மொத்தம் ஆறு கழுதைகள். ஐந்து கழுதைகள் சாலையோரத்திலும், ஒரு கழுதை மட்டும் சற்றுப் பள்ளமான இடத்திலும் மேய்ந்து கொண்டிருந்தது. யானுக்கு தூரத்தில் இருக்கும் கழுதைக்கு புல் கொடுக்க ஆசை. 'அங்கே போ!' என்று அப்பாவை விரட்டுகிறான். அப்பாவிற்கு போக மனமில்லை. மனமில்லையென்பது மட்டுமல்ல. அங்கே இறங்கிச் செல்வது சற்று ஆபத்தும் கூட. கொளுத்தும் வெயில். கிள்ளும் பசி. கோபத்தில் யானிடம் சொல்கின்றார்: 'எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!'

இந்த வார்த்தைகளை இத்தாலிய மொழியில் கேட்டவுடன் என் தாத்தா தான் நினைவிற்கு வந்தார். எங்கள் கிராமத்தில் அவர் பலசரக்கு கடை வைத்திருந்தார். நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது என் அம்மாவுடன் தினமும் அங்கே செல்வது வழக்கம். எல்லாம் வாங்கி முடித்து கால் ரூபாய், அரை ரூபாய் மிஞ்சும் போது, 'உனக்கு ஏதாவது வாங்கிக்கொள்' என்பாள் என் அம்மா. நானும் 'இது வேண்டும், அது வேண்டும்' எனக் கையை நீட்டுவேன். என் தாத்தாவின் கைக்கு எட்டாத ஒன்றை நான் கேட்டு விட்டால் எழுந்து எடுத்துக் கொடுப்பதற்குப்பதில் அருகில் இருக்கும் தின்பண்டத்தை எடுத்துக் கொடுத்து, 'சும்மா இந்த ..யித்தத்தான் தின்னு! எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!' என்பார். 

நான் பதினொன்றாம் வகுப்பு அட்மிசன் போட்டுவிட்டு 'பர்ஸட் குரூப்' கிடைக்கல என்று புலம்பிக் கொண்டிருந்தபோது, 'சும்மா இருக்குறத படி! எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!' என்றார். 'நான் ஃபாதர்க்குப் படிக்கப் பிடிக்கல, கஷ்டமாக இருக்கு. வேறு ஏதாவது படித்து வேலைக்குப் போறேன்' என்று புலம்பியபோதும் 'எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!' என்றார்.

ஐந்து மாதங்களுக்கு முன் நண்பர் பிரபுவும் தன் ஸ்கைப் ஸ்டேஸில், 'ஆல் டாங்கிஸ் ஆர் சேம்' எனப் போட்டிருந்தார். மொழிகளைக் கடந்து பயன்படுத்தப்படும் 'கழுதைச் சொல்லாடல்' இன்று என்னைச் சிந்திக்க வைக்கிறது.

நம் குழந்தை யான் சற்று பெரியவனாயிருந்தால், 'அது எப்படி டாடி எல்லாக் கழுதையும் ஒன்னாகும். அது அங்க இருக்கு. இது இங்க இருக்கு எனச் சொல்லியிருப்பான்.'

எல்லாக் கழுதையும் ஒன்னா!

இதில் ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவம் இருப்பாதவே எனக்குத் தோன்றுகின்றது. இந்தியத் தரிசனத்தில் (மெய்யியல்) உள்ள பெரும்பிரிவு 'அத்வைதம்' (பேதமற்ற நிலை!). பிரிவுகளைக் கடந்து சிந்திக்கும் மனம்தான் 'அத்வைதம்' அடைய முடியும். கடலின் நீர்த்துளிகளைப் பார்த்து 'எவ்வளவு தண்ணீர்த் துளிகள்' என்று வியந்தவர்களிடம் 'மொத்தக் கடலும் ஒரே நீர்த்துளிதான்' என்று சொன்னவர் கலீல் கிப்ரான். 

நம் வாழ்வின் பிரச்சினைகளுக்குக் காரணமே பேதம்தானே: இது-அது, மேல்-கீழ், நல்லது-கெட்டது, ஆண்-பெண், பகல்-இரவு, வெளிச்சம்-இருட்டு, எனது-உனது என்று பிரித்துப் பார்க்கும் மனம், ஒப்பீடு என்ற அடுத்த கட்டத்திற்குப் பறக்கின்றது. ஒப்பீடு செய்யும் மனம் பொறாமைப்படுகின்றது, போட்டி போடுகின்றது, தாழ்வு மனப்பான்மை கொள்கின்றது.

ஒரு சினிமா தியேட்டரில் ஒரு புரொஜக்டருக்குப் பதில் 10 புரொஜக்டரில் 10 படங்களைக் காட்டினால் என்ன ஒரு குழப்பம் ஒருக்கும்? பத்திலிருந்து ஒன்றிற்கு, ஒன்றிலிருந்து இல்லாமைக்கு எனக் கடந்து செல்வதே நம் ஆன்மீகப்பயணத்தின் இலக்காகும்.

பயணம் முடித்துவிட்டு மெட்ரோ எடுத்து வீடு திரும்பினேன். ஒரு கையில் அடுத்த பரீட்சைக்குப் படிக்க வேண்டிய புத்தகம். மறு கையில் குறிப்பெடுக்கப் பென்சில். 'மன்சோனி' என்ற நிறுத்தத்தில் ஸ்லீவ்லெசும், அரை டிராயருமாக ஒரு இளநங்கை ஏறினாள். இருக்கின்ற வெற்று இருக்கைகளையெல்லாம் ஏளனமாகப் பார்த்துவிட்டு பெட்டியின் நடுவில் இருக்கும் கம்பியில் போய் சாய்ந்து கொண்டு, 'எல்லோரும் என்னையே பாருங்க!' என்பது போல நின்றாள். புத்தகத்தில் பதிந்திருந்த என் கண்களும் அவளை நோக்கியே சென்றன!

அப்போ யாரோ தூரத்தில ஃபோன்ல போடுற சத்தம் காதில் விழுந்தது:

'எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!'

1 comment: