Thursday, October 21, 2021

விவேகமும் வேகமும்

இன்றைய (21 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 12:54-59)

விவேகமும் வேகமும்

இறுதிநாள்கள் பற்றிய இயேசுவின் போதனை இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. முதல் பகுதியில், வானின் தோற்றத்தை ஆராய்ந்து அறியும் ஆற்றல் பெற்றிருந்த தன் சமகாலத்தவர் தன் வருகையின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து அறியவில்லையே என்று சலனப்படுகின்றார். இரண்டாம் பகுதியில், எதிரியுடன் செய்ய வேண்டிய சமரசத்தில் உள்ள வேகம் பற்றி முன்மொழிகின்றார். வழக்கு வேகமாக முடித்துவிடப்படவில்லை என்றால் அவற்றில் நிறைய முடிச்சுகள் விழத் தொடங்கும். அந்த முடிச்சுகள் நமக்கு எதிராகவே திரும்பிவிடும். ஆகையால், வேகம் இருத்தல் வேண்டும்.

விழிப்புநிலை பற்றிய இயேசு தொடர்ந்து விவேகமும் வேகமும் பற்றிப் பேசுகின்றார்.

நமக்குமுன் மற்றும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தெளிவுநிலை நமக்கு அவசியம். ஏனெனில், அத்தகைய தெளிவுநிலை நாம் மேற்கொள்கின்ற பல முடிவுகளைப் பாதிக்கும்.

சில நேரங்களில் நாம் பிரச்சினைகளைத் தள்ளிப் போடுகின்றோம். தள்ளிப் போடப்படுகின்ற பிரச்சினைகள் சில நேரங்களில் மறைந்துவிடுகின்றன. சில நேரங்களில் பெரிதாகிவிடுகின்றன. அம்மாதிரியான நேரங்களில் வேகம் அவசியமாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். உரோ 7:18-25), பவுல் தன் உள்ளத்தில் நடக்கின்ற போராட்டம் பற்றிப் பதிவு செய்கின்றார். தான் நன்மை செய்ய விரும்பினாலும் தன்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது என்று தன் முரண்பட்ட நிலையை எண்ணி வருந்துகின்றார். சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று தன்னை விடுவிக்கும் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார்.

நம் உள்ளத்தில் நாம் எதிர்கொள்ளும் போராட்டம் நம் விவேகத்திற்கும் வேகத்திற்கும் தடையாக இருக்கின்றது. பவுல் போல, நாமும், 'அந்தோ! இரக்கத்தக்க மனிதன் நான்!' என்ற நிலையில்தான் வாழ்க்கை நகர்கிறது.

1 comment:

  1. நேற்றையப் பதிவின் ‘ விழிப்பு நிலை’ எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் நம் வாழ்வில் ‘விவேகமும்,வேகமும்’ என்று எடுத்துரைக்கும் ஒரு பதிவு.சாவுக்கு உள்ளாக்கும் இந்த இந்த உடலினின்று தன்னை விடுவிக்கும் கடவுளுக்குப் பவுல் நன்றி கூறுகிறார் என்பதை, நம் மனம் ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் முரண்டு பிடிக்கிறது.பல நேரங்களில் உள்ளம் மறுத்தாலும்,உடல் தான் விரும்புவதையே செய்கிறது என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையே! அதன் விளைவு நாம் எடுக்க வேண்டிய முடிவுகளின் வேகம் ‘ நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒத்திப்போடப்படுவதோடு, நாம் காட்ட வேண்டிய விவேகமும் கொஞ்சம் இழுபறி நிலையை அடைகிறது. இவற்றின் மீது நாம் கவனச் சிதறல் காட்டினால்…எடுக்க வேண்டிய முடிவில் வேகமும்,விவேகமும் இல்லாது போனால்….. நாளை நான்கு பேர் நம்மைப்பார்த்து “ அந்தோ! இரக்கத்தக்க மனிதன் நான்!” என்பதை நமக்கு நாமே சொல்லிப் புலம்புவதோடு, இவ்வுலகமும் நம்மைப் ஏளனப் பார்வை பார்க்க நாமே வழிவகுத்தவர்களாவோம். சீரான வாழ்வு வாழ செம்மையான விஷயங்களைத் தரும் ஒரு பதிவு! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete