Sunday, October 24, 2021

ஆறு நாள்கள்

இன்றைய (25 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக்கா 13:10-17)

ஆறு நாள்கள்

நான் திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில் பணியாற்றியபோது, சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் பேராசியர்களுக்கான கூட்டம் அல்லது கலந்தாய்வு வைக்கப்படுவதுண்டு. கூட்டம் பற்றிய அறிவிப்பு கேட்டவுடன், நாங்கள் அறியாமல் எழுப்பும் ஒரு விவிலிய வாசகம், 'வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே ... ஓய்வு நாளில் வேண்டாம்!' 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், பதினெட்டு ஆண்டுகளாக தீய ஆவி பிடித்திருந்து கூன் விழுந்து கிடந்த ஒரு பெண்ணை அவருடைய நோயிலிருந்து விடுவிக்கின்றார் இயேசு. இதைக் காண்கின்ற தொழுகைக் கூடத் தலைவர், 'வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே. அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கடிந்து கொள்கின்றார். இவ்வார்த்தைகளுக்கு இயேசு பதிலிறுப்பு செய்கின்றார். தன்னை எதிர்த்த அனைவரையும் வெட்கமுறச் செய்கின்றார்.

'ஆறு நாள்களில் செய்திருக்கலாமே?' எனக் கேட்கின்றார் தொழுகைக்கூடத் தலைவர். ஆனால், 18 நாள்களாக அல்ல, மாறாக, 18 ஆண்டுகளாக ஒரு பெண் அங்கேயே உடல் நலமில்லாமல் இருக்கின்றார். எத்தனை 6 நாள்கள் கடந்து போயிருக்கும்? யாரும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை! 

(அ) கைகளை வைத்து

இயேசு முதலில் தன் சொல்லாலும் தொடர்ந்து, கைகளை அவர்மீது வைக்கும் தன் செயலாலும் அவருக்கு நலம் தருகின்றார். இதுவும் ஓய்வுநாள் மீறலாகக் கருதப்பட்டது.

(ஆ) ஆபிரகாமின் மகள்

சக்கேயுவின் மனமாற்றத்தின்போது, அவரை, 'ஆபிரகாமின் மகன்' என அழைக்கின்றார் இயேசு. இங்கே, தீய ஆவி பிடித்திருந்த பெண்ணை, 'ஆபிரகாமின் மகள்' என அழைக்கின்றார். இதுவும் இயேசுவின் சமகாலத்தவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்கும். ஏனெனில், கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பெண்ணை, 'ஆபிரகாமின் மகள்' என்ற நிலைக்கு இயேசு உயர்த்துகின்றார்.

(இ) இரட்டை வேடம்

ஓய்வுநாள் சட்டம் பற்றிப் பேசுகின்ற இயேசுவின் எதிராளிகள் தாங்களே ஓய்வுநாள் சட்டத்தை மீறி, மாட்டையும் கழுதையையும் தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய் தண்ணீர் காட்டுகின்றனர். அவர்களின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

இந்த இறைவாக்குப் பகுதி நமக்குச் சொல்லும் பாடங்கள் இரண்டு:

(அ) நீண்ட நாள்களாக அல்லது ஆண்டுகளாக நாம் நம்மிலேயே வைத்துக்கொண்டிருக்கும் தீய ஆவி அல்லது தீய செயல் என்ன? அந்தப் பெண்ணிடம் இருந்த தீய ஆவி தொழுகைக்கூடத்திற்கு 18 ஆண்டுகளாக வருகின்றது. ஆனால், அதன் இருப்பு பற்றி யாரும் கவலைப்படவே இல்லை.

(ஆ) எனக்கு அடுத்திருப்பவரின் வாழ்க்கையில் கடவுள் நற்காரியங்களைச் செய்யும்போது என் பதிலிறுப்பு என்ன? தொழுகைக்கூடத் தலைவர்போல எரிச்சல் அல்லது கோபம் கொள்கிறேனா? அல்லது கூடியிருந்த மக்கள் கூட்டத்தினர்போல மகிழ்ந்து ஆர்ப்பரிக்கின்றேனா?


3 comments:

  1. 18 ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்த பெண்ணை சுகப்படுத்திய இயேசுவை நோக்கி எழுப்பப்பட்டக் கேள்விக்கணை….” ஆறு நாட்களில் செய்திருக்கலாமே!”தந்தைக்கேற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு. எங்கள் பங்கில் பங்குப்பேரவை மற்றும் பல பக்த சபைகளின் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படும் போதெல்லாம் “ ஆறு நாட்களில் செய்திருக்கலாமே!” என்று ஒத்த குரல்கள் ஒலிப்பதுண்டு.வார நாட்களை விடக் கொஞ்சம் அதிகப்படியாக இறைவனுக்காக செலவிடப்பட வேண்டிய 7 வது நாளை அதிகப்படியான சமையல்…சாப்பாடு…..சினிமா…தொலைக்காட்சி போன்ற விஷயங்களுக்கு நாம் செலவிடுவதில்லையா? நமக்கு நாமே பதில் தேட வேண்டிய கேள்வி.” ஓய்வு நாளும் மானுட மகனுக்குக் கட்டுப்பட்டதே!” நல்ல காரியங்களை செயல்படுத்தக் கால நேரங்கள் பார்க்கத்தேவையில்லை. பதிவின் இறுதியில் கேட்கப்படும் தந்தையின் கேள்வி யோசிக்க வைக்கிறது.அடுத்தவரின் வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடக்கையில் எரிச்சலோ கோபமோ அடையும் அளவுக்கு நான் மோசமில்லை தான்…ஆனால் எப்பொழுதுமே மகிழ்ச்சி தெரிவிக்கிறேனா? என்னில் நானே பதில் தேடுகிறேன். என்னை சோதனைக்குட்படுத்தத் தூண்டிய கேள்விக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Priests are the busiest on sundays and father is saying "'வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே ... ஓய்வு நாளில் வேண்டாம்!' "... :D

    On a serious note, when it comes to Jesus, it s always 'break the rules'

    ReplyDelete