Saturday, June 22, 2013

இதுதான் நார்மல்



காலை 11.45 மணி. இனியன் எழுந்து கடற்கரைக்குச் சென்றான். அவனுக்குக் கடலில் நீச்சல் அடிக்க ஆசை. நீச்சல் உடைகள் இருந்தாலும் அவனால் அன்று நீந்தியிருக்க முடியாது. கடற்கரை நெடுக இருந்த மேல்தட்டு ஓட்டல்கள் ஃபென்சிங் போட்டு கடற்கரையே தங்களுக்குச் சொந்தம் என்பதுபோல் கொண்டாடிக் கொண்டிருந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி கார்ட்ஸ் உள்ளே வருகிற அனைவரின் அடையாள அட்டைகளையும் கேட்டுக் கொண்டிருந்தனர். இனியன் தனக்குள் சிரித்துக் கொண்டான். 'இவ்வளவு பெரிய மனிதர்களை நம்பாத இந்த துப்பாக்கிக் காவலர்கள் இத்தனூன்டு அட்டையை நம்புகின்றனரே'. 

எல்லாரும் 'நார்மலாக' டிரஸ் அணிந்திருந்தார்கள். கலர் கலரான சட்டை. அதற்கு மேட்சாக கால் சட்டை. ஹவாய் ஸ்லிப்பர்ஸ். தலையில் பெரிய ரவுண்ட் வெள்ளை நிற தொப்பி. மேல் தட்டு மக்கள் கடலுக்கு வந்தால் இப்படித்தான் வரவேண்டும் என்ற 'நார்மாலிட்டையை' எல்லாரும் கடைப்பிடித்தனர். ஆண்களும், பெண்களும் கறுப்பு கண்ணாடிகள் அணிந்திருந்தனர். பார்வை மங்கியிருந்தாலும், பக்கத்து சேரில் அமர்ந்திருப்பவர் தெரியவில்லையென்றாலும் 'சன் கிளாஸ்' அணிய வேண்டும். ஏனென்றால் அதுதான் நார்மாலிட்டி.

இந்த டிரஸ்கோடின் மற்றொரு முக்கிய அம்சம்: செல்ஃபோன். டெக்ஸ் மெசஜஸ் வந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் யாரோடவது பேசிக்கொண்டேயிருக்கும் போது செல்ஃபோன் அழைப்பு ஒலித்து அந்தப் பேச்சைத் தடை செய்ய வேண்டும். 'எக்ஸ்க்யூஸ் மீ' என்று சொல்லி விட்டு அந்த அழைப்பை நாம் ஏற்க வேண்டும். ஒன்னுக்கும் உதவாத 'காலர் டியூன்' காலாக இருந்தாலும் 'இப்ப நான் பிசியா இருக்கிறேன். மண்டே கூப்பிடுங்களேன்' என்று பொய் சொல்லி விட்டு திரும்ப கான்வர்சேசன் தொடங்க வேண்டும். 'சே எவ்வளவு பெரிய ஆள் இவர்!' என்று எதிரில் இருப்பவர் நினைத்துக் கொண்டிருக்க, அவரது செல்ஃபோனும் அடிக்கும். அவரும் அடிக்கிற வெயிலில், 'நல்ல கிளைமேட்' என்று ஏதாவது பொய் சொல்லிக் கொண்டிருப்பார்.

பத்துப் பேர் மத்தியில நாம இருக்கும்போது நமக்க வர்ற தொலைபேசி அழைப்பு மாதிரி நமக்கு செல்ப் எஸ்டீம் தருவது வேறு எதுவுமில்லை. 'நான் முக்கியமானவன். என்னை யாராவது தேடிக்கொண்டேயிருப்பார்கள்' என்று அப்போதுதான் நம் மனசு மற்றவர்களுக்கு மௌனமாகச் சொல்ல ஆரம்பிக்கும்.

எஸ்.எம்.எஸ். இதில் முதல் 'எஸ்'ஸின் அர்த்தம் 'ஸார்ட்' என்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள் என நினைத்தான் இனியன். 'ஸார்ட்டாக' டைப் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஸார்ட்டாக கீபேடும் இருந்தது. ஆனால் இன்று எல்லா மொபைல்களிலும் கீபேடும் 'குவெர்ட்டி' கீபோர்டாக மாறிவிட்டது. டைப்ரைட்டர் போல வேகமாக அடித்துக் கொண்டிருந்தனர் பலர். மெசஜ் அனுப்பிவிட்டு பதிலுக்குக் காத்திருந்தனர் சிலர். 'ஸாரி நான் தவறாக உங்கள் எண்ணுக்கு அனுப்பிவிட்டேன்' என மன்னிப்பு மெசஜ் அனுப்பிக்கொண்டிருந்தனர் சிலர்.

அந்தக் கடற்கரையில் மட்டுமல்ல. உலகின் பல்வேறு இடங்களிலும் அந்த நேரத்தில் இவ்வாறுதான் எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன: 'குட்மார்னிங் மை லவ். ஐ வோக் அப் திங்கிங் எபவுட் யூ. நைஸ் டு ஹேவ் யூ இன் மை லைஃப்', அல்லது 'இன்னும் பத்து நிமிடங்களில் வீட்டில் இருப்பேன். உணவு தயாரா? லாண்டரிக்கு போட்ட துணிகள் வந்துவிட்டனவா?', அல்லது 'இந்தப் பார்ட்டி ரொம்ப போர் அடிக்குது. நீ எங்க இருக்க?'. வெறும் பத்து செகண்டுகளில் சொல்லப்பட வேண்டிய செய்திகளை ஐந்து நிமிடங்கள் மாய்ந்து மாய்ந்து டைப் செய்துகொள்கின்றனர் நார்மல் மனிதர்கள்.

'ஃபோன் ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. இது ஒரு நம்பிக்கைத் துணுக்கு. நீ தனியாய் இல்லை என நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சுய சமாதானம். நீ எவ்வளவு முக்கியமானவன்(ள்) என்பதைப் பிறருக்குக் காட்டும் வழி,' எங்கோ கேட்டதை மனதுக்குள் நினைத்துக் கொண்டான் இனியன்.

ஒரேயொரு இடத்தில்தான் செல்ஃபோன்கள் அணைத்து வைக்கப்பட வேண்டும். முக்கியமான விருந்துகளில் அல்ல. கடவுளோடு பேசும் கோவில்களில் அல்ல. தேர்வு அறையில் அல்ல. சினிமா தியேட்டரில் அல்ல. மருத்துவமனையில் அல்ல. இசைக் கச்சேரியில் அல்ல. இந்த எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு நபரின் செல்ஃபோன் அடிக்கத்தான் செய்யும். ஒரே இடம் எல்லாரும் தங்கள் செல்ஃபோன் ஆபத்தானது என உணர்வது அவர்கள் ஏரோபிளேனுக்குள் ஏறும்போதுதான். எல்லா ஏர்லைன்சும் சொல்லும் வழக்கான பொய் அங்கேயும் சொல்லப்படும்: 'ஆல் மொபைல் ஃபோன்ஸ் மஸ்ட் பி சுவிட்ச்ட் ஆஃப் பிகாஸ் தேய் மைட் இன்டர்ஃபியர் வித் த ஆன்போர்ட் சிஸ்டம்ஸ்'. நாம் எல்லோரும் இதை நம்புகிறோம். விமானப் பணியாளர்களும் இதை நம்மிடம் செய்யச் சொல்வார்கள்.

இந்தக் கதை உருவானது எப்படியென்றால் விமானத்தின் இருக்கைகளில் உள்ள ஃபோன்களை பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தந்தைப் பயணிகளிடம் உருவாக்குவதற்காகத்தான். அவைகளில் பேசினால் ஒரு நிமிடத்திற்கு பத்து அமெரிக்க டாலர்கள் செலவிட வேண்டும். உங்களின் கிரடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும். அந்த ஃபோன் இயங்குவதும் நம் மொபைல் ஃபோனின் டெக்னாலஜி போலத்தான். விமான நிறுவனங்களின் இந்த ஏமாற்று வேலை எடுபடவில்லை. ஆனால் பொய் மட்டும் அப்படியே நிலைத்து விட்டது. விமானங்களில் லேப்டாப் பயன்படுத்தலாம். அதிலுள்ள வைஃபை விமான சேவைக்குச் தொந்தரவு கொடுக்காது. ஆனால் மொபைல் ஃபோன் கொடுக்குமாம்!

இப்ப இன்னும் ஒரு படி மேல போய் வளர்ந்த மொபைல் செட்களில் 'பிளைட் மோட்' என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்த ஃபோன்கள் சாதாரண ஃபோன்களை விட ஐந்து மடங்கு விலை அதிகம். யாரும் இது எதற்காக என்று இதுவரை விளக்கம் சொன்னதே கிடையாது. 'பிளைட் மோட்ல போட்டு பாட்டு கேளேன். அப்படியே பிளைட்ல போறது மாதிரி இருக்கும் மச்சி' என்றான் உதவாக்கரை நண்பன். நார்மல் மனிதர்கள் எல்லாம் இப்படி எண்ணற்ற கதைகளை நம்பித்தான் வாழ்கின்றனர்.

கடலில் நீந்தத்தான் முடியாது. நடக்கவாவது செய்வோம் என நடக்க ஆரம்பித்தான் இனியன். காற்றில் அடித்து வரப்பட்ட செய்தித்தாள் பக்கம் காலில் சிக்கியது. சிக்கியதை எடுத்து விரித்தான்:

'கம்ப்யூட்டரும், மொபைல் ஃபோனும் நம் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டன' என்ற வார்த்தைகள் கண்களில் பட்டன.

'இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்', என்றவாறு நடந்தான் இனியன்.

(பவுலோ கோயலோ எழுதிய 'தெ வின்னர் ஸ்டேன்ட்ஸ் அலோன்' என்ற நாவலின் ஒரேயொரு பக்கத்தைத் தழுவிய என் கற்பனை ஓட்டம்)

No comments:

Post a Comment