Saturday, October 9, 2021

இருவகை உறவு

இன்றைய (9 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 11:27-28)

இருவகை உறவு

நம் இருத்தல் மற்றும் இயக்கத்தைக் காண்கின்ற உலகம், அது கண்டு நம் பெற்றோரைப் புகழ்வது இயல்பு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தேறுகிறது

பெண் ஒருத்தி, இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து வாழ்த்துகிறார்:

'உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'

அப்பெண் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, மரியாள் உடனிருந்திருக்கலாம். அல்லது மரியாள் அந்த இடத்திற்கு வந்திருக்கலாம். மரியாளின் வருகையை இயேசுவுக்கு உணர்த்துவதற்காக அப்பெண் சொல்லியிருக்கலாம்.

அல்லது, மரியாளின் இருத்தல் இல்லாமலேயே அப்பெண் அவ்வார்த்தைகளைச் சொல்லி இயேசுவை வாழ்த்தியிருக்கலாம்.

இந்த வாழ்த்தின் உள்பொருள் எளியதுதான்: 'நல்ல மரம் நல்ல கனியைக் கொடுக்கும். நீ நல்ல கனி. அப்படி என்றால் உன் அம்மா அல்லது அப்பா நல்ல மரம். மரம் இனிதே வாழ்க!'

அப்பெண், இயேசுவுக்கும் மரியாளுக்கும் இருந்த உடல்சார் உறவு பற்றிப் பேசுகின்றார்.

ஆனால், இயேசுவோ, அப்பெண்ணின் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து, தனக்கும் மரியாளுக்கும் இருக்கிற ஆவிசார் உறவு பற்றிப் பேசுகின்றார்:

'இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'

ஆக, மரியாளின் பேறு பெற்ற நிலை இப்போது இன்னும் ஒரு படி மேலே போகிறது. இயேசுவைப் பெற்றதால் மட்டுமல்ல, இறைத்திட்டத்திற்கு, 'ஆம்' என்று சொன்னதால் இன்னும் அதிகம் பேறுபெற்றவர் ஆகிறார்.

மேலும், இதன் உள்பொருள் என்ன?

இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிக்கும் எவரும் பேறுபெற்ற நிலையை அடைய முடியும்.

நமக்கும் இயேசுவுக்கும் உடல்சார் உறவு சாத்தியமில்லை என்றாலும், ஆவிசார் உறவு சாத்தியமே. அந்த ஆவிசார் உறவுக்கான வழி இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்பது.

நிற்க.

அந்தப் பெண் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது இயேசு கண்டிப்பாக புன்முறுவல் பூத்திருப்பார். 'அப்படியா! அதெல்லாம் ஒன்னுமில்லங்க!' என்று வெட்கப்பட்டிருப்பார். 

இயேசுவின் கவனத்தை ஈர்த்து, அவரின் முகத்தில் புன்முறுவல் ஏற்படக் காரணமாயிருந்த அந்த பெயரில்லாப் பெண்ணும் பேறுபெற்றவளே!

கடவுளின் கவனத்தை ஈர்க்கவும், அவரைச் சிரிக்க வைக்கவும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

2 comments:

  1. இயேசுவுக்கும், மரியாவுக்கும் இருந்த உடல் சார் உறவு பற்றி பேசிய பெண்ணிடம், தனக்கும் மரியாவுக்குமிடையே உள்ள ஆவிசார் உறவு குறித்துப் பேசுகிறார் இயேசு.
    “ இறைவார்த்தையைக்கேட்டு அதன்படி நடப்போர் பெறு பெற்றோர்” இந்த இறைவார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடந்தால் நமக்கும் “ ஆவிசார்” உறவு சாத்தியமே என்கிறது இன்றைய வாசகம்.
    இன்றைய பெயரில்லாக் கதாநாயகி இயேசுவைப் புன்முறுவல் பூக்க வைத்ததுபோல் நம்மாலும் செய்வது சாத்தியமே! அந்த வழிகள்/ வார்த்தைகள் எவை என்று கண்டுபிடிப்போம்.
    நம்மைச்சார்ந்துள்ளவர்களைப் புன்முறுவல் பூக்க வைப்பதுவே இயேசுவைப் புன்முறுவல் பூக்க வைக்க முதல் வழி என்கிறது என் மனது.ஆம்! ஏழையின் மனதில் இறைவனையும்….அவருக்குப் பின்னே அந்த புன்முறுவலையும் கொண்டுவர நாமும் ஒரு கருவியாகலாம்! அதிகாலை நேரத்தின் புன்முறுவல் இன்னும் விசேஷம்.கலப்படமற்றது.
    ஆவிசார் உறவை நமக்கும் காசு பணமின்றி சாத்தியமாக்கும் ஒரு பதிவு. தந்தைக்கு வாழ்த்தும்! நன்றியும்!!!

    ReplyDelete
  2. And she spake out with a loud voice, and said, Blessed art thou among women, Luke 1:42 // That woman could also have been filled with Holy Ghost like St Elizabeth, that s why she said those same
    words. Was listening to Fr Ignatius' homily and he said this.

    ReplyDelete