Friday, October 15, 2021

தூய ஆவியார்

இன்றைய (16 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 12:8-12)

தூய ஆவியார்

லூக்கா நற்செய்தியை, 'தூய ஆவியார் நற்செய்தி' என்றும் அழைப்பதுண்டு. தூய ஆவியாரின் இயக்கத்திலேயே எல்லாம் நடைபெறுவதாக - இயேசு பிறப்பு முன்னறிவிப்பு, மரியா கருவுறுதல், மரியா-எலிசபெத்து சந்திப்பு, இயேசுவின் பணித் தொடக்கம், பணி நிறைவு – லூக்கா பதிவு செய்கிறார். திருத்தூதர் பணிகள் நூலும் முழுக்க முழுக்க தூய ஆவியாரின் செயல்பாடுகளைப் பதிவு செய்வதாகவே உள்ளது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தூய ஆவியாரைப் பற்றிய இரு தகவல்களை லூக்கா தருகின்றார். 

'தூய ஆவியாருக்கு எதிரான பாவம் மன்னிக்கப்படாது' என்பது முதல் செய்தி. இந்த வாக்கியத்தின் பொருள் இன்று வரை நமக்கு மறைபொருளாகவே உள்ளது. கடவுளால் மன்னிக்க முடியாத பாவம் ஒன்று இருக்க முடியுமா? என்ற கேள்வியை நம்மிடம் இது எழுப்புகின்றது. 'கடின உள்ளம்,' 'கடவுளை நம்பாமை,' 'கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தல்' என்று பல பொருள்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், தூய ஆவியார் பற்றிய கண்டுகொள்ளாத்தன்மையை இது குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, திருமுழுக்கின்போதும், உறுதிப்பூசுதலின் போதும் நமக்கு வழங்கப்படுகின்ற ஆவியாரை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகின்றோம். தூய ஆவியார் பெருவிழா அன்று மட்டுமே நாம் அவரை நினைவுகூர்கின்றோம். ஆனால், நம் வாழ்வின் இயக்கமாக இவர் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்தல் பெரிய மாற்றங்களை நம்மில் கொண்டுவரும். ஆக, தூய ஆவியாரைப் பற்றிய கண்டுகொள்ளாத்தன்மையே கடவுள் மன்னிக்க இயலாத பாவம் எனப் புரிந்துகொள்வோம்.

இரண்டாவதாக, இயேசு, நம் வாழ்வின் துன்பகரமான பொழுதுகளில், இக்கட்டான நேரத்தில், நாம் தனித்து விடப்பட்ட நேரத்தில் தூய ஆவியார் 'நமக்குக் கற்றுத் தருவதாக' முன்மொழிகின்றார். 'கற்றுத்தருதல்' என்பது விவிலியத்தில் மிக முக்கியமானது. அதாவது, கற்றுத்தருதலின் வழியாக கடவுள் தன் உடனிருப்பை நமக்குக் காட்டுகின்றார். 

தூய ஆவியாரின் உடனிருப்பை இயேசு தன் வாழ்வில் தொடர்ந்து உணர்ந்தார்.

நாமும் அதே உணர்வில் பயணிக்க முன்வருவோம்.


1 comment:

  1. சிறு பருவத்தில் தூய ஆவியார் என்றாலே ஏதோ ஒரு “புறா” என்று மட்டுமே தெரிந்த நிலையில், நான் அறிவிலும்,வயதிலும் வளர..வளர இவர் சாமான்ய ஆளில்லை; தூய தமதிருத்துவத்தின் ‘உந்து சக்தி’ இவர்தான் என்பது எனக்குப் புரிந்தது.நாம் பொதுவாகத் ‘ தந்தையிடம்’ ஏதும் கேட்பதில்லை; ‘ குமாரனிடம்’ எப்பொழுதும், எதுவேண்டுமெனினும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்; ஆனால் என்னைப்பொருத்த வரையில் ஒரு காரியம் எனக்கு நடந்தே தீரவேண்டுமெனும் தேவையில்…மனம் சஞ்சலப்பட்ட நேரங்களில் ஏன்..எதற்கு என்று தெரியாமலே தூய ஆவியாரிடம் என் தேவைகளைச் சொல்லியதும்…அவர் அதை நடத்தித் தந்ததும் என் அனுபவங்கள்.
    இதற்குத்தான் தந்தை “கற்றுத்தருதல்” எனப் பெயரிடுகிறார் என்று தோன்றுகிறது.கற்றுத்தருதல் முடிவடைவது உடனிருப்பில். இந்த உடனிருப்பு நமக்குக் கிடைக்கும் பட்சத்தில் நம் மனத்தில் கலக்கமோ,தயக்கமோ இல்லை.
    நம் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு உடன்பயணியாக…..உறவாக இந்த த் தூய ஆவியாரைத்துணைக்கழைப்போம்.அழகானதொரு….மனத்தைத்தொட்ட பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete