Monday, October 18, 2021

விழித்திருக்கும் பணியாளர்

இன்றைய (19 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 12:35-38)

விழித்திருக்கும் பணியாளர்

ராபின் ஷர்மா என்னும் மேலாண்மையியல் ஆசிரியர் பல இடங்களில், 'பணியாளர் மனநிலையே நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்ற மனநிலை' என முன்மொழிகின்றார். இந்தக் கருத்துருவை இவர் விவிலியத்திலிருந்துதான் கற்றிருக்க வேண்டும். தன் குழுமத்தின் அடிப்படைத் தலைமைத்துவப் பண்பாக இயேசு பணியாளர் மனநிலையைச் சுட்டிக்காட்டுகின்றார். பணியாளரின் மனநிலையின் ஒரு பகுதியாக விளங்குவது, 'விழிப்பாக இருத்தல்.'

பணியாளர் மனநிலை சில இடங்களில் தவறு என்றும் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 'நல்ல ஆயன்' உருவகத்தை முன்மொழிகின்ற இடத்தில் (காண். யோவா 10), இயேசு, 'ஆயன்' மற்றும் 'கூலிக்காரன் அல்லது கூலிக்கு மேய்ப்பவன்' என்று வேறுபடுத்தி, 'கூலிக்காரன் மனநிலை' தவறு என்கிறார். மேலும், காணாமல்போன மகன் எடுத்துக்காட்டில் (காண். லூக் 15), இரு மகன்களுமே கூலியாள்களாக இருக்க விரும்புகின்றனரே தவிர, மகன்களாக இருக்க விரும்பவில்லை. 

பணியாளராக இருத்தல் என்பது ஓர் இரண்டாங்கெட்டான் நிலை. ஒன்றுக்குப் பொறுப்பாக இருக்கின்ற பணியாளர், ஒருபோதும் அதன்மேல் உரிமை பாராட்ட முடியாது. எடுத்துக்காட்டாக, பணியாளர் நுழைவதற்காக வீட்டு வெளிப்புறக்கதவின் சாவி அவருக்குக் கொடுக்கப்படுகிறது. சாவி தன்னிடம் இருக்கிறது என்பதற்காக அவர் அந்த வீட்டின்மேல் உரிமை கொண்டாட முடியாது. அதே வேளையில், தன்னிடம் உள்ள சாவியைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவருக்கு உள்ளது. ஏனெனில், சாவி தொலைந்துபோகும் பட்சத்தில் இல்லத்தில் திருடர்கள் நுழைய வாய்ப்பு உண்டு.

இறுதி நாள்கள் பற்றிய போதனையை முன்வைக்கின்ற இயேசு, இல்லத்தின் பணியாளர்கள் பெற்றிருக்க வேண்டிய விழிப்பு மனநிலையைத் தன் சீடர்கள் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இயேசுவின் போதனை இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இயேசு, பணியாளர்கள் எப்படி விழித்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார்: (அ) வரிந்து கட்டப்பட்ட இடைளூ (ஆ) எரிந்துகொண்டிருக்கும் விளக்குளூ (இ) தட்டியவுடன் திறக்கின்ற காத்திருத்தல். இரண்டாம் பகுதியில், விழித்திருக்கின்ற தன் பணியாளரைக் காண்கின்ற தலைவர் அவர்களுக்குப் பந்தி பரிமாறுகின்றார். இங்கே 'தலைவர்' என்பவர் இயேசுவையே குறிக்கின்றார். இன்னொரு பக்கம், 'பந்தி' என்பதை தலைவரின் பாராட்டு என்றும் புரிந்துகொள்ளலாம்.

இன்று நாம் இந்த மனநிலையை நம் வாழ்வுக்கு எப்படி பொருத்திப் பார்ப்பது?

'வரிந்துகட்டப்பட்ட இடை' என்பது தயார்நிலையைக் குறிக்கிறது. இராணுவ வீரர்களைக் கவனித்துள்ளீர்களா! அவர்கள் தங்கள் பணியிலிருக்கும்போது சீருடையில் இருப்பார்கள். பணிநேரத்தில் தங்கள் சீருடையில்தான் அனைத்து வேலைகளையும் செய்வார்கள். மழை, வெள்ளம், வெயில், குளிர் என அனைத்திலும் சீருடைதான். ஆக, அவர்களின் சீருடை அவர்களுடைய தயார்நிலையின் அடையாளமாக இருக்கிறது. சீருடையில் இருக்கும் அவர் ஆயத்தநிலையில் இருக்கிறார். ஆயத்தநிலை என்பதை நாம் விழிப்புநிலையின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். எதையாவது செய்வதற்கான திறந்த மனநிலையே இது.

'எரியும் விளக்கு' என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை. விளக்குகள் எரிகின்ற வீடு திருடர்களை ஈர்ப்பதில்லை. தலைவரை மட்டுமே ஈர்க்கும். தன் வீட்டின் வெளிச்சம் கண்டு அவர் மகிழ்வார். எரியும் விளக்கு என்பதை நம் புன்சிரிப்பு என நாம் புரிந்துகொள்ளலாம். நம் மகிழ்ச்சி நம் உதடுகளில் தொடங்கி கண்களில் ஒளிர வேண்டும்.

'காத்திருத்தல்'. தன் வேலைகளைப் பணியாளர் செய்துகொண்டே இருந்தாலும் அவருடைய காதுகள் கதவுகள்மேல்தான் இருக்கும். இதுதான் காத்திருத்தல்.

நம் வாழ்வு மற்றும் பணிகளில் இன்று விழிப்புநிலை இல்லாததால் நாம் நிறைய பிரச்சினைகளுக்கு ஆளாகின்றோம். இன்று செயல்திறன்பேசிகள் மற்றும் தொடுதிரைக் கணணிகளைக் காண விழித்திருக்கும் கண்கள் சோர்ந்துபோகின்றன. மனம் விழித்திருத்தால் கண்கள் விழித்திருக்கும்! மனம் தூங்கிவிட்டால், கண்கள் விழித்திருந்தாலும் ஒன்றும் மனதில் படியாது! 

1 comment:

  1. ஒரு பணியாளனுக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள். தந்தை கொடுத்துள்ள இந்தப் பட்டியல் யாருக்கு வேண்டுமெனினும் பொருந்தலாம்.ஒரு வீட்டுத்தலைவனோ- தலைவியோ கூட ஒரு பணியாளனுக்குரிய பண்புகளைக் கொண்டிருந்தால் மட்டுமே தம்மை நோக்கி வரும் நன்மை- தீமைகளை எதிர்கொள்ள வலுவிருக்கும்.எந்த நிலையிலும் எதையும் சந்திக்கத் தயாரான சீருடையை ஒத்த திறந்த மனநிலை…..நம்மிடம் வருபவர்களை ஈர்க்கக் கூடிய எரியும் விளக்குக்கொப்பான புன்சிரிப்பு….தன்னைத் தேடி வருபவர்களின் அரவம் கேட்டு அவர்களைக் கண்டுகொள்வதற்கான தீட்டிய காதுகள்…..இத்தனைக்கும் மேலாக கண்களோடு மனமும் சேர்ந்தே விழித்திருக்கும் ஒரு தயார் நிலை. இவையெல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு நிலைதான் “ விழிப்பு நிலை”. பணியாளனோ….உரிமையாளனோ… தன்னை உயிர் வாழ்பவனாகக் காட்டிக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் பொருந்தியவையே இந்த
    தயார் நிலையின் இலக்கணங்கள்! ஒரு திருடனாக “ சாவு” நம்மை நெருங்கையில் கூட இந்த விழிப்பு நிலை தேவை என சொல்லாமல் சொல்கிறது இன்றையப் பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete