Tuesday, June 25, 2013

டு யூ பிலிவ் இன் ஏஞ்சல்ஸ்?

இன்று என் நண்பி இனியாவுடன் இத்தாலியின் தென்முனைக்குச் சென்றேன். இனியா இத்தாலியப் பெயர் மாதிரி இல்லையேன்னு கேட்காதீங்க. இது அவளது இயற்பெயர் அல்ல. காரணப்பெயர். அப்படி என்ன காரணம்? ஒன்றல்ல, இரண்டு காரணங்கள்:

காரணம் 1: இத்தாலியில் எந்த ஒரு ஆணும், எந்த ஒரு பெண்ணையும் பார்த்து எந்த ஒரு இனிஹிபிஷனும் இல்லாமல் இத்தாலிய மொழியில் 'பெல்லா' என்றும் 'பெல்லெட்சா' (அழகு, அழகி, இனிமை, இனியவள்) என அழைக்கலாம். ஒரு பெண்ணை 'அழகி' என அழைத்தால் இங்கே நமக்குப் பதிலாகக் கிடைப்பது ஒரு பெரிய ஸ்மைல். இதையே நம்ம ஊர்ல கூப்பிட முடியுமா? நாம ரொம்ப குளோஸா இருக்குற ஒரு பொண்ணப்பார்த்து 'ஹாய் அழகி!'ன்னு கூப்பிட்டா என்ன நடக்கும்? அவ பதிலுக்கு நம்மைப் பார்த்து மூனு கேள்வி கேட்பாள்:

கேள்வி 1: 'என்னது, என்ன சொன்ன?' (கேட்கலயாம்!)
கேள்வி 2: 'என்ன கிண்டல் பண்றியா?'
கேள்வி 3: 'என்ன தண்ணிய கிண்ணிய போட்ருக்கியா?'

ஏன்னா நாமதான் அழகுன்னா இப்படித்தான் இருக்கணும்னு டெஃபனிஷன் கொடுத்துட்டோமே. அமலா பாலும், அய்ஸ்வர்யா ராயும்தான் அழகுன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டோம். பொண்ணு அழகா இருக்கணும்னா சிகப்பா இருக்கணும்! ஆண் அழகா இருக்கணும்னா கையை மடக்கி மேலே தூக்கிட்டு சிக்ஸ் பேக்கோட இருக்கணும்! இதத்தான நாம அழகுன்னு நினைக்கிறோம்! ஆனா இத்தாலியில எல்லாரும் அழகுதான். அதனாலதான் இங்க 'மிஸ் இத்தாலியா' அழகிப்போட்டிகூட கிடையாது. எல்லாருக்கும் எப்படிங்க ப்ரைஸ் கொடுக்க முடியும்?

காரணம் 2: என்னோட இனியவளுக்குப் பிடிச்ச இனிய தமிழ்ப்பெயர் 'இனியா'.

இந்த இனியாவோட இன்னைக்குக் காலையில புறப்பட்டேன். என்னைக்கும் லேட்டா வர்ற இனியா இன்னைக்கு இருபது நிமிஷம் முன்னாலயே வந்துட்டா. இருவர் மட்டும் பயணிக்கக் கூடிய ஸ்மார்ட் கார். காரில் ஏறும்போதே உள்ளே சிகரெட் ஸ்மெல். இந்த இனியாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது மூன்று: நல்லா கார் ஓட்டுவா. நல்லா சிகரெட் பிடிப்பா. நல்லா வாய் விட்டுச் சிரிப்பா.

நாம எங்கயாவது போகணும்னு நீண்ட நாள் அடம்பிடிச்சு இன்னைக்குபு; புறப்பட்டோம். ஏறக்குறைய 1200 கிமீ. மேப்பெல்லாம் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்திருந்தா. நாங்க போகப்போற இடம் இத்தாலியின் தெற்கேயுள்ள ஃபுஜ்ஜியா என்ற மாகாணத்தின் மோந்தே சாந்தஞ்சலோ என்ற நகரம். இங்குள்ள மக்களின் நம்பிக்கையின்படி புனித மிக்கேல் அதிதூதர் கிபி 490 ஆண்டு காட்சியளித்தார். அட்ரியாடிக் கடல் தாலாட்டும் பழமையான வளமையான நகரம்.

ரோமிலிருந்து புறப்பட்டு நான்கு மாகாணங்களைக் கடந்து செல்லும் மலைப்பாதையில் புறப்பட்டோம். இத்தாலியின் இருபது மாகாணங்களையும் இணைப்பவை அவைகளின் சாலைகள். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, விபத்துக்கள் குறைந்த பாதைகள் இவை. சூப்பர்ஹைவே எனப்படும் அதிவேக சாலையில் பயணம் தொடங்கும்போது என்னிடம் கேட்டாள் இனியா: 'உங்க இந்தியாவுல இப்படியெல்லாம் ரோடு இருக்குதா?' செம்மண் தார் ரோடாகி, தார் ரோடு தங்க நாற்கரச்சாலையாகி, இப்பத்தான் நான்கு வழிச் சாலைகள் வர ஆரம்பித்திருக்கின்றன நம்ம ஊரில். அதுக்காக அப்படியே உண்மையச் சொல்லிட முடியுமா? நமக்குன்னு ஒரு கெத்து இருக்குல. 'எங்க ஊர்ல இந்த மாதிரி ரோடெல்லாம் இல்ல. நாங்க பக்கத்து ஊருக்குப் போகனும்னாலும் ஹெலிகாப்டர்லதான் போவோம். அதனால இந்த மாதிரி ரோடெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை', என்றேன். நக்கலாகச் சிரித்தாள்!

ஏறக்குறைய 11 மணி. புனித மிக்கேல் அதிதூதர் காட்சி தந்த குகையில் செபம் செய்து விட்டு எதிரில் இருந்த பீச்சில் வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். பேசிக்கொண்டேயிருந்தபோது இனியா கேட்டாள், 'டு யூ பிலிவ் இன் ஏஞ்சல்ஸ்?' (வானதூதர்கள் இருக்கிறார்கள் என நம்புகிறாயா?). 'ஆக்சுவல்லி...' என்று நான் பதில் சொல்லத் தொடங்கியபோது அவளின் ஐஃபோன் அடிக்க அதை எடுத்து 'ஒரு நிமிஷம்!' என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

கடற்கரையைப் பார்த்துக்கொண்டே அதே கேள்வியை எனக்கு நானே கேட்டேன்: 'டு யூ பிலிவ் இன் ஏஞ்சல்ஸ்?' பைபிளில் நிறைய இடங்கள்ல ஏஞ்சல்ஸ் பற்றிய குறிப்பு இருக்கு. அதிலும் 'மிக்கேல், கபிரியேல், ரஃபேல்' என மூன்று பேரை ஆர்க் ஏஞ்சல்ஸ் (அதிதூதர்கள்) என அழைக்கிறது கத்தோலிக்க மறை. கிறித்தவ மதத்தின் 'ஏஞ்சல்ஸ்' நம்பிக்கை வளர அதன் தாய் மதமான யூத மதமே காரணம். யூதர்களின் சிந்தனையில் 'ஏஞ்சல்ஸ்' வரக் காரணம் அவர்கள் பாபிலோனியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிகழ்வுதான். பாபிலோனியாவிலும் அதைச்சுற்றியிருந்த பாரசீக நாட்டிலும்தான் (ஸோராஸ்ட்டிரிய மதம்) 'வானதூதர்கள்' என்ற கான்சப்ட் முதலில் உருவாகிறது. இசுலாமின் திருக்குரானிலும் ஒன்பது அதிதூதர்களின் பெயர்கள் உள்ளன. இந்து மதத்தில் 'வானதூதர்' என்ற சிந்தனை இல்லையென்றாலும் இராமாயணத்தின் 'ஹனுமாரும்', மகாபாரதத்தின் 'கண்ணனும்' நமக்குத் தூதர்களாகவே தெரிகின்றனர். கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் இருப்பவர்கள்தாம் 'ஏஞ்சல்ஸ்'. இந்த இருவருக்கும் இடையில் உள்ளவர்கள் என்றால் இந்த இருவரின் இயல்பையும் இவர்கள் கொண்டிருக்க வேண்டும். மனிதர்களின் ஐம்புலன்களுக்கும் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதையும் கடந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மனிதர்களைப்போல ரூபிகளாகவும், கடவுளைப்போல அரூபிகளாவும் இருக்க வேண்டும்.

அன்னைக்கு மக்களுக்கு அடிக்கடி காட்சி தந்த வானதூதர்கள் இன்னைக்கு ஏன் வருவதில்லை? பவுலோ கோயலோ மிரகில்ஸ் பற்றி சொல்லும்போது இப்படிச் சொல்வார்: 'மிரகில்ஸ் ஹேப்பன் ஒன்லி டு தோஸ் வூ பிலிவ் இன் த மிரகில்ஸ்!'. அதுபோலத்தான் 'ஏஞ்சல்ஸ் அப்பியர் ஒன்லி டு தோஸ் வூ பிலிவ் இன் தி ஏஞ்சல்ஸ்!'. ஏஞ்சல்ஸ்க்கும் டெவில்ஸ்க்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். அடுத்தவர்களை மட்டும் நினைப்பவர்கள் ஏஞ்சல்ஸ். தன்னை மட்டும் நினைப்பவர்கள் டெவில்ஸ். அப்படியென்றால் 'நாம் நல்லா இருக்க வேண்டும்!' என நினைக்கிற ஏஞ்சல்ஸ் நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கிறார்கள்: நம் அப்பா, அம்மா, ஆசிரியர், குழந்தை, நண்பன், நண்பி, காதலன், காதலி, கணவன், மனைவி, மருத்துவர் எனப் பலர் அன்றாடம் நம் நலம் விரும்புகின்றனர். இவங்க எல்லாருமே ஏஞ்சல்ஸ்தானே. இவை தவிர எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்து 'யாரென்று அறியாமல், பேர் கூடத் தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே' என்று மதராஸப்பட்டினம் படப் பாடல்வரிகள் போல நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒருவர் ஏஞ்சலாக நம் வாழ்விற்குள் வருகின்றார். இன்றும் வானதூதர்கள் வருகிறார்கள். நம் நண்பர்கள் எல்லாருமே ஏஞ்சல்ஸ்தான். அவர்கள் நம்மைப்போலவும் இருப்பார்கள். நம்மை விட வித்தியாசமாகவும் இருப்பார்கள். ஏஞ்சல்ஸைப்போல நம்மை நம் வாழ்க்கையோடு நம்மை இணைப்பவர்கள் இவர்கள்தாம். ஒருவர் இறக்கும்போது அவர் மட்டுமல்ல அவரோடு இருக்கும் ஏஞ்சல்சும் இறந்துதானே போகிறார்கள்!

மற்றொரு வகையாகப் பார்த்தால், நம்மில் இருக்கும் நம்பிக்கை நம் ஏஞ்சல். நாம் கொண்டிருக்கும் பயம் நம் டெவில்.

ஃபோன் பேசி முடித்துவிட்டு வந்த இனியா 'வா சாப்பிடப் போகலாம்' என்றாள். சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும் போது திடீரெனச் சிரித்தாள்: 'ஏன் சிரிக்கிறாய்?' என்றேன். 'ஒன்னுமில்லை. சாப்பிடு', என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தாள். 'ஏன் மேடம் சிரிக்கிறீங்க?'ன்னு மறுபடியும் கேட்டேன். 'மிக்கேல் அதிதூதருக்கும், உனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. என்ன?' எனக் கேட்டாள். 'தெரியாது', என்றேன். 'அவர் ஆர்க் ஏஞ்சல். நீ டார்க் ஏஞ்சல்!' என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். 'கலாய்ச்சிட்டாரமா!' ன்னு சொன்னேன். 'என்ன சொன்ன?' என்றாள். 'என்ன ஒரு அறிவு!' ன்னு சொன்னேன் என்றேன்.

முன்பின் தெரியாமல், முழுநாளும் என்னோடு இருந்து, இந்த முழுநிலா நாளில் என்னை முழுமையாக வீடு வந்து சேர்த்த என் இனியாவும் ஒரு ஏஞ்சல்தான்!

'டு யூ பிலிவ் இன் ஏஞ்சல்ஸ்?'



2 comments:

  1. மிரகில்ஸ் ஹேப்பன் ஒன்லி டு தோஸ் வூ பிலிவ் இன் த மிரகில்ஸ்.

    அதுபோலத்தான் 'ஏஞ்சல்ஸ் அப்பியர் ஒன்லி டு தோஸ் வூ பிலிவ் இன் தி ஏஞ்சல்ஸ்!'.

    அதேபோல நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒருவர் ஏஞ்சலாக நம் வாழ்விற்குள் வருகின்றார்.
    இன்றும் ....

    So you entered as an angel to me in me.

    ReplyDelete