Saturday, October 16, 2021

தோழமை-பங்கேற்பு-பணி

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

எசாயா 53:10-11 எபிரேயர் 4:14-16 மாற்கு 10:35-45

தோழமை-பங்கேற்பு-பணி

இன்றைய ஞாயிறு நம் தாய்த்திருஅவை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்ற ஞாயிறு. கடந்த ஞாயிறன்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மாமன்றம் 2021-2023: கூட்டொருங்கியக்கத் திருஅவை – தோழமை-பங்கேற்பு-பணி' என்னும் மாமன்றத்தை உரோமையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக அகில உலகிலும் அனைத்து மறைமாவட்டங்களிலும் தலத்திருஅவையின் தலைவராகிய ஆயர் தலைமையில் நாம் இன்று மாமன்றத்தைத் தொடங்குகின்றோம். மாமன்றத்தின் தலத்திருஅவைத் தொடக்கமாகவும், மாமன்றத்தின் முதல் படியான மறைமாவட்ட நிலை மாமன்றத்தின் (அக்டோபர் – ஏப்ரல் 2022) தொடக்கமாகவும் இது அமைகின்றது. 

'மாமன்றம்' என்பது 'சினட்' என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப்பதம். இச்சொல்லின் கிரேக்க வேர்ச்சொல்லுக்கு, 'இணைந்து பயணம் செய்தல்' அல்லது 'பாதையில் நடத்தல்' என்பது பொருள். 

'இணைந்து பயணம் செய்தல்,' 'கூட்டொருங்கியக்கம்,' மற்றும் 'தோழமை-பங்கேற்பு-பணி' என்னும் சொற்களை இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் பின்புலத்தில் நாம் புரிந்துகொள்ள முன்வருவோம்.

இயேசுவும் அவருடைய சீடர்களும் 'எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்கள்' (காண். மாற் 10:32). எருசலேம் என்பது இயேசுவின் பணிவாழ்வின் இடம்சார் இலக்காகவும், அவருடைய பணி முடிந்து விண்ணேற்பு அடையும் நிகழ்வாகவும், திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்கும் தொடக்கப்புள்ளியாகவும் இருக்கின்றது. ஆக, எருசலேம் நோக்கிய பயணம் இயேசுவுக்கும் திருத்தூதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தன் பயண இலக்கு நெருங்குகின்ற வேளையில் இயேசு தன் பாடுகள் மற்றும் இறப்பை மூன்றாம் முறையாக அறிவிக்கின்றார். முதல் இரண்டு முறை அவர் அறிவித்தபோது சீடர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டது போல இம்முறையும் தவறாகவே புரிந்துகொள்கின்றனர். முதல் முறை அறிவித்தபோது, பேதுரு இயேசு துன்பம் ஏற்பதைத் தடுக்கின்றார். இரண்டாம் முறை அறிவித்தபோது, சீடர்கள் தங்களுக்குள்ளே, 'யார் பெரியவர்?' என்ற கேள்வியை எழுப்பி போட்டி போடுகின்றனர். மூன்றாம் முறை அறிவித்தபோது, திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று, 'நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்' என்று வேண்டுகின்றனர்.

யூதச்சிந்தனையில் அரசரின் அரியணை என்பது முக்கியமானது. அந்த அரியணையும், அரியணையின் வலமும் இடமும் அதிகார மையங்களாக இருந்தன (காண். 1 அர 2:19ளூ திபா 110:1). இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் உரோமை அரசை வீழ்த்தக் கூடிய அரச பயணம் என்று திருத்தூதர்கள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்வதோடு, அதிகாரத்தின்மேல் ஆவல் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர் திருத்தூதர்கள். அவர்களின் புரிதலைச் சரிசெய்ய முயல்கின்ற இயேசு, 'துன்பக் கிண்ணம்,' மற்றும் 'திருமுழுக்கு' என்னும் இரு முதல் ஏற்பாட்டு உருவகங்கள் வழியாக அவர்களுக்குக் கற்பிக்கின்றார். 'துன்பக் கிண்ணத்தில் பருகுதல்' என்பது 'துன்பங்களில் பங்கேற்பதையும்,' 'திருமுழுக்கு' என்பது 'இரத்தத்தினால் இயேசு பெறவிருக்கின்ற திருமுழுக்கையும்' குறிக்கின்றது. திருத்தூதர்கள் கிண்ணத்தில் பங்கேற்கவும், திருமுழுக்கு பெறவும் தயாராக இருப்பதாகச் சொல்கின்றனர். பின்நாள்களில் அவர்கள் துன்பம் ஏற்கின்றனர். இயேசு சற்றே சிந்தனையை உயர்த்தி, 'இடம்' என்பதை இறுதிக்கால நிகழ்வோடு பொருத்திப் பேசுகின்றார். தொடர்ந்து, 'அதிகாரம் என்பது தொண்டு செய்வதில் இருக்கிறது என்றும்,' அல்லது 'தொண்டு செய்பவரே ஆற்றல் பெற்றவராக இருக்கின்றார்' என்றும் அறிவுறுத்துகின்றார். மண்ணுலகம் அதிகாரம் என்பதை நிமிர்ந்து அரியணையில் அமர்வது எனப் புரிந்துகொள்கின்ற வேளையில், 'அதிகாரம்' என்பது குனிந்து பணியாற்றுவதில் அடங்கியுள்ளது என விளக்குகிறார் இயேசு. மேலும், மானிட மகனின் வருகையின் இலக்கும் பணி செய்வதும், இறுதியில் தம் உயிரைக் கொடுப்பதுமே எனத் தெளிவுபடுத்துகின்றார்.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 53:10-11) துன்புறும் ஊழியன் பாடல்களில் நான்காவதாக உள்ள பாடலின் (எசா 52:13-53:12) ஒரு பகுதியாக அமைந்துள்ளது. 'துன்புறும் ஊழியன் யார்?' என்பதற்கான விடை இன்று வரை தெளிவாக இல்லை. கிறிஸ்தவப் புரிதலில், 'துன்புறும் ஊழியன்' என்பவர் வரவிருக்கின்ற மெசியாவையும் (இயேசு) அவர் அனுபவிக்கின்ற துன்பத்தையும் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்கின்றோம். துன்புறும் ஊழியன் அநீதியாகத் தண்டிக்கப்படுகின்றார், துன்பம் அடைகின்றார், நிந்தையும் அவமானமும் அவர்மேல் சுமத்தப்படுகின்றது. இத்துன்பத்தை அவர் மற்றவர்களுக்காக அடைகின்றார். துன்பத்திலும் இறைவனின் துணையைக் கண்டுகொள்கின்றார். ஆக, துன்புறும் எவரும் தன் முகத்தை இத்துன்புறும் ஊழியனின் முகத்தோடு பொருத்திப் பார்க்க முடியும்.

இரண்டாம் வாசத்தில் (காண். எபி 4:14-16), எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைத்து, இயேசுவின் இக்குருத்துவத்தின் இயல்பு அவருடைய இரக்கத்தில் இருக்கிறது என முன்மொழிகின்றார். முதல் ஏற்பாட்டில் தலைமைக்குரு என்பவர் மக்களிடமிருந்து தனியாக இருக்கக் கூடியவர். ஏனெனில், ஆலயத்தின் திருத்தூயகத்திற்குள் அவர் நுழைவதால் தூய்மையற்ற மக்களிடமிருந்தும், இடத்திலிருந்தும் அவர் எப்போதும் தன்னையே தனிமைப்படுத்திக்கொள்வார். மேலும், மற்றவர்களுடை பாவம் அல்லது வலுவின்மையை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், இயேசுவோ தன்னை மக்களோடு மக்களாக இணைத்துக்கொள்வதுடன், மக்களின் வலுவின்மை, நொறுங்குநிலை கண்டு அவர்கள்மேல் இரக்கம் காட்டுகின்றார். நம்மைப் போலவே சோதனைகளுக்கும் உட்படுகின்றார். 

மேற்காணும் மூன்று வாசகங்களும், மாமன்றத்தின் குறிச்சொற்களான, 'இணைந்து வழிநடத்தல்,' 'கூட்டொருங்கியக்கம்,' 'தோழமை-பங்கேற்பு-பணி' ஆகியவற்றை எப்படி முன்வைக்கின்றன?

(அ) 'இணைந்து வழிநடத்தல்'

இயேசு தன் திருத்தூதர்களுடன் எருசலேம் நோக்கி இணைந்து வழிநடக்கின்றார். அப்படி வழிநடக்கும்போது அவருடன் மக்கள் கூட்டமும் இணைகின்றது. ஆக, திருஅவை என்பது 'கூட்டம்-திருத்தூதர்கள்-இயேசு' என்னும் குழுமத்தைக் குறிக்கிறது. இந்தக் குழுமத்தில் மூன்று பேரும் இணைதல் வேண்டும். கூட்டம் இல்லாமல், திருத்தூதர்களும் இயேசுவும் மட்டும் இருந்தால் திருஅவை என்பது தனிப்பட்ட ஒரு கருத்தியல் எனச் சுருங்கிவிடும். திருத்தூதர்கள் இல்லாமல் கூட்டமும் இயேசுவும் மட்டும் இருந்தால் அது வெறும் சமயமாக மாறிவிடும். இயேசு இல்லாமல் திருத்தூதர்களும் கூட்டமும் மட்டும் இருந்தால் அது வெறும் கொள்கையளவில் கூடிய கும்பலாக மாறிவிடும். கூட்டம்-திருத்தூதர்கள்-இயேசு என்னும் இணைதலே திருஅவையை உருவாக்குகின்றது. மேலும், இவர்கள் ஒரே இடத்தில் நிற்கவில்லை. மாறாக, இணைந்து நடக்கின்றனர். துன்புறும் ஊழியன் தன் துன்பம் ஏற்றலின் வழியாக மற்றவர்களுடன் பயணம் செய்கின்றார். இயேசு கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வந்ததும், நமக்கு இரக்கம் காட்டித் தன் உயிரை ஈந்து சிலுவையில் இறந்ததும் பயணமே. இணைந்து நடத்தல் என்பது பயணத்தையும், வளர்ச்சியையும், இலக்கு நோக்கிய தெளிவையும் குறிக்கிறது. இன்று நாம் இணைந்து நடக்கும் இந்தப பயணத்தில் நம் துணைவர்கள் அல்லது இணையர்கள் யார்? இன்று நம் தலத்திருஅவையில் ஆயர், அருள்பணியாளர்கள், துறவியர்கள், இறைமக்கள் என அனைவரும் இணைந்து வழிநடக்கின்றோம். நமக்கு அருகில் இருக்கும் மற்றவர்களும் இந்தப் பயணத்தில் நம்மோடு இணைந்திருக்கிறார்கள். 

(ஆ) 'கூட்டொருங்கியக்கம்'

கூட்டொருங்கியக்கம் ('சினடாலிட்டி') என்பது ஓர் அதிகார உடைப்பு. அல்லது அதிகார மேன்மை. அதிகாரம் என்பது பல நேரங்களில் தனிநபர் அல்லது ஒருநபர் சார்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆனால், உண்மையில் அதிகாரம் அல்லது ஆற்றல் என்பது பல கைகள் இணைதலில்தான் இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை வழிநடத்தக்கூடிய முதல்வர் அல்லது தலைவர் ஒருவர்தான் என்றாலும், அவருடைய ஒற்றைக் கைதான் என்றாலும், அந்த ஒற்றைக் கையைத் தேர்ந்தெடுத்தது மக்களாட்சியில் அவருக்காக வாக்களித்த பல கைகள்தாம். ஆக, ஒரு கையின் ஆற்றல் பல கைகளிலிருந்து வருகின்றது. அதிகாரம் என்பது எப்போதும் அருளப்படுவது. ஒருவர் அதிகாரத்தை தானே வலிந்து பற்றிக்கொள்ள நினைத்தாலும், மற்றவர்கள் அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதிகாரத்திற்கு அர்த்தம் இல்லை. ஆக, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவே அதிகாரம் என்பது கூட்டொருங்கியக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. கூட்டொருங்கியக்கத்தில் பலரின் கைகள் இணைவதால் அதிகாரம் மற்றும் ஆற்றல் இன்னும் அதிகம் வலுப்பெறுகிறது. மேலும், கூட்டொருங்கியக்கத்தில் ஒருவகையான நகர்வு அல்லது வேகம் அடங்கியிருக்கிறது. இயேசு கூட்டொருங்கியக்கத்தின் பொருளை உணர்ந்தவராக இருக்கின்றார். தானே தனித்திருந்து செயல்படாமல் தன்னோடு இணைந்து செயல்படுவதற்கென திருத்தூதர்களை ஏற்படுத்துகின்றார். திருத்தூதர்களிடம் தன் இயக்கம் மற்றும் நகர்வு பற்றி ஒளிவுமறைவின்றி அறிவிக்கின்றார். தன் துன்பக் கிண்ணத்திலும் திருமுழுக்கிலும் அவர்களை இணைத்துக்கொள்கின்றார். மேலும், தொண்டு செய்ய வேண்டும் என்றும், பணியாளராக இருக்க வேண்டும் என்றும் கற்பிக்கும் அவர், தானே தன் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவுகின்றார் (காண். யோவா 13).இன்று நம்மிடம் கூட்டம் இருக்கிறது, இயக்கம் இருக்கிறது. ஆனால், கூட்டொருங்கியக்கம்தான் குறைந்த அளவில் உள்ளது. இணைந்து செல்லும்போது நம் தான்மை பாதிக்கப்படும் என்ற நிலையில் நாம் தனியாக இருக்கவே விரும்புகிறோம். தனிமையான அதிகார மையம், மக்களிடமிருந்து தள்ளியே நிற்கும் மனப்பான்மை என்னும் தடைகள் இன்று தாண்டப்பட வேண்டும்.

(இ) தோழமை-பங்கேற்பு-பணி

16வது மாமன்றத்தின் குறிச்சொற்களாக இம்மூன்று வார்த்தைகள்தாம் உள்ளன. 'தோழமை' (அல்லது 'கூட்டுறவு') என்பது மூவொரு இறைவனின் அன்பை மையமாகக் கொண்ட ஒரு கருத்துரு. மூவொரு இறைவனின் அன்பினால் கட்டப்பட்ட திருஅவை அதே அன்பில் ஒருவர் மற்றவருடன் இணைந்திருக்கின்றது. இயேசு தனிப்பெரும் தலைமைக்குருவாக மாறும் நிலை அவருடைய தோழமை உணர்வினால் சாத்தியமாகிறது. இயேசுவின் தோழமை இரக்கப் பெருக்காக வெளிப்படுகின்றது. அவர் நம் வலுவின்மையில் பங்கேற்று நம்மேல் இரக்கம் காட்டுவதால் அவருடைய அரியணையை நாம் துணிவுடன் அணுகிச் செல்ல முடியும். ஏனெனில், அவருடைய அரியணை அச்சத்தையும், பதைபதைப்பையும் தருவதில்லை. மாறாக, நமக்கு உற்சாகத்தையும் உடனிருப்பையும் தருகின்றது. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாகிய நாம் நம் நடுவே இருக்கும் தோழமையைக் கொண்டாடுவதோடு, நம்மைச் சுற்றி வாழும் பிற சபை மற்றும் சமயச் சகோதர சகோதரிகளோடும் தோழமை பாராட்ட வேண்டும். தோழமைக்கு நம் அரியணை தடையாக இருக்கலாம். நம் அரியணை மற்றவர்களை விடத் தள்ளி இருப்பதாலும், உயர்ந்து நிற்பதாலும் மற்றவர்களிடமிருந்து ஒரு தனிமையை ஏற்படுத்தலாம். ஆனால், இணைந்து செல்கின்ற பயணத்தில் தோழமை கொள்ள நாம் நம் அரியணையை விட்டு இறங்க வேண்டும். அருள்நிலையில் இருப்பவர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழ வேண்டும். அனைவருடனும் கரம் கோர்க்க வேண்டும். ஏனெனில், மற்றவர்கள் இல்லாத இடத்தில் வெறும் அரியணை மற்றும் இருக்கையினால் ஒரு பயனும் இல்லை.

'பங்கேற்பு' என்பது நாம் அருளடையாளக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை அல்ல, மாறாக, பணிநிலைகளில் பங்கேற்பதைக் குறிக்கிறது. பங்கேற்பு எந்தவொரு செயலையும் எளிதாக்குகிறது. ஒரு கரம் தூக்க வேண்டிய சுமையை இரு கரங்கள் இணைந்து தூக்கினால் சுமை எளிதாகிறது. நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களைப் பங்கேற்பாளர்களாக அழைக்கின்றார். மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு விலையாகத் தன் உயிரை அளிக்கவும் வந்துள்ளார் எனில், திருத்தூதர்களும் இறைமக்களும் இயேசுவின் இந்த மீட்புச் செயலில் பங்கேற்பாளராக அமைகின்றனர். 

தோழமை மற்றும் பங்கேற்பு ஆகியவை திருஅவையில் இருக்கக் காரணம் பணியே. ஏனெனில், பணி இல்லை என்றால், திருஅவை வெறும் தற்சார்பு அல்லது தன்குவி நிறுவனமாக உறைந்துவிடும். சமூக, அரசியல், பண்பாட்டு, பொருளாதார விளிம்புநிலையில் உள்ள மக்களைத் தேடிச் செல்வதே பணி. முதல் வாசகத்தில், இந்தப் பணியை துன்புறும் ஊழியன் செய்கின்றார். மற்றவர்களின் தீச்செயல்களுக்காகத் தன்னையே துன்பத்துக்கு உட்படுத்துகின்றார்.

இறுதியாக,

இன்று நம் மறைமாவட்டத்தில் மாமன்றம் தொடங்கப்படும் நிகழ்வின் அடையாளமாக, நம் பங்குத்தளத்திலும், நிறுவனங்களிலும், குழுமங்களிலும், அன்பியங்களிலும் குடும்பங்களிலும் பின்வருவனவற்றை நாம் செய்யலாம்:

(1) மாமன்ற இறைவேண்டல். திருத்தந்தை அவர்கள் இயற்றியுள்ள தூய ஆவியார் இறைவேண்டலை நாம் செபிக்க வேண்டும்.

(2) நம் பங்குத்தளங்களில், நிறுவனங்களில், நம் இல்லங்களிலும், நம் செயல்திறன் பேசிகளில் 'மாமன்ற இலச்சினையை' (லோகோ) நிறுவ வேண்டும்.

(3) இன்று ஒரு ஐந்து பேரிடமாவது தனிப்பட்ட முறையில் இந்த மாமன்றம் பற்றிப் பேச வேண்டும்.

(4) கூட்டொருங்கியக்கம் பற்றிய நம் கருத்துக்களை தலத்திருஅவை ஆயருக்கும், ஆயரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

(5) மாமன்ற கலந்தாலோசித்தலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

(6) நம் பங்குத்தளத்திலும், நிறுவனங்களிலும், குழுமங்களிலும், அன்பியங்களிலும், குடும்பங்களிலும் கூட்டொருங்கியக்கத்தைச் செயல்படுத்தும் விதமாக, ஒருவர் மற்றவருடன் உரையாடவும், மற்றவரின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவும் வேண்டும்.

கூட்டொருங்கியக்கத்தை நோக்கிய நம் பயணம் இனிதே நிறைவுற இறைவன் நம்முடன் உடன்வருவாராக!


2 comments:

  1. ஆண்டின் பொதுக்காலம் 29ம் ஞாயிறின் மறையுரை.சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட “ மாமன்றத்தின்” நீட்சியாகத் தோன்றுகிறது.நிறைய புதிய சொற்களையும்,அவற்றிற்கான அர்த்தங்களையும் உள்ளடக்கியுள்ளது.
    ‘துன்புறும் ஊழியன்’ யாரென்று தெரியாத நிலையில் இயேசுவாகத்தான் இருக்க வேண்டும் என சூசகமாக சொல்லப்படுகிறது.துன்பமும்,நிந்தையும் அவர்மேல் சுமத்தப்பட, தன் துன்பத்தை இறைவனில் பார்க்க, துன்பப்படும் எவருமே தம் துன்பத்தை இந்த “ துன்புறும் ஊழியனோடு” இணைந்து பார்கக வேண்டும் எனக்கூறும் முதல் வாசகம்…..
    முதல் ஏற்பாட்டுத் தலைமை குரு போலல்லாமல் இரண்டாம் ஏற்பாட்டு இயேசு தன்னை மக்களோடு மக்களாக ஐக்கியப்படுத்திக்கொள்வது மட்டுமின்றி, மக்களின் வலுவின்மை,நொறுங்குநிலை கண்டு அவர்கள் மீது இரக்கம் கொள்கிறார் எனக்கூறும் இரண்டாம் வாசகம்…..
    தன் பாடுகளை முன்னறிந்த இயேசு எருசலேமுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தையும்,அதைத் தொடர்ந்து தான் அருந்தவிருந்த துன்ப கலசத்தையும் சீடர்களிடம் குறிப்பாக எடுத்துக்கூற, அவருக்குப் பல வழிகளில் தடையாக இருக்கின்றனர் சீடர்கள்.அதிகாரம் என்பது குனிந்து பணி செய்வதில்தான் இருக்கிறதென்றும், மானிட மகனின் வருகையின் இலக்குப் பணி செய்வதும்,பின் உயிரைக்கொடுப்பதுமே என்பதை எடுத்துக்கூறும் நற்செய்தி வாசகம்….
    இன்றைய அனைத்து வாசகங்களுமே நடக்கவிருக்கும் “ மாமன்றத்தின்” நோக்கங்களான ‘இணைந்து வழிநடத்தல்’,’கூட்டொருங்கியக்கம்’,’தோழமை- பங்கற்பு- பணி’எனும் வார்த்தைகளையும், அவற்றின் புரிதல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. இதில் தோழமையும்,பங்கேற்பும் இருக்க மூலகாரணமே பணிசெய்வதற்காகத்தான் என்பதை நாம் திண்ணமாகப் புரிந்து கொள்ளல் அவசியம்.
    இறுதியாக, தொடங்கவிருக்கும் மாமன்றத்தின் அடையாளமாக நாம் செய்யவேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் தந்தை. அத்தனையையும் செயலாக்க இயலாவிடினும்
    ஒருவர் மற்றவருடன் உரையாடவும்,மற்றவரின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கவும் முன்வருவோமாக!
    கூட்டொருங்கியத்தை நோக்கிய நம் பயணம் இனிதே நிறைவேற இறைவன் நம்முடன் வருவாராக! எனும் தந்தையின் தாரக மந்திரத்திற்கு நன்றியும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete